Advertisement

விடை கிடைக்க இறுகிய முகத்துடன் காரை எடுத்தவன் வேகமாக செலுத்த, ருஹானா அவனை பார்க்க அவன் கண்கள் இடுங்கி உடலும் இயந்திரம் போல அசையாமல் இருந்தது. நெடுநேர பிரயாணத்திற்கு பின் ஆர்யன் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தியவன், இறங்கவும் இல்லை. அசையவும் இல்லை. நேர்பார்வை பார்த்திருந்தவனிடம் “இது நீங்க பிறந்து, வளர்ந்த வீடா?” என சரியாக யூகித்து ருஹானா கேட்க, அவளை வெற்று பார்வை பார்த்தவன் கீழே இறங்கினான்.

இரும்பு கதவில் கை வைக்கவும், ஆர்யனின் அம்மா அவனை தள்ளிவிட்டு சென்றது மனதில் தோன்றியது. அவன் உள்ளே நடக்க, படிக்கட்டை பார்க்க, அப்பா கெஞ்சியதும், அம்மா அவரை உதறி தள்ளியதும், ‘உன் அப்பாவை போல இருக்காதே’ என ஆர்யனுக்கு அறிவுரை சொல்லி பெட்டியுடன் சென்றதும் வரிசையாக வலம்வர, ஆர்யன் வலது கையால் இடது மணிக்கட்டை பிடித்துக் கொண்டான்.    

ருஹானா ஒன்றும் புரியாமல் அவன் பின்னே அவன் தயக்கம் பார்த்து நடந்து வர, ஒவ்வொரு சம்பவம் நடந்த இடங்கள் அவன் கால்களை தேக்க, கீழிருந்து மேலே வந்து படுக்கையறைக்கு வர அத்தனை நேரம் பிடித்தது. அங்கங்கே பொருட்கள் சிதறி கிடக்க, பராமரிப்பு இல்லாமல் அழுக்கடைந்திருந்த அந்த வீட்டை குழப்பமாக சுற்றி பார்த்தபடி ருஹானாவும் பின்னோடு வர, விட்டத்தை பார்த்தபடி அங்கே அம்ஜத் இருந்தான்.

அப்பா தூக்கில் தொங்கிய இடத்தை பார்த்தபடி தன் நிலையில் இல்லாமல் அம்ஜத் ஆடிக்கொண்டிருக்க, தந்தை தள்ளிவிட்ட நாற்காலியை ஆர்யன் பார்க்க, தந்தையை சிறுவன் தான் கீழிறக்க முயற்சித்ததும், அவன் இடது கையில் கனமாய் அவர் விழுந்து கைஎலும்பு முறிந்ததும், அவர் கடிகாரம் சிதறியதும், சகோதரர் மூவரின் வாழ்வும் சின்னாபின்னமான கதை எப்போதும் அவனை தாக்குவது போல இப்போதும் தாக்கியது.

அண்ணன் அருகே சென்று அமர்ந்தவன், அவன் தோளில் கையை போட்டு “அண்ணா!” என்று அழைத்தும் அம்ஜத் திரும்பவில்லை. மேலும் இருமுறை தம்பி அழைக்க, திரும்பிய அம்ஜத் கண்ணின் கண்ணீர், உள்ளே வந்து நின்ற ருஹானாவின் கண்ணிலும் கண்ணீரை வர வைத்தது.

அம்ஜத் அழுதுக்கொண்டே “இவர் தான்.. அப்பா தான் முதல்ல போனார்… உலகம் விட்டு போனார்.. அப்புறம் எல்லாரும்…“ விக்கி விக்கி சொல்ல ஆர்யன் கடினமாக உறைந்திருக்க ருஹானாவின் கண்ணீர் ஓட்டம் நிற்கவில்லை.

“சகோதரன் போய்ட்டான்.. அப்புறம் தஸ்லீம்…“ என ருஹானாவை பார்த்தபடி அம்ஜத் கதறி அழ, ஆர்யன் கண்ணீர் சிந்தாமல் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ருஹானா திகைத்து பார்த்திருக்க “ஏன் அப்பா தற்கொலை செஞ்சிக்கிட்டார், ஆர்யன்……. ஏன்?…. அவர் சாகாம இருந்திருந்தா நம்ம அமைதி கேட்டு போயிருக்காது….”

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. விட்டு சென்ற அந்த பிரச்சனைகளும் முடியாது. இருப்பவர்களை தொற்றிக்கொள்ளும், ஆழமான பாதிப்புடன்…! பாசம் கொண்டவர்கள் இறந்தவரின் பிரிவுத் துயரோடு அந்த சிக்கல்களோடு போராடவே நேரிடும்.  

