Advertisement

ஆர்யனின் உறுதிமொழி கேட்டு கரீமா திகைக்க, இதுவரையில் ஆர்யனை பார்த்துக்கொண்டிருந்த ருஹானா கண்களை தாழ்த்திக்கொண்டாள். “நான் என் ரூம்ல இருக்கேன். எதும் தேவைன்னா கூப்பிடுங்க” என்று ஆர்யன் செல்ல, கரீமா சரி என்று சொல்ல, “தேனே! ஏன் அங்க நிற்கிறே? இங்க வா” என ருஹானா அழைக்கவும் அருகே வந்து அவள் மேல் சாய்ந்து இவான் அமர, அவன் கைப்பிடித்து முகர்ந்து முத்தமிட்டாள்.

“எனக்கு சீக்கிரம் சரியாகிடும், செல்லம்”

“உங்களுக்கு அதிகமா வலிக்குதா?”

“இல்லவே இல்ல.. எனக்கு வலிக்கவே இல்ல”

“நிஜமாவா, சித்தி? அப்போ நல்லாகிடுவீங்களா?”

“ஆமா அன்பே! நான் உனக்கு ப்ராமிஸ் செய்திருக்கேனே, என்னை நம்ப மாட்டியா?”

தலையாட்டிய இவான் அவள் மேல் சாய்ந்துக் கொள்ள இந்த பாச பிணைப்பை கரீமா யோசனையுடன் பார்த்தாள்.

———

மணியை பார்த்துக்கொண்டும், வெளியில் கேட்கும் அரவத்தை உற்று கேட்டுக்கொண்டும் கதவருகே ஆர்யன் நடையாய் நடந்தான். “மாத்திரை தவறாம சரியான நேரத்துல போடணும்” என மருத்துவர் சாராவிடம் சொல்லிக்கொண்டே நடந்து வரும் சத்தம் கேட்டவன், தற்செயலாக வருவது போல கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

மருத்துவர் ஆர்யனை வணங்க, தலையசைத்தவன் “என்ன நிலவரம்?” என கேட்க, “ஐஸ் ஒத்தடம் வீக்கம் குறைஞ்சிருக்கு. வலி குறைய மாத்திரை கொடுத்திருக்கேன். மூணு, நாலு நாள்ல சரியாகிடுவாங்க” என அவர் சொன்னதை கேட்ட ஆர்யன் நிம்மதியடைந்தவன் “ஆனா அவங்க தலை வேகமா மோதி இருக்கு. வேற எதும் பாதிப்பு ஆகுதான்னு கவனிக்கணும். இன்னைக்கு நைட் அவங்க தூங்காம பார்த்துக்கணும்” என்பதை கேட்டு கவலையானான்.

மருத்துவர் விடைபெற, இதையெல்லாம் கரீமா ஒளிந்திருந்து கவனிக்க, ஆர்யன் “இவான் எங்கே?” என்று சாராவிடம் கேட்டான். “லிட்டில் ஸார் சித்தி கூட தான் இருக்கார்” என சாரா சொல்ல “சரி, நீங்க போய் இந்த மருந்தை வாங்கிட்டு வர சொல்லுங்க. நீங்களும், நஸ்ரியாவும் இவான் சித்தி கூடவே இருங்க. ராத்திரி தூங்காம பார்த்துக்கங்க” என்று சொல்ல சாரா பணிந்து சென்றார்.

ஆர்யன் ருஹானா அறைக்கு நடக்க, கரீமா ஒளிந்திருந்த தூணிலிருந்து மற்ற தூணுக்கு மாறிக்கொண்டாள்.

“சித்தி! நீங்க சொன்னீங்கல்ல, அழுதா வலி குறையும்னு?” ருஹானாவின் முடியில் விளையாடிக்கொண்டே இவான் கேட்க, வழக்கம்போல ஆர்யன் கதவை திறந்துக்கொண்டு வெளியே நின்று கேட்க, அவனுக்கும் பின்னால் மறைந்திருந்த கரீமா மூவரையும் நோட்டம் விட்டாள்.

“ஆமா, அன்பே!”

“உங்க நெஞ்சில சாஞ்சி அழ சொன்னீங்க தானே?”

ருஹானா தலையாட்ட “இப்போ நீங்க அழுதா உங்க வலி குறையும் தானே? இங்க சாஞ்சி அழுங்களேன்” என அவன் நெஞ்சை காட்ட, உருகிப்போன ருஹானா அவனை கட்டி பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தாள். ஆர்யனும் கனிந்து போக, கரீமா பல்லை கடித்தாள்.

