Advertisement

மரக்கப்பலை இவானுக்கு கொடுத்த அம்ஜத் “கேப்டன் இவான்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்காக நான் இதை செய்தேன்” என்று சொல்ல “ஆமா, பெரியப்பா. மிக்க நன்றி” என்று இவான் சொல்ல, “இதை வச்சி விளையாடலாமா?” என அம்ஜத் கேட்க “சித்தி சரியானதும் விளையாடலாம், பெரியப்பா. எனக்கு இப்போ விளையாட வேணாம்” என்று  இவான் சொன்னான்.

இவானின் நெற்றியில் முத்தமிட்ட அம்ஜத் “வருத்தப்படாதீங்க, கேப்டன். பயப்படாதீங்க. எதுக்கும் பயப்படாதீங்க. உன்னோட சித்தி சரியாகிடுவா. ருஹானாவுக்கு சீக்கிரம் நல்லாகிடும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கையில் சூப் கிண்ணத்துடன் கரீமா அங்கு வந்தாள். “அம்ஜத் நீங்க போய் மாத்திரை சாப்பிடுங்க. நான் இவானுக்கு சாப்பாடு தரணும்” என்றாள்.

இவானுக்கு மீண்டும் முத்தமிட்டு அம்ஜத் வெளியே போக, இவானை யோசனையாக பார்த்த கரீமா “இவான் டியர்! உனக்கு பசிக்குதா?” என்று கேட்டாள். இவான் இல்லையென தலையாட்ட “ம்ஹும்! அப்படி சொல்ல கூடாது. வாயை திற” என சூப்பை ஸ்பூனில் எடுத்து நீட்டினாள்.

“நான் சித்தி கிட்ட போய் சாப்பிட முடியாதா?” வாயை திறக்காமல் கேட்டான்.

“உன் சித்திக்கு உடம்பு சரியில்ல. அவளை தொல்லை செய்யக்கூடாது” கோபமாக சொன்னவள் ஸ்பூனை கிண்ணத்திலேயே போட்டாள்.

“அம்மாவை போல சித்திக்கு உடம்பு முடியலயா? அதனால தான் நான் அவங்க கூட சாப்பிட கூடாதா?”

“உடம்பு சரியில்லாதவங்களால எதும் செய்ய முடியாது”

“எனக்கு பயமா இருக்கு”

“எதுக்கு நீ பயப்படறே” கனிவில்லாமல் உரக்க கேட்டாள்.

“அம்மா மாதிரி சித்தியும் என்னை விட்டுட்டு போய்டுவாங்களா?” கண்ணீருடன் கேட்டான்.

கரீமா அவனுக்கு ஆறுதலும் சொல்லாமல், உணவும் தராமல் குரூரமாக பார்த்தாள்.

——-

மணியை பார்த்துக்கொண்டே அலுவல கோப்பை பார்த்த ஆர்யன், அதில் கவனம் செலுத்த முடியாமல் மூடி வைத்தான். திரும்ப மணி பார்த்தவன், ருஹானா மருந்து சாப்பிடும் வேளை என நினைத்து, ஜாஃபருக்கு அழைத்தான்.

“ஜாஃபர்! என் ரூமுக்கு வாங்க”

“ஆர்யன் சார்! நான் வெளியே வேலையா வந்தேனே! நான் வர நாலு மணி நேரத்துக்கு மேலே ஆகும். இன்டீரியர் டிசைனரை பார்க்க வந்திருக்கேன். நேத்தே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்”

“ஆமா, ஆமா”

“உங்களுக்கு எதும் தேவையா? சாரா மேம்ட்ட சொல்லவா?”

“இருக்கட்டும். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் பார்த்துக்கறேன்”

யோசனையுடன் போனை வைத்தவன் மறுபடியும் மணியை பார்த்தான். எழுந்து இவான் அறைக்கு வந்தவன் அங்கே கரீமா இவானுக்கு கதை படித்து தூங்க வைத்துக்கொண்டிருப்பதை பார்த்து “அண்ணி! நீங்க இங்க தான் இருக்கீங்களா?” என்று கேட்டான்.

“ஆமா ஆர்யன் டியர்! இவானை தூங்கறதுக்காக கதை படிச்சிட்டு இருக்கேன்”

“சரி நீங்க இங்கயே இருங்க. நைட் இவான் எழுந்தா பயந்திரக் கூடாது”

அவள் தலையாட்டவும், திரும்பி படுத்திருந்த இவானை பார்த்தபடி ஆர்யன் வெளியே செல்ல அவன் எங்கே போகிறான் என கரீமா லேசாக கதவை திறந்து பார்த்தாள்.

