Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 33 

காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு ஆர்யனை பிணவறைக்கு அடையாளம் காட்ட வர சொல்ல, அவனுக்கு தலையில் இடி விழுந்தது. தொண்டை அடைத்தது. போன் காதிலிருந்து நழுவியது. “ஆர்யன், மிஸ்டர் ஆர்யன்” என்று போன் குரல் அழைக்க, திரும்ப போனை எடுத்து காதில் வைத்தவன், தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு “நான் வரேன்” என்று சொன்னான்.

ஆர்யனின் கலக்கத்தை பார்த்தே கண் கலங்கி திகைத்து நின்றிருந்த ருஹானாவிடம் “அண்ணனை மாதிரி ஒருத்தரை போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. இறந்த உடலை என்னை வந்து பார்க்க சொல்றாங்க” என மெதுவாக அவன் சொல்ல, ருஹானா அதிர்ச்சி அடைந்தாள்.

வேகமாக அவன் சென்று காரில் ஏறவும், ருஹானாவும் காரில் ஏற அவனின் சிவந்த விழிகளை பார்த்து அவளுக்கு மிகவும் பரிதவிப்பாக இருந்தது. ஆர்யன் காரை எடுக்க தயங்கி அவளை பார்க்க அவனுக்கு எப்படி ஆறுதல் வார்த்தை சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. 

ஒருவாறு ஆர்யன் காரை இயக்க அவனின் உள்பயம் புரிந்து காரும் புறப்பட மறுத்தது. அவன் திரும்பவும் முயற்சிக்க, ஒன்றும் பயனில்லை. கீழே இறங்கியவன் முன்னே சென்று பேனட்டை திறக்க, அவன் இருந்த மனநிலையில் அதை திறக்கக் கூட அவனால் முடியவில்லை. அவன் திணறுவதை பார்த்த ருஹானா அவனுக்கு உதவ கீழே இறங்க ஆயத்தமானவள், பின் அவனுக்கு சங்கடம் தர வேண்டாம் என உள்ளேயே இருந்துக் கொண்டாள். இரண்டு, மூன்று முயற்சிக்கு பின் மூடி திறந்துக்கொள்ள உள்ளே ஆராய்ந்தான்.

பழுதான இடத்தில் கை வைக்கவும் நெருப்பாக கொதித்த அந்த இடம் அவன் புறங்கையை பதம் பார்த்துவிட்டது. அனிச்சை செயலாக கையை வேகமாக வெளியே எடுத்தவன், மீண்டும் அதே இடத்தில் கையை வைத்து பழுதை சரி பார்த்தான். அவன் மனவலிக்கு முன் அந்த கைவலியை அவன் உணரவே இல்லை. சொல்லப்போனால் அவன் மனம் படபடப்பில் இருந்து சற்று வெளியே வர அந்த வலி அவனுக்கு உதவியாய் இருந்தது.

உள்ளே வந்து காரை இயக்க, சண்டித்தனம் செய்தாலும் கார் புறப்பட தயாரானது. கன்றி சிவந்து நெருப்பாய் இருந்த அவன் கையை பார்த்து பதறிய ருஹானா தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள். அதை வாங்காமல் அவளையே பார்த்திருந்த ஆர்யன் கண்கள் சொன்னது. ‘என் இதயத்தின் கொதிப்பிற்கு முன் இந்த கை எரிச்சல் என்ன செய்யும்?’ அதை புரிந்துக்கொண்ட ருஹானா தண்ணீருடன் நீண்ட கையை மடக்கிக்கொண்டாள்.

———

“கெட்ட செய்தி, கரீமா மேம். நீங்க எதுக்கும் தயாரா இருங்க” ரஷீத் போனில் சொன்னதை கேட்டு கரீமா அதிர, சல்மா அக்காவை கவலையுடன் பார்த்தாள். 

“என்ன சொல்றே, ரஷீத்? என்ன நடந்தது?”

“போலீஸ் யாரையோ கண்டுபிடிச்சிருக்காங்க. ஆர்யன் அடையாளம் காட்ட பிணவறைக்கு போயிருக்கார்”

உடல் நடுங்க சோபாவில் மடங்கி அமர்ந்த கரீமா “அம்ஜத்!” என அழுதாள். சல்மா அவளை தாங்கி பிடித்தவள், உரக்க உதவிக்கு அழைக்க ஜாஃபர் ஓடிவந்தான். பின்னாடி ஓடிவந்த சாராவிடம் கரீமாவின் மாத்திரையை எடுத்து வர ஜாஃபர் சொல்ல, கதறிய கரீமாவிற்கு சாரா கொண்டு வந்த மாத்திரையை சல்மா கொடுத்தாள்.

