Advertisement

ஆர்யனை பார்த்து “ப்ளீஸ்! ப்ளீஸ்! என கெஞ்சினாள்.. அவனோ பாடிகார்ட்டிடம் “நேரம் வீணாக்காதே!” என்று கடுமை காட்டவும்.. பாடிகார்ட் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.. “என்னை இப்போ வெளியே தள்றீங்க.. ஆனா கூடிய சீக்கிரம் உங்க தப்பை நீங்க உணருவீங்க.. இவானுக்கு என் தேவை இருக்குனு உணர்வீங்க.. அப்போ உங்களுக்கு புரியும்” கத்திக்கொண்டே சென்றாள்.. இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யன் முகம் பாறையாய் இறுகியது.. 

பாடிகார்ட் அவளை வெளிவாசல் வரை தள்ளிக்கொண்டு செல்ல.. “நான் ஒரு தடவை இவானை பார்க்கனும்.. தயவுசெய்து என்ன விடுங்க.. நான் அவனுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்.. சோகமா இருப்பான்.. ஒரு முறை பார்க்க விடுங்க.. அவன் கவலைப்படுவான்… பார்க்க விடுங்க ப்ளீஸ்… ப்ளீஸ்… விடு என்னை… விடு என்னை” என்று கதறி அழுதாள்.. கரீமா வாசலருகே வந்தவள்  புன்னகையுடன் இதை பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

பாடிகார்ட் அவளை கேட்டுக்கு வெளியே தள்ளி கதவை மூட… வெளியே நின்று “கதவைத் திற கதவைத் திற” என கூக்குரலிட… பூட்டி சாவியை எடுத்து அவன் சென்று விட்டான்… “இவான் இவான்..” சத்தமாக கூப்பிட்டவள் “அவன் கவலையா இருக்கான்… உங்களுக்கு இரக்கமே இல்லயா.. இதயமே இல்லயா.. நான் கெஞ்சி கேட்கறேன்” என்று கேட்டை தட்டி தட்டி கேட்க… அவள் சொல் கேட்க யார் மனதிலும் தயை இல்லை.. அங்கே யாருக்கும் மனமுமில்லை..

கரீமா வாசலில் நின்று போனை கையில் எடுத்தவள், “சல்மா! உன் டிக்கெட் வாங்கினியா.. இல்லையா?.. நீ லேட் பண்ணினா இங்க நிலமை எல்லாமே நம்ம கை மீறிடும்.. அந்த பொண்ணு அட்டை போல பிடிச்சிருக்கா, இவானை.. யாருனா கேக்குற?.. உருப்படாத தஸ்லீம் தங்கச்சி… நீயும் என் பேச்சை கேட்க மாட்டேங்கிற…

அந்த நச்சி பையன் சாப்பிட மாட்டேங்குது… எப்பவும் அழுதுகிட்டே இருக்கு.. அவன் சித்தி பேசினா அழுகை நிறுத்திட்டு சாப்பிட ஆரம்பிச்சுட்டான்” அவள் போனில் பேச பேச பின்னாடி ருஹானா குரல் ‘இவான்! இவான்!’ என்று கேட்டுக்கொண்டே இருந்தது..

“உடனே டிக்கெட் எடுத்து வந்து சென்ற வழியை பாரு… என் சகோதரியா இந்த வீட்டு மருமகளா வரதுக்கு சரியான நேரம் இதுதான்.. உடனே புறப்படு” என்று  எரிச்சலுடன் போனை வைத்தாள்.. “வீட்டை காலி பண்ணனுமாம்.. கிளம்பனுமாம்.. என் முட்டாள் தங்கச்சி” என்று பல்லை கடித்து பேசிவிட்டு…  ருஹானாவை கேலியாக பார்த்தபடி, கதவை மூடி உள்ளே சென்று விட்டாள்.. ருஹானா பாவம் போல கேட்டில் இரும்பு கம்பியை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்..

 

இவான் கட்டிலில் சாய்ந்து சித்திக்காக காத்திருக்க.. சாரா விளையாட்டு பொம்மைகளை.. கார்களை எடுத்துக்கொண்டு அவனுக்கு விளையாட்டு காட்ட… அவன் கவனம் திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்… “வாங்க மாஸ்டர் கார் ஓட்டலாம்”.. “என் சித்தி வருவாங்க” என்றான், இவான்..

கரீமா உள்ளே வந்தவள் “என்ன செய்றீங்க என் செல்லம்? விளையாட போறீங்களா? வெரி குட்” என்று போலியான புன்னகையுடன் அவன் கன்னத்தை பிடித்து தடவினாள்.. ”ஏன் சித்தி வரல இன்னும்?” என அவன் கேட்க.. முகத்தை சுளித்த கரீமா “எப்பவோ போயிட்டாங்களே..” என பொய்யுரைத்தாள்… “என்ன.. போய்ட்டாங்களா?..” இவான் அதிர்ச்சியாக..