“சித்தி.. சித்தி..  போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு.. சித்தி.. சித்தி..“ என இவான் தூக்கத்தில் முனக, கதவை சாத்தி உள்ளே வந்த கரீமா அவனை பார்த்தவாறே நின்றாள்.

———-

ருஹானாவின் அறைக் கதவை ஆர்யன் தட்ட உள்ளே இருந்து பதில் வராததால், மறுபடியும் வேகமாக தட்டினான். “யெஸ்!” என்ற ருஹானா குரல் கேட்கவும் கதவை திறந்தவன் “உன் மருந்து சாப்பிடுற நேரம் இது. தூங்கிடாதே” என்று வாசலில் நின்றே சொன்னான்.

“நான் லேசா தூங்கிட்டேன்” என கண்ணை துடைத்துக்கொண்டே ருஹானா சொல்ல, உள்ளே வந்தவன் மேசை மேல் இருந்த மாத்திரை புட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து அவள்  மாத்திரை போடும்வரை பக்கத்தில் நின்றான். பின் கட்டில் முன்னே வந்து அவளுக்கு திரும்பி நின்றுக்கொண்டு சில நிமிடங்கள் யோசித்தவன், கட்டிலை சுற்றி சென்று இவானை போல நாற்காலியை இழுத்து ருஹானாவின் பக்கத்தில் போட்டு அமர்ந்துக்கொண்டான்.

“சொல்லு” என அவன் சொல்லவும், இத்தனை நேரம் அவன் நடமாட்டத்தை கவனித்துக்கொண்டிருந்த ருஹானா விழித்தாள்.

“நீ தூங்க கூடாது. முழிச்சிட்டு இருக்க ஒரே வழி பேசுறது தான். பேசு”

“நீங்க எனக்காக கூட இருக்க வேண்டியதில்ல”

“ஜாஃபர் வீட்ல இல்ல. யாராவது ஒருத்தர் உன்கூட இருக்கணும். நான் கேட்கறேன். நீ பேசு”

“நான் என்ன பேசுறது?”

“உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு. நீ தூங்க கூடாது. அவ்வளவு தான்”

“நீங்க ராத்திரி பூரா நான் பேசறதை கேட்க போறீங்களா?”

அதிசயமாக அவள் கேட்க அவன் ஆமென தலையாட்டினான்.

சையத் பாபா வீட்டில் அவள் குண்டடிபட்டு சுயநினைவில்லாமல் இருந்தபோது பார்த்துக்கொண்டது அவன் தானே! அன்று அவள் விழிக்க காத்திருந்தான். இன்று அவள் பேச காத்திருக்கிறான். அன்றிரவு அவளை அசையாமல் பார்த்துக்கொண்டான். இன்றிரவு அவள் நாவசைய கேட்டுக்கொண்டிருக்கிறான்.

———-

கடுப்பாக உள்ளே வந்த அக்காவை கேள்வியாக சல்மா பார்க்க “இந்த நச்சு பிடிச்ச பையன் தூங்குறதுக்குள்ள என் உயிரை வாங்கிட்டான்” என்று கரீமா கத்த சல்மா அக்காவை பிடித்து கட்டிலில் அமர வைத்தாள்.

“ஆனா அவனை விரட்ட ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன்”

“என்னக்கா?”

“இவானை அனாதை ஆசிரமத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்”

“ஆசிரமத்துக்கா? எப்படி?”

“சமூகசேவை நிறுவனத்துக்கு போன் செய்து சொல்லணும், இங்க ஒரு குழந்தை கஷ்டப்படுதுன்னு”

“ஆனா இங்க இவான் மகிழ்ச்சியா தானே இருக்கான், அக்கா?”

“இருந்தான்னு சொல்லு. இனி நான் படுத்துற பாட்டுல அவன் சந்தோசத்தை தொலைக்க போறான்”

‘யம்மாடி! இவ இவ்வளவு கொடூரமானவளா?’ என சல்மா தன் அக்காவின் நிஜ முகத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.

“அப்படி என்னக்கா செய்ய போற?”

“அந்த பையன் ஏற்கனவே பயந்து போய் இருக்கான், அம்மா மாதிரி சித்தியும் செத்து போய்டுவாளோன்னு…. இந்த பயத்தை தூண்டிவிட போறேன். அவனே உச்சில வந்து நிக்கிறான். இப்போ நான் லேசா அவனை தள்ளி விட போறேன்”

பேய் வகுக்கும் திட்டத்தை பிசாசு ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தது.

