Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 39

“இவான்! இவான்” என்ற ஆர்யனின் குரல் காதில் மோத, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த ருஹானாவுக்கு அது மந்திர உச்சாடனமாக வேலை செய்ய, உணர்வு லேசாக திரும்பவும் மிகுந்த சிரமப்பட்டு இமைகளை தட்டினாள்.

“இவான் எங்க இருக்கே?” என்று ஆர்யன் உரக்க அழைக்கும்  சத்தம் திறந்திருந்த ஜன்னல் வழியாக அவளை வந்து அடைய, பிரயாசைப்பட்டு கண்களை திறந்தாள்.

“எங்க இருக்க இவான்?… குரல் கொடு!” என ஆர்யன் கூப்பிட, கட்டிலை பிடித்துக்கொண்டு தட்டு தடுமாறி எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தாள். ஆர்யன் காவலர்களோடு வீட்டை சுற்றி தோட்டத்தில் தேடுவதை பார்த்து “இவான்!” என்று திகைத்து நின்றது ஒரு விநாடி தான்.

பின் வேகமாக கீழே இறங்கியவள் சாரா, நஸ்ரியா, கரீமா மூவரும் வரவேற்பறையில் பதட்டமாக நிற்பதை பார்த்தாள்.

“என்ன நடந்தது? இவானை காணோமா?”

“தெரியல ருஹானா டியர். எல்லாரும் தேடிட்டு தான் இருக்கோம். ஆனா கண்டுபிடிக்க முடியல”

“ஆனா இவான் நம்ம கிட்ட சொல்லாம வெளிய போக மாட்டானே! இங்க தான் ஒளிஞ்சிட்டு இருப்பான்”

“நாங்க எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம். அவன் இல்லயே”

வேகமாக வெளியே வந்தவள், ஆர்யன் ஆட்களை வெளியே அனுப்பி தேட சொல்வதை கண்டதும் “அவங்க எங்க போறாங்க?” என்று கேட்டாள். “வீட்டுக்கு வெளியே போயிருக்கானான்னு பார்க்க போறாங்க” என ஆர்யன் சொன்னதும் அவளும் வெளியே செல்லப் போனாள்.

“நில்லு. அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க. நீ கவலைப்படாதே!” என அவளை ஆர்யன் தடுத்து நிறுத்த, “இவான் இப்படி செய்ய மாட்டானே!” என ருஹானா யோசித்தாள்.

பின்னாடியே வந்து இவர்களை கவனித்துக்கொண்டிருந்த கரீமா “உனக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்து இவான் வித்தியாசமா தான் நடந்துக்கறான். அவன் அம்மா மாதிரி உன்னையும் இழந்துடுவோமோன்னு பயந்திட்டான். இந்த மனநிலைல எங்க போயிருப்பான்?” என சொல்லவும், ஆர்யனுக்கு ஏதோ தோணவும் வேகமாக வீட்டிக்குள் செல்ல ருஹானாவும் அவனை பின்தொடர்ந்தாள்.

அதை பார்த்துக்கொண்டே வெளியே வந்த சல்மா “அக்கா! எல்லாம் சரியா தானே நடக்குது?” என கேட்க “ஆமா! நாம ஆசைப்பட்டது போலவே நல்லா நடக்குது” என்று கரீமா சொல்ல இருவரும் சிரித்தனர்.

ருஹானா “அல்லாஹ்! இவானை காப்பாற்றுங்கள்” என சத்தமாக வேண்டியபடியே கூட வர, ஸ்டோர் ரூம்க்குள்ளே நுழைந்த ஆர்யன் நிம்மதி பெருமூச்சுடன் ருஹானாவை பார்த்து தலையசைத்தான். அங்கே சுவரில் சாய்ந்து அமர்ந்து இவான் உறங்கிக்கொண்டிருக்க, “அல்லாஹ்க்கு நன்றி” என சொல்லி அவன் அருகே அமர்ந்த ருஹானா “அன்பே! என்னுயிரே!” என அவன் தலையை தடவியபடி அழைத்தான்.

