Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 37 

‘கடின நேரத்தில் கைதூக்கி விட்டவர்களை எப்போதும் மறக்கக் கூடாது’ என்று ருஹானாவின் தந்தை அறிவுறுத்தியதை ருஹானாவின் வாய்மொழியில் கேட்ட ஆர்யன் அவளை நோக்க, “அதாவது… நாம துன்பத்தில் இருக்கும்போது  உதவுனவங்க நமக்கு எப்பவும் முக்கியம்” என்று ருஹானா சொல்ல அவளை பார்த்துக்கொண்டே அவன் தலையாட்டினான்.

அப்போது கதவு தட்டி உள்ளே வந்த நஸ்ரியா “ருஹானா! பெரியம்மா தூங்கிட்டாங்க. உங்களை பார்த்துக்கலாம்னு வந்தேன்” என சொல்ல, “நஸ்ரியா! நீ இவங்களை கவனிச்சிக்கோ. தூங்க விட்டுடாதே!” என எழுந்த ஆர்யன் வெளியே செல்ல, ருஹானாவும் ஆர்யன் தனக்கு செய்த உதவிகளை நினைத்து விழித்திருக்க, அங்கே ஆர்யனும் ருஹானாவை நினைத்தே தூங்காமல் இருந்தான்.

——– 

“என்ன அக்கா! நீ சமையல் செய்துட்டு இருக்கே?”

“சாராக்கு மறுபடியும் செக்அப் செய்ய ஜாஃபர் ஆஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கான்”

“அப்புறம் நஸ்ரியாவை பகல் பூரா தூங்குற அந்த பொண்ணுக்கு துணைக்கு இருக்க வச்சிருக்கான், ஆர்யன். அப்படித்தானே அக்கா?”

“ஆமா, சல்மா. இவானுக்கு சூப் செஞ்சிட்டு இருக்கேன்”

“நேத்து நீ சொன்னது என்ன, இப்போ செய்யறது என்ன? பையனையும், சித்தியையும் வெளியே அனுப்ப போறேன்னு சொல்லிட்டு இப்படி சமைச்சிட்டு இருக்கே?”

“அதுக்கான வேலைய தான் பார்த்துட்டு இருக்கேன், சல்மா மேடம். இவான் இப்போ அவன் அம்மாவை போல சித்தியும் செத்துப் போய்டுவா அப்படின்னு நினைச்சி அதிகபட்ச பயத்துல இருக்கான். அவன் சித்தி பக்கத்துல இல்லாத நேரத்துல அந்த திகிலை இன்னும் தூண்டிவிடணும்”

“சூப்பர் அக்கா! எரியுற நெருப்புல நீ பெட்ரோலை ஊத்த போறே”

“ஆமா! அவன் அம்மாவோட மரணத்தை மறக்கவிடாம செய்ய போறேன். இன்னைக்கே அதை ஆரம்பிக்க போறேன்”

“எப்படியோ சீக்கிரமா அவ வெளிய போனா சரி”

“இந்த வேலையெல்லாம் படிப்படியா மெதுவா தான் செய்யணும், சல்மா. நான் போய் சூப்பை இவானுக்கு கொடுத்துட்டு வரேன்”

கரீமா கொண்டு வந்த உணவை இவான் உண்ண மறுக்க, “உன் சித்தி கொடுத்தா சாப்பிடுவியா?” என கேட்டாள்.

“ஆனா சித்தி தூங்கிட்டு தானே இருக்காங்க?”

“இல்லயே! உனக்கு ஊட்ட தானே காத்துட்டு இருக்காங்க” 

முகம் மலர்ந்த இவான் “நிஜமாவா?” என ஆவலோடு கேட்டான். 

“ஆமா! சீக்கிரம் போ” என கரீமா திருட்டு புன்னகையுடன் அவனிடம் கிண்ணத்தை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

சிரிப்புடன் சித்தியின் அறைக்கு சென்ற இவான் ருஹானா தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் முகம் வாடினான். “சித்தி! சித்தி!” என அருகே சென்று அழைத்துப் பார்த்தான். சூப்பை மேசையில் வைத்தவன் மீண்டும் இருமுறை ருஹானாவை கூப்பிட அவளிடம் சிறிதும் அசைவில்லை.

இவான் இதே போல தன் அம்மாவுடன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் சூப் ஊட்ட சொன்னதும் சிரிப்புடன் எழுந்த தஸ்லீம் பின் முடியாமல் மயங்கி சரிந்ததும், அவன் எழுப்பியும் கூட எழுந்து கொள்ளாததும் நினைவுக்கு வந்து அவனை வருத்தியது. 

ருஹானாவை பார்த்துக்கொண்டிருந்த இவான் அவள் கன்னத்தில் மெலிதான முத்தம் ஒன்றை வைத்தான். பின் சூப் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு சோகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். கதவருகே நின்று சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த கரீமா தன் திட்டம் வெற்றியடைந்ததை கண்டு ஆனந்தமாக அகன்றாள். 

