Advertisement

——-

சமையலறையில் மும்முரமாக சுழன்றுக் கொண்டிருந்த ருஹானாவிடம் சென்ற சல்மா அவளுக்கு காபி கலந்து தர முடியுமா என நைச்சியமாக கேட்டாள். உதவி செய்ய வருகிறேன் என சொல்லி சென்ற கரீமா எட்டிக்கூட பார்க்கவில்லை. நஸ்ரியாவை தந்திரமாக கடைக்கு அனுப்பிவிட்டு ருஹானா தனியாக திண்டாடுவதை பார்க்க வந்த சல்மா அவள் காபி கப்பை எடுக்கவும் “வேணா.. வேணா.. நீ வேலையை பார். நானே போட்டுக்கறேன்” என நடித்தாள்.

‘இதெல்லாம் ஒரு வேலையா?’ என அனாயசமாக சமைத்துக்கொண்டிருந்த ருஹானாவுக்கு காபி போட்டு தருவதெல்லாம் ஒரு பொருட்டா, என்ன? நிமிடத்தில் காபி தயார் செய்து தந்தவள் சமையலை தொடர்ந்தாள். ருஹானா தலையில் எல்லா வேலையையும் கட்டிவிட்ட தன் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டே காபியை குடித்தவாறே சல்மா நகர்ந்தாள்.

“சாரா! சையத் பாபா சாஸ்…..?” என கேட்டுக்கொண்டே ஆர்யன் உள்ளே வந்தான். ஏப்ரானும், தலையில் அழகாக துணியும் கட்டிக்கொண்டு பாங்காக நின்ற ருஹானாவை பார்த்ததும் ஒரு கணம் அசந்து நின்று விட்டான். “சாரா மேம் இல்லயே! அவங்களுக்கு உடம்பு சரியில்ல. ஜாஃபர் ஆஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்கார்” ருஹானா சொன்னாள்.

“ஓ! அப்படியா? எனக்கு தெரியாதே” அண்ணனுக்கு இதம் செய்ய நினைத்து அவன் கேட்டது சாப்பிட கொடுக்க வந்த ஆர்யன் இப்போது என்ன செய்வது என யோசித்து நிற்கவும், எதோ அவனுக்கு தேவை என உணர்ந்த ருஹானா “உங்களுக்கு ஏதாவது வேணுமா? நான் செய்து தரேன்” என கேட்டாள்.

“எனக்கில்ல. அண்ணனுக்கு. சிக்கன் விங்க்ஸ் சாப்பிட ஆசைப்படறார். சாராக்கு அதுக்கான சாஸ் செய்ய தெரியும்”

“அந்த ரெசிபி கிடைச்சா நான் செஞ்சி தருவேனே”

“சையத் பாபா போன் கிடைக்கல. நான் அண்ணனுக்கு உறுதி கொடுத்துட்டேன். இப்போ அவர் ஏமாற்றமாகிடுவார்”

“உங்களுக்கு அது எப்படி செய்றதுன்னு தெரியுமா? நீங்க சொன்னா நான் செய்றேன்”

“எனக்கு தெரியும்”

“அப்போ நாம செய்யலாம். எனக்கு ஐந்து நிமிஷ வேலை இருக்கு. இது முடிச்சிட்டு தொடங்கலாம்”

தலையாட்டிய ஆர்யன் நகர்ந்து நின்று ‘இவள் எத்தனை வேலைதான் செய்வாள்.. இவானையும் கவனித்துக்கொண்டு தோட்டம், சமையல் என?’  சிந்தித்திருந்தான்.

—–

தோட்டத்தில் இவான் கார் வைத்து விளையாடிக்கொண்டிருக்க, கரீமாவும், சல்மாவும் அங்கு தான் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தனர். “எப்படிக்கா! சித்தியை சூப்பரா கிச்சன்ல தள்ளி விட்டேன், பாரு. இல்லனா அவ ஆர்யன் பின்னாடியே சுத்திட்டு இருப்பா” என கர்வமாக சிரித்தாள்.

சல்மாவின் பேச்சில் எரிச்சலான கரீமா “சல்மா! உனக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டேன். இவான் மூலமா தான் ஆர்யனை நெருங்க முடியும். நீ அந்த பொண்ணை பத்தி விட்டு தொலை” என்றாள்.

“அக்கா! நான் அதும் தான் செய்றேன். இவானை பார்த்துக்கறேன் தானே. இன்னைக்கு அவ என்னை ரொம்ப கடுப்பாக்கிட்டா, அக்கா. அதான் அவளுக்கு நல்லா பாடம் கத்துக் கொடுத்துட்டேன். இனி அவ என் வழிக்கு வர மாட்டா. இரு, அக்கா! அந்த கிச்சன் எலி என்ன செய்யுதுன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்லி சொகுசாக நடந்து சென்றாள். கரீமா தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

——-

ஆர்யன் சொல்ல சொல்ல செய்து முடித்த ருஹானா “இதுல கொத்தமல்லி இலை போடலாமா?” என்று கேட்க, அவன் குழப்பமானான். “கொத்தமல்லியா… அது சீரகம் தானே போடணும்?” என அவன் விழிக்க, ருஹானாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பை புன்னகையாக குறுக்கிக் கொண்டவள் “இல்ல.. அது கொத்தமல்லி தான்” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

