Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 36

பாதையோரம் மயங்கி கிடந்த ருஹானா சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தாள். மெல்ல தடுமாறி எழுந்தவளுக்கு வலது கணுக்காலில் அடிபட்டிருந்தது. நெற்றியும் சிவந்து புடைத்திருந்தது. எந்த வலியும் உணராத ருஹானா நடக்க எட்டு வைத்தபோது தான் கால் விண்ணென தெறித்தது. தாங்கி தாங்கி வலது காலை மெதுவாக ஊனி நடக்க ஆரம்பித்தாள்.

——–

ரஷீத் மறுபடியும் அழைக்கவும் ஆர்யன் கார் ஓட்டிக்கொண்டே போனை எடுத்தான்.

“சொல்லு, ரஷீத்”

“ஆர்யன்! ஒரு நல்ல வாடிக்கையாளர் கிடைச்சிருக்காங்க. நான் அவங்கட்ட பேசிட்டேன். நம்ம எல்லா விதிகளுக்கும் ஒத்து வராங்க. நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இன்னைக்கு நைட்டே ஒரு மீட்டிங்க்கு ஏற்பாடு செஞ்சிடுவேன். நமக்கு லாபகரமா இருக்கும், அவங்க தொடர்பு”

“சரி, ரஷீத். ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி வச்சிக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன்”

“ம்… வந்து.. ஆர்யன் நீங்க நல்லா தானே இருக்கீங்க? ஒன்னும் சிரமம் இல்லயே”

சிறிது தயக்கத்துக்கு பின் “ஒன்னுல்ல, ரஷீத். நான் ஓகே தான்” என்றான்.

“இல்ல.. நான் நிறைய முறை போன் செய்தேன். நீங்க எடுக்கல”

ஆர்யனிடம் அமைதி.

“சரி ஆர்யன்! முக்கியமான சந்திப்பு. தவறாம வந்துடுங்க. இரவு சந்திப்போம்”

போனை முன்னே வைத்தவன் யோசித்தவாறே காரை செலுத்த, ஓரமாக நடந்துக்கொண்டிருந்த ருஹானாவை கடந்தான், வேறு பெண்ணோ என..! கடற்கரையில் ஏமாந்தவனாயிற்றே!

இருந்தாலும் கண்ணாடியில் பார்த்தவன் அவள் ருஹானாவே என உறுதி செய்துக்கொண்டு அவள் தள்ளாட்ட நடை கண்டு அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தி அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு இறங்கினான்.

அருகில் கார் வந்து நிற்கவுமே ஆர்யன் கார் என தெரிந்துக்கொண்டவள், அவன் இறங்கி பக்கம் வரவும் அவன் முகம் பார்க்காமல் குனிந்து கொண்டாள்.

அவளை மேலும் கீழும் பார்த்தவன் “என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கே?” என கேட்டான்.

“ஒன்னுமில்ல. மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன். கால்ல லேசா அடிபட்டுடுச்சி”

“நெத்தியில என்ன?” ஆர்யன் கேட்கவும் தான் தொட்டு பார்த்தாள். வலிக்கவும் முகம் சுருக்கினாள். “விழும்போது இடிச்சிருக்கும்”

“வா, நாம ஆஸ்பிடல் போறோம்” தலையாட்டி அழைத்து காருக்கு திரும்பினான்.

“தேவையில்ல. நான் நல்லா தான் இருக்கேன். வீட்டுக்கு போறேன். இவான் என்னை தேடுவான்”

“உன் விருப்படி செய்” என அவன் கோபமாக சொல்லவும் ருஹானா நடக்கலானாள்.

அவள் தத்தி தத்தி பத்து அடிகள் நடக்கும்வரை பார்த்திருந்த ஆர்யன் “நீ இதே வேகத்துல நடந்து போனா, இவான் இன்னும் மூணு மணிநேரம் உனக்காக காத்திருக்கணும்” என்று சத்தமாக சொன்னான்.

திரும்பி பார்த்தவள் அவன் கூறிய நிதர்சனத்தை உணர்ந்து மேலே நடக்காமல் நின்றாள். ஆர்யன் காரை சுற்றிக்கொண்டு சென்று காரின் மறுபக்க கதவை திறந்து பிடித்தபடி நின்றான்.

ருஹானா மெல்ல நடந்து காரில் ஏறவும், அவள் பக்க கதவை மூடிவிட்டு ஓட்டுனர் இருக்கைக்கு வந்து காரை எடுத்தான்.

