Advertisement

அர்ஸ்லான் மாளிகையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு மிஷால் தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டு காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக நஸ்ரியா உள்ளே இருந்து வந்து அவனுக்கு சேரவேண்டிய உணவு பதார்த்தங்களை கொடுத்தவள், மிஷால் பேச முற்படுவதற்குள் சாரா அழைக்க உள்ளே ஓடிவிட்டாள். 

ஏமாற்றமாக திரும்பியவன் தோட்டத்தில் இவான் கீழே அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நாடி சென்றான்.

“இவான்! ஏன் இங்க உட்கார்ந்திருக்கே? ருஹானா எங்கே?”

ஒரு குச்சியை வைத்து மண்ணை கிளறியபடி சோகமாக அமர்ந்திருந்த இவான் மிஷாலை நிமிர்ந்து பார்த்தான். “சித்தி தூங்குறாங்க?”

அவனிடம் மண்டியிட்ட மிஷால் “என்ன, தூங்குறாளா?” என்று ‘இந்த நேரத்திலா?’ என குழப்பமானவன் “சரி, அவள் எழுந்ததும் என் சலாமை அவளுக்கு சொல்லு” என எழுந்தான்.

“மிஷால் அண்ணா! உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?”

“கேளேன் இவான்”

“அனாதைன்னா என்ன?”

“யாரும் இல்லாதவங்க தான் அனாதை” என்று சொன்னவன் சட்டென்று சுதாரித்து கொண்டு அவனை யாரோ புண்படுத்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டு “உனக்கு தான் உன் சித்தி இருக்கிறாளே!” என்று இவான் தலையை வருடியபடியே சொன்னான்.

அந்த சமயம் போன் பேசிக்கொண்டே மாளிகைக்குள் வந்த ஆர்யன் மிஷாலை பார்த்ததும் கடுப்பானான். அவன் இவானுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து எரிச்சலானவன், மிஷாலை முறைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றான்.

——- 

ஆர்யன் தன் அறையில் அலுவலக வேலையை முடிக்கவும், ஜாஃபர் காபி கொண்டுவரவும் சரியாக இருந்தது.

“ஜாஃபர்! இவான் தோட்டத்துல இருந்து உள்ள வந்துட்டானா?”

“லிட்டில் சார் அப்பவே வந்துட்டாரே! அவர் சித்தி ரூம்க்கு பத்து தடவைக்கு மேலே போய் பார்த்துட்டு வந்தார்”

“இன்னும் அவன் சித்தி எழுந்துக்கலயா?”

இல்லை என்ற ஜாஃபரின் பதில் கேட்டு உடனே எழுந்துகொண்ட ஆர்யன் “சரி, காபியை நீங்க இங்க வைங்க” என்று சொல்லிவிட்டு ருஹானாவின் அறைக்கு சென்றான்.

காலையில் பார்த்தது போலவே ருஹானா அசையாமல் தூங்கிக்கொண்டிருக்க, அவளை கட்டிக்கொண்டு இவானும் அவள் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் நின்று அவர்களையே பார்த்துகொண்டிருந்தான். அந்த அன்பு வட்டத்தில் அவனும் இணைய விரும்புகிறானோ!

கைக்கடிகாரத்தை பார்த்தவன் ஏன் இவ்வளவு நேரம் தூங்குகிறாள் என சந்தேகப்பட்டு அவள் படுக்கைக்கு அருகே இருந்த மாத்திரைகளை எடுத்துப் பார்த்தான். முன்தின இரவு தூங்காதது தான் இந்த நீண்ட தூக்கத்திற்கு காரணமோ என்று நினைத்தவன், இவானை அலுங்காமல் தூக்கி கொண்டு, ருஹானாவை பார்த்தபடியே வெளியே சென்றான்.

———

கதவை தட்டி உள்ளே வந்த கரீமா “ஆர்யன்! நான் உன்கிட்டே முக்கியமா பேசணும்” என்றாள்.

