Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 34 

வீட்டைவிட்டு வெளியே சென்றதற்கான காரணத்தை சொல்லுமாறு அண்ணனை கேட்டு ஆர்யன் வற்புறுத்த, கரீமாவை பார்த்துக்கொண்டே அம்ஜத் வாயை திறந்தான்.

“நான்…. என்னால…. இனி தாங்க முடியாது.. அது…. மோசமான… நிகழ்வு… பயங்கரமானது…”

ஒவ்வொரு வார்த்தையாக அம்ஜத் தயங்கி தயங்கி பேச, கரீமாவின் உயிர் தவணை முறையில் சென்று கொண்டிருந்தது.

“நான்.. எல்லாத்தையும் பார்த்துட்டேன்.. எல்லாமே…”

“சொல்லுங்க அண்ணா! என்ன பார்த்தீங்க?”

“அவ கீழே விழுந்தா… அவ விழுந்ததை நான் பார்த்தேன்”

கரீமாவின் கண்களில் குளம் கட்டியது.

“அவ திடீர்னு விழுந்துட்டா… நான் பார்த்தேன்”

“ஆர்யன்! அவர் தன்னை அதிகமா வருத்திக்கிறார். போதும் இதோட”

“இருங்க அண்ணி! அண்ணன் பேசட்டும். யார் விழுந்தது அண்ணா? சொல்லுங்க”

“இவான் சித்தி… இவான் சித்தி!!!” என சொல்லி அம்ஜத் சத்தமாக அழவும், கரீமாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

“உன் போன்ல பார்த்தேன்.. ருஹானா… அவ குழில விழுந்தா” சொன்னவன் கண்களை மூடிக் கொண்டான்.

“நான்.. ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. பயந்திட்டேன்” அம்ஜத் பெரிதாக மூச்சிரைக்க, கரீமா தப்பித்த பெருமூச்சு விட்டாள்.

அண்ணனை இழுத்து அணைத்துக்கொண்ட ஆர்யன் “என் தப்பு தான். உங்க கிட்ட போன் கொடுக்கறதுக்கு முன்ன அந்த வீடியோவை நான் அழிச்சிருக்கணும். நீங்க அதை பார்ப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல” என்றான்.

அம்ஜத்தை ஆறுதலாக தட்டிக்கொடுத்த ஆர்யன் “அண்ணா! அதெல்லாம் கடந்து போய்டுச்சி. சரியா? உங்களுக்கே தெரியும் தானே!” என கேட்டான்.

“தெரியும்! ருஹானா நல்லா இருக்கா. தெரியும் தான். ஆனா அவளை நான் அப்படி பார்க்கும்போது பயந்து போயிட்டேன், ஆர்யன். ரொம்ப பயந்திட்டேன்”

“சரி அண்ணா! நீங்க அதிக களைப்பா இருக்கீங்க. போய் ஓய்வெடுங்க, சரியா?”

“சரி தான், ஆர்யன்”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. கவலைப்படாதீங்க, அண்ணா” என்று சொல்லி அண்ணனை கரீமாவுடன் அனுப்பி வைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.

———-

கதை சொல்லி இவானை தூங்க வைத்துவிட்டு, வெளியே வந்த ருஹானா எதிரே வந்துக்கொண்டிருந்த ஆர்யனை பார்த்து தயங்கி நிற்க “கொஞ்சம் பேசணும். வர முடியுமா?” என ஆர்யன் தன்மையாக கேட்டான். ருஹானாவிடம் ஆர்யன் பேசும்முறையில் கண்டிப்பாக மாற்றம் இருந்தது. 

அவள் ஒன்றும் சொல்லாமல் தயங்கி நிற்க, அவன் அறையின் கதவை திறந்தபடி அவளை திரும்பி பார்த்தான். அதில் வாயேன் எனும் வேண்டுதல் இருந்ததை ருஹானா கண்டு கொள்ள லேசாக அசைந்தாள். அவன் உள்ளே செல்ல, இவளும் தயங்கியபடி அவன் அறைக்குள் நுழைய, இதையெல்லாம் சல்மா மறைந்திருந்து பார்த்திருந்தாள்.

