Advertisement

படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன் அண்ணன் தனியே நிற்பதை பார்த்து விரைந்து வந்தான். “அண்ணா! என்ன செய்றீங்க இங்க? நீங்க ஓகே தானே? வாங்க வெளிய போய் காத்து வாங்கலாம்” என கைபிடித்து அணைத்து கூப்பிட்டான்.

வலது காலை தூக்கி முன்னே வைக்க போன அம்ஜத், காலை கீழே வைக்காமல் அந்தரத்திலேயே நிறுத்தினான். அப்படியே மேலே பார்த்தான். ஆர்யனும் அவனோடே கீழேயும், மேலேயும் பார்த்தான். “பயப்படாதீங்க, அண்ணா. தரையில எதும் இல்ல. நான் உங்க கூட தானே இருக்கேன்” என்று தைரியமூட்டினான்.

அம்ஜத் அந்த இடத்தை மிதிக்காமல் தாண்டி குதித்து செல்ல, ஆர்யன் அவனை குழப்பமாகவே பார்த்து கூடவே சென்றான். “அண்ணி எங்கே? நீங்க ஏன் தனியா நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்டவாறே அணைத்து கூட்டி போனான்.

———

மாடி தோட்டத்தில் கரீமா எதையோ தேடிக்கொண்டிருக்க, “அக்கா! உன்னை எங்கலாம் தேடுறது? இங்க என்ன செய்றே?” என சல்மா கேட்க, அவளை திரும்பி பார்க்காமல் “நீ அம்ஜத்தை பார்த்தியா?” என கரீமா தேடிக்கொண்டே கேட்டாள். “இல்லயே! சரி சொல்லு! இந்த குப்பைல நீ என்ன செய்றே?” என மறுபடியும் சல்மா கேட்கவும் அவளை திரும்பி பார்த்த கரீமா, சல்மாவின் உடையை பார்த்து “நீ எங்க கிளம்பிட்டே?” என கேட்டாள். “எனக்கு இங்க மூச்சு முட்டுது. நான் வெளியே போறேன்” 

“சரி எங்கயோ போ. என்னை தொல்லை செய்யாதே. எனக்கு நிறைய வேலை இருக்கு” என கரீமா சொல்ல, “சரி என்ன தான் செய்றே? அதை சொல்லு” என சல்மா கரீமாவின் எரிச்சலை கிளப்பிவிட “என் ஒரே வேலை அம்ஜத்.. அம்ஜத்.. புரியுதா, உனக்கு? அம்ஜத் மட்டும் தான்” என சொல்லிவிட்டு அவள் திரும்பிவிட்டாள்.

“ஓ! இத்தனை வருஷத்துக்கு பிறகு உன் கணவரோட காதல்ல விழுந்துட்டியா? ஒரே அம்ஜத் மயமா இருக்கே?” என சல்மா கேலி பேச “இந்த இடத்தை விட்டு ஓடிடு” என கரீமா மிரட்ட சல்மா உதட்டை சுளித்து தலையை வெட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

——— 

ஆர்யன் அம்ஜத்துடன் தோட்டத்தில் இருக்க, ஜாஃபர் செடிப் பைகளை கொண்டு வந்து வைத்துவிட்டு “இன்னைக்கு தோட்ட பராமரிப்புக்கு ஆட்கள் வராங்க. உங்களுக்கு நேரம் இருக்குமா?” என ஆர்யனிடம் கேட்க, “அண்ணிட்ட சொல்லுங்க. அவங்க பார்த்துக்குவாங்க” என்று சொல்ல, “நான் ஏதும் உதவி செய்யவா?” என ஜாஃபர் கேட்க, “இல்ல.. நான் இருக்கேன், அண்ணன்கூட” என ஆர்யன் சொல்லவும், ஜாஃபர் பணிந்து நகர்ந்தான்.

அம்ஜத் குளிரால் உடம்பு சுருக்க “அண்ணா! ஜாக்கெட் போடுங்க” என்று சொல்லி அவன் கையில் வைத்திருந்ததை ஆர்யன் அண்ணனுக்கு மாட்டிவிட்டான். அதுவரை ஒரு வார்த்தை பேசாமல் இருந்த அம்ஜத் “ஆர்யன்! ருஹானா…. நீ ருஹானாவை காப்பாத்துவே தானே! எனக்கு நீ வாக்கு கொடுத்துருக்கே. அவளுக்கு எதும் கெடுதல் நடக்கக் கூடாது. ஆர்யன்.. ஆர்யன் அவனோட மதிப்புமிக்கதை காப்பாத்துவான்… எப்பவும்…“ என சொல்ல ஆர்யனும் சிந்தித்துக்கொண்டே சரியென தலையாட்டினான்.