அவள் சிரிப்பில் மயங்கியவன் முகம் மென்மையுற “ஆனா லெமன் ஜூஸ் போடணும். அது எனக்கு கண்டிப்பாக தெரியும்” என்று வேகமாக சொன்னான். அவன் சொல்லும்முன்னே எலுமிச்சை பழத்தை கையில் எடுத்திருந்த ருஹானா, அதை வெட்டிக்கொண்டே “சரிதான். ஆனா கொஞ்சமா தான் சேர்க்கணும். சிக்கன் விங்க்ஸ் ஏற்கனவே ஆயிலா இருக்கு” என சொல்ல அவனும் ஒப்புக்கொண்டான்.

அவள் வேலை செய்யும் அழகை ஆர்யன் ரசித்துக்கொண்டிருக்க, ருஹானா சமைத்து முடித்து அவன் சுவை பார்க்க ஒரு ஸ்பூன் எடுத்து நீட்டினாள். கொதித்துக் கொண்டிருந்த சாஸை எடுத்து ஊதி வாயில் வைத்தவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, அவன் முகத்தையே பார்த்திருந்த ருஹானா முடிவுக்கு காத்திருந்தாள்.

“எப்படி இருக்கு?” என அவள் வாய் விட்டு கேட்க, “நல்லா இருக்கு.. சையத் பாபா சாஸ் போலவே.. சுவையா செஞ்சிருக்கே” என அவன் அவள் முகம் பார்த்து பாராட்ட, பெருமித மகிழ்ச்சியுடன் அவள் தலையை குனிந்து கொண்டாள். ரசனையான அந்த நேரத்தில் சரியாக உள்ளே வந்த சல்மா இருவரும் இணைந்து நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாள்.

அவளை ருஹானா திரும்பி பார்க்கவும் “இந்த சாஸ் ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜ்ல இருக்கணும்” என ருஹானாவிடம் சொன்ன ஆர்யன் வெளியே நடக்க, அவனை பார்த்து அனைத்து பற்களும் தெரியும்வண்ணம் சல்மா சிரிக்க, அவன் அவள் புறம் திரும்பக்கூட இல்லை.

சாஸை ஆறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு ருஹானா வெளியே செல்லவும், அதுவரை ஆறாமல் கொதித்துக்கொண்டிருந்த சல்மா அந்த சாஸில் ஒரு புட்டி வினிகரை கலந்து வைத்தாள். அதன்பின்னே அவள் மனம் ஆறியது. வில்லத்தனமான சிரிப்புடன் நகர்ந்தாள்.

——-   

உணவு மேசையில் ஒவ்வொன்றாக ருஹானா கொண்டு வந்து வைக்க கரீமா அவளுக்கு நன்றி கூறினாள். “நஸ்ரியாவும் சாரா கூட இருந்துக்கொண்டாளே!” உனக்கு தான் எவ்வளவு வேலை!” 

“நான் தான் சாரா மேம்க்கு துணைக்கு அவளை தங்க சொன்னேன். எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல. எல்லாம் செய்திட்டேனே. உதவி ஏதும் தேவையிருக்கல்ல” என ருஹானா சொல்ல “குட் வொர்க்” என அம்ஜத்தும் பாராட்ட “இனிய உணவு” என ருஹானா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அப்போது, பார்க்கவே சாப்பிட தோன்றும் சிக்கன் விங்க்சை தட்டு நிறைய எடுத்துக்கொண்டு ஆர்யன் அங்கே வர, அம்ஜத் ஆர்வமாக கையை தேய்த்துக்கொண்டான்.

“ஹா! ஆர்யன்! கொண்டு வா! நீயும் உட்கார்! சாப்பிடலாம்! ருஹானா நமக்கு நெறைய வெரைட்டி செஞ்சிருக்கா.. வா வா.. சாப்பிடு” என்று அழைத்தான். ருஹானாவை பார்த்துக்கொண்டே ஆர்யன் அமர, அம்ஜத் தனக்கும், ஆர்யனுக்கும் எடுத்து வைக்க, சல்மா கள்ளச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

ருஹானா இவானுக்கு எடுத்துக்கொடுக்க, அம்ஜத் வேறொரு உணவை ஆர்யன் தட்டில் வைத்து “ஆர்யன்! இந்த கிரேவியை சாப்பிட்டு பாரேன். நான் டின்னர்க்கு காத்திருக்கும்போதே சுவை பார்த்துட்டேன். நீ சாப்பிடு.. எப்படி இருக்கு, சொல்லு?” என ஆர்யன் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கினான்.