“என்னோட உயிரே! தேனே! எனக்கு வலிச்சா நான் கண்டிப்பா அப்படி செய்றேன். ஆனா சித்திக்கு வலிக்கவே இல்லயே!” என இவான் தலையை கோதிய ருஹானா நிமிர்ந்து ஆர்யனை பார்த்ததும் போர்வையை சரிசெய்து நேராக அமர்ந்தாள். இவானும் உள்ளே வந்த சித்தப்பாவை பார்க்க “நீ உன் ரூம்க்கு போ, சிங்கப்பையா! உன் சித்தி குணமாகணும்ன்னா அவங்க ஓய்வெடுக்கணும்” என ஆர்யன் சொன்னதை கேட்டு இருவரும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இவான் ருஹானாவை கட்டிக்கொள்ள, கரீமா இன்னும் அருகே வந்து உள்ளே நடப்பதை கவனித்தாள். சித்தியின் கன்னத்தில் இதழ் பதித்தவன், இருகைகளாலும் அவளை நெருக்கிக்கொண்டான். ருஹானாவும் அவனை மார்பில் சாய்த்துகொள்ள, “உனக்கு உன் சித்தி சீக்கிரம் சரியாகணுமா, வேண்டாமா?” என ஆர்யன் அவன் உள்ளம் அறிந்து கேட்க இவான் தலையாட்டினான்.

“அப்போ உன் ரூம்க்கு போ” என ஆர்யன் சொல்ல, சித்தியை விட்டு எழுந்தவன், சித்தப்பா அருகே சென்று திரும்பி பார்க்க “கவலைப்படாதே அன்பே! நான் உடனே சரியாகிடுவேன். எனக்கு அடிபட்டதே நீ மறந்திடுவே, பார்” என்று ருஹானா சொல்ல இவான் முகத்தில் புன்னகை மீண்டிருந்தது.

ஆனாலும் அங்கே இருந்த நாற்காலியை பார்த்தவன் “சித்தப்பா! நான் அங்க உட்கார்ந்துக்கவா? சித்தியை தொல்லை செய்ய மாட்டேன்” என்று பாவமாக கேட்டான்.

“சரி! ஆனா ரொம்ப நேரம் இருக்கக்கூடாது. சீக்கிரம் போய் தூங்கிடணும்” என ஆர்யன் அனுமதி கொடுக்க, “ஹேய்! சித்தி நான் இன்னும் கொஞ்ச நேரம்  இங்க இருக்கலாம்” என ஓடிச்சென்று எட்ட இருந்த நாற்காலியை கட்டில் அருகே இழுத்தான்.

“பார்த்து செல்லம்! மேல பட்ற போகுது” என ருஹானா எச்சரிக்க, “இது கனமாவே இல்ல, சித்தி” என சிரிப்புடன் ஏறி அமர்ந்தான். ருஹானாவும் புன்னகைக்க, இருவரையும் பார்த்திருந்த ஆர்யன் வெளியே வரும் அறிகுறி தெரிய, கரீமா தள்ளி ஓடிவந்தவள் அப்போது தான் வருவது போல எதிரே வந்தாள்.

“நீயும் இங்க தான் இருக்கியா, ஆர்யன்? நானும் ருஹானாவை பார்க்க தான் வந்தேன். இப்போ அவ எப்படி இருக்கா?”

“ரெண்டு நாள்ல சரியாகிடுவா”

“அல்லாஹ்க்கு நன்றி”

“அவ சரியாகற வரைக்கும் நாம கவனமா இவானை பார்த்துக்கணும். நீங்க தான் அவனை கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கணும்”

“கண்டிப்பா ஆர்யன். நீ சொல்றபடி செய்றேன்”

“அவன் சித்திக்கு அடிபட்டது இவானை அதிகமா பாதிச்சிருக்கு. அவனோட மனஅமைதி எனக்கு இந்த வீட்ல வேற எதையும் விட முக்கியம். அவன் சித்தி குணமாகிற வரை அவன் எதுக்கும் கவலைப்படக் கூடாது. அவனுக்கு வருத்தம் தர்ற எதையும் நான் அனுமதிக்க மாட்டேன்”

“நீ கவலைப்படாதே ஆர்யன்! நான் இவானை பார்த்துக்கறேன். ஒரு நிமிடம் கூட அவனை விட்டு பிரிய மாட்டேன்”

கரீமாவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து ஆர்யன் செல்ல, வெகுவாக யோசித்துக்கொண்டே கரீமா அங்கேயே நின்றாள்.

———

“என்னக்கா சொல்றே? நீ சொல்றது எனக்கு புரியவே இல்ல. எதுக்கு இவானை விரட்டணும்னு சொல்றே?”

“நாம எப்பவும் என்ன நினைச்சோம், ருஹானா மேல ஆர்யனுக்கு ஈர்ப்பு இருக்குன்னு தானே?”

சல்மா தலையாட்ட, கரீமாவும் தலையசைத்துவிட்டு சொன்னாள் “ஆனா அது நமக்கு நிச்சயமா தெரியாது”

தங்கை நம்பாமல் பார்க்க “நாம ஒருவேளை தவறான கோணத்துல எல்லாத்தையும் பார்த்துட்டோமோ?” என கரீமா சந்தேகம் கிளப்பினாள்.

சல்மா கூர்ந்து அக்காவை கவனிக்க “சரியா கவனிச்சோம்ன்னா, ஏன் ஆர்யன் அந்த பொண்ணு மேலே அக்கறை காட்றான்னு யோசிச்சோம்னா…” என கரீமா நிறுத்த, “இவான்!” என்று சல்மா சொன்னாள்.

