Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 35 

கோபமாக உள்ளே வந்த ஆர்யனை பார்த்து சல்மா வெலவெலத்துப் போக, “ஒழுங்கா பேச தெரியாதா, உனக்கு?” என்றபடி அருகில் வந்தவன் “அடிப்படை நாகரீகம் கூட இல்லாம என்ன பேச்சு இது?” என கத்தினான். “நான் அப்படி நினைச்சி…“ என பேச வந்த சல்மாவை இடைமறித்தவன் “முறை தவறி இனி நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. புரியுதா?” என ஆணையிட்டான். அழுகையுடன் நின்ற சல்மாவை பார்த்து ருஹானாவுக்கு பரிதாபமாக இருந்தது. தலைகுனிந்த சல்மா, ருஹானாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

“இது ரொம்ப தப்பு“ என்ற ருஹானாவை முறைத்த ஆர்யன் “என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாது. இப்படி யாரையும் நோகடிக்க எனக்கு பிடிக்காது. நீங்க இப்படி கத்தியிருக்க வேண்டாம். நான்… நானே பதில் சொல்லியிருப்பேன்” என்று அவள் சொல்லவும் புருவம் நெறித்தான்.

“எப்போ பதில் கொடுப்பே? அவ சொல்ல நினைச்சதைலாம் சொல்லிட்டு போன பின்னாடியா?” என்று கண்ணை அகலமாக்கி கேட்க, ருஹானாவிடம் அவன் கேள்விக்கு பதில் இல்லை.

“அவ மேல இருக்கிற தப்புக்கு சமமான தப்பு உன்மேலயும் இருக்கு” என ஆர்யன் குற்றம் சாட்ட, புரியாது விழித்த ருஹானா “என்மேலயா?” என கேட்டாள்.

“இங்க நீ விருந்தாளி போல இல்ல.. வேலைக்காரி போல நடந்துக்கற. அவள பேச விட்டுட்டு அமைதியா இருக்கே. உன் சுயமரியாதை எங்க போச்சு?” என அவன் கேட்க, ருஹானா கண்ணில் நீர் நிறைய திகைத்து பார்த்திருந்தாள்.

“உன்னைப் போல பலவீனமான ஒருத்தி கிட்டே என் அண்ணன் மகன் வளர்றதை நான் அனுமதிக்க மாட்டேன். திருந்த வேண்டியது சல்மா மட்டும் இல்ல. நீயும் தான்” என கடைசி வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டு அவளை உற்று நோக்கிவிட்டு அகன்றான்.

மூர்க்க அரசன் காக்கும் காவலனாய்

உருவெடுக்கும்வேளை…..

அழகு மயிலை ஆணவக்காரி 

உதாசீனப்படுத்தியது கண்டு

மென்மை மேகம் விலகி

கோபச்சூரியன் வெளிப்பட

சுட்டெரித்தது சல்மாவை மட்டுமல்ல

தனிமையில் தன்னவளையுமே….

பணிந்து போகலாமா அவன் பைங்கிளி…?

ருஹானா அவன் கடுத்த முகத்தில் காயப்பட்டு கலங்கி நிற்க, கடுமையாய் சொல் அம்பை விடுத்தவனும்  மனம் அலைப்புற அவன் அறையில் நில்லாமல் நடை பயின்றான். 

அவனுடைய உரிமை கோபத்தில் அவனது உணரப்படாத நேசம் ததும்பி வழிகிறதே!

பின் அவளை சமாதானப்படுத்த வேகமாக வெளியே செல்ல கதவருகே வந்து கைப்பிடியில் கைவைத்தவன், முடிவை மாற்றிக்கொண்டு திரும்ப மேசைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தான். மேசையில் இருந்த அலுவலக கோப்பை எடுத்து அதில் கவனம் திருப்ப முயன்றான். 

ஆனாலும் அவன் சிந்தனை முழுவதும் நீரால் குளித்திருந்த அந்த பச்சை கண்களிலேயே இருந்தது. வெறுப்பாக முன்னால் இருந்த கோப்பை வேகமாக கீழே தள்ளி விட்டான்.

சல்மாவும் வெறுப்பாக ருஹானாவை அவள் அக்காவிடம் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள். “அந்த மாயக்காரியை நான் வெறுக்கறேன், அக்கா. என்னமா நடிக்கிறா அக்கா அவ… அவளால தான் என்னை இன்னைக்கு ஆர்யன் திட்டிட்டான். அதும் அவ முன்னாலேயே. இப்படி நடந்து இருக்கக்கூடாது. எப்படி நடக்கலாம்?”

குதித்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்துக்கொண்டிருந்த கரீமா “இது உனக்கு தேவை தான், சல்மா” எனவும், சல்மா ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள். “என்ன?” 