“ஆமா… கிளம்பிட்டாங்க.. அவங்களுக்கு வேலை இருக்குனு போய்ட்டாங்களே” என்று அழுத்தி சொல்ல… அப்போது ருஹானா “இவான் இவான்” என அழைக்கும் குரல் கேட்டது.. “சித்தி கூப்பிடுறாங்க” என ஜன்னலில் பார்க்க இவான் எழ… “இல்ல செல்லம்..  நஸ்ரியா கூப்பிடறா உன்னை.. தோட்டத்தல விளையாட…  உனக்கு அவ குரல் தெரியலையா…” என அவன் கவனம் திசை திருப்பிவிட்டு “நஸ்ரியா! இப்போ இவான் மதியம் தூங்குற டைம்.. நீ அப்புறம் வந்து விளையாடு.. சாரா இவனை தூங்க வைங்க” என்று மாற்றி மாற்றி பேசினாள்.. அவள் குரலுக்கு பணிந்த சாரா அவனை பாத் ரூமுக்குள் அழைத்துச் சென்றார்..

ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்த கரீமா அங்கே தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்த ருஹானாவை பார்த்து “இந்த பொண்ணு என் மாளிகைக்குள்ள வரவே கூடாது… எப்பவும் வரக்கூடாது” என உரிமை கொண்டாடினாள்…

 

மாளிகையின் இரண்டாவது மாடிக்கு நடுவே அழகிய மாடம் போன்று அமைக்கப்பட்ட பால்கனியில் வந்து நின்றான் ஆர்யன்.. வெளியே   கேட்டின் அருகே ருஹானாவை பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் எகிறியது… இவளும் வெறுப்புடன் அவனை நிமிர்ந்து பார்க்க…. அவன் சடாரென உள்ளே சென்று விட்டான்… 

இரும்பு கம்பிகளை தட்டிக்கொண்டே ருஹானா கத்தினாள்.. “உன்கிட்ட என் அக்கா பையனை விடமாட்டேன்… கேட்டுச்சா… கண்டிப்பா விட மாட்டேன்”  இரைந்து அழுது கொண்டே மடிந்து அமர்ந்தவள்.. போன் ஒலி எழுப்பவும் பாக்கெட்டில் இருந்து எடுத்து “ஹலோ?” என்றாள்.. அந்தப்புறம் சொன்ன செய்தியில் அதிர்ந்தவள், “என்ன!! இல்ல.. இல்ல..:… அப்பா..! அப்பா!!” என்றவாறு ஓடினாள்..

———–

 

இவான் ரூம் கதவை திறந்தபடி வெளியே வந்த சாரா, பக்கத்திலிருந்த ஆர்யன் அறையிலிருந்து ஆர்யனும் வெளியே வருவதை பார்த்து, “லிட்டில் சார் தூங்கவே இல்ல.. ரொம்ப அப்செட்டா இருக்காரு.. சித்தி வரலயேனு கேட்டுக்கிட்டே இருக்காரு.. சித்தி வந்தா இவானுக்கு நல்லது” பயத்துடன் நிறுத்தினார்.. 

ஆர்யன் உதடுகள் கசப்பாய் வளைந்தன “இந்த பேச்சு இனிமேல் இங்கு வரக்கூடாது.. புதுசா நானி வருவாங்க.. அவங்க இவானை நல்லா கவனிச்சிப்பாங்க.. அதுவரைக்கும் அவனை கூடவே இருந்து பாத்துக்கங்க.. ஒரு நொடி தவற கூடாது” என ஆணை பிறப்பிக்க.. அதை ஏற்று சாராவும் இவான் அறைக்கு சென்றுவிட்டார்..

அப்போது அந்கு வந்து பாடிகார்ட் ஆர்யன் பின்னால் கை கட்டி நிற்க.. “அவ போய்ட்டாளா” என்று ஆர்யன் கேட்க.. “ஆமா போயிட்டாங்க” என அவன் சொல்லவும் தலையசைத்து அவனை அனுப்பினான்..