உள்ளே வந்த ருஹானாவை நோக்கி “இன்னைக்கு.. அங்கே.. நீ பார்த்தது..“ என ஆர்யன் துண்டு துண்டுகளாக வார்த்தைகளை உதிர்க்க, ‘அதற்கு மேல் என்ன பேசுவது’ என அவன் குரல் அடைத்துக்கொள்ள “அதெல்லாம் அங்கேயே தான் இருக்கும்” என ருஹானா உடனே பதில் சொல்ல, ஆர்யன் ஆச்சரியமாக அவளை பார்த்தான். “நினைவுப்படுத்த அவசியமில்ல” என அவள் மேலும் சொல்லவும் இன்னும் அதிசயமாக அவளை பார்த்தான்.

அவனுக்குள் புதைந்திருந்த சம்பவங்கள் அந்த பழைய வீட்டில் ஓரளவு வெளியே வந்ததை, திரும்ப சொல்ல பிடிக்காமல், சொல்லவும் வாய் வராமல் அவன் தவிக்க, அவள் அவன் சொல்ல வருவதை சொல்லாமலே புரிந்துக்கொண்டவள், அவன் அதை மறைக்க நினைப்பதையும் அறிந்துக்கொண்டு பதில் சொன்னது ஆர்யனை திகைப்பில் ஆழ்த்தியது.

அவனை மட்டுமா? அறை வாசலில் நின்று ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த சல்மாவையும் தான். அவர்கள் கண்கள் தான் விவரமாக பேசிக்கொண்டன, வார்த்தைகள் இல்லை, ஒட்டு கேட்டும் பயனில்லை. அவர்களின் கண் மொழி பிரத்யேக மொழி, அவர்களின் தனி மொழி. முன்னால் நின்று பார்த்தாலே புரியாது. பின்னால் நின்று பார்த்தவள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டாள்.

கரீமாவுக்கும் ஏமாற்றம் தான், அம்ஜத்தின் நடவடிக்கைகள் பார்த்து. உடல்சுத்தம் செய்து, உணவளித்து, அவனை படுக்க வைத்தவள் “இனிமேல் நம்ம அமைதி கெட்டுப் போற மாதிரி நடக்க மாட்டீங்க தானே? என்னை விட்டு தனியா எங்கயும் போக மாட்டீங்க தானே?” என உறுதி கேட்க, அம்ஜத் பதில் தராமல் திரும்பி படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.

———  

மாடித்தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களை பார்த்து மனம் மகிழ்ந்திருந்த அம்ஜத், ருஹானாவும், இவானும் வந்து நல்லநாள் வாழ்த்து சொல்லவும் முகமும் மலர்ந்தான். “பெரியப்பா! உங்களுக்கு உதவி செய்யவே வந்தோம். நாங்க என்ன செய்யணும்?” என இவான் கேட்க அகமகிழ்ந்தவன், “வாங்க! வாங்க!! இந்த செடிக்குலாம் தண்ணி ஊத்தணும். இந்த செடிலாம் பெரிய தொட்டில நட்டு வைக்கணும்” என ஆனந்தமாக அவர்களை தன் வேலையில் சேர்த்துக்கொண்டான்.

பூவாளி எடுத்து ருஹானாவும், இவானும் நீர் தெளிக்க, ஒரு செடித்தொட்டியை தூக்கிய அம்ஜத் “கேப்டன் இவான்! வாங்க இங்க வந்து ஒரு கை பிடிங்க” என்று கூப்பிடவும், இவான் ஓடிவந்து பெரியப்பாவுடன் சேர்ந்து தொட்டியை தூக்கினான். இவானை லேசாக பிடிக்க வைத்து தானே பாரம் முழுதும் தாங்கிய அம்ஜத், இவானே தொட்டியை தூக்கி நடப்பதாக பாவனை செய்தான். “ஆஹ்! கேப்டன் இவான்! வலிமையா இருக்காரே! இங்க பார் ருஹானா! என் அண்ணன் பையன் எத்தனை பலசாலி!“ என்று சொல்ல அவளும் முறுவலித்தாள்.

அண்ணனின் மனநிலை மகிழ்ச்சியுடன் இருக்க ருஹானா வலிந்து செய்யும் முயற்சிகளை ஆர்யன் சிறுபுன்னகையுடன் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். 