“நானே உங்க கிட்டே பேசணும்னு இருந்தேன். நீங்களே வந்திட்டிங்க”

“சொல்லு ஆர்யன் டியர்”

“இவான் ஏன் தோட்டத்துல தனியா இருந்தான்? உங்களை அவனை பார்த்துக்க சொல்லியிருந்தேன்ல. எப்பவும் யாராவது ஒருத்தர் அவன்கூட இருக்கணும்ன்னு சொன்னேன் தானே” என கோபமாக கேட்டான், இந்த கொடியவள் தான் இவானை நிராதரவாக அனுப்பினாள் என்று தெரியாமல்.

“நான் கவனிக்கல, ஆர்யன். நான் ருஹானாவை பார்க்க போயிருக்கும்போது அவன் வெளியே போயிருக்கான். இனிமேல் இன்னும் கவனமா அவனை கவனிச்சிக்கறேன். நீ கவலைப்படாதே”

“சரி, சொல்லுங்க. நீங்க என்ன சொல்ல வந்தீங்க?”

“நம்மோட பழைய நாட்களை யோசித்திட்டு இருந்தேன், ஆர்யன். எத்தனை கஷ்டம் தாண்டி இந்த நிலைமைக்கு வந்திருக்கோம். பழைய இடிந்து போன வீட்ல இருந்தோம். நல்லா சாப்பிட சாப்பாடு இருக்காது”

ஆர்யனும் அந்த காலத்திற்கு செல்ல, கரீமா குரலில் இன்னும் நடிப்பை ஏற்றினாள். “அத்தனை சிரமமும் நாம ஒன்னா, ஒரே குடும்பமா இருந்து தாங்கிக்கிட்டோம். அல்லாஹ் எனக்கு ஒரு குழந்தையை கொடுக்கல. உங்கள தான் நான் அன்போடு அரவணைச்சிக்கிட்டேன். நீங்க தான் என் குடும்பம். அம்ஜத் மட்டும் இல்ல. இறந்து போன அக்ரம், நீ… எல்லாரும் என் குடும்பம் தான்”

ஆர்யன் கனிவோடு அவளை பார்க்க, அவள் தொடர்ந்து அவன் மனதை தொடும்படி பேசினாள். “உன்னை நான் சகோதரனா தான் பார்க்கறேன். எப்படி எனக்கு சல்மாவோ அப்படித்தான் நீயும். உன்கிட்டே இருந்து இதுவரை நான் எதுவும் எதிர்பார்த்தது இல்ல. இப்போ என்ன சொல்ல வந்தேன்னா.. உன்கிட்டே முதல்முறையா ஒன்னு கேட்க போறேன்”

நாற்காலியில் ஆர்யன் நிமிர்ந்து அமர்ந்து கரீமாவை கவனமாக பார்த்தான். “அதும் எனக்காக இல்ல. சல்மாவுக்காக. எனக்கு தெரியும், நீ அவ மேல கோபமா இருக்கே. நீ சொல்றது சரி தான். ஆனா அவ சின்ன பொண்ணு. லண்டன்ல படிச்சவ. நாளெல்லாம் சும்மா இருக்க அவளுக்கு கஷ்டமா இருக்கு. அவளோட துடுக்குத்தனம் எனக்கும் பிடிக்கல தான். ஆனா அவளுக்கு என்னை விட்டா யாரும் கிடையாது. நல்லா படிச்சவ அவ. அவளுக்கு நம்ம கம்பெனில வேலை கொடு. இதான் நான் உன்கிட்டே கேட்கறேன்”

ஆர்யன் ஆச்சரியமாக பார்க்க “எனக்கு தெரியும். நம்ம கம்பெனி நம்ம குடும்ப கம்பெனி. சிரமமான நேரத்திலலாம் நான் உனக்கு உறுதுணையா இருந்திருக்கேன். இப்போ நீ சல்மாவுக்கு உதவி செய். கம்பெனில என்னோட பங்கையெல்லாம் நான் சல்மாக்கு மாத்துறேன். அவளை உனக்கு உதவியா வச்சிக்கோ” என்று கரீமா முடித்தாள்.

“அண்ணி! நீங்க யோசித்து தான் சொல்றீங்களா? இது முக்கியமான முடிவு. உறுதியா தான் இருக்கீங்களா?”