———–

“என் அப்பாக்கு அப்போ சின்ன வயசு. அவர் இன்னும் மடாபாலருந்து அகாபா நகருக்கு வந்துருக்கல. எங்க அம்மாவையும் சந்தித்திருக்கல. அறியாத வயசு, அவருக்கு… அவங்க பகுதில ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தார். அவர் யார்கிட்டயும் பேச மாட்டார். இடிபாடுகள்ல தங்குவார். அப்பாவும் அவர் நண்பர்களும் அவரை பார்த்து பயந்தாங்க. ஆனா அவர் யாரையும் துன்புறுத்தினது இல்ல” சொல்லிக்கொண்டே வந்த ருஹானா கையை வைத்து மறைத்து கொட்டாவி விட்டாள்.

“அப்புறம் என்ன நடந்தது?” ஆர்யன் கேட்க, “என் அப்பா எப்பவும் சொல்லுவார். ‘முட்டாள்தனமும் புத்திசாலித்தனமும் அக்கம்பக்கம் தான் இருக்கும்’ன்னு. அப்பாவும் நண்பர்களும் சேர்ந்து ஒருநாள் அவரை வழிமறிச்சாங்க. அது அவங்க சின்ன வயசு அறியாமையால தான்” அவளுக்கு கண்கள் சொக்கின.

“அப்புறம்?” ஆர்யன் சத்தமாக கேட்டான்.

“என்ன?” கண்களை லேசாக திறந்து ருஹானா முழித்தாள்.

“வழிமறிச்சாங்க ன்னு சொன்னியே! அதுக்கு அப்புறம் என்னாச்சி?”

“என் அப்பாவும் அதுல ஒருத்தர். பின்னாடி இதை எங்க கிட்டே அப்பா சொல்லும்போது ரொம்ப வெட்கப்பட்டார். அவர் மேலே கல்லை வீசி எறிஞ்சாங்களாம். அவர் ஓட ஓட இவங்க எல்லாரும் துரத்தி இருக்காங்க. அவர் ஒரு பாழடைந்த இடத்துக்கு ஓடிட்டார். பின்னாலேயே போன அப்பா ஒரு கிணத்துல தவறி விழுந்துட்டார்” திரும்ப ருஹானாவின் கண்கள் மெல்ல மூடின.

“அப்பா மயங்கிட்டார். அவரோட நண்பர்கள் பயந்து திரும்பி ஓடிட்டாங்க” அசந்து தூங்கி விட்ட ருஹானாவின் கழுத்து குனிந்துவிட்டது.

“அப்புறம் எப்படி உன் அப்பா தப்பிச்சார்?” ஆர்யன் கேட்ட கேள்வியில் விழித்த ருஹானா அவனை பார்த்து இமைத்தாள்.

“அவருக்கு மயக்கம் தெளிஞ்சி எழுந்தபோது இருட்டியிருந்தது. உதவி கேட்டு சத்தம் போட்டார். யாரும் வரல. அவர் கால் ஒடிஞ்சி போச்சி. அவர்  இறந்துடுவார்ன்னு பயந்து போய்ட்டார். அப்போ ஒரு கை வந்து அப்பாவை மேலே தூக்கிச்சி. அது அந்த கிறுக்கு மனிதர் தான்”

அவள் தூங்காமல் இருப்பதற்காக மட்டும் கதை கேட்ட ஆர்யன் அப்படியே அந்த கதைக்குள் ஆழ்ந்து போய்விட்டான்.

“அதுக்கு பின்னாடி அப்பா மடாபா கிராமத்துல இருக்குற வரை அவரை பார்த்துக்கிட்டார். அவருக்கு தேவையான எல்லாம் செஞ்சி கொடுத்தார்” கதை சொல்லி முடித்த ருஹானா கண்மூடி அப்படியே கட்டிலில் பின்புறம் தலையை சாய்த்தாள்.

ஆர்யன் நாற்காலியிலிருந்து எழப் போக, “நான் தூங்கல. அப்பா சொன்ன வாக்கியத்தை லேசா மறந்திட்டேன். அதை நினைவுப்படுத்த யோசிக்கிறேன்” என்று ருஹானா சொன்னாள்.

“என் அப்பா சொன்னதை எனக்கு நானே அடிக்கடி ஞாபகப்படுத்திக்குவேன். ‘உன்னை இருட்டுல இருந்து தூக்கி விட்ட கையை எப்பவும் விடாதே’..”

ஆர்யனுக்கு ருஹானாவை மயானக் குழியிலிருந்து தூக்கியது நினைவுக்கு வந்தது. ருஹானாவை உற்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

(தொடரும்)

Advertisement