——

“அக்கா! நான் என்ன செய்திட்டேன்? ஏன் இப்படி கோவப்படுறே?”

“சல்மா! நடுரோட்ல மயங்கி கிடந்த அவளை அப்படியே விட்டுட்டு வந்ததுக்கு சந்தோசப்படுறியே! லேசா கூட உன் மூளையை பயன்படுத்த மாட்டியா?”

“அக்கா ஓவரா பேசாதே! நான் என்ன செஞ்சிருக்கணும்?”

“அடிபட்டவளை நீ கைத்தாங்கலா வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதை, ஆர்யன் பார்த்திருந்தான்னா அப்பவே உன்னை மன்னிச்சிருப்பான். நினைச்சி பாரு, அப்படி ஒரு காட்சியை. உன்மேலே ஒரு நல்லெண்ணமும் அவனுக்கு  வந்திருக்கும்”

கரீமா சொல்லிக்கொண்டிருக்க, சல்மா அந்த காட்சியை கற்பனை செய்ய விரும்பாமல் உதட்டை சுளிக்க, ஆர்யன் கார் மாளிகைக்குள் நுழைந்தது. மேலே இருந்து சகோதரிகள் இருவரும் பார்க்க, ஆர்யன் கை நீட்ட, ருஹானா தயங்கினாலும் அவன் முழங்கையை பிடித்துக்கொண்டு நடந்து வர, அவர்கள் கற்பனையில் கண்டது கண் எதிரே நடந்தது.

சல்மா முகம் கடுக்க, கரீமா அவளை திரும்பி பார்த்து முறைத்தாள். “அவ உன்னை பார்க்கல தானே? உனக்கு நிச்சயமா தெரியுமா?” என கரீமா மீண்டும் அவளை கேட்கவும் “அக்கா! அவ உணர்வில்லாம கிடந்தா. கண்டிப்பா என்னை அவ கவனிக்கல” என சல்மா எரிச்சலோடு சொல்ல “எதுக்கும் நீ ரூம்லயே இரு. அவ முன்னாடி உன் முகத்தை காட்டாதே. நான் போய் விசாரிச்சிட்டு வரேன்” என்று கரீமா வெளியே போனாள்.

கதவை திறந்த சாரா ருஹானாவின் நிலை கண்டு அதிர்ச்சியானார். ஆர்யன் கைப்பிடியிலிருந்து ருஹானாவை பிடித்துகொண்ட சாரா “என்ன ருஹானா! ஏன்?.. எப்படி?” என பதறிப் போய் கேட்க “ஒன்னுல்ல. சின்ன விபத்து தான்” என சொன்ன ருஹானாவை அணைத்து பிடித்தபடி மேலே கூட்டி சென்றார்.

சிரமப்பட்டு படியேறும் ருஹானாவை பார்த்துக்கொண்டே ஆர்யன் “ஜாஃபர் எங்கே?” என கேட்க, “இதோ, ஆர்யன் சார்! வந்துட்டேன்” என ஜாஃபர் வர “உடனே டாக்டரை வர சொல்லுங்க” என சொல்லவும் அவன் தலையாட்டி வேகமாக சென்றான்.

மேலே ருஹானா அறை அருகே வேகமாக வந்த கரீமா “ருஹானா டியர்! என்னாச்சு” என  நடிப்பை காட்ட “கவலைப்பட ஒன்னுல்ல, கரீமா மேம், என் ரத்த அழுத்தம் குறைஞ்சதால மயங்கிட்டேன். கீழே விழும்போது லேசா அடிபட்டிடுச்சி” என ருஹானா குறைத்து சொல்ல, அதற்குள் ஆர்யன் வந்து பின்னால் நின்றிருந்தான். “ஆனா, தலையில பெருசா அடிபட்டுருக்கே?” என கரீமா வினவ “அது ஒன்னும் அவ்வளவு வலிக்கல” என ருஹானா சொன்னாள்.

“யா அல்லாஹ்! எப்படி இப்படி நடந்தது?” என கரீமா மேலும் கரிசனம் காட்ட, இடைமறித்த ஆர்யன் “நீ உன் ரூம்க்கு போ. இவான் இப்படி உன்னை பார்க்க வேணாம்” என சொல்லி முடித்த நொடி “சித்தி!” என அங்கே வந்த இவான் “என்ன இது! ஏன் இப்படி இருக்கீங்க, சித்தி? என கவலையாக கேட்டான்.