“ஆமா ஆர்யன்”

நெடு நேரம் யோசித்த ஆர்யன் “சரி அண்ணி! உங்க விருப்பப்படி” என்று ஒரே வார்த்தையில் சம்மதிக்க, கரீமா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

——-

மிஷால் ருஹானாவிற்கு போனில் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தான். அந்த மணியோசை காதில் விழும் நிலையில்தான் அவள் இல்லையே. கவலைப்பட்டவன் பின் அவளுக்கு பேசி பதிவு செய்து அனுப்பினான். “ருஹானா! நான் வந்ததை வீட்ல இருக்கறவங்க சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கறேன். உணவுக்கு நன்றி சொல்லத் தான் கூப்பிட்டேன். அங்கே எல்லாம் சரி தானே? இதை கேட்டதும் எனக்கு போன் செய்”

———

“அக்கா! என்னால நம்பவே முடியல. நிஜமாவே ஆர்யன் ஒத்துக்கிட்டானா?” சல்மா குதிக்க, கரீமாவும் சிரித்தாள். “கம்பெனில வேலை கிடச்சதை விட நீ ஆர்யன் பக்கத்துலயே எப்பவும் இருக்க போறே. அது தான் நம்ம நிஜமான வெற்றி”

“எப்படிக்கா இதை சாதிச்சே?”

“அவன் கிறுக்கு அண்ணனை இத்தனை வருஷமா பார்த்துக்கறனே, அதுக்கு இது கூட செய்ய மாட்டானா? உண்மையில விதவைக்கும் எனக்கும் என்ன வித்தியாசம். கணவன் கூட வாழல நான். அம்ஜத் என்கிற ஒரு குழந்தையை தான் வளர்த்து இருக்கேன்”

சல்மா அக்காவை இரக்கமாக பார்க்க “இப்போ உன்னோட முறை, சல்மா. கடிவாள கயிறை சீக்கிரம் பிடி” என்று கரீமா சொல்லி தந்தாள்.

“அக்கா! நான் உனக்கு சத்தியம் செய்றேன். எனக்காக மட்டும் இல்ல நான் உனக்காகவும் கடுமையா உழைப்பேன். ஆனா இந்த அனாதை பையனையும், அவன் சித்தியையும் துரத்திட்டினா நிம்மதியா இருப்பேன்”

“அதைப் பத்தி நீ கவலைப்படாதே. இன்னைக்கு நைட் ஒரு பெரிய வேலை செய்ய போறேன்”

“என்னக்கா அது?”

“மேஜிக்” என்று கரீமா கோணல் சிரிப்பு சிரிக்க, இரு சதிகாரிகளும் ஆனந்தப்பட்டனர்.

———–

கரீமா தன் போனில் பழைய வீடியோக்களில் எதையோ தேடினாள். தஸ்லீம் பேசிய வீடியோ ஒன்று அவளுக்கு கிடைத்தது. ஒரு வயது நிரம்பிய இவான் எட்டு எடுத்து வைக்க அவன் முன்னே நின்றுக் கொண்டு அவன் அம்மா அழைக்க அதை ஜாஃபர் போனில் பதிவு செய்யும் வீடியோ அது.

“என் பையன் பெரியவனாகிட்டானே! ஜாஃபர்! இந்த பக்கம் வந்து எடுங்க! அவனோட முதல் நடையை பாருங்க. வா மகனே! நீ எப்படி நடக்கிற ன்னு எல்லாருக்கும் காட்டலாம். வா செல்லம். அம்மா கிட்டே வா. இவான், என் மகனே! என் அழகுப் பையா! அம்மா உனக்காக காத்திருக்கேனே! ஏன் என்கிட்டே வர மாட்ற? வா இவான்! என் கிட்டே வா கண்ணே”

கரீமாவின் முகம் பார்க்க சகிக்காதது போல மாறியது. அந்த காணொளியை  வைத்துக்கொண்டு சிறிது வேலை பார்த்தவள், அதை எடுத்துக்கொண்டு இவான் அறைக்கு சென்றாள்.