“அம்ஜத்… அம்ஜத் சாக முடியாது.. எப்படி சாக முடியும்?” என கரீமா உடைந்து அழ. சாராவும் அழ தொடங்கவும், ஜாஃபர் “சாரா! இந்த தகவல் இவானுக்கு தெரியக் கூடாது. நஸ்ரியாவை லிட்டில் சார் ரூமுக்கு அனுப்புங்க” என விரைந்து சொல்ல, சாராவும் அழுதுக்கொண்டே உள்ளே சென்றார்.

சல்மாவும், ஜாஃபரும் கரீமாவை அவள் அறைக்கு அழைத்துச் செல்ல “அம்ஜத் சாக முடியாது” என்று அதையே மறுபடி மறுபடியும் சொன்னபடியே வந்தாள். அறையில் விட்டு ஜாஃபர் அகல, சல்மா கரீமாவை கட்டிலில் அமர வைத்த பின்னும் அதையே கரீமா சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“என்ன அக்கா! இப்படி பயமுறுத்துற? அமைதியா இரு. எனக்கு உன்னை பார்த்தா பயமா இருக்கு”

“அம்ஜத் இறந்து போனா நான் இல்ல. நீயும் இல்ல. உனக்கு புரிஞ்சதா?”

“என்னக்கா சொல்ற?”

“அம்ஜத் உயிரை விட்டுட்டா இந்த வீட்டுல நம்ம ஆதிக்கமும் போய்டும். அந்த சித்திக்கு இருக்குற அதிகாரம் கூட நமக்கு இருக்காது” அவள் பொய் அழுகை நின்றிருக்க, சல்மா அக்காவை திகைப்பாக பார்த்தாள்.

“இப்படி ஒன்னும் இல்லாம போறதுக்கா நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன்? அத்தனை கடின நாட்களை கடந்தது இப்படி காலி கையா இருக்கறதுக்கா?” கோபத்தில் பொரியும் கரீமாவை சல்மா விசித்திரமாக நோக்கினாள்.

“அம்ஜத் சாக கூடாது. அவர் என் வங்கி கணக்கு. அவர் எப்படி சாக முடியும்?” திரும்ப திரும்ப புலம்பிய அக்காவை அன்று தான் தெரிந்துக் கொண்டது போல் வாய் திறந்து சல்மா பார்த்திருந்தாள்.

———-

கால்கள் தள்ளாட, உடல் நடுங்க ‘அது அண்ணனாக இருக்கக்கூடாது’ என கடவுளிடம் வேண்டியபடியே ஆர்யன் பிணவறைக்குள் நுழைந்தான். மிகுந்த பயத்துடன் என்றாலும் ருஹானாவும் ஆர்யன் பின்னாலேயே வந்தவள் அறை வாசலில் நின்றாள். காலையில் தான் அணிவித்த பச்சை நிற ஜாக்கெட்டை கண்டதும் துவண்டு போன ஆர்யன் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது. உலகமே இருண்டது.     

அந்த ஆணின் முகம் காட்டப்பட, ஆர்யனுக்கு கண்ணீர் தாரையாக சிந்த, ‘இல்லை’ என அவன் தலையாட்ட, முகம் மூடப்பட்டது. ஆர்யன் தன்னை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் வெளியே வந்து சுவற்றில் கையை மோதினான். அவன் உணர்ச்சி பிரவாகத்தை பார்த்தபடி நின்ற ருஹானாவுக்கு ‘இந்த பாறைக்குள் இப்படி ஒரு கசிவா?’ என திகைப்பு. என்றாலும் அவன் அருகே செல்லாமல் தள்ளியே நின்றுக்கொண்டாள்.

——

போனை காதிலிருந்து எடுத்த ரஷீத் “அது வேற ஆள்” என சொன்னபடியே உள்ளே வர, வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த கரீமா நிம்மதியுடன் “அல்லாஹ்க்கு நன்றி” என்றாள். ரஷீத்துக்கும் நன்றி சொல்லும்விதமாய் தலையாட்டியவள் சல்மாவிடம் “நான் மேலே போய் ஓய்வெடுக்கறேன். இந்த படபடப்பு என்னால தாங்க முடியல. நீ இவானை பார்த்துக்கோ” என்று சொல்ல சல்மா “நான் கவனிச்சிக்கிறேன் அக்கா. நீ கவலைப்படாம போ” என்று அக்காவை அனுப்பி வைத்தாள். 

