Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 38 

கரீமா மாற்றி வைத்த மாத்திரையில் ஒன்றை சாப்பிட்ட ருஹானா வலியில் தெறித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாக வந்து, வண்ணம் பூசிக்கொண்டிருந்த இவான் அருகே கட்டிலில் அமர்ந்தாள்.

“இப்போ எப்படி இருக்கு, சித்தி? இன்னும் வலிக்குதா?”

“லேசா தான், அன்பே. ஆனா நாளைக்கு நான் உன்கூட ரேஸ் ஓடுவேன்” 

இவான் குறுஞ்சிரிப்புடன் கேட்க “வா, செல்லம். வரையலாம்” என்றாள்.

“இப்போ ஆப்பிளுக்கு கலர் அடிக்கலாம், சித்தி. ஒன்னு சிவப்பு, ஒன்னு பச்சை”

“சரி, தேனே! ரெண்டு பேரும் சேர்ந்து பூசலாம்”

“சித்தி! நீங்க சிவப்பு, நான் பச்சை”

“ஓகே! ரெடி…. ஒன்னு, ரெண்டு, மூணு”

வேகமாக இருவரும் நிறங்களை ஆப்பிள் மேல் தடவ, ருஹானாவின் கால் வலிக்கவும், கட்டில் மேல் காலை நீட்டி கையால் அழுத்தி விட்டாள்.

“ஹேய்! ரெண்டு பேரும் சேர்ந்து முடிச்சிட்டோம்!” என இவான் கத்த, ருஹானா சிரித்தாள். “சித்தி! நான் இதை சித்தப்பாட்ட காட்டிட்டு வரட்டுமா?” என அவன் கேட்க அவள் சம்மதித்தாள்.

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த இவானை கண்டதும், போனை பார்த்து ஏதோ குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்த ஆர்யன் அதை மேசையில் வைத்துவிட்டு புன்சிரிப்புடன் ஏறிட்டான். சோபாவில் அவன் அருகில் அமர்ந்த இவான் ஆப்பிள் படத்தை நீட்டி “பாருங்க சித்தப்பா! நாங்க செய்ததை” என்றான். ஆர்யன் ஆர்வமாக பார்க்கவும் “உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று இவான் கேட்டான்.

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெல்டன், அக்னி சிறகே”

“நான் மட்டும் வரையல, சித்தப்பா! சித்தி கூட சேர்ந்து தான்”

“உன் சித்தி உன்கூட விளையாட ஆரம்பிச்சிட்டாங்கனா அவங்க வலி குறைஞ்சிருக்கும். அப்படி தானே, சிங்கப்பையா?” ருஹானாவின் உடல்நலத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறானா!

“கொஞ்சம் வலி இருக்கு. அவங்க மாத்திரை சாப்பிட்டாங்க, சித்தப்பா”

ஆர்யன் மௌனமாக இருக்கவும், “சித்தப்பா! இதை சுவரில மாட்டலாமா?” என்று கேட்க “தாராளமா மாட்டலாமே” என்று ஆர்யன் சொல்லவும், குஷியான இவான் “நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாமா?” என சித்தப்பாவோடு நேரம் செலவழிக்கும் ஆசையில் தயக்கமாக கேட்டான்.

“ஏன் கூடாது? வா, முதல்ல போய் இதுக்கு ஒரு சட்டமும், சுத்தியும் கொண்டு வரலாம்” என ஆர்யன் எழ, இவானும் எழுந்து ஆர்யன் கையை பற்றினான். ஆர்யனுடன் இத்தனை நெருக்கமாக பழகியிராத இவானின் அருகாமையில் ஆர்யன் உள்ளம் கசிய, அப்படியே நின்றான். இவான் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவும் கூட நடந்தான்.

படத்தை சட்டமிட்டு அதை மாட்ட இவான் அறையில் இடம் தேட “சிங்கப்பையா! இதை எங்க தொங்க விடலாம்?” என்று கேட்க “அதோ! அங்கே!” என்று இவான் கைகாட்டி சொல்ல, முகம் மென்மையுற ஆர்யன் “நானும் அந்த இடம் தான் நினைச்சேன்” என்றான்.

“நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி நினைக்கிறோமே!” என இவான் வியப்பாக சொல்ல, ஆர்யன் “இதுக்கு ஏன் ஆச்சரியம், உனக்கு? நாம ஒன்று போல தான் யோசிப்போம், ஏன்னா நீ என் அண்ணன் மகன், நான் உன் சித்தப்பா…” என, “அப்புறம் சித்தி… என் சித்தியும்!” என இவான் சொல்லவும் ஆர்யன் மனம் அதிர்ந்தது.

“சித்திட்ட இதை காட்டலாமா? ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்று சொன்னவன் குடுகுடுவென வெளியே ஓடினான்.

கலர் பென்சில்களை பெட்டியில் வைத்துக்கொண்டிருந்த ருஹானாவுக்கு கொட்டாவி வர “நல்லா தானே தூங்கினேன். ஏன் இப்பவே தூக்கம் வருது?” என அதிசயத்தபடி நிற்க, அங்கே வந்த இவான் அவள் கையை பிடித்து இழுத்தான்.

“சித்தி! என் ரூம்க்கு வாங்க”

“ஏன் தேனே?”

“நான் சொல்ல மாட்டேன். சர்ப்ரைஸ். நீங்க வாங்க”

சிரித்துக்கொண்டே இவான் இழுத்த இழுப்புக்கு ஓடிவந்த ருஹானா, இவான் அறையில் சுத்தியுடன் நின்றுகொண்டிருந்த ஆர்யனை பார்த்து சிரிப்பு மறைய நின்றாள்.

“சித்தி! அங்க பாருங்க. உங்களுக்காக செய்தோம். உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று அழகு சட்டமிட்டு சுவரில் மாட்டியிருந்த படத்தை இவான் காட்ட இன்னும் அதிர்ந்தாள்.

சிவப்பு, பச்சை ஆப்பிள்களை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனும், இவான் குரல் கேட்டு திரும்பியவன், இவானை பார்த்துவிட்டு ருஹானாவை நோக்க, அவள் தலையை திருப்பிக்கொண்டு இவானை பார்த்து சிரமப்பட்டு புன்னகைக்க முயன்றாள். ஆர்யன் அவளை திட்டிய கோபம் இன்னும் இருக்கிறதோ!

“ரொம்ப அழகா இருக்கே, அன்பே!” என இவானை பார்த்து சொன்னவள் “நல்ல வேலை!” என்று ஆர்யனை பார்த்துக்கொண்டே சொன்னாள்.

அந்த அழகிய நிகழ்வை நினைவு கொள்ள விரும்பிய இவான் “சித்தப்பா! எங்க பெயின்டிங் முன்ன வச்சி எங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுக்கறீங்களா?” என ஆசையாக கேட்டான்.

சரியென தலையாட்டிய ஆர்யன் சுத்தியை கீழே வைத்துவிட்டு போனை எடுக்க, இவான் காலணியை கழட்டி வைத்துவிட்டு சோபாவில் ஏறினான். ருஹானாவும் தயங்கியபடி அருகே வர அவள் கழுத்தை கட்டிக்கொண்டு நின்றான்.

ஆர்யன் புகைப்படம் எடுக்க போனில் இருவரையும் பார்க்க, ருஹானாவின் முகத்தை பார்த்த இவான் “சிரிங்க, சித்தி” என்றான். “நான் சிரிச்சிட்டு தான் இருக்கேன், செல்லம்” அவள் சொல்ல, நம்பாத இவான் “சித்தப்பா! சித்தி சிரிக்கிறாங்களா?” என கேட்டான்.

போனிலிருந்த ருஹானாவின் மேல் வைத்த பார்வையை எடுத்து எதிரே இருந்த ருஹானாவிடம் திருப்பிய ஆர்யன் “இல்ல.. சிரிக்கல, சிங்கப்பையா!” என்று அவளை இவானிடம் மாட்டிவிட்டான். ருஹானா கண்கள் அகல அவனை பார்த்து கண்டிக்கும் விதமாக லேசாக தலையசைக்க, அந்த அழகு பாவனையில் ஆர்யன் அசந்து நின்றான்.