அங்கே தூங்கிக்கொண்டிருந்த இவான் அருகே அதை ஒலிக்க விட்டாள்.

“வா செல்லம். அம்மா கிட்டே வா. இவான், என் மகனே! என் அழகுப் பையா! அம்மா உனக்காக காத்திருக்கேனே! ஏன் என்கிட்டே வர மாட்ற? வா இவான்! என் கிட்டே வா கண்ணே” 

தூக்கத்திலேயே இவான் புரண்டான் “அம்மா! அம்மா!” என்று அழைத்தான். பின் கண்விழித்து பார்த்தவன் கதவு திறந்திருக்கவும், சிரிப்புடன் “அம்மா!” என்று கூப்பிட்டுக்கொண்டே செருப்பு கூட போடாமல் அறையை விட்டு வெளியேறினான்.

———

காலையில் ஆர்யன் இவானின் அறைக்கதவு திறந்திருப்பதை பார்த்து “அக்னி சிறகே! அதுக்குள்ளே எழுந்திட்டியா?” என புன்னகையுடன் கேட்டபடி உள்ளே வந்தவன், இவான் படுக்கை காலியாக இருப்பதை பார்த்து திகைத்தான். அறைக்குள்ளேயே அவனை தேடியவன், குளியலறையை திறந்து பார்த்தான்.

அவன் செருப்பு அங்கேயே கிடப்பதும், இரவில் போட்ட விளக்கு அணைக்காமல் இருப்பதை பார்த்து யோசனையானவன், ருஹானா அறை நோக்கி நடந்தான்.

எதிரே சாரா வரவும் “இவான் உள்ளே இருக்கிறானா?” என கேட்க, “லிட்டில் மாஸ்டர்  அங்க வரவே இல்லயே சார்! ருஹானா நேத்துல இருந்து தூங்கிட்டே இருக்காங்களே!” என சாரா கவலையாய் வினவ “சீக்கிரம் சரியாகிடுவா” என்று சொன்னான்.

“இன்ஷா அல்லாஹ்!” என சாரா சொல்ல “இங்க இல்லனா இவான் எங்க போயிருப்பான்?” என ஆர்யன் கவலைப்பட “அம்ஜத் சார் கீழே இருக்கார். அவரோட விளையாட்டி இருப்பார்” என சாரா சொல்லவும் நிம்மதியானவன் வேகமாக கீழே இறங்கினான்.

“அண்ணி! இவான் எங்கே?”

“அவன் ரூம்ல தூங்கிட்டு இருப்பான். என்ன ஆச்சு ஆர்யன்?”

“அவன் அங்கே இல்ல. அண்ணன் எங்கே? அவரோட இருக்கானா?”

“இல்லையே! அவர் சல்மா கூட தானே பேசிட்டு இருக்கார்”

இருவரும் வெளியே வர, ஜாஃபர் அங்கே இருக்க “ஜாஃபர்! இவானை பார்த்தீங்களா?” என்று ஆர்யன் கேட்க “இல்லயே! நான் பார்க்கலயே.. ஆனால்..” என்று ஜாஃபர் தயங்க “என்ன! சொல்லுங்க” என்று ஆர்யன் பதற்றமானான்.

“நான் காலைல எழுந்து வரும்போது வாசல் கதவு திறந்து இருந்தது. நைட் நான் தான் பூட்டினேன். எனக்கு நிச்சயமா தெரியும்” என்று சொல்ல, ஆர்யன் திகைக்க, கரீமா “ஆர்யன்! இவான் வீட்டை விட்டு ஓடிட்டானா?” என்று கர்ணகொடூரமாக கேட்டாள். 

பதறிப்போன ஆர்யனின் மனம் துடித்து போனது.

அன்பில் அணைந்த 

அன்னப்பறவைகள் இரண்டை

சூழ்ச்சியோடு சுழலும் 

சூன்யங்கள் இரண்டு

சிறகை பயங்காட்டி

தேவதையை  நீளத்துயிலில் ஆழ்த்த

அச்சம் மிகுந்த சிட்டு

மறைந்து போனதே எங்கோ..?

(தொடரும்)

Advertisement