சல்மா ரஷீத்திடம் “ஆர்யன்ட்டயா பேசினீங்க?” என கேட்டாள். “இல்ல.. ஆர்யன் போன் எடுக்கல. இவான் சித்திட்ட தான் கேட்டேன்” என ரஷீத் சொல்லவும் சல்மா முகம் மாறியது. ஆர்யனுடன் ருஹானா இருப்பதை நினைத்து அவள் மனம் வெதும்பினாள். 

பின் அக்கா சொன்னபடி இவானை தேடி சென்றவள் அவன் ஆர்யன் அறை சோபாவில் தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டாள். அவன் அருகே சென்று பார்க்க அவன் இரு புகைப்படங்களை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதை கண்டு அதை எடுத்தாள். ஒரு படத்தில் ஆர்யனும், அம்ஜத்தும் இருக்க. மற்றொரு படத்தில் ஆர்யனும், ருஹானாவும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். ஏற்கனவே பொறாமையால் கனன்று கொண்டிருந்தவள் இப்போது பொசுங்கலானாள். 

சல்மாவின் கற்பனையை உண்மையாக்குவது போல தான் ஆர்யனும் ருஹானாவுடன் சேர்ந்தே இருந்தான். மருத்துவமனை விட்டு வெளியே வந்தவன் ரஷீத்தை போனில் அழைத்து இரு பிரிவுகளாக சென்று அண்ணனை தேடும் முயற்சியை தீவிரப்படுத்த சொன்னான். உடனிருக்கும் ருஹானாவை வீட்டுக்கு அனுப்பும் எண்ணமே அவனுக்கு இல்லை.

காலையில் ருஹானா அடையாளம் காட்டிய இடத்தில் அம்ஜத் இல்லை என்றதும் அவளை திருப்பி அனுப்ப வேண்டியது தானே! அவனுடைய பலவீனத்தையும், கண்ணீரையும் அவள் அறிய விடவேண்டிய அவசியம்தான் என்ன? மனமொடிந்த நிலையில் அவன் மனம் அவளிடம் தான் தார்மீக ஆதரவை நாடியதோ? அவளின் அருகாமை அவனுக்கு அவசியப்பட்டதோ? 

இரவு சூழ்ந்தும் அவள் துணையை இழக்க விருப்பப்படாமல் ஆர்யன் காரிலேயே அகாபா நகரை சுற்றி வந்தான். இருவரும் தெருவோரங்களிலும், சாலையில் தனித்து செல்பவர்களை உற்று நோக்கியும் இருபுறமும் கவனித்துக்கொண்டே வந்தனர்.

பொழுது புலரும் நேரம் ருஹானா கண் அசந்துவிட, காரை நிறுத்திவிட்டு சாய்ந்து உறங்கும் அவளை பார்த்திருந்தவன், குளிர் தாக்காமல் அவளுக்கு மூடி விட்டான். தான் துயருற்ற வேளையிலும் அவள் நலம் பேணுபவன் தன் உள்மனம் அறியப் போவது எந்த கணமோ?

ருஹானாவிற்கும் அவன் மேல் உள்ள நம்பிக்கையால் தானே தூக்கம் வந்தது! அவன் மூர்க்க குணம் கண்டு அஞ்சியவள் இன்று தன்னை மறந்து தூங்குகிறாளே! 

ஆர்யன் போனில் குறுஞ்செய்தி வந்த சத்தத்தில் விழித்தவள் விவரம் வினவ, விடையேதும் விளம்பாமல் விழிகளை மூடி திறந்தான், ஏதும் நற்செய்தி இல்லையென. யோசனையுடன் ருஹானா “அம்ஜத் அண்ணா எங்க போகமுடியும்ன்னு நாம யோசிக்கலாமா? அவருக்கு தெரிஞ்ச இடம் வேற எதாவது இருக்கா? நாம மறந்திட்டோமா?” என கேட்க, அவள் கேள்வியை உள்வாங்கியவன் அவளை உற்று நோக்கி யோசிக்க ஆரம்பித்தான்.

Advertisement