“இவான்! இங்க வா” என்ற ருஹானாவின் குரலில் சிரிப்புடன் திரும்பியவன் அவள் சிரமப்பட்டு எழுவதை கண்டு வேகமாக அருகே வந்தான். பக்கம் வந்து பாத்திரத்தை வைத்தவன் அவள் கழுத்தை கட்டிக்கொண்டான்.

“சித்தி! நான் உங்களை கூப்பிட்டதால எழுந்திட்டீங்களா?”

“இல்லயே, செல்லம்! உன் குரல் எனக்கு கேட்கவே இல்ல. உன் வாசனைல தான் நான் எழுந்தேன். உன்னை அதிகம் தேடினேன்” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

இவான் சூப் கிண்ணத்தை எடுத்து கொடுத்து “எனக்கு தரீங்களா, சித்தி?” என கேட்க “கண்டிப்பா, அன்பே! என் பக்கத்தில உட்கார்!” என்று சொல்லி அவனை அமர வைத்து “உன் சிட்டுக்குருவி வாயை திற” என அவனுக்கு உணவை தர, இவான் மகிழ்ச்சியுடன் உண்டான். திரும்பி வந்து பார்த்த கரீமா எரிச்சலானாள்.

தங்கையிடம் சென்று கடுகாய் கரீமா பொரிந்தாள்.

“டாமிட்! சரியான நேரத்தில எழுந்து உக்காந்துட்டா” 

“அக்கா! என்ன இப்படி நடந்துடுச்சி? நாம போடற எல்லா திட்டமும் அவளுக்கு சாதகமா மாறி போய்டுது. இப்படியே போனா அவளை எப்போ மாளிகையை விட்டு துரத்துறது?”

“இரு! சீக்கிரமே இன்னொரு வழியை கண்டுபிடிக்கறேன்”

“எனக்கு அவளை பார்த்தாலே ஆத்திரமா வருது அக்கா” 

“நீ டென்ஷன் ஆகாதே! உன் மாத்திரையை சாப்பிட்டியா?”

“எங்க பார்த்தாலும் அவ தான். ஆர்யன் கூடவும் அவ தான். இவான் கூடவும் அவ தான். வீட்ல எல்லாரும் அவளை புகழ்றாங்க. அம்ஜத் மச்சான் கூட அவ கிட்ட பரிவா பேசுறாரு. எனக்கு பத்திட்டு எரியுதுக்கா”

“நீ பதட்டப் படாதே! இந்தா! இந்த மாத்திரையை போடு” என்று எடுத்து கொடுத்த கரீமா, மாத்திரை சுற்றி இருந்த காகிதத்தை பார்த்ததும் யோசனைக்கு போனாள். “இறந்த அவன் அம்மா கிட்ட இருந்து நான் இவானுக்கு ஒரு பரிசு அனுப்பி வைக்க போறேன்” என குரூரமாக சிரித்தாள்.

———-

வெளியே சென்று திரும்பி வந்த ஆர்யன் லேசாக திறந்திருந்த ருஹானாவின் அறையை பார்த்தவன், அங்கே செல்ல இழுத்த கால்களை திருப்பிக் கொண்டு வந்து தன் அறைக்கதவை திறக்க போக, அங்கே இருந்து வந்த பேச்சுக்குரல்கள் அவனை ஈர்த்தன.

“சித்தி! உங்க கால் சரியானதும் நாம வெளிய போகலாமா?”

“கண்டிப்பா, தேனே!”

“உங்க கால் எப்போ சரியாகும்?”

“நாளைக்கு, செல்லம்!” என்ற ருஹானாவின் பதிலை கேட்டுக்கொண்டே ஆர்யன் அங்கே செல்ல, இவான் உணவருந்துவதை கண்டவன் முகம் மென்மையானது. வெளியே நின்று பார்த்துக்கொண்டே நின்றான்.

அப்போது ருஹானாவின் போன் ஒலித்தது. அதை எடுத்த ருஹானா “மிஷால்ண்ணா கூப்பிடுறார், செல்லம். அவர்ட்ட பேசிட்டு உனக்கு ஊட்டுறேன்” என்று சொல்ல, ‘மிஷால்’ என்ற ஒரு வார்த்தை ஆர்யனின் முகத்தை சுருக்கியது. ருஹானா தான் மிஷாலோடு திருமணத்துக்கு மறுத்து விட்டாளே! பின்னும் ஏன் இவனுக்கு மிஷால் மேல் பொறாமை?

“சலாம் மிஷால்” ருஹானா சொல்லவும் ஆர்யன் மேலே அவள் பேசுவது கேட்க பிடிக்காமல் அங்கிருந்து சென்றான்.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“இவானுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கேன்”

“இன்ஷா அல்லாஹ்! அங்கே எல்லாம் சரியா தானே இருக்கு?”