       —————

போன் செய்தி காதில் ஒலிக்க, ஹாஸ்பிடல் ஓடிவந்த ருஹானா கண்டது முகம் வரை மூடப்பட்ட தன்னை பெற்றவரைத் தான்… “அப்பா எப்படிப்பா  உங்க மகளை விட்டு போவீங்க…? உங்க சின்ன பொண்ணை விட்டுட்டு பெரிய பொண்ணு கூட போறீங்களே! என்னை விட்டு போகாதீங்கப்பா.. நான் கூப்பிடுறேனே..”  அப்பாவைப் பார்த்து கதறினாள்…

————-

ருஹானாவின் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.. பெண்கள் இறந்தவருக்காக கண்ணீர் சிந்த.. ஆண்கள் பிரேயர் சொல்ல.. சோக சூழ்நிலை நிலவியது…. மிஷால் உணவு பரிமாறியபடி திரும்பி, அழும் ருஹானாவை பார்த்து சோக பெருமூச்சு விட்டவன் தன்வீர் பக்கத்தில்  அமர்ந்தான்.. அஞ்சலி முடிந்து விடை பெற்றவர்களை வளர்ப்பு தாய் பர்வீனும், அவர் மகன் தன்வீரும் நன்றி சொல்லி வழி அனுப்ப சென்றார்கள்..  

சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ருஹானா தனியாக அமர்ந்திருந்தாள்.. தாரை தாரையாக அவள் கண்களில் நீர்க்கோடுகள்…. மிஷால் அவளருகே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்.. “ருஹானா! நான் எப்படி ஆறுதல் சொன்னாலும் உன் துக்கத்தை விட்டு வெளி வர முடியாது.. ஆனால் இதை புரிஞ்சுக்கோ.. இது கடவுள் விருப்பம்.. உனக்கும் தெரியும்… அங்கிள் எனக்கு அப்பாவை போன்றவர்.. ம்.. வந்து.. எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்.. உனக்கு எது தேவைனாலும்….” என அவன் மேலும் ஏதோ சொல்ல வருவதற்குள் பர்வீன் வந்து ருஹானாவை கட்டிக்கொண்டார்.. அவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து.. அங்கே இருந்த உணவு பில்லை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்..

————- 

புது நானி இவானுக்கு எண்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்க… அவன் அதில் சிறிது கூட கவனம் செலுத்தவில்லை.. 

“ஒன்று, இரண்டு..”

“என் சித்தி..”  

என்ன“…… “மூன்று, நான்கு..”

“சித்தி வரேன்னு சொல்லிட்டு போனாங்க”

“இதை சொல்லு… ஐந்து..”

“எனக்காக காத்திரு.. வருவேன்னு சொன்னாங்க”

“இந்த படத்தை பாரேன்”

“ஆனா வரலை” 

நானி முழிக்க.. அப்போது அங்கே கரீமா வர.. நானி எழுந்து “நான் எவ்வளவோ முயற்சி செய்றேன்.. எதுவும் சரியா வரல.. அவன் சித்தியை கேட்டுகிட்டே இருக்கான்..” புகார் படித்தாள்..

“ரொம்ப கஷ்டம் தான்.. இப்பதான் அவனோட அம்மாவை இழந்து இருக்கான்…  பொறுமையான பையன்.. ஆர்யனுக்கு இவன் மேல அதிக பாசம்..  இவானுக்காக எதும் செய்வான்.. நீ இவனை கவனமா பாத்துக்கோ… சந்தோஷப்படுத்து…. வேறு பக்கம் திசை திருப்பு..” கரீமா ஆலோசனை வழங்கினாள்…

நானியும் தளராமல் இவான் புறம் திரும்பி எண்களையும், நிறங்களையும் கற்றுக் கொடுக்க முயல.. கற்றுக் கொள்ள இவான் சிறிதாவது திரும்பி பார்க்க வேண்டுமே..! “கலர் போடலாமா” என்று அழைக்க.. இவான் காதிலேயே போட்டு கொள்ளவில்லை….

——————

வழக்கம் போல ஆர்யன் தோட்டத்தில் அம்பு செலுத்த.. புது நானி வந்து அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் “இவான் குறைவாகத்தான் சாப்பிட்டான்.. அவன் சித்தியை பத்தியே கேட்கிறான்.. சித்தி வரலனு தெரிஞ்சதும் வாயை திறக்கவே இல்ல..”  அம்பு அது பாட்டுக்கு வேகமாக போய் கொண்டே இருந்தது.. நானி புதியவள், அல்லவா.. பயந்து விட்டாள்.. “என்னை நம்புங்க.. நான என்னோட  முழுமுயற்சி கொடுத்தேன்” என வேகமாக சொல்ல.. சலிப்புடன் அவளை விலக சொல்லி சைகை செய்தான்….