ருஹானாவும் விட்டத்தை நோக்க அந்த சோக சம்பவத்தை அவளால் உணர முடிந்தது. ஆர்யன் மூச்சுகளும் வேகமாக வர, அண்ணனை தேற்ற முயன்றான். அவன் நெற்றியோடு தன் நெற்றியை வைத்தவன் தொண்டை அடைக்க கண்ணீரை கட்டுப்படுத்தினான். 

“அண்ணா! எல்லாம் முடிஞ்சி போச்சி! நாம அதை கடந்து வந்துட்டோம். இங்க பாருங்க.. நான் இருக்கேன். யாரையும் இனி போக விட மாட்டேன். எப்பவும் உங்க கூட தான் இருப்பேன். உங்களை விட்டு போக மாட்டேன்” என்று உறுதியளித்தவன் பின்னால் திரும்பினான். தாரை தாரையாக நீரை வடித்துக் கொண்டிருந்த ருஹானாவை பார்த்தபடி “யாரையும் போக விடமாட்டேன்” என இரண்டாவது வாக்கையும் தந்தான்.   

தாய் பாசம் கிடைக்க பெறவில்லை

தந்தை தன்முடிவாய் மாண்டுவிட

தவிப்பில் மனம் இருண்டு கலங்க

தெளியவிட மறுக்கும் சுழலாக

தம்பியின் துர்மரணமும் 

அவன் துணையின் விபத்தும்

திக்குமுக்காட வைத்து மனங்கசங்க

அண்ணன் தம்பியிடம் வேண்டுவது 

அனைவரின் பாதுகாப்பையே..! 

அம்ஜத்தின் கண்ணீரை துடைத்த ஆர்யன் “அண்ணா! இப்போ எல்லாம் நல்லாயிடுச்சி. எழுந்திருங்க. வாங்க. வீட்டுக்கு போலாம்” என அவனை எழுப்பியவன் அண்ணன் உடலில் இருந்த காயத்தை பார்த்தான். “என்னாச்சு அண்ணா? வலிக்குதா?” என பதற “இல்ல ஆர்யன்! இது வெறும் சிராய்ப்பு தான். இப்போ எல்லாம் சரி தான். முடிஞ்சி போச்சி” என அம்ஜத் தம்பியின் நம்பிக்கை வார்த்தைகளில் எழுச்சி பெற்றான்.

இளமையில் இருவருக்கும் ஒரே நிலை தான். அதே கடின பாதிப்பு தான். அண்ணன் மனம் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் நலமும் பாதிக்கப்பட்டு, உள்ளம் ஒடுங்கி மனைவியின் கையில் பொம்மையாய் மாற, தம்பியோ மனம் இறுகி, உடல் வஜ்ஜிரமாக வலிமை பெற்று, அனைவரையும் தாங்கும் பெருமலையாக பலமாய் நிற்கிறான்.

——–

அறைக்கு சென்ற கரீமா தன் அடியாளுக்கு அழைத்து ஆர்யன் கண்டுபிடிக்கும்முன் அம்ஜத்தை கண்டுபிடித்து அவளுக்கு தகவல் தெரிவிக்க சொன்னாள். அப்போது உள்ளே வந்த சல்மா “அக்கா! ஆர்யன் எங்க இருக்கான்?” என கேட்க, கோபமான கரீமா “உனக்கு ஆர்யனும், ருஹானாவும் எங்க, எப்படி இருக்காங்கன்னு தெரியணும். அதானே? அம்ஜத் பத்தி உனக்கு கவலை இல்ல?” என கேட்டாள். இவள் என்ன பாசத்துடனா கணவனை தேடுகிறாள்?

“அப்படி இல்ல அக்கா. எதும் தெரிஞ்சதான்னு தான் கேட்டேன்” என்று சொன்னவள், அக்காவை சமாதானப்படுத்தும் விதமாக “எங்க போயிருப்பார்? வெளியே போனதே கிடையாதே! வீடு இது ஒன்னு தானே அவருக்கு? இதானே தெரியும்!” என பேசிக்கொண்டே போக கரீமாவின் மண்டையில் மணியடித்தது.

———

ருஹானா கதவை திறந்து பிடித்து உதவி செய்ய, சகோதரனை கை தாங்கலாக ஆர்யன் வெளியே அழைத்து வந்து காரில் அமர வைத்தான். ருஹானாவும் அம்ஜத்தின் கையை பற்றியபடி பின்னால் ஏறிக்கொள்ள, அம்ஜத் ருஹானாவை பார்த்து புன்னகை புரிந்தான். முன்னால் அமர்ந்த ஆர்யனும் கண்ணாடி வழியாக அண்ணனை தேற்றும் ருஹானாவை பார்த்தான். உணர்ச்சிவயப்பட்ட சூழ்நிலையிலும், தங்கள் சொந்த கதை சோகக்கதை பரிமாறப்பட்ட பொழுதிலும், அவளை தள்ளி நிறுத்தாத சகோதரர் இருவரும் அவளை வேற்றாளாய் பார்க்கவில்லை.