அம்ஜத் அடுத்து ஒரு பெரிய தொட்டியை தொட்டவன் “இதை எப்படி தூக்குறதுன்னு பார்க்கலாமா?” என இவானை கேட்க “அம்ஜத் அண்ணா! நானும் வரேன். உங்களால தனியா அதை தனியா தூக்க முடியாது” என ருஹானா அருகே வந்தாள். “ஆமா, ருஹானா! நீ சொல்றது சரிதான். இது இவானுக்கு முடியாது. கஷ்டம். சரிதான். நீ வா, ருஹானா” என்று சொல்லி இருவரும் அதை தூக்க, அந்த தொட்டியின் எடை அவர்களின் சக்தியை மீறியதாய் இருந்தது.

தொட்டி நழுவப் பார்க்க “நீ விடு ருஹானா! உனக்கு முதுகு பிடிச்சிக்கப் போகுது, விடு” என அம்ஜத் சொல்லி தொட்டியின் அடியில் கைக்கொடுத்து தூக்க முயல, “அதெல்லாம் ஒன்னும் ஆகாது, அம்ஜத் அண்ணா” என அவளும் முயற்சி செய்ய, வலிய கரம் ஒன்று விழ இருந்த தொட்டியைப் பிடித்தது.

“நல்லவேளை ஆர்யன் வந்துட்டான், நல்லவேளை” என அம்ஜத் நிம்மதியாக, ருஹானாவின் கண்களை நோக்கிய ஆர்யன் “என்கிட்டே விடு” என்று சொல்லி “அண்ணா! நீங்களும் விடுங்க! உங்க முதுகு வலிக்கப்போகுது” என தனிஒருவனாக மண் நிறைந்த அந்த கனமான தொட்டியை மலர்தொட்டி போல் எளிதாக தூக்கியவன் அண்ணன் சொன்ன இடத்தில் கொண்டு போய் வைத்தான்.

“இவான்! பார்த்தியா உன் சித்தப்பாவை? அதிக எடையான தொட்டியை எப்படி தூக்கினான், பாரு! நீ அவனை போல பலசாலியா வளரணும், சரியா?” என அம்ஜத் சொல்ல, இவான் சரியென சிரிப்புடன் தலையாட்டினான். “வா, செல்லம். நாம சின்ன தொட்டிலாம் எடுத்து வைக்கலாம்” என ருஹானா சிறிய தொட்டி ஒன்றை தூக்கி இவானிடம் கொடுத்தாள்.

இவான் அதை தூக்கி செல்ல, அவன் தலையை அன்போடு தடவிய ஆர்யன் “வெல்டன் சிங்கப்பையா!” என்று சொல்லி பாராட்ட, இவான் உற்சாகமாக வேலை செய்தான். சகோதரர் இருவரும் சிறுவனை பூரிப்புடன் பார்த்தபடி இருக்க, அம்ஜத் “நம்ம அமைதி நல்லா இருக்குல ஆர்யன்?” என சிரிப்புடன் கேட்க, “ஆமா, அண்ணா!” என்று ஆர்யன் உடன்பிறப்பின் முதுகில் தட்டினான். 

நால்வரும் களிப்புடன் தோட்டத்தில் வேலை செய்வது காணவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆர்யனை போன் அழைக்க அவன் பேசுவதற்காக தள்ளி சென்றான். இவானின் கையில் முள் குத்திவிட அவனுக்கு மருந்து போட சென்ற ருஹானாவை தடுத்த அம்ஜத் தானே அவனை உள்ளே அழைத்துச்சென்றான்.

போன் பேசி திரும்பி வந்த ஆர்யனிடம் “ஆர்யன்! நீயும் ருஹானாவும் சேர்ந்து மீதம் இருக்கிற செடியை தொட்டில நட்டு வச்சிடுங்க. கவனம்” என்று அம்ஜத் சொல்லி செல்ல ‘என்ன! அவளோடு தனியாகவா?’ என திகைப்பும், இனங்காண குஷியும் கலந்த உணர்வில் நின்ற ஆர்யன், சிரத்தையாக வேலை செய்துக்கொண்டிருந்த ருஹானாவிடம் “என்னாச்சி இவானுக்கு?” என்று கேட்க “அவனுக்கு கைல முள் தச்சிடுச்சி. அதுக்கு மருந்து போட போறாங்க” என்ற ருஹானாவின் பதிலையும் பெற்றுக்கொண்டான்.