“உனக்கு ஆர்யனை புரியவே இல்ல. அநீதியை அவன் எப்பவும் ஏத்துக்க மாட்டான். அவனோட கடுமையான முகமூடி பின்னாடி என்ன மறைச்சி வச்சிருக்கான்னு உனக்கு தெரியுமா? முட்டாள்தனமான இரக்கம். அம்ஜத்ட்டயும், இவான்ட்டயும் அவன் எப்படி கனிவா நடந்துக்கறான்னு நீ பார்க்கறே தானே. இப்போ இந்த பொண்ணு கிட்டயும்…“ என்று சொன்ன அக்காவை பார்த்து சல்மா தலையை வெட்டினாள்.

“அபாய மணி அடிக்கிது, சல்மா. நாம லேசா கவனம் தவறினா கூட தோத்து போய்டுவோம். இப்போ போய் ஆர்யன்ட்ட மன்னிப்பு கேளு” என கரீமா சொல்ல முடியாது என சல்மா மறுத்தாள். “இதான் சரியான வழி. இல்லனா அவன் உன்னை மன்னிக்கவே மாட்டான். அப்புறம் அந்த குப்பைக்காரி சித்தி ஆர்யனை சுத்தி வருவா. நீ அதை வேடிக்கை பார்த்துட்டு தான் நிக்கணும். முடிவு உன் கையில தான்” என கரீமா பயமுறுத்த சல்மா யோசிக்க ஆரம்பித்தாள்.

———–

“அட! உன் நைட் பைஜாமாவை நீயே போட்டுகிட்டியா, செல்லக்குட்டி?”

“ஆமா சித்தி! பல் கூட நானே விளக்கிட்டேன். பாருங்க”

“ஆஹா! முத்துப்போல மின்னுதே!”

“சித்தி! நீங்க அழுதீங்களா?”

“இல்லயே அன்பே”

“அப்போ ஏன் உங்க கண்ணு சிவப்பா இருக்கு?”

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து நின்ற ஆர்யனை இருவரும் கவனிக்கவில்லை.

“இப்போதான் வெங்காயம் வெட்டினேன், என் தேனே”

“இனிமேல என் உணவுல வெங்காயம் சேர்க்காதீங்க, சித்தி”

“ஏன் குட்டி செல்லம்?”

“ஏன்னா அது உங்க கண்ணை கஷ்டப்படுத்துது. கண்ணீர் வர வைக்குதுல, சித்தி”

கேட்டுக் கொண்டிருந்த ஆர்யன் மனதும் நெகிழ்ந்தது.

“என்னுயிரே! தேனே! இங்க பாரு. கண்ணீர் விடறது அத்தனை கெட்டது இல்ல. கண்ணீர் விட்டு அழுதா மனசு லேசாகும். நம்ம வருத்தப்பட வைக்கிற துன்பம், வலி எல்லாம் அந்த கண்ணீரோட பறந்து போய்டும்”

அவள் மனதை புண்ணாக்கி கண்ணீர் விட வைத்தது அவனே எனும் உண்மை ஆர்யனையும் நோகடித்தது. 

“ஆமா சித்தி! நான் கூட அழுதேன்னா எனக்கு மூடு மாறிடும்”

“அப்படித்தான் செல்லம். சரி இப்போ படு, லேட்டாகிடுச்சி. குட்நைட்”

“சித்தி! நான் ஒன்னு சொல்லட்டா?”

“என்ன அன்பே?”

“நான் அம்மாவை மிஸ் செய்யும்போதுலாம் வருத்தப்பட்டு அழுவேன்”

சித்திக்கும், சித்தப்பாவிற்கும் மனம் பாரமானது.

இவான் அருகே அமர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்ட ருஹானா “என்னுயிரே! இனிமேல் அம்மாவை நினைச்சி உனக்கு அழுகை வந்தா என்னை கூப்பிடு. இப்படி சித்திய கட்டிபிடிச்சிக்கிட்டா உன்னோட வருத்தம் எல்லாம் ஓடிப் போயிரும்” என்று மீண்டும் முத்தமிட்டவள் அவனை படுக்க வைத்தாள்.

இவானுக்கு போர்த்திவிட்டு திரும்பிய அவள் ஆர்யன் நிற்பதை பார்த்து அவன் பார்வையை சந்திக்காமல் குனிந்துகொண்டாள். அவளை சில நொடிகள் பார்த்த ஆர்யன் அவளை தாண்டி உள்ளே வர அவள் வெளியே சென்றாள்.

உள்ளே வந்த ஆர்யன் இவானுக்கு குட்நைட் சொல்ல “சித்தப்பா! சித்தி அழுதாங்களா?” என கேட்க ஆர்யன் பதில் சொல்ல முடியாமல் தலையை திருப்பிக்கொண்டான். “அவங்க வெங்காயம் வெட்டினதால தான்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அப்படி தோணல” என்று இவான் சொல்ல, கண்களை தட்டி விழித்த ஆர்யன் “நேரமாச்சி. நீ தூங்கு. காலைல பேசலாம்” என்று சொல்லவும் அவன் கண்களை மூடிக்கொண்டான். 

