Advertisement

மிஷால் உணவகத்தில் அவனுக்காக காத்திருந்த ருஹானா மேசையில் இருந்த சீரகப்பொடியை பார்த்தாள். நேற்றிரவு ஆர்யன் சாஸில் சீரகப்பொடி சேர்க்க சொன்னதும், இனிமையாக சேர்ந்து சமைத்ததும், அதே இரவில் அவன் கடுமையாக பேசியதும் நினைவில் வர முகம் வாடினாள்.

சந்தைக்கு சென்று திரும்பிய மிஷால் உள்ளே நுழையும்போது முதலில் பார்த்தது ருஹானாவின் இந்த முகத்தை தான்.

———

“நான் படிச்சி பார்த்துட்டேன். எல்லாம் சரியா இருக்கு. நீங்க படிச்சிட்டு கையெழுத்து போடுங்க” என்ற ரஷீத் ஒரு ஒப்பந்தத்தை ஆர்யன் முன் வைத்தான். நான்கு வரிகள் படித்தவன் கண்களுக்கு அந்த எழுத்து வரிகள் பிடிக்கவில்லை. அழகிய பச்சை விழிகளை தேடியது. ரஷீத் உற்று பார்க்க, ஆர்யன் எழுந்துக் கொண்டான்.

“என்ன ஆர்யன்! எதும் உங்களை சிரமப்படுத்துதா?”

“இல்லயே! ஒன்னும் கஷ்டம் இல்லயே”

நம்பாமல் பார்த்த ரஷீத் “சரி! நான் மத்த பேப்பர்ஸ் ரெடியாகிடுச்சான்னு பார்க்கறேன். நீங்க அதுக்குள்ள இதை பார்த்து சைன் போட்டு வச்சிடுங்க” என்று சென்றான்.

ஆர்யன் அமர்ந்து கோப்புகளை பார்க்க முயற்சி செய்ய, அவன் கண்கள் பக்கத்தில் இருந்த போனை பார்த்தன. மெல்ல போனை எடுத்து ருஹானாவின் இலக்கத்தை, ‘சித்தி’ என குறித்து வைத்திருந்ததை பார்த்துக்கொண்டே இருந்தான். கண்கள் கைக்கு ஆணையிட, அந்த அழைப்பு பொத்தானை அழுத்த கை விரைந்தது. ஆனால் தொட்ட விரல் அழுத்தாமல் அங்கேயே நின்றது.  

———-

“என்ன, மிஷால்! மடாபால இருந்தே மசாலாப் பொருட்கள் வாங்கிட்டு வந்திட்டியா?”

“ஆமா” 

“மிஷால்!”

“சொல்லு, ருஹானா”

“நீ முன்னே எனக்கு ஒரு வேலை கொடுத்தியே! அது இன்னும் இருக்கா? நீ வேற முடிவு எடுத்திருந்தாலும் எனக்கு சரி தான்”

“நான் ஏன் மனச மாத்தப் போறேன்? அதாவது…. அது அப்படியே தான் இருக்கு… உனக்கு சரின்னா…”

“நன்றி மிஷால்”

“நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். இத்தனை திறமைசாலி செஃப் எங்க கூட இருக்கறதுக்கு”

“அஹ்! சரி எப்போ நம்ம வேலையை தொடங்கலாம்?”

“நாளைக்கு வர ஆர்டர்ல இருந்தே செய்யேன். உன்னால முடியுமா?”

“ஏன் முடியாது? கண்டிப்பா செய்றேன். ஒரு முழு இரவும் இருக்கே. நீ லிஸ்ட் மட்டும் கொடு. மத்ததை என்கிட்டே விடு”

இருவரும் லேசாக புன்னகைத்து கொண்டனர்.

ருஹானாவின் போன் அடிக்க அதில் ஆர்யன் என்ற பெயர் மேலே வர, அவள் அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். கடத்தல்கார்கள் துரத்தியபோது அவள் தவற விட்ட அவள் போனில் இந்த இலக்கம் “ஆர்யன் சார்’ என்று தானே சேமித்து வைக்கப்பட்டிருந்தது!