தன் மனைவி எப்படியும் ருஹானாவிற்கு தீங்கிழைப்பாள் என உணர்ந்துக்கொண்ட அம்ஜத், ருஹானா மேல் ஆர்யனுக்கு படர்ந்திருக்கும் நேசத்தையும் தெரிந்து கொண்டு ருஹானாவை காப்பாற்ற விழைகிறானோ!

சிறிய மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டம் வந்த கரீமா சேர்ந்து நிற்கும் சகோதரர்களை பார்த்து விதிர்த்து போனாள். “ஆர்யன் டியர்! நீ ஆபீஸ் போகலயா?” என கேட்டுக்கொண்டே வேகமாக ஓடி வந்தவள் சமாளித்துக்கொண்டு “அம்ஜத்தை தனியா விடாம கூட இருக்கறதுக்கு நன்றி” என்று வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சொன்னாள். 

ஆர்யன் திரும்பிப் பார்க்க “நீ வேலைய பார்க்க போகணும்ல. நான் உன் அண்ணனை பார்த்துக்கறேன். நீ போகணும்னா போ” என்று அனுப்ப பார்த்தாள். “நான் எங்கயும் போகல. இப்போ ரஷீத் வருவான். இன்னைக்கு வீட்ல இருந்து தான் வேலை செய்றோம்” என்று ஆர்யன் சொல்ல, கரீமா நடுங்க ஆரம்பித்தாள். 

“இன்னைக்கு அண்ணனை தனியா விடக்கூடாது” என்று அவன் சொல்லவும், கரீமா “சரி, நீ உள்ளே போய் வேலைய தொடங்கு. நானும், அம்ஜத்தும் இந்த செடியலாம் நட போறோம்” என்று மறுபடியும் இருவரையும் பிரிக்க பார்க்க “அது நாங்க பார்த்துக்கறோம். ஜாஃபர் உங்களை தேடிட்டு இருந்தார், அவரை போய் பாருங்க” என்று ஆர்யன் இன்னும் அவள் பீதியை அதிகமாக்கினான்.

“வாங்க அண்ணா! எது முதல்ல நடணும்?” என்று கேட்டு ஆர்யன் வேலையை தொடங்க, ஸ்தம்பித்து நின்ற கரீமா “சரி, நான் போய் பார்த்துட்டு சீக்கிரம் வரேன்” என தயங்கியபடி நகர்ந்தாள். ஆர்யன் மண்ணை தோண்ட ஆரம்பிக்க, அம்ஜத் ஒரு செடியை எடுத்து அதன் மலரை நுகர்ந்தவன் “இந்த செடியை நான் இதுக்கு முன்னே வளர்க்கலயே! நான் இதை கஷ்டப்படுத்திட்டா என்ன செய்றது” என்று கவலைப்பட்டான்.

“அதுக்கு ஒரு வழி இருக்கு அண்ணா” என்று சொன்ன ஆர்யன் தன் போனை எடுத்து அதில் அந்த செடி நடும் முறையை தேடி எடுத்து அண்ணனிடம் காட்டினான். அம்ஜத் ஆர்வமாக பார்க்க “இந்த வீடியோல எல்லாம் இருக்கு பாருங்க, இதை பார்த்து நீங்க கத்துக்கலாம். நானும் உங்களுக்கு உதவி செய்றேன்” என்று சொல்லி போனை கொடுத்தான்.

மகிழ்வுடன் போனை பார்த்த அம்ஜத் “இதுல எல்லாம் இருக்கே. எல்லாம் இருக்கு, நான் தெரிஞ்சிக்கிறேன்” என அதில் மூழ்கி போக, அங்கே வந்த ரஷீத் அவர்களை சிரிப்புடன் பார்த்தான். “ஆர்யன்! ஆன்லைன் மீட்டிங் தொடங்க போகுது. ஒரு நிமிஷம் லேப்டாப் பார்க்கறீங்களா?” என ரஷீத் கூப்பிட “அண்ணா! இதை பார்த்துட்டே இருங்க. நான் வந்துடுறேன்” என ஆர்யன் சொல்ல, அம்ஜத் கண்கள் போனை விட்டு அகலவில்லை.