தஸ்லீமின் உடை ஒன்றை பிடித்துக் கொண்டு இருந்த இவான் மெதுவாக கண்விழித்து “சித்தி! நீங்க எழுந்திட்டீங்களா?” என கேட்க “ஆமா கண்ணே! நான் எழுந்திட்டேன். நீ ஏன் இங்க தூங்குறே?” என ருஹானா கேட்க, அருகில் நின்று ஆர்யனும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் தூங்கிட்டு இருக்கும்போது அம்மா குரல் கேட்டது. என்னை கூப்பிட்டாங்க. அவங்களை தேடிட்டே இங்க வந்தேன்” என இவான் சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“அது கனவு, சிங்கப்பையா!” என ஆர்யன் சொல்ல “இல்ல, அது கனவு இல்ல, நான் தூங்கல, அப்போ. முழிச்சிட்டு தான் இருந்தேன்” என்று சொல்ல ருஹானா நிமிர்ந்து ஆர்யனை குழப்பமாக பார்த்தாள்.

ருஹானா “சரி! வா செல்லம்!” என அவன் அறைக்கு அழைத்துவந்து சுத்தப்படுத்தி கட்டிலில் நிறுத்தி உடை மாற்ற “சித்தி! அம்மா பொருள்லாம் வச்சிருக்கிற இடத்துக்கு போகலாமா?” என இவான் கேட்டான்

பின்னால் நின்ற ஆர்யனை திரும்பி பார்த்த ருஹானா, இவானிடம் “எனக்கு உன்கூட செய்ய நெறைய வேலை இருக்கே, நாம அப்புறமா போகலாமா? சாப்பிடணும்… படம் வரையணும்… குக்கீஸ் செய்யணும்.. அப்புறம் நீ தோட்டத்துக்கு போக ஆசைப்பட்டா அங்க கூட போலாம்.. என்ன சொல்றே?” என அடுக்கிக்கொண்டே போனாள்.

இவான் மனதை வேறு பக்கம் திருப்ப ருஹானா முயற்சி செய்ய “சித்தி! அம்மா ரூம்க்கு நாம சாப்பாடு கொண்டு போலாமா? அவங்க வந்தா சாப்பிடுவாங்க” என இவான் சொல்லவும் அவளுக்கு கண்கள் கலங்கியது. ஆர்யனை பார்த்தவள் சொல்வதறியாது நின்றாள்.

“என்னுயிரே! நாம முன்னே இதைப்பற்றி பேசியிருக்கோம், தானே! அம்மா உன்னை பார்ப்பாங்க, நீ சிரிக்கறதை பார்த்து சந்தோசப்படுவாங்க. ஆனா நம்மளால அவங்களை பார்க்க முடியாது. அவங்களும் நம்ம கிட்ட வர முடியாது”

“ஆனா, நான் அவங்க குரல் கேட்டேன். என்னை கூப்பிட்டாங்க”

ஆர்யன் அதிர்ந்து நோக்க, ருஹானா “நீ அவங்களை ரொம்ப மிஸ் செய்திருப்பே! அதனால அம்மா கூப்பிடற மாதிரி உனக்கு தெரிஞ்சிருக்கும். முன்னாடி அவங்க உன்னை கூப்பிட்டது உனக்கு நியாபகம் வந்திருக்கும்” என்று சமாதானப்படுத்தினாள்.

ருஹானா சொல்ல சொல்ல இவான் கேட்டாலும் அவன் தெளிவடையவில்லை. இத்தனை நேரம் அமைதியாக இருவர் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன் அருகே வந்து ”இங்க பாரு, அக்னி சிறகே!” என அவனை தூக்கி தரையில் நிறுத்தியவன் தானும் அவன் உயரத்திற்கு  மண்டியிட்டான்.

இவானின் கைகளை பிடித்துக்கொண்டு ஆர்யன் “நீ உன் அம்மாவை மிஸ் செய்றே, அவங்களை தேடுறே. அதெல்லாம் சரி தான். ஆனா, நான் உனக்கு என்ன சொல்லியிருக்கேன். நினைவுப்படுத்தி பாரு. எது நடந்தாலும் நாம தைரியமா இருக்கணும் தானே. கவலை, துன்பம் எது உன்னை பாதிச்சாலும் நீ உறுதியா இருக்கணும், இல்லயா?” என மென்மையாக என்றாலும் அழுத்தமாக கேட்க, இவான் சரி என்று சொல்லாமல் தலையை குனிந்து கொண்டான்.

இருவரிடத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!! அன்று தள்ளி நின்றுக்கொண்டு கடுமையான வார்த்தைகளால் அண்ணன் மகனுக்கு கட்டளைகளை அள்ளிவிட்ட ஆர்யன், இன்று அவனிடம் மண்டியிட்டு கனிவாக அதே கருத்துக்களை அறிவுரைகளாக கூற முற்படுகிறான். சித்தப்பா எது சொன்னாலும் சரியென்ற இவான் இப்போது மௌனமாக இருக்கிறான்.