“எனக்கு ஒன்னுல்ல, அன்பே” என ருஹானா அவன் தலையை தடவி மேலே பேசும்முன் முன்னே வந்த ஆர்யன் “சிங்கப்பையா! உன் சித்தி நல்லா இருக்காங்க” என்று இவான் தோளை பிடித்துக்கொண்டு சொன்னவன், ருஹானாவிடம் நெருங்கி சற்று அவள்புறம் குனிந்து “ஆனா நீ அவ்வளவு ஓகே இல்ல. கவனம். இவான் கண்டுபிடிச்சிடுவான்” என சொல்ல அவள் சரியென தலையாட்ட, இவை அனைத்தையும் கரீமா உற்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

இவான் சித்தியின் காயங்களை உன்னிப்பாக ஆராய, “கவலைப்படாதே, என்னுயிரே! சித்திக்கு ஒன்னும் ஆகல. கீழே விழுந்துட்டேன். அவ்வளவு தான்” என சொல்ல “அம்மாவை போல விழுந்திட்டிங்களா?” என அவன் கேட்க ருஹானா திடுக்கிட்டு ஆர்யனை பார்த்தாள். அவனும் அவளை தான் வேகமாக பார்த்தான்.

“செல்லம், நான்…” என இவான் கையை பிடித்து துவங்கிய ருஹானா அடுத்து என்ன சொல்ல என தெரியாமல் யோசிக்க, இவான் தோளை அணைத்திருந்த ஆர்யன் “கவலைப்பட ஒன்னும் இல்ல, அக்னி சிறகே! உன் சித்திக்கு ஓய்வு தேவை” என்று சொல்லி சாராவிடம் ருஹானாவை உள்ளே அழைத்துப் போக சொன்னான்.

சாராவும் ருஹானாவும் உள்ளே போக, ஆர்யன் போனில் வந்த அழைப்பை ஏற்று நகர, இவான் மெல்ல செல்லும் சித்தியையே பார்த்து நிற்க, கரீமா இவானை கவனித்து பார்த்தாள்.

“ரஷீத்! நீ மீட்டிங்க்கு போ. நீயே எல்லாம் பேசி முடிச்சிடு. இலாபமான ஆஃபர், நல்ல கஸ்டமர்ன்னு நீ சொன்ன தானே. தவற விடாதே!”

“சரிதான் ஆர்யன்! ஆனா நீங்க ஏன் வரல? மாளிகைல எல்லாம் சரி தானே”

“ம்…. இவானோட சித்தி… ஹம்.. அவளுக்கு ஒரு சின்ன விபத்து. இவான் பயப்படறதால நான் இங்க இருக்க வேண்டியதா இருக்கு”

பேசி முடித்து ஆர்யன் ருஹானாவின் அறையை எட்டி பார்த்தபோது சாரா அவள் காலுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்க, கரீமா பக்கத்தில் நின்று மேற்பார்வை பார்க்க, இவான் எட்டி நின்று சோகமாக கவனித்திருந்தான்.

“நீ இன்னுமா இங்க இருக்கே, சிங்கப்பையா?” என கேட்டவாறே இவானை தேடி வருவது போல ஆர்யன் உள்ளே வர, சாய்ந்து படுத்திருந்த ருஹானா சங்கடமாய் நிமிர்ந்து அமர்ந்தாள். “ஐஸ் வச்சா நல்லதுன்னு வச்சிட்டு இருக்கோம்” என கரீமா சொல்ல “டாக்டர் வந்துட்டே இருக்காங்கன்னு ஜாஃபர் சொன்னார்“ என கரீமாவை பார்த்து சொன்னவன் “அது வரைக்கும் அசைக்காம பார்த்துக்கோ” என்று ருஹானாவை நோக்கி கூறினான்.

“சித்தி சீக்கிரம் குணமாகிடுவாங்க.. அப்படித்தானே சித்தப்பா? அம்மா மாதிரி ஆக மாட்டாங்க தானே?” என இவான் கேட்க, ருஹானாவை ஒரு கணம் பார்த்த ஆர்யன் “பயப்படாதே, சிங்கப்பையா! உன் சித்திக்கு எப்பவும் கெடுதல் எதும் நடக்க நான் விட மாட்டேன்” என உறுதி அளித்தான்.

மனம் புண்பட்டு முகம் காட்ட

மறுத்த மங்கை மயங்கி விழுந்து

காயம் கொள்ள கலங்கிடுதே சிறகு..!

சிட்டுக்கு தருகிறேன் வாக்கு

சித்தம் கலந்தவளை

நித்தம் காத்திடுவேன்…!

காயமோ அவளுக்கு

வலியை உணர்கிறேன் நான்..!

Advertisement