“இப்போ உனக்கு புரியுதா? ஆர்யனுக்கு அந்த பொண்ணு மேலே ஏன் கவனம் போகுதுன்னா இவான் தான் காரணம். அந்த பையன் அவன் சித்தி மேலே அளவுக்கதிகமா அன்பு வச்சிருக்கான். அதனால தான் ஆர்யன் இவானுக்காக அவளை பாதுகாக்க நினைக்கிறான்”

ருஹானா மீது இவானின் வெளிப்படையான எல்லையற்ற பாசமும், ருஹானா மீது ஆர்யனின் உள்ளார்ந்த நேசம் வெளியே தெரியாததும், கரீமாவை இப்போது தான் தவறான பாதைக்கு கூட்டி செல்கிறது என்பதை குயுக்தி புத்தியுடைய அவள் உணரவில்லை.

“அதனால ருஹானா நமக்கு தடை இல்ல. இவான் தான் நமக்கு அபாயம். புரியுதா, சல்மா?”

“அப்போ, ஆர்யனுக்கு இவான் தான் முக்கியம். இவான் எங்க பார்க்கிறானோ, அங்க தான் ஆர்யனும் பார்க்கிறான். அப்படித்தானே அக்கா?”

“ஆமா, அதனால நாம வெளிய அனுப்ப வேண்டியது ருஹானாவை இல்ல. இவானை தான். இவான் போய்ட்டா எல்லாமே சுலபமா நம்ம வழிக்கு வந்துடும். எவ்வளவு சீக்கிரம் அவனை இந்த மாளிகையை விட்டு துரத்துறோமோ, அவ்வளவு நமக்கு நல்லது. இல்லனா ருஹானா ஆர்யனை கெட்டியா பிடிச்சிக்குவா”

“சரி தான் அக்கா. ஆனா ஆர்யன் இந்த அளவுக்கு அவன் அண்ணன் பையனை பாதுகாக்கும்போது  அவனை எப்படி வெளியே அனுப்ப முடியும்?”

“இதுவரைக்கும் எனக்கு ஐடியா இல்ல. ஆனா சீக்கிரமே வழி கண்டுபிடிச்சிருவேன்”

கரீமா பெருமிதமாய் புன்னகை செய்ய, அக்கா சொன்னவை மேல் சல்மாவுக்கு முழுதாக நம்பிக்கை இல்லாவிட்டாலும், அக்காவின் திறமையை நம்பினாள்.

——–

ருஹானாவின் அறையை பார்த்துக்கொண்டே இவான் அறைக்கதவை திறக்கப்போன ஆர்யன் சாராவின் முனகலை கேட்டதும் அப்படியே நின்றான்.

“பெரியம்மா! மெதுவா உக்காருங்க” என்ற நஸ்ரியாவின் குரல் கேட்க “எனக்கு தலை சுத்திடுச்சி” என்று சாரா சொல்ல, வேகமாக வந்த ஆர்யன் மெதுவாக கதவை திறந்தவன் சோர்ந்து அமர்ந்திருந்த சாராவை பார்த்துவிட்டு “நஸ்ரியா! நீ சாராவை கீழே கூட்டிட்டு போய் இரத்த அழுத்தம் பார்த்துட்டு அவங்க மாத்திரையை கொடு. சாரா பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கோ” என்று சொல்ல நஸ்ரியா சரியென்றாள்.

“ஆர்யன் சார்! ருஹானாவை யார் கவனிக்கறது?” என சாரா கவலைப்பட, “சாரா அக்கா! எனக்கு ஒன்னுமில்ல. என்னை பத்தி கவலைப்படாதீங்க. இன்னும் நேரமாகல. எனக்கு தூக்கமும் வரல” என ருஹானா சொல்ல “ஆனா.. மாத்திரை டைமுக்கு கொடுக்கணுமே.. டாக்டர் சொன்னாங்களே” என தன் உடல்நிலை சரியில்லாத போதும் ருஹானாவை பற்றி சாரா கவலைப்பட்டார்.

“நான் ஏற்பாடு செய்றேன். ஜாஃபர் கவனிச்சிக்குவார்” என்று ஆர்யன் சொல்ல, நஸ்ரியாவின் கையை பிடித்துக்கொண்டே சாரா மெல்ல வெளியே செல்ல, “ஜாஃபர் இப்போ வந்துடுவார்” என ருஹானாவிடம் ஆர்யன் சொன்னான். “தேவையில்ல. என் மாத்திரையை நானே எடுத்து போட்டுக்குவேன். எனக்கு தூக்கமும் வரலன்னு சொன்னேனே. தூக்கம் வந்தாலும் நானே தூங்காம சமாளிச்சிக்குவேன்” என்று அவள் விறைப்பாக சொல்லவும், ஆர்யனும் வேகமாக வெளியே போய்விட்டான்.

——-

Advertisement