Advertisement

அங்கே கட்டில் மேலிருந்த அவனுடைய வரைவு புத்தகத்தை எடுக்க போன இவான் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த காகித கப்பலை பார்த்தான். அதை எடுத்து தள்ளி வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து திரும்பிய இவான் மேசை மேல் அவன் அன்னையும் அவனும் இருக்கும் புகைப்படத்தின் பக்கத்தில் இருந்த மற்றுமொரு காகித கப்பலை பார்த்து நின்றான். 

கப்பலை கையில் எடுத்து பார்த்தவனுக்கு தஸ்லீம் செய்து தரும் கப்பலை அது நினைவுப்படுத்த அன்னையை நினைத்து இவான் கண்களில் கண்ணீர். அவன் உதடுகள் “அம்மா!” என உச்சரித்தன. புகைப்படத்தில் இருந்த தஸ்லீமை பார்த்துக்கொண்டே நின்றான். ஒளிந்து நின்ற பார்த்திருந்த கரீமா கோரமாக சிரித்தாள்.   

அடுப்பில் வேலை செய்துக்கொண்டிருந்த ருஹானா, இவானை பார்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இவான் அருகே மண்டியிட்டாள்.

“என் செல்லம்! காட்டு, என்ன வரைஞ்சிருக்கே பார்க்கலாம்”

உற்சாகமாக ஓடிய இவான் சோர்வாக திரும்பியதை கவனித்த ருஹானா “கண்ணே! என்ன ஆச்சு?” என கேட்க, இவான் கப்பலை காட்டி “சித்தி! இது நீங்க செஞ்சீங்களா?” என வினவினான். ருஹானா யோசனையாக பார்க்க, பின்தொடர்ந்து வந்த கரீமா மறைந்து நின்று பார்த்தாள்.

“இது என் ரூம்ல இருந்தது. அம்மா செய்ற கப்பல் மாதிரியே இருக்கு இது.. மருந்து பேப்பர்ல”

“நான் செய்யல, செல்லம். உனக்கு கப்பல் ரொம்ப பிடிக்கும்ல. அதனால யாராவது செஞ்சி உன் ரூம்ல வச்சிருப்பாங்க, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க” என்று ருஹானா சொல்லவும் இவான் யோசிக்க “உன்னோட அம்ஜத் பெரியப்பாவா கூட இருக்கலாம். நேத்து கூட உனக்கு மர கப்பல் செஞ்சி கொடுத்தாரே!” என மேலும் ருஹானா சமாதானப்படுத்த, இவான் லேசாக புன்னகைக்க, கரீமா முகம் கடுக்க அங்கிருந்து சென்றாள்.

“வாங்க செஃப் இவான்! நாம வேலையை முடிப்போம்” என்று சொல்லி அவனை தூக்கி மேலே அமர்த்தினாள். “நாம டோல்மா செய்யலாமா?” என அவனிடம் மாவை கொடுத்து கலக்க சொன்னாள். இவானும் ஆர்வமாக செய்ய, ருஹானா நிம்மதி அடைந்தாள்.

———–

படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன், தோட்டத்திலிருந்து வேகமாக வாசற்கதவை திறந்து உள்ளே ஓடிவந்த அம்ஜத்தை கைப்பிடித்து நிறுத்தினான்.

“அண்ணா! ஜாஃபரை பார்த்தீங்களா?”

“நான் பார்க்கல. என்னை விடு ஆர்யன். கரீமா கண்ணுல படாம நான் இதெல்லாம் சுத்தம் செய்யணும்” என அவன் மேலும், அவன் உடைகள் மேலும் இருந்த மண்கறைகளை காட்டினான்.

“அழுக்கா இருந்தா என்ன, அண்ணா? அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு பதட்டப்படுறீங்க?” சகோதரன் கையை இன்னும் இழுத்துக்கொண்டே கேட்டான்.

“விடு ஆர்யன்! அப்புறம் கரீமாட்ட யார் திட்டு வாங்குறது?” என்று சொல்லி அம்ஜத் ஆர்யனிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியே விட்டான்.