ருஹானாவும் ஆர்யனின் கருத்துக்காக ஓரக்கண்ணால் ‘அவனுக்கு பிடிக்கிறதா, பிடிக்க வேண்டுமே’ என்று கவனிக்கிறாள். ஆர்யன் தலையை மட்டும் ஆட்டினான். “ருஹானா! நீ இங்க வந்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நீ நல்லா சமைக்கிற.. இவானை அருமையா கவனிக்கிற.. நீ வந்ததுல இருந்து இவான் சந்தோசமா இருக்கான்…“ என்று அம்ஜத் சொல்ல ருஹானா அவனை பார்த்து புன்னகை செய்தாள். “அதோட.. அதோட.. ஆர்யனும் நீ வந்ததுல இருந்து சந்தோசமா இருக்கான்” என்று உற்சாகமிகுதியில் சொல்லிவிட ருஹானாவின் சிரிப்பு மறைந்து சங்கடமானாள். “அப்படித்தானே, கரீமா?” என அம்ஜத் தன் கட்சிக்கு ஆள் சேர்க்க அவள் வாய் திறக்கவில்லை.

ஆர்யன் பேச்சை மாற்றி “அண்ணா! சிக்கன் விங்க்ஸ் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான். ஒரு துண்டை எடுத்து சுவைத்த அம்ஜத் “ஆஹா! சையத் பாபா செய்றதை விட நல்லா இருக்கு.. இவான், நீ சொல்லு, எப்படி இருக்கு?” என கேட்க, வாய் முழுதும் கோழியை வைத்திருந்த இவான் “ம்..ம்..ம்….” என்று தலையாட்டினான்.

சல்மா ‘எப்படி இது சாத்தியம்?’ என்று முழிக்க, திரும்பவும் ஆர்யனிடம் வந்த அம்ஜத் “நல்லா இருக்குல.. ரொம்ப நல்லா இருக்குல?” என கேட்க அவனிடம் ஆமோதித்த ஆர்யன், ருஹானாவை பார்த்து “நன்றி!” என்றான். முதல்முறையாக இப்போது தான் நன்றி என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வருகிறதோ?

நன்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட ருஹானா “முதல்ல செஞ்ச சாஸ்ல ஏதோ சரியில்லாத மாதிரி இருந்தது. மறுபடியும் வேற சாஸ் செய்தேன்” என்றாள். சமையல் ராணியை ஏமாற்ற முடியாமல் தோற்றுப் போனாள், சல்மா.

சமையலறையில் கொடுத்தா வில்லி நெருக்கடி

உதவிக்கு வந்து நிற்கிறான் ஆர்யன் நெருங்கி

எதார்த்தமா பதார்த்தத்தை குளறுபடி பண்ணினா

சமர்த்தா அதை மாற்றிட்டாளே ருஹானா

சல்மா நீ இல்லம்மா கில்மா

உன் புத்தியும் ரொம்ப டல்லு மா

நீ வாங்கினது பெரிய பல்பு மா

“நீ செய்த எல்லாமே சூப்பர், ருஹானா” என அம்ஜத் மனவுவந்து பாராட்ட, ‘என்ன தொல்லை கொடுத்தும் எல்லாம் ருஹானாக்கு சாதகமாக போகிறதே’ என சல்மா நொந்துபோனாள்.

——- 

இரவு உணவிற்கு பின் சாப்பிட பக்லாவா இனிப்பை தட்டில் எடுத்து வைத்து திரும்பிய ருஹானா எதிரே போனை பார்த்துக்கொண்டே வந்த சல்மா மீது மோதிக்கொள்ள, இனிப்பின் ரசம் பூராவும் சல்மா உடையில் படிந்தது. “அச்சோ! ஸாரி! நான் உங்களை பார்க்கல” என்று ருஹானா மன்னிப்பு வேண்ட, “இந்த ட்ரெஸ் நான் இத்தாலில வாங்கினேன்” என்று சல்மா சொன்னாள். 

“நான் இதை சுத்தம் செய்து தரேன். கறை போகலனா புதுசு வாங்கி தரேன்” என ருஹானா பதட்டமாக சொல்ல, “ஹும்!” என அலட்சிய சிரிப்பு சிரித்த சல்மா “இந்த மாளிகைல வேலை செய்ற எல்லா வேலைக்காரங்களோட ஐந்து மாத சம்பளம் கொடுத்தா கூட இதை வாங்க முடியாது” என்று சொல்ல, ருஹானாவின் முகம் வாடிவிட்டது.

அவள் கண்ணீருடன் சல்மாவை பார்க்க, அவளோ “கெட்டுப் போச்சி, எப்படியோ! சிலசமயம் நான் மறந்திடுறேன். எந்த மனுசங்க கூட இருக்கேன், அவங்க தராதரம் என்னன்னு…“ என பேசிக்கொண்டே போக “சல்மா!” என இடியை போல ஒரு குரல் கேட்டது. 

சல்மா திடுக்கிட்டு திரும்ப அங்கே ஆர்யன் எரிமலையாய் நிற்க, ருஹானாவும் பயத்துடன் பார்த்தாள். கண்களை அகல விரித்து உள்ளே வந்த ஆர்யன் பின்னால் கதவை அறைவது போல மூடினான். சல்மா தோள் குறுக்கி நடுக்கத்துடன் நின்றாள்.     

(தொடரும்)

Advertisement