ருஹானாவின் தயக்கத்தை பார்த்துக்கொண்டிருந்த மிஷால், அவள் போன் அழைப்பை ஏற்காமல் கைப்பையில் போடவும் “எதும் பிரச்சனையா, ருஹானா?” என்று கேட்டான்.

“இல்ல, மிஷால். வீட்ல இருந்து கூப்பிடுறாங்க. இவான் என்னை தேடுவானா இருக்கும். நான் கிளம்புறேன்” என்று எழுந்தாள். “சரி, சாப்பிட்டு போ. மதிய உணவு வேளை முடியப்போகுதே” என்றான். காலையும் எதும் உண்ணாத ருஹானா அதை மறுத்து “இவான் காத்திருப்பான்” என கிளம்பினாள்.

“நீ ஏதோ சரியா இல்லயே! அந்த முரடன் திரும்பவும் உன்னை கஷ்டப்படுத்திறானா?” என்று அவள் தன்னுடன் திருமணத்திற்கு மறுத்திருந்தும் அவள் மேல் கொண்ட அன்பை மறக்க முடியாமல் கேட்டான்.

“அப்படிலாம் எதுவும் இல்ல, மிஷால். நீ கவலைப் படாதே. எல்லாம் நல்லா தான் போகுது. இனி யார் என்கிட்டே எப்படி நடந்துகிட்டாலும் நான் அதை லட்சியப்படுத்த போறதில்ல. இவானோட சந்தோசம் மட்டும் தான் எனக்கு தேவை. மத்த எதுவும் எனக்கு தேவை இல்ல” என்று தொண்டை அடைக்க கூறினாள். 

சமீபமாக ஆர்யனின் இதமான நடவடிக்கைகளில் ஆறுதலாக உணர்ந்தவளுக்கு, உள்ளுர அவளுக்கே தெரியாமல் மேலும் அதை எதிர்பார்த்தவளுக்கு, அவனது கோப வீச்சை தாங்க முடியவில்லை. அவனின் இந்த கோபமும் அவளது நன்மை கருதியே என புரியவில்லை.  

அவள் பேசியதின் உள்அர்த்தம் அவனுக்கு புரியாத போதும் “சரி, ஒன்னும் இல்லன்னு நீ சொல்றதால நான் நம்புறேன். எதுக்கும் கவனமா இரு. வா, நான் உன்னை அங்கே விடறேன்” என மிஷால் அழைத்தான். “இல்ல, மிஷால்! ஆட்கள் வராங்க, நீ வேலையை பாரு. நான் போய்க்குவேன்” என்று நடந்தாள்.

——— 

ருஹானாவிடம் பேச முடியாத கோபத்தில் போனை மேசையில் தூக்கிப்போட்ட ஆர்யன், அங்கேயே வேகமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.  அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவனை தேக்கியது, சல்மாவின் வருகை.

“சலாம்! உங்க பி.ஏ தகவல் சொல்ல வந்தாங்க. ஆனா நானே உள்ளே வந்துட்டேன்” என உற்சாகமாக அறிவித்தாள், அவன் இருந்த கடுப்பு புரியாமல்.    

அவளை பார்க்காமல் கோட் பட்டனை போட்டவன், போனை எடுத்து சட்டைப்பையில் வைத்தான்.

“நான் உங்களை ஒன்னும் தொல்லை செய்யலயே?” என சரியாக கேட்டவள் “நான் இங்க ஏன் வந்தேன்னா நேத்து நடந்த சம்பவத்தால தான்” என்று சொல்ல அப்போதும் அவன் கிளம்பும் அவசரத்திலேயே இருந்தான்.

“நீங்க வீட்டுக்கு வரவரை என்னால காத்திருக்க முடியல. நேத்து ருஹானா கூட…..” சிந்தையில் ஓடிக்கொண்டே இருந்த அவள் பெயர் காதில் விழுந்ததும் தானாக திரும்பி சல்மாவை பார்த்தான்.