திரும்பவும் இவான் அவளை சிரிக்க சொல்ல, லேசாக முறுவல் கூட்டி ருஹானா நிற்க, ஆர்யன் போனில் அவளை பார்த்தபடியே அசையாமல் நிற்கவும், கேமிராவை பார்த்திருந்த ருஹானா தலையை தூக்கி பின்னால் நின்ற ஆர்யனை பார்த்தாள். அதன் பின்பே தன்னிலைக்கு திரும்பிய ஆர்யன் அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்து முடித்தான்.

“சித்தப்பா! நாம மூணு பேரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாமா?” என்று அடுத்து இவான் ஒரு வெடிகுண்டை போட, ருஹானாவும், ஆர்யனும் சட்டென்று தலையை குனிந்து கொண்டனர்.

“கண்ணே! சித்திக்கு சோர்வா இருக்கு” என்று ருஹானா தவிர்க்கப் பார்க்க, “சித்தி! ஒரே ஒரு போட்டோ தான்” என்று இவான் கெஞ்ச, “சரி, எப்படி எடுக்கறது?” என ருஹானா கேட்டாள். ஆர்யன் அதற்காகவே காத்திருந்தவன் போல முன்பக்க கேமிராவை இயக்கியவன் இவான் அருகே சென்று அவனை வலது கையில் தூக்கிக்கொண்டான்.

சித்தப்பாவின் தோளில் கைப்போட்டு கொண்ட இவான் “வாங்க சித்தி! செல்ஃபி எடுக்கலாம்” என்று ருஹானாவையும் அருகே இழுத்தான். ஆர்யனும், இவானும் கேமிராவை பார்க்க அதில் ருஹானா தெரியவில்லை. “சித்தி! இன்னும் கொஞ்சம் பக்கத்துல வாங்க. நீங்க போட்டோல இல்ல” என்று  சொன்ன இவான் “அப்படித்தானே சித்தப்பா?” என்று ஆர்யனிடமும் கேட்டான்.

ஆர்யனும் தலையசைக்க ருஹானா தயங்கியபடியே நெருங்க இவான் மறுகையால் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு இழுத்தான். ருஹானாவின் கை இவானை தூக்கி வைத்திருந்த ஆர்யனின் கையில் பட, அவனுக்கு மனதுக்குள் மின்னலடித்தது. ருஹானாவும் சங்கடமடைந்து ஆர்யனை ஏறிட்டு பார்க்க, அவன் திரும்பி கேமராவை பார்த்து போனை சரி செய்தான்.

“என்ன சித்தி நீங்க! சிரிக்க மாட்றீங்க?” என்றான் இவான் மறுபடியும். “நான் சிரிக்கிறேன் தானே, அன்பே!” என சொல்லவும் ஆர்யன் அவள் புறம் திரும்பி “இல்ல.. நீ சிரிக்கல” என்றான் மென்மையாக. விசித்திரம்தான்! சிரிக்கவே தெரியாத இவன் அவளை சிரிக்க சொல்கிறான்.

“நீங்களும் சிரிங்க, சித்தப்பா” என்று இவான் சொல்ல “இதுவே ஓகே தான், சிங்கப்பையா” என்று ஆர்யன் அப்படியே பார்க்க, அந்த ‘ஓகே’ எப்படி இருக்கிறது என்று ருஹானா ஆர்யனை பார்த்தாள். வசீகரமாகத் தான் இருந்தது. 

அவள் கேமிராவை பார்க்கும்வரை காத்திருந்த ஆர்யன், அவள் திரும்பியதும் அவளை பார்த்தபடியும், நேராக பார்த்தபடியும் நிறைய போட்டோக்களை எடுத்தான். இருவர் இருக்கும் போட்டோ ஒன்றே ஒன்று எடுத்தவன், மூவர் இருப்பதை அதிகமாக எடுத்தான். 