அம்புகள் பாய பாய… ருஹானாவின் ஆறுதல் மொழிகள், இவானை சமாதானப்படுத்த அவள் பேசிய பேச்சுக்கள், கேட்டில் நின்று அவள் கத்திய கூக்குரல் அனைத்தும் பாய்ந்தது, ஆர்யன் நினைவுகளில்… 

கரீமா வந்தாள்… “ஆர்யன்! எவ்வளவு முயற்சி எடுக்கிறே நீ.. கவலைப்படாதே.. இவான் சரியாகிடுவான்.. இவான் நம்மளோட மதிப்புள்ள சொத்து.. அவன் தாயோட இழப்பை உணர விடாம நாம எல்லாரும் பார்த்துக்கலாம்.. எல்லாருக்குமே இவான் ரொம்ப பிடித்தமானவன்”

“அவனுக்கு பேபி சிட்டர்  மட்டும் போதாதுனு நான் நினைக்கிறன்.. ஒரு நல்ல டாக்டரை.. அதான் சைக்காட்ரிஸ்ட்.. கூப்பிடலாம்…” அம்பு விட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவன்.. அவள் “ஓகேவா?” என கேட்கவும் ஆமோதித்து தலையாட்டினான்… 

—————-

தந்தையின் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ருஹானா துக்கம் தாளாமல் சத்தமாக அழ.. பர்வின் ஓடி வந்து சமாதானப்படுத்தினார்.. “நாம என்ன செய்ய முடியும்.. உயிரை கொடுக்கற கடவுள் தான் அதை எடுக்கவும் செய்றார்.. நமக்கு தாங்கற தைரியத்தையும் கொடுப்பார்.. நீ அழாதே.. நான் இதெல்லாம் எடுத்து வைக்கிறன்.. நீ வா” உள்ளே அழைத்து சென்று அமர வைத்து நீர் கொண்டு வர பர்வீன் சென்றார்..

எதிரேருந்த சோபாவை பார்த்ததும், ருஹானாக்கு இவான் அதில்  படுத்திருந்ததும், தந்தை ஆனந்தப்பட்டதுமே நினைவு வந்தது.. அதை பார்த்து கொண்டே அவள் இருக்க.. தண்ணீர் கொண்டு கொடுத்த பர்வீன், “என் இளவரசி! தைரியமா இரு.. நீ இப்படி அழுதா உங்க அப்பா எப்படி சந்தோஷமா இருப்பாரு.. உன்னை நல்லா வளர்த்துருக்கார்.. அன்பான, நேர்மையான நல்ல பொண்ணா நீ இருக்கே.. இதுக்கே அவருக்கு நல்ல இடம் கிடைக்கும்.”. 

“இந்த வீட்ல உன்னை தனியா நான்  விடமாட்டேன்… என் கூட வா, நம்ம வீட்டுக்கு… கொஞ்ச நாளைக்கு இரு… அப்புறம் என்ன செய்யலாம்னு பார்ப்போம்” தனியாக நின்ற பெண்ணுக்கு துணையாக அவர் வந்தார்.. 

ருஹானா சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.. “அப்பாக்கு கடைசி ஆசை இருந்துச்சு.. ‘இவானை கூட்டிட்டு வா.. என் பேரனை கூட்டிட்டு வா’ னு கேட்டார்.. அது என்னால் நிறைவேற்ற முடியல” 

“அது எப்படி நடக்க முடியும்? அவங்க அர்ஸ்லான்… அவங்க கிட்ட இருந்து ஒரு குழந்தை எப்படி கிடைக்கும்?… அவங்க பேரை கேட்டாலே எல்லாரும் நடுங்குவாங்க…” பர்வீன் அம்மா எடுத்து கூறினார்.. என்றபோதும் அது அவள் உறுதியை குலைக்கவில்லை… மவுனமாக டாலரைக் கையில் பிடித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள்..

———-

அப்பா அக்கா இருவரின் கல்லறைக்கும் நடுவில் ருஹானா உட்கார்ந்து இருகைகளையும் வைத்து “அப்பா! அக்கா! நிம்மதியா தூங்குங்க…” என்றவள்.. மரண படுக்கையில் அக்கா கூறிய வார்த்தைகளை நினைவுப்படுத்தி கொண்டாள்… ‘உன் மகனை அந்த மாளிகையில் நான் விட மாட்டேன்.. உன்னோட சொத்து என்னோட உரிமை.. என்ன பாடுபட்டாலும் நான் இவானை கடத்திட்டு போக போறேன்’  

உறவு சங்கிலி கைவசமானபின்

தனக்கே உரிமையென எண்ணுவதும்

பத்திரப்படுத்துவதும் இயல்பே!

பாதுகாப்பாய் அமையுமா

மேற்கொள்ளவிருக்கும் பயணம்? 

(தொடரும்)

Advertisement