மிக அழகாக அலங்கரித்திருந்த அவள் நளினமோ, கொஞ்சி பேசிய அவள் லாவகமோ அவனை ஈர்க்கவில்லை. அந்த ஒற்றை பேர் சல்மா புறம் அவனை திரும்ப வைக்க, மகிழ்ந்து போன அவள் “ஏற்பட்ட உரசலுக்கு நான் வருத்தப்படுறேன். மன்னிப்பு கேட்கறேன்”

“அந்த விஷயம் நேத்தே முடிஞ்சி போச்சி. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்று நடக்க ஆரம்பிக்க “ஸாரி. உங்களுக்கு வேலை இருக்குன்னு எனக்கு தெரியாது….” என்பதை சல்மா அவன் முதுகுக்கு தான் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவமானத்தில் சிவந்து போன அவள் கரீமாவுக்கு போன் செய்து தாறுமாறாக கத்தினாள். “அக்கா! உன் பேச்சைக் கேட்டு நான் வந்தேனே, என்னை சொல்லணும். அவன் என்னை மதிக்கவே இல்ல. அவன் பாட்டுக்கு போறான்”    

“சரி, நீ டென்ஷன் ஆகாதே. ஆழமா மூச்சை இழுத்து விடு. மாத்திரை பைல வச்சிருக்கியா? எடுத்து போட்டுட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா”

“அதெல்லாம் வச்சிருக்கேன். நான் இப்போ வீட்டுக்கு வரல. என் மனநிலை சரியில்ல. கார்ல ஒரு சுத்து சுத்திட்டு வரேன்”

———

மன அமைதி நாடி கடற்கரைக்கு சென்ற ஆர்யன் அங்கும் பரபரப்பாகவே உலாத்தினான். அவன் திட்டும்போது வாடிய அவள் முகமும், இவான் அறையில் அவன் பார்வையை சந்திக்க மறுத்த அவள் சிவந்த கண்களும் அவனை பாடாய்படுத்தியது. 

போனை எடுத்து திரும்ப ருஹானாவை அழைக்க போனவன், ரோஷமாக போனை மூடி சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். அவளை புண்பட பேசிவிட்டு இவன் மனம் அதிகமாக புண்பட்டு போனது. ருஹானாவின் தோற்றத்தில் ஒரு பெண் தூரமாக செல்ல அவளோ என வேகமாக நெருங்கி சென்று ஏமாந்து திரும்பினான்.  

அப்போது வந்த போன் அழைப்பில் ஆவலாக எடுத்து பார்த்தவன், அது ரஷீத் என அறிந்து அழைப்பை ஏற்காமல் பையில் போட்டுக்கொண்டு, வேக நடை நடந்து தன்னை ஆற்றுப்படுத்த முயன்றான்.

——–

மிஷால் உணவகத்திலிருந்து நடந்து வந்துக்கொண்டிருந்த ருஹானா, சாலையில் பேகல் விற்கப்படுவதை பார்த்து அதை வாங்க பையில் பணத்தை தேடினாள். போதுமான காசு இல்லாததால் கொலைப் பட்டினியுடன்  தள்ளாடியபடி நடக்க ஆரம்பித்தாள். மிஷால் சாப்பிட வற்புறுத்தியபோதும், அப்போது உண்ண மனமில்லாமல் மறுத்தவள், இப்போது நடக்க திராணியற்ற நிலையில் கண்கள் இருட்ட சாலையோரம் மயங்கி விழுந்தாள்.

ருஹானா தடுமாறியபோதே காரில் வந்து கொண்டிருந்த சல்மா அவளை பார்த்தவள் அவள் மயங்கி கீழே விழவும் ஆனந்தம் கொண்டாள். “உன் அக்கா மாதிரி நீயும் செத்து தொலை. அப்போ தான் என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றவள் காரை அருகில் நிறுத்தி உணர்வு இருக்கிறதா என பார்த்தாள். ருஹானாவிடம் அசைவேதும் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டவள் மகிழ்ச்சியுடன் காரை கிளப்பி சென்றுவிட்டாள்.

(தொடரும்)

Advertisement