ஆர்யனும், ரஷீத்தும் செல்ல, அம்ஜத் செடியையும், வீடியோவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தவன் “வீடியோ நின்னு போச்சே! ஆர்யன்! வீடியோ வரல” என்று போனை தட்டி கொண்டே இருந்தான். கெட்டவேளையாக அது ஒரு பயங்கர படத்தை காட்டியது. யாசின்ஸ் ஆள் தள்ள ருஹானா சவக்குழியில் விழும் வீடியோவை பார்த்த அம்ஜத் நிலைகுலைந்து போனான்.

ருஹானா விழுவதும், தஸ்லீம் விழுவதும் அவனுக்கு மாறி மாறி தோன்ற அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது. மூச்சு வேகமாக வர வேர்த்து கொட்டியது. கையில் சுட்டது போல போனை தூக்கி போட்டவன் பின்பக்கமாய் வெளியே வேகமாக நடந்தான்.

மெல்லிய மனம் மென்மை குணம் 

அன்பானவன் சபிக்கப்பட்டவனோ

கயமை மனைவி அடக்கி ஆள்கையில்…

விபரீதம் கண்ட மனது நொறுங்க

சில்லு சில்லாய் சிதறிய நினைவுகள்

பல நூறுமுறை மறுஒளிபரப்பு செய்ய…

மலர்வன காணொளியும் சதி புரிய

திக்கு தெரியாத நாட்டில் ஆண்மான்.

———— 

வேலையை வேகவேகமாக முடித்துக்கொண்டு தோட்டம் ஓடிவந்த கரீமா “எங்கே யாரையும் காணோம்?” என தேடினாள். கீழே கிடந்த போனை எடுத்தவள் அதில் ஓடிக்கொண்டு இருந்த படத்தை பார்த்து அதிர்ந்து போய் “இதை அம்ஜத் பார்த்திருந்தா… அவ்வளவு தான்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆர்யனும் அங்கே வேகமாக வந்தான்.

அவனை பார்த்துவிட்ட கரீமா வேகமாக அந்த வீடியோவை மூடிவிட்டு  “ஆர்யன் டியர்! இது உன் போன் தானே? கீழ கிடந்தது” என்று நீட்ட “அண்ணன் எங்க?” என அவன் கேட்க, “நான் இங்க வரும்போது அம்ஜத் இல்ல. வீட்டுக்குள்ள போயிருப்பார். நான் போய் பார்க்கறேன்” என்று உள்ளே சென்றாள். 

அம்ஜத்தை அனைவரும் எங்கு தேடியும் காணாததால், ஆர்யன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனது கணினிக்கு அனுப்ப சொல்லிவிட்டு உள்ளே விரைந்தான். ரஷீத்தும், ஆர்யனும் அவற்றை கவனமாக பார்வையிட அம்ஜத் பின்வாசல் வழியாக வெளியே சென்றது தெரிந்தது. “அண்ணன் மளிகை விட்டு தனியா வெளியே போய் பல வருஷங்கள் ஆச்சே!” என கலவரமான ஆர்யன் “அவருக்கு எதும் கெடுதல் நடக்கும்முன்னே கண்டுபிடிக்கணும்” என்று வேகமாக வெளியே வந்தான். 

————–

ருஹானா வீட்டுக்கு திரும்பும் வழியில் அம்ஜத்தை பார்த்துவிட்டு டாக்ஸியிலிருந்து இறங்கி அவன் பின்னால் ஓட அவள் அருகே நெருங்கும்முன் அவன் வேறு சந்தில் நுழைந்துவிட்டான்.

—————

காரில் ஏறி ஆர்யன் அண்ணனை தேட கிளம்ப கரீமாவும் உடன் வர பார்த்தாள். அவளுக்கு அம்ஜத் காணாமல் போனதை விட தஸ்லீம் மரணம் பற்றிய உண்மையை சொல்லிவிட போகிறானோ என்ற நடுக்கம் தான் அதிகம் இருந்தது. அவளை தடுத்த ஆர்யன் “அண்ணி! நீங்க வீட்ல இருங்க. அண்ணன் திரும்பி வந்தா நாம ரெண்டு பேரும் வீட்ல இல்லனா அவர் பயந்திடுவார்” என்று சொல்லி ரஷீத்துக்கும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு காரில் ஏற அவன் போன் ஒலித்தது.