புகைப்படத்தில் அவர்கள் ஒரு அழகிய குடும்பமாக காட்சியளித்தனர். இவானுக்கு அது மகிழ்ச்சியை தந்தது. ஆர்யன் அப்படி உணராவிட்டாலும் அவனுக்கு வேறுவித மகிழ்ச்சியே, இத்தனை நாட்களாக இவான் பிறந்தநாள்விழாவில் எடுத்த ருஹானாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது புது புகைப்படம் கிடைத்திருக்கிறதே!   

“தூங்குற நேரமாச்சி. தூங்கப் போ, இவான் செல்லம்”

“சித்தி! இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாம். நான் இன்னைக்கு உங்ககூட சரியாவே விளையாடல”

“நாளைக்கு விளையாடலாம், கண்ணே! எனக்கு இப்போ சோர்வா இருக்கு” 

“கண்டிப்பா நாளைக்கு விளையாட வருவீங்க தானே, சித்தி?”

“கண்டிப்பா, அன்பே! குட்நைட்” என்று சொல்லி ருஹானா ஆர்யனை பார்த்தாள். ‘நான் போறேன். நீங்க இவானை தூங்க வைங்க’ எனும் செய்தி அந்த கண்களில் இருக்க, ஆர்யன் தலையசைத்தான். செல்லும் அவளையே பார்த்திருந்த ஆர்யன் ‘நான் என்ன இப்படி பார்க்கிறேன்?’ என தனக்குத்தானே கேட்டபடி முகத்தையும், மனதையும் சுருக்கினான்.

———– 

“அக்கா! எனக்கு என்னமோ இந்த பிளான்ல நம்பிக்கையே இல்ல. அவ ராட்சசி, அக்கா. ஏழு உயிர் வாங்கிட்டு வந்துருப்பா போல! என்ன செய்தாலும் திரும்பி வந்திடறா”

“இல்ல சல்மா! இந்நேரம் அந்த மாத்திரை வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும். பிணம் போல கிடப்பா. இவான் அவளை பார்த்தான்னா அவன் அம்மா ஞாபகம் அவனுக்கு வரும். எல்லாம் என் பிளான்படி தான் நடக்கும்”

——–      

காலையில் காரை எடுத்துகொண்டு சித்தியுடன் விளையாட ஆர்வமாக வந்த இவான், அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு “சித்தி!” என்று அழைத்துப் பார்த்தான். அப்போதும் அவள் அசையாததால் பயந்து போன இவான் “சித்தி! என்கூட இன்னைக்கு விளையாட வரேன்னு சொன்னீங்களே!” என்று அவளை பிடித்து உலுக்கினான். அப்போதும் அவளிடம் அசைவு இல்லை. 

ஓடிப்போய் ஆர்யனை அழைத்தான். “சித்தப்பா! வாங்க சித்தியை பாருங்க” என்று கூப்பிட்டு வந்தான். ஆர்யனும் பதட்டமாக ஓடிவந்தவன் அவள் அறைக்குள் நேராக செல்லாமல் கதவு தட்டி நின்றான். பதில் ஏதும் உள்ளிருந்து வராததால் மீண்டும் பலமாக தட்டினான். இவானின் கண்ணீரை துடைத்தவன் பதில் வர காத்திருக்க, அப்படியேதும் நடக்காததால் கதவை திறந்தான்.

அசந்து உறங்கும் ருஹானாவை பார்த்து ஆர்யன் வாசலிலேயே நிற்க, இவான் உள்ளே சென்று ருஹானாவை பிடித்து ஆட்டி அழைத்தான். ருஹானா எழவில்லை. ஆர்யன் உள்ளே சென்று இவானை நகர சொல்லிவிட்டு அவள் நாடியை பிடித்து பார்த்தான். பின் அவள் தோள் தொட்டு பலமாக அசைத்தான். “எழுந்திரு!’ என மூன்று முறை சத்தமாக அழைத்தான். அவள் முகம் சுருங்கி கண்விழிக்கவும் தான் அவனுக்கு சுவாசம் சீரானது.