அவள் எதிரே அமர்ந்து அவன் உதவி செய்ய, அவள் பார்க்காத நேரம் அவன் பார்ப்பதும், அவன் குனிந்து மண் எடுக்கும் நேரம் அவள் பார்ப்பதும், இருவரும் அங்கே கனிவான பார்வை பரிமாற்றத்தால் பயிர் வளர்த்தனர். இனிய கவிதையாய் அமைந்த காட்சி அங்கே எட்டி பார்த்த சல்மாவுக்கு மட்டும் அபஸ்வரமாக தெரிய அவள் கோபமாக சென்று அக்காவிடம் புகார் படித்தாள்

“இந்த ஆர்யன் நேத்து நைட் என்னடான்னா அவளை பேச கூப்பிடுறான். இன்னைக்கு காலைல அவளோட சேர்ந்து தோட்டத்துல வேலை செய்றான். அக்கா! நீ ஏதாவது செஞ்சி அந்த சித்தியை துரத்த போறீயா, இல்லயா?” என ஆங்காரமாக கத்த, இப்போதுதான் மயிரிழையில் உயிர் பிழைத்திருந்த கரீமா “பொறுமையா இரு, சல்மா. யோசித்து செய்யலாம். என்னை கேட்காம நீயா எதும் அவசரப்பட்டு செய்யாதே!” என சொல்ல, சல்மா காலை உதைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

——–

சாராவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றிருக்க, கரீமாவின் மேற்பார்வையில் நஸ்ரியா படபடப்புடன் எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்துக் கொண்டிருந்தாள். “இப்படியே போனா இரவு உணவுக்கு என்ன செய்ய?” என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சல்மா வெறுப்பேற்ற, கரீமா கடுப்பானாள்.

இவானுக்கு உணவு தயாரிக்க அப்போது அங்கே வந்த ருஹானா சமையலறை அதகளம் கண்டு அதிர்ந்து நின்றாள். அவளை பார்த்ததும் சல்மா “சாரா ஹாஸ்பிடல் போய் இருக்காங்க. இங்க டின்னர் ரெடியாகால. ஏன், ருஹானா உனக்கு ஹோட்டல்ல சமைக்கிற அனுபவம் இருக்கு தானே? நீ உதவி செய்ய மாட்டியா?” என சாமர்த்தியமாக ருஹானாவை உள்ளே இழுக்க, கரீமா தங்கையை முறைத்தாள்.

ஆனால் பரோபகாரி ருஹானா “கண்டிப்பா செய்றேன்” என சொல்ல, கரீமா “வேண்டாம் ருஹானா! நீ எங்களோட விருந்தாளி. உன்னை வேலை செய்ய வைக்கறது முறை இல்ல. இன்னைக்கு நாம வெளிய வாங்கிக்கலாம்” என்று சொல்ல, “எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல. இவானுக்கு உணவு செய்த பின் நான் செய்றேன்” என ருஹானா முன்வர, கரீமா நன்றி சொல்ல, சல்மா பெருமிதமாக புருவம் உயர்த்தினாள்.

——- 

“நன்றி ஆர்யன். இன்னைக்கு உன் வேலையை விட்டுட்டு எனக்கு உதவி செஞ்சதுக்கு. நம்ம அமைதி நல்லா இருந்தது. நாளும் ஆனந்தமா போச்சி” என தம்பியை அம்ஜத் பாராட்ட, தலையசைத்து ஏற்றுக்கொண்ட ஆர்யன் “உங்களுக்கு வேற ஏதும் வேணுமா, அண்ணா?” என கேட்க, சற்று யோசித்த அம்ஜத் “ஆர்யன்! எனக்கு சிக்கன் விங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.. அந்த ஸ்பெஷல் சாஸ் கூட” என்று ஆசையாக கேட்டான். “சரி அண்ணா” என்று சொல்லி அவனின் தோளில் கை போட்டு ஆர்யன் அழைத்துப் போனான்.

Advertisement