“நான் அம்ஜத் அண்ணனை பார்த்தேன். நான் அவரை பிடிக்கறதுக்குள்ள அவர் மறைந்துட்டார்” என்று ருஹானா சொல்ல “எங்க பார்த்தே? நீ எங்க இருக்கே? சீக்கிரம் சொல்லு” என படபடத்தான். அவள் இடம் சொல்லவும் “சரி, புரிஞ்சது” என்று அவன் காரில் அமர்ந்து கதவை மூட “அம்ஜத்தை யாராவது பார்த்தாங்களா, ஆர்யன்? யார் பார்த்தது?” என கரீமா பதட்டமாக கேட்க “இவானோட சித்தி!” என்று சொல்லி ஆர்யன் காரை எடுத்தான்.

ருஹானா சொன்ன இடம் விரைந்த ஆர்யன், சாலையின் நடுவே நின்ற ருஹானாவின் அருகே நிறுத்த காரில் ஏறியவள், அம்ஜத் சென்ற வழியை காட்டினாள். இருவரும் சாலையின் இருபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த பகுதி முழுதும் திரும்ப திரும்ப சுற்றி வந்தார்கள்.

———-

கரீமா அவள் கையாளுக்கு போன் செய்து ஆர்யன் அம்ஜத்தை கண்டுபிடிக்கும்முன் அவனை தேட சொன்னாள். முக்கியமாக தஸ்லீம் கல்லறையில் போய் பார்க்க சொன்னாள். சீக்கிரம் கண்டுபிடிக்காவிட்டால் அவனை தொலைத்து கட்டிவிடுவதாக மிரட்டினாள்.

——–

ஆர்யனை பாவமாக பார்த்தபடி ருஹானா இருக்க அவன் கவனம் பூராவும் அண்ணனை தேடுவதிலேயே இருந்தது. “என் சகோதரன் தன்வீர் உங்களுக்கு தெரியும்ல. போலீஸ்ல இருக்கானே, அவனுக்கு சொல்லவா?” என ருஹானா கேட்க, ஆர்யன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு தன்வீரை போனில் அழைத்து ருஹானா விவரம் சொன்னாள்.

——–

பெரிய கட்டிடங்களையும், விரைந்து செல்லும் வாகனங்களையும் கண்டு பயந்து போன அம்ஜத் தள்ளாடியபடி சாலையில் நடக்க, அவனின் பதட்டத்தை பார்த்து அந்த பகுதிக்கு புதியவன் என அறிந்துக்கொண்ட திருட்டு கும்பல் ஒன்று அவனை துரத்தியது. அம்ஜத் திகிலடைந்து ஓட ஆரம்பித்தான்.

———  

அர்ஸ்லான் மாளிகையில் வரவேற்பறை சோபாவில் இவான் பெரியப்பாவை காணாமல் அழுது கொண்டிருக்க, பக்கத்தில் அமர்ந்து சாரா அவனுக்கு ஆறுதல் சொல்ல, ஜாஃபரும், நஸ்ரியாவும் கவலையாக நிற்க, கரீமா நடந்துக் கொண்டிருக்க, சல்மா எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

—— 

இரவு வரை தேடியும் அம்ஜத் கிடைக்கவில்லை. காரை ஓரமாக நிறுத்தி இறங்கிய ஆர்யன் ரஷீத்க்கு போன் செய்து “ஆஸ்பிடல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் தேட சொன்னியா?” என நிலவரம் விசாரித்துக்கொண்டிருந்தான். காரில் உள்ளே இருந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த ருஹானா வெளியே வந்தாள். “கவலைப்படாதீங்க. அம்ஜத் அண்ணன் கிடைச்சிடுவார்” என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல அவளின் கண்ணீர் கண்களை ஆர்யன் நோக்கினான்.

போன் மணி அடிக்க, “போலீஸ் நம்பர்” என்று சொல்லிவிட்டு ஆர்யன் போனை எடுத்தான்.

“ஆர்யன் அர்ஸ்லான்?”

“ஆமா, நான் தான்”

“நீங்க சொன்ன அடையாளங்கள் படி நாங்க ஒருத்தரை கண்டுபிடிச்சிருக்கோம்”

“சொல்லுங்க எங்க இருக்கார்? நான் உடனே வரேன்”

“நீங்க மார்சுவரிக்கு வந்து அடையாளம் காட்டணும், நீங்க தேடிட்டு இருக்குறவர்  அவர் தானான்னு”

ருஹானா புரியாமல் அவன் முகம் பார்க்க, ஆர்யன் விக்கித்து நின்றான்.   

(தொடரும்)

Advertisement