“இல்லல்ல மிஷால், குரு டோல்மா தானே? நானே செஞ்சி தரேன்”

“நான் இப்பவே தயார் செய்து ஃப்ரிட்ஜ்ல வச்சிடுறேன். அப்போ தான் அதோட சுவை அதிகமாகும்”

“நாளைக்கு நான் கொண்டு வரேன், மிஷால். கவலைப்படாதே”

ருஹானா பேசுவதை இவான் கவனித்து கேட்டுக்கொண்டிருக்க, போன் பேசி முடித்த ருஹானா அவனுக்கு திரும்ப ஊட்ட துவங்கினாள்.

“அன்பே! சாப்பிட்டு முடித்ததும் எனக்கு நீ கிச்சன்ல உதவி செய்றீயா?”

“செய்றேன்! செய்றேன், சித்தி” இவான் முகம் பெரிதாய் மலர்ந்தது.

“சரி, நீ சாப்பிட்டு முடி. நாம கீழே போகலாம்”

“சித்தி! நாம சமைச்சி முடிச்சதும் என்ன செய்ய போறோம்?”

“தெரியலயே! நீ சொல்லு, என்ன செய்யலாம்?”

“நீங்க சாயந்தரம் வெளியே போவீங்களா, சித்தி?”

“இல்லயே, செல்லம். இன்னைக்கு நைட் நான் உன்கூட தான் தூங்க போறேன்”

“நாளைக்கு, நாளைக்கு மறுநாள், அடுத்த நாள் நீங்க வெளிய போக மாட்டீங்க தானே?”

“இல்ல கண்ணே! நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன்”

அவளை ஒட்டி அமர்ந்துகொண்ட இவான் “நான் டாக்டராக போறேன். உங்களுக்கு தெரியுமா, சித்தி?” என கேட்டான்.

“அருமை. என்ன டாக்டராக போறே, செல்லம்?”

“எல்லாத்துக்கும் பார்க்கற டாக்டர். உங்களுக்கு என்ன செய்தாலும் நான் உங்களை குணப்படுத்திடுவேன்”

ருஹானா இவானை கனிவுடன் பார்க்க அவள் கன்னத்தை தடவியவாறே இவான் “அதுக்கு அப்புறம் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகவே போகாது” என்றான்.

சிறகை பேணி காக்கும் தேவதை

காயம்பட்டு தவிக்கும் வேளையில்

துடித்து போகிறது சின்னச்சிட்டு

அன்னையைப் போல் அரவணைத்தவளும்

மறைவாளோவென அச்சம் கொள்கிறது.

மருந்தாய் அவளை காக்க 

மருத்துவனாகும் கனவுடன் அன்புச்சிட்டு..!

“நான் இப்பவே பெரியவனாகி டாக்டரா இருந்திருக்கலாம். என் அம்மாவை காப்பாற்றி இருப்பேன்” என்று இவான் சொல்ல, வருத்தமான ருஹானா அவன் சுருள் முடியை கோதிவிட்டபடி “என்னுயிரே! இங்க பார்! இன்னைக்கு இல்ல, நாளைக்கு இல்ல, எத்தனை நாளானாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன். சரியா?” என்று கேட்க, இவான் வேகமாக தலையசைத்தான்.

“நாம எப்பவும் ஒன்னா தான் இருப்போம். சேர்ந்து சமைப்போம். சேர்ந்து விளையாடுவோம். சேர்ந்து பூங்காக்கு போவோம். நீ டாக்டர் ஆன பின்னாடியும் நான் உன்கூட தான் இருப்பேன். சரி தானே?” என ருஹானா கேட்டதும், மகிழ்வுடன் தலையாட்டிய இவான் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் கொஞ்சிக் கொண்டதும் கீழே சமையலறைக்கு சென்றனர். ருஹானா வேலை செய்ய, இவான் சமையல் மேடையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, ருஹானா சிரமப்பட்டு நடப்பதை பார்த்த இவான் “சித்தி! உங்க கால் இன்னும் வலிக்குதா?” என கேட்டான். “லேசா தான். ஆனா இந்த வலி நம்மோட வேலைக்கோ, சந்தோசத்துக்கோ இடைஞ்சல் இல்ல” என ருஹானா சொல்லவும், இவான் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“உங்களுக்கு நான் ஏன் முத்தம் கொடுத்தேன்னு சொல்லுங்க, பார்க்கலாம் சித்தி?”

“ஏன் கண்ணே?”

“எனக்கு எங்கயாவது அடிபட்டா அம்மா எனக்கு முத்தம் கொடுப்பாங்க. எனக்கு உடனே வலி காணாம போய்டும்”

ருஹானா சோகமாவதை பார்த்த இவான் “ஹா! சித்தி! நீங்க தூங்கும்போது நான் ஒன்னு வரைஞ்சேனே, அதை காட்டவா?” என அவள் கவனம் திருப்பினான்.

“அப்படியா செல்லம், கொண்டு வா பார்க்கலாம்” என அவனை கீழே இறக்கி விட, இவான் தன் அறைக்கு ஓடினான்.

Advertisement