இவானுக்கும் புன்னகை வர “சித்தி!” என்று அவள் கழுத்தை கட்டிக்கொண்டான். “அன்பே!” என்று அணைத்துக்கொண்ட ருஹானா திரும்பவும் கண்மூடிக் கொண்டாள். “சித்தப்பா!” என்று இவான் பயப்பட “வா சிங்கப்பையா! உன் சித்தி தூங்கட்டும். நீ சாப்பிட்டு வரதுக்குள்ள எழுந்துடுவாங்க” என்று சொல்லவும், இவான் மறுபடியும் ருஹானா கன்னத்தில் முத்தமிட்டவன் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வெளியே சென்றான்.

ஆர்யன் அங்கிருந்த ஜன்னலை விரிய திறந்துவிட்டவன், அவனும் திரும்பி திரும்பி ருஹானாவை பார்த்துக்கொண்டே சென்றான்.  

———- 

ருஹானாவுக்கு உணவை எடுத்துக்கொண்டு இவானுடன் உள்ளே வந்த கரீமா மரக்கட்டையாய் கிடந்த ருஹானாவை பார்த்து மகிழ்ந்து போனாள். இவான் “என்ன! சித்தி இன்னும் எழுந்திருக்கல?” என கவலையுடன் கேட்க, கரீமா “அல்லாஹ் காப்பாற்றட்டும்! தஸ்லீம் மாதிரியேவா இவ முடிவும் இருக்கும்?” என பயமுறுத்தினாள்.  

———-

“அக்கா! இன்னைக்கு காலைல தான் நான் நிம்மதியா, சந்தோசமா சாப்பிட்டேன், அந்த பசப்புக்காரி இல்லாம”

“நாளைக்கே அவ ஒழிஞ்சிடுவா, பாரு”

“இவானை என்ன செய்தே?”

“நல்லா மிரட்டி வச்சிருக்கேன். இனி தான் நான் இன்னும் அவனை நல்லா கவனிக்கணும்” என்று சைத்தான் கரீமா குரூரமாக சொல்ல, சகோதரிப்பேய் நக்கலாக சிரிக்க, அப்போது வாடிய குருத்தாக இவான் அங்கே வந்தான்.

“என் சித்தி இன்னும் தூங்கிட்டே இருக்காங்களே?”

“ஏன் அக்கா, இவன் அம்மாவும் இப்படித்தானே மயங்கியே இருந்தாங்க?”

“ஆமா சல்மா! பாவம் இவான், ஆயிரம் முறை போய் தஸ்லீமை எழுப்புவான். அப்படிதானே இவான்?”

இவான் கண்களில் கண்ணீர் தாரையாக வடிய, இரக்கம் சற்றும் இல்லாத பாதகிகள் இரண்டும் சிரிப்புடன் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டன.

“இவான்! உன் அம்மா போலவே உன் சித்தியும் செத்து போய்டுவான்னு உனக்கு பயமா இருக்கா?” என தயை, தாட்சண்யம் எதுவுமின்றி சல்மா கேட்க, இவான் கண்ணீருடன் தலையாட்டினான்.

“அச்சோ! எனக்கு இவானை பார்க்க பாவமா இருக்கே! முதல்ல இவனோட அம்மா போனாங்க. இப்போ இவன் சித்தி செத்து போக போறாங்க. இனி இவான் அனாதை தான். ரொம்ப பரிதாபம்” என்று சல்மா முதலை கண்ணீர் வடித்தாள்.

“போதும் சல்மா! அவனே கஷ்டப்படுறான். இன்னும் அவனை வேதனைப்படுத்தாதே. விடு. இவான் டியர் நீ முன்னாடி தோட்டத்துல போய் விளையாடு” என்று கரீமா சொல்ல இவான் அழுதுக்கொண்டே சென்றான்.

“அவ்வளவு தான். இங்க கதை முடிஞ்சது. சல்மா! உனக்கு ஆர்யன்ட்ட வேலைக்கு சொல்ல போறேன். அவன் கிட்ட நீ மிக கவனமா நடந்துக்கணும்”

“கவலைப்படாதே, அக்கா. நான் பார்த்துக்கறேன்”

“எவ்வளவு சீக்கிரம் அவன் கிட்டே நெருக்கமாக முடியும்னு முயற்சி செய்”

———-

Advertisement