இவான் தூங்கும்வரை நின்ற ஆர்யன் தனதறைக்கு சென்ற பின்னும் தூங்கும் எண்ணம் இல்லாமல் வெளிமாடத்தில் நின்று அகாபா நகரின் வெளிச்ச புள்ளிகளை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். சல்மாவின் கடுஞ்சொற்கள் ருஹானாவை பாதித்ததை விட அவனை மிகவும் பாதித்தது. ‘தன்னிடம் பயமில்லாமல் எதற்கும் எதிர்த்து சண்டையிடுபவள், சல்மாவிடம் இறங்கி போக வேண்டிய அவசியம் என்ன?’ என அவனே கேட்டுக்கொண்டான். ‘நான் இவானோட சித்தி, உங்க பணியாள் இல்ல’ என்று  தன்னிடம் பேசிய வீராப்பு இப்போது  எங்கே  போனது என்று ஆதங்கப்பட்டான். ஆனாலும் அவளது சோக முகமும், கலங்கிய கண்களும் அவனை பாடாய்படுத்தியது.

ருஹானாவுக்கும் தூக்கம் கிட்டே வரவில்லை. சல்மாவின் கிண்டல் பேச்சை விட ஆர்யனின் வார்த்தைகளே அவளை பாதித்தது. அடுத்தவர் பேசும் ஏளன பேச்சை விட மனதிற்கு நெருங்கியவர்களின் முக சுளிப்பு ஆழமாய் மனதில் தைக்கும் என்ற உண்மை அவளுக்கு புரியவில்லை. கீழே விழுந்த பால் பாத்திரத்தை எடுக்க விடாதவன் தான். ஆனாலும் உன் இடம் தெரிந்து நடந்துக்கொள் என்று சொன்னவனும் அவன் தானே!  

பலவாறு யோசித்தவள் மனப்புழுக்கம் போக்க வெளிக்காற்று வாங்க மேலங்கியை மாட்டிக்கொண்டு மேல்மாடம் வந்தாள். கீழ்தளவெளியில் ஆர்யனும் நிற்பதை பார்த்து ‘என்னை திட்டிட்டு இவனுக்கு என்ன வந்தது?’ என சில நிமிடங்கள் குழம்பி நின்றாள். நேருக்கு நேர் அவனை பார்க்க பிரியப்படாமல் அவள் உள்ளே வந்த நொடி ஆர்யன் திரும்பி மேலே நோக்கினான்.

ருஹானா அறையில் விளக்கு எரியவும், இன்னும் அவள் தூங்கவில்லை என புரிந்தவன், அவள் வெளியே வருவாளா என்று பார்த்து நின்றான். சிறிது நேரத்தில் அவள் விளக்கை நிறுத்தவும், திரும்பியவன் வானில் மின்னிய பிறைநிலவை பார்த்திருந்தான்.

————    

காலையில் சீக்கிரமே கிளம்பிய ருஹானா, கரீமாவிடம் தனக்கு வெளியே வேலை இருப்பதாக சொல்லிவிட்டு இவானை கவனிக்கும்படி கேட்டுக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுவதாக சொல்லி போனாள். 

ஆர்யனும் கிளம்பி ருஹானாவை பார்க்கும் ஆசையில் இவான் அறைக்கதவை மென்சிரிப்புடன் திறந்தான். அங்கே கேப்டன் கேபின் காலியாக இருந்து அவனுக்கு ஏமாற்றத்தை தந்தது. கீழே இறங்கி வந்தவன் இவான் நஸ்ரியாவுடன் கப்பல் வைத்து விளையாடுவதை பார்த்துவிட்டு சுற்றிலும் நோட்டம் விட்டான்.

“கேப்டன் இவான்! இங்க பயணிகளை உட்கார வைக்கலாமா?”

“இல்ல, நஸ்ரியா அக்கா! இது என் சித்தப்பா கப்பல் மாதிரி கார்கோ கப்பல். சரக்கு மட்டும் தான் ஏத்த முடியும்”

“சரி கேப்டன்! உங்க சொற்படி”

“என்ன ஆர்யன்! என்ன வேணும்?” உள்ளே இருந்து வந்த கரீமா கேட்டாள்.

“இவான் சித்தி ஏன் அவனோட இல்ல?”

“அவ வெளிய போயிருக்காளே!”

“என்னோட அனுமதி இல்லாமலா?”

“நான் உன்கிட்டே சொல்லி இருப்பா ன்னு நினைச்சனே”

ரஷீத் போனில் அழைக்க பேசிக்கொண்டே ஆர்யன் வெளியே செல்ல, கரீமா காலையில் கண்ட ருஹானாவின் சோர்ந்த முகத்தையும், ஆர்யனின் தேடலையும் சேர்த்து யோசிக்கலானாள்.

———– 

Advertisement