ஜாஃபரை தேடிக்கொண்டே சமையலறை வந்த ஆர்யன் இரு நிபுணர்கள் மும்முரமாக வேலை செய்வதை பார்த்து நிற்க “சித்தப்பா! பாருங்க நானும் சித்தி கூட சேர்ந்து வேலை செய்றேன்” என இவானின் குரல் கேட்டு திரும்பிய ருஹானா, ஆர்யனை பார்த்து தயங்கியபடி கண்களை தாழ்த்தி “என் வேலையை நான் இரவு செய்யத்தான் இருந்தேன். சாரா அக்காவும், நஸ்ரியாவும் வெளிய போயிருக்காங்க. அதான் இப்போ சமயலறையை பயன்படுத்திக்கிறேன்” எனவும் ஆர்யன் தலையசைத்தான்.

“உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என ருஹானா கேட்க “இல்ல. நீங்க உங்க வேலையை பாருங்க” என்று திரும்பிய ஆர்யன் “கவனம், இவான்” என்று சொல்லி நடக்க, “சித்தி! அந்த பாட்டிலை சித்தப்பாட்ட கொடுங்க. ஈஸியா திறந்துடுவார்” என்று இவான் சொல்லவும் ஆர்யன் நின்றான்.

துணியை போட்டு மூடியை திறக்க முயற்சி செய்துக்கொண்டிருந்த ருஹானாவை ஆர்யன் பார்க்க, “சித்தப்பாவோட கை வலிமையானது” என்று இவான் சிரிப்புடன் சொல்ல, ருஹானா ஆர்யனை பார்த்து “அது ஒன்னும் அத்தனை முக்கியம் இல்ல. நான் திறந்துக்கறேன்” என சொல்லிவிட்டு இவானிடம் “உன் சித்தப்பாவுக்கு வேலை இருக்கும். அவர் நேரத்தை வீணாக்காதே” என்று சொன்னாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நிற்க, இருவரையும் புன்சிரிப்புடன் மாறி மாறி பார்த்த இவான் “உங்களுக்கு திறக்க முடியல தானே, சித்தி? சித்தப்பா திறந்து தருவாரே!” என விடாமல் சொல்ல ஆர்யன் பக்கம் வந்து கை நீட்டினான். ருஹானாவும் பாட்டிலை தர “உன்னை டாக்டர் ஓய்வு எடுக்க சொன்னாரே?” என்று கேட்டபடி அவன் மிக எளிதாக அதை திறந்து மேசையில் வைத்தான்.

சித்தப்பாவின் பலத்தில் பெருமை அடைந்த இவான் பெருமித புன்னகை சிந்த, ருஹானா “எனக்கு சிரமம் இல்ல. அதுல்லாம நான் நேரத்துக்கு தரேன்னு மிஷால்ட்ட சொல்லிட்டேன்” என ஆர்யனிடம் சொல்ல, இவான் “சித்தப்பா! இது நல்லா இருக்கு. சாப்பிடுங்க” என்று சித்தி செய்திருந்த ஒரு பிஸ்கெட்டை எடுத்து கொடுத்தான். “சித்தி! வாயை திறங்க” என்று சொல்லி ருஹானா வாயிலும் ஒரு பிஸ்கெட்டை வைத்தான்.

இருவரும் சேர்ந்தாற்போல சுவைக்க, “நல்லா இருக்கா?” என இவான் கேட்க “ரொம்ப நல்லா இருக்கு” என இருவரும் ஒன்றாக பதில் சொல்ல, இவான் சத்தமாக சிரிக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்க அந்த அருமையான தருணத்தில் சல்மா உள்ளே வந்தவள் அதிர்ச்சியானாள்.

சமாளித்துக்கொண்டு “ருஹானா! என்ன நீ பெட்ல இல்லாம இங்க நிக்கிறே! உனக்கு நான் உதவி செய்யவா?” என்று நடிக்க “நன்றி! நான் என் வேலையை முடிச்சிட்டேன்” என்று ருஹானா மறுக்க, எதிரே வரும் ஆர்யனை பார்த்து சல்மா அழகாக சிரிக்க வழக்கம் போலவே அது வீணானது. 

————

கரீமா ஸ்டோர்ரூமில் தேடி பழைய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்து அதை ருஹானாவின் மாத்திரையில் மாற்றி வைத்தாள். அவள் அப்படி செய்துக்கொண்டிருக்கும்போதே ருஹானாவும், இவானும் உள்ளே வர ருஹானாவை தான் பார்க்க வந்ததாக சமாளித்தாள். “ருஹானா டியர்! நீ நல்லா ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அதோடு மாத்திரையும் தவறாம சாப்பிடணும்” என அவள் சொல்ல “நல்லவேளை கரீமா மேம்! நீங்க நினைவுப்படுத்தினீங்க! நான் மறந்தே போயிட்டேன்” என்று ருஹானா மாத்திரை புட்டியை எடுக்க சிரிப்புடன் கரீமா வெளியே சென்றாள்.