ஆர்யன் காரை செலுத்த, பின்னால் வந்து நின்ற காரில் இருந்த கரீமா அவர்கள் மூவரும் போவதை பார்த்தாள். “இந்த அம்ஜத் ஆர்யன்ட்ட வாய் திறக்காம இருக்கணுமே!” என புலம்ப, அவள் போனில் ஆர்யன் அழைக்க, பயந்து போனவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை.

அம்ஜத்தின் காயங்களை துடைத்தபடி இருந்த ருஹானாவை பார்த்து ஆர்யன் “உன் சகோதரனுக்கு சொல்லிடு, அண்ணன் கிடைச்சிட்டார்ன்னு. அவங்க இன்னும் தேடிட்டு இருப்பாங்க” என்று சொல்ல “நீங்க சொல்றது சரி தான். நான் இப்போவே போன் செய்றேன்” என்று ருஹானா போனை எடுக்க, பேசும் அவளை பார்த்துக்கொண்டே ஆர்யன் காரை மெல்ல செலுத்தினான்.

ஆர்யன் வரும் முன் அர்ஸ்லான் மாளிகை வந்த கரீமா “சல்மா! ரஷீத் வேற எதும் சொன்னானா?” என்று ‘அம்ஜத் எதும் வாய் திறந்தானா?’ என அறிந்து கொள்ள கேட்க “ஒன்னும் சொல்லலையே, அக்கா. இப்போ என்ன? அம்ஜத் வந்துடுவார். இனி நம்மோட பலத்தை அதிகப்படுத்தணும்” என சல்மா எதிர்காலத்துக்கு திட்டமிட, நிகழ்காலத்தில் தன் குற்றம் வெளிப்படாமல் இருக்க வேண்டுமே என கரீமா பதைப்புடன் தலையாட்டினாள்.

“பெரியப்பா!” என இவான் ஓடிச்சென்று அம்ஜத்தை கட்டிக்கொள்ள, அவனும் இவானை தழுவிக்கொண்டான். “நான் ரொம்ப பயந்திட்டேன், பெரியப்பா! உங்களுக்கு ஒன்னும் இல்லயே!” என்று கேட்க “எல்லாம் சரியாயிடுச்சி. கெட்டதுலாம் முடிஞ்சது” என்று இவானிடம் சொன்ன அம்ஜத் “அப்படிதானே, ஆர்யன்?” என்று தம்பியிடம் உறுதிப்படுத்திக் கொண்டான்.

ஆர்யன் தலையாட்ட புன்னகை முகம் காட்டிய அம்ஜத்தை அனைவரும் வரவேற்க, கரீமா ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். “என்னை பயமுறுத்திட்டீங்க, அம்ஜத் டியர்?” என்றவள் “வாங்க, டிரஸ் மாத்திட்டு காயத்துக்கு மருந்து போடலாம். சாரா நீங்க உணவு மேலே கொண்டு வாங்க. வாங்க அம்ஜத் டியர். நாம போகலாம்” என அவனை நகர்த்தப் பார்த்தாள். 

ஆர்யன் “அண்ணி! அண்ணன் கொஞ்ச நேரம் இருக்கட்டும். நான் அவர் கிட்ட பேசணும்” என்று சொல்ல, கரீமா முகத்தில் ஈயாடவில்லை. இவான் ருஹானாவின் கையை பிடித்துக்கொண்டு படிக்கட்டில் ஏற, மற்றவர்களும் நகர்ந்தார்கள்.

“வாங்க அண்ணா!” என்று அம்ஜத்தை அழைத்துச்சென்று சோபாவில் அமர வைத்த ஆர்யன் “சொல்லுங்க அண்ணா! ஏன் வீட்டை விட்டு போனீங்க? என்ன நடந்தது? என்கிட்டே சொல்லுங்க. பயப்படாதீங்க. நான் உங்க கூட தான் இருக்கேன்” என்று தோளில் கை போட்டு கேட்டான்.    

ஆர்யனின் பின்னால் நின்ற கரீமாவை அம்ஜத் பயத்துடன் பார்க்க, அவள் சொல்லாதே என்பது போல தலை அசைத்தாள். 

(தொடரும்)

Advertisement