அப்போது கரீமா வந்து இவானை சாப்பிட அழைத்துப்போக, ஆர்யனும் வெளியே செல்ல “நான் உங்ககிட்டே பேசணும்” என ருஹானா அவனை தடுத்தாள். திரும்பி உள்ளே வந்த ஆர்யன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“இவான் பிரச்சனையை நாம இப்படி சரி செய்ய முடியாது” அவள் மெதுவாக சொல்ல “நான் எதும் தப்பா செய்யலயே!” என ஆர்யன் கடுமையாக சொன்னான்.

அவன் கண்களை பார்த்து ருஹானா “நீங்க செய்றது தப்பு தான்” என்றாள். ஆர்யனுக்கு உள்ளே திகைப்பு என்றாலும் அதை மறைத்துக்கொண்டு “என்ன தப்பு?” என கேட்டான்.

ருஹானா தயங்க “சொல்லு! நான் கேட்டுட்டு தான் இருக்கேன்” என ஆர்யன் கேட்க “நான்… எனக்கு புரியுது. அவன் புண்படக்கூடாதுன்னு அவனை வலிமையா இருக்கணும்னு நீங்க சொல்றீங்க.. ஆனா அவன் குழந்தை. எப்படி வலிமையா இருக்கணும்னு கூட அவனுக்கு தெரியாது. இந்த சின்ன வயசுல கொடுமையான இழப்புக்களை சந்திச்சிட்டான். இப்போ அவனுக்கு தேவை அன்பும், ஆதரவும் தான். அறிவுரை இல்ல” என ருஹானா அவனுக்கு உரைக்கும்படி தெள்ளத்தெளிவாக சொன்னாள்.

கோபமான ஆர்யன் “அவன் யார்கிட்டேயும் எதையும் எதிர்பார்க்க கூடாது. அப்படித்தான் நான் அவனை உருவாக்குறேன். அவன் மத்தவங்க கிட்டே இருந்து அன்பையும், அக்கறையும் எதிர்பார்த்தா, பலவீனமா தான் ஆகிடுவான். சின்ன கஷ்டம் கூட தாங்க முடியாது. எந்த துன்பம் வந்தாலும் வலிமையா இருக்கணும்னு  இவான் கத்துக்கணும்” என வேகமாக பேசினான்.

“இவானுக்கு ஐந்து வயசு தான் ஆகுது. இந்த சின்ன வயசுல இதெல்லாம் அவன் கிட்டே எதிர்பார்க்கக் கூடாது” என்று சொன்னவள் தயங்கியபடி “உங்க சின்ன வயசுல நீங்க தனியா போராடியிருக்கீங்க. ஆனா இவான் இப்போ தனியா இல்ல. உங்களைப் போல கஷ்டப்படணும் அப்படின்னும் அவசியம் இல்ல. எந்த மனிதனுக்கும் அன்பும், ஆதரவும் கண்டிப்பா தேவை. இவானுக்கும் அப்படித்தான்” என அழுத்தம் திருத்தமாக சொல்லி முடித்தாள்.

ஆர்யனின் கோபம் தலைக்கேற அவளை நெருங்கியவன் “நான் சொல்றதை தப்புன்னு சொல்ற நீதான் தப்பு. அன்பான வார்த்தைகள் அவனை வலுவற்றவனாக்கும். வேற ஒரு பயனும் தராது. அன்பு எப்பவும் பலவீனம் தான்” என்று இரைந்தான்.

“வலிமையா இருக்கேன்னு சொல்றது ஒரு முகமூடி. அன்பானவங்களை இழக்க பயந்து நாமே போட்டுக்கற முகமூடி. நம்மோட காயம் வெளிய தெரியாம இருக்க மறைக்கிற மூடி. அந்த முகமூடிக்கு உள்ளே பயந்தவங்க தான் இருப்பாங்க. பலமானவங்க இல்ல. அன்பு ஒன்னு தான் காயப்பட்டவங்களை குணப்படுத்தும்” என தன் வார்த்தைகளை இறுதியாக்கி ருஹானா வெளியேற ஆர்யன் சிந்தனை வசப்பட்டான்.

செஞ்சூரியன் சீறும் தைரியத்தை

சிங்கப்பையனுக்கு போதிக்க..

அன்பை அன்னத்தோடு 

அள்ளியூட்டும் அன்னப்பறவை 

அதை ஆதரிக்குமா?

Advertisement