ருஹானா புட்டியை திறக்கும் சமயம் இவான் தண்ணீர் கேட்க, அதை வைத்துவிட்டு அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தாள். “இவான் செல்லம்! நீங்க எனக்கு உதவி செய்ததால என் வேலை சீக்கிரம் முடிந்தது. நாம இப்போ கலர் தீட்டலாமா?” என கேட்க இவானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.

சிறிது நேரம் இவர்கள் நிறம் நிரப்ப, “சித்தி! இந்த கடலுக்கு நீல நிறம் போடவா?” என கேட்க, நீலப் பென்சிலை ருஹானா எட்டி எடுக்க வலியால் முகம் சுளித்தாள். “உங்களுக்கு கால் வலிக்குதா, சித்தி?” என இவான் கேட்க “லேசா வலிக்குது. மாத்திரை போட மறந்துட்டேன்ல. இதோ இப்போ போடுறேன்” என அவள் எழுந்து கொள்ள, கதவு தட்டிவிட்டு அம்ஜத் உள்ளே வந்தான்.

“ருஹானா! இதோ பார்! கற்றாழை செடி! இது இங்க வைச்சா உனக்கு சீக்கிரம் குணமாகும்” என்று சொல்லி கொடுக்க, திரும்பவும் மருந்து சாப்பிடுவதை மறந்தாள். “பெரியப்பா! என்னை பாருங்க, நான் எப்படி கலர் அடிக்கிறேன்னு” என இவான் சொல்ல “சூப்பர்! சூப்பர்!” என்று சொல்லி அம்ஜத் இவான் தலையில் முத்தமிட்டு “உன்னை பார்த்துக்கோ” என ருஹானாவின் தோளில் தட்டி அவன் வெளியே சென்றான்.

“இவான்! இந்த செடியை எங்க வைக்கலாம்?” என ருஹானா கேட்க “இந்த ஜன்னல் பக்கம் வைக்கலாம்” என இவான் எழுந்து வர “வா! ரெண்டு பேரும் சேர்ந்து வைக்கலாம்” என ருஹானா அழைத்து செல்ல இருவரும் அந்த வேலையில் நேரம் செலவிட்டனர்.

——–  

“அக்கா! நான் மன்னிப்பு கேட்க போனா என்னை நேராக கூட பார்க்க மாட்றான். ஆனா அந்த சமையல்காரி எது செய்தாலும், அவ கண்ணுக்குள்ள பார்த்துட்டு நிற்கறான்” நடந்துக்கொண்டே சல்மா பொரிந்தாள்.

“பொறுமையா இரு, சல்மா. இன்னும் கொஞ்சம் வேலை தான் மீதி இருக்கு” 

“போக்கா, இவானும் சந்தோசமா இருக்கான். பேப்பர் கப்பல் ஒன்னும் வேலைக்காகல. அப்புறம் மத்தது என்ன செய்யும்?” சல்மா கிண்டலாக கேட்டாள்.

கட்டிலில் அமர்ந்திருந்த கரீமா வேகமாக எழுந்து “அது நிச்சயம் வேலை செய்யும். அது எப்படி வேலை செய்ய போகுதுன்னு நீ பார்ப்பே” என்றாள்.

———      

“சித்தி! இந்த மரம் நல்லா இருக்கா?”

“அருமையா இருக்கு, தேனே!”

“அடுத்து என்ன கலர் செய்ய, சித்தி”

“ஆப்பிள் வரைஞ்சி வண்ணம் தீட்டலாம்”

“சரி சித்தி! பச்சை ஆப்பிள் ஒன்னு, சிவப்பு ஆப்பிள் ஒன்னு”

சரியென சொல்லி எழுந்த ருஹானா, கால் தரையில் வைக்கவும் அதிகமாக வலிக்க, மாத்திரை சாப்பிடாதது நினைவு வர எழுந்து புட்டியை திறந்து ஒரு மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள்.

 

(தொடரும்)

Advertisement