Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 32 

அண்ணன் அறை உள்ளே வந்த ஆர்யன், கீழே அமர்ந்து பெரியதாய் சுவாசித்துக் கொண்டிருந்த அம்ஜத் அருகே சென்று அவன் கைப்பிடித்து எழுப்பினான் ருஹானா வாசல் பக்கமே நின்றாள். “அண்ணா!” என அழைத்து அவனை அணைத்த ஆர்யன், பேய்முழி முழித்துக்கொண்டு நின்ற கரீமாவிடம் திரும்பி “அண்ணி! என்ன நடந்தது?” என கேட்க, வியர்வையில் குளித்திருந்த அம்ஜத் கரீமாவை முறைத்தான்.

“அம்ஜத் உடுத்தாத சில உடைகள் இருந்தது. அதை எடுத்து குப்பைல போட்டுட்டேன். அம்ஜத் அதை தேடியிருக்கார். அது கிடைக்கல. அதனால டென்ஷனாகி இப்படி எல்லாத்தையும் கலைச்சி போட்டுருக்கார்” என பயந்தபடி கரீமா சொல்ல, ஆர்யன் நம்பாத பார்வை பார்த்தான்.

“இந்த தப்பை இன்னொரு முறை செய்யாதே!” என்று கரீமாவை பார்த்து சொன்ன அம்ஜத் ஆர்யன் புறம் திரும்பி “இது மறுபடியும் நடக்க கூடாது, ஆர்யன்! நான் உன்னை கெஞ்சி கேட்கறேன்” என சொல்ல “என்னது அண்ணா! எது நடக்கக்கூடாது?” என ஆர்யன் கேட்க, தூக்கு தண்டனை நிறைவேற்ற அழைத்து செல்லப்படும் கைதியாய் கரீமா கதிகலங்கி போனாள்.

அம்ஜத் பதில் சொல்லாமல் கரீமாவையே பார்க்க, சுதாரித்துக் கொண்ட கரீமா “இனிமேல் இப்படி நடக்காது, ஆர்யன். நான் பழைய துணின்னு தான் தூக்கி போட்டேன். இனி கவனமா இருப்பேன்” என்று சமாளிக்க, “அண்ணா! இது போல தேவையில்லாத சின்ன விசயங்களுக்குலாம் மனசை உளப்பிக்காதீங்க. இத்தனை வருத்தப்பட என்ன இருக்கு?” என ஆர்யன் சமாதானப்படுத்த முயன்றான்.

கரீமா உடல் நடுங்கி நிற்க “இது நடக்கக்கூடாது, ஆர்யன். இதுக்கு மேல துயரம் வேணாம். வேணவே வேணாம். இன்னொருத்தரை நாம இழக்கக்கூடாது” என்று ருஹானாவை பார்த்தபடியே அம்ஜத் கூற ருஹானா புருவம் சுருக்கினாள். ஆர்யனும் ருஹானாவை திரும்பி பார்த்தான். ருஹானாவின் கடத்தல் சகோதரனை பாதித்து இருக்கிறது என புரிந்து கொண்டவன் அண்ணனை அரவணைத்தான்.

“பயப்படாதீங்க, அண்ணா. நமக்கு யாரும் துன்பம் தர முடியாது” என ஆர்யன் சொல்லவும். அம்ஜத் கரீமாவை பயத்துடன் பார்த்தான். “நான் இருக்கேன். உங்களுக்கு துணையா நிக்கறேன். யாரும் உங்களை கஷ்டப்படுத்த விட மாட்டேன்” என ஆர்யன் உறுதியாக சொல்ல, “ருஹானா?…. அவளுக்கும் எந்த துன்பமும் வர நீ விட மாட்டே தானே, ஆர்யன்? அவ கூடவே இருப்பே தானே? அவளை பாதுகாப்பே, தானே?” என அம்ஜத் ருஹானாவிற்கும் சேர்த்து வாக்குறுதி கேட்டான்.

ஆர்யன் ருஹானாவை திரும்பி பார்க்க, அவள் தலையை குனிந்து கொண்டாள். “நீங்க யாரை பத்தியும் கவலைப்படாதீங்க, அண்ணா. நான் இருக்கேன். யார்க்கும் துன்பம் வர விட மாட்டேன்” என ஆர்யன் பொதுவாக சொல்ல, “ருஹானாக்கு எதும் தப்பா நடந்துடக் கூடாது, ஆர்யன். ருஹானாக்கு அப்படி நடந்திடக் கூடாது” என திரும்ப சொல்ல கரீமாவுக்கு வியர்த்து வழிந்தது.

அம்ஜத்தின் அன்பு கண்டு ருஹானா செய்வதறியாது நிற்க, கரீமா பேச்சை மாற்றி “அம்ஜத் டியர்! நீங்க சோர்வா இருக்கீங்க” என்று சொன்னவள் ஆர்யனை பார்த்து “அவர் மாத்திரை சாப்பிடுற நேரம் இது. சரியான நேரத்தில மருந்து சாப்பிடலனா அவர் அமைதி இன்னும் கெட்டு போகும்” என்று சொல்ல “நீங்க ஓகே தானே, அண்ணா. கவலைப்படாதீங்க. பயப்படாதீங்க, சரியா?” என ஆர்யன் கேட்க, அம்ஜத் இரண்டு முறை தலையாட்டினான்.

சிறிது நேரம் மூத்தவனை அணைத்து நின்ற இளையவன், கரீமாவிடம் திரும்பி “திரும்ப இது போல நடந்தா என்னை உடனே கூப்பிடுங்க” என்றான். பெரிய கண்டத்திலிருந்து தப்பித்த கரீமா “கண்டிப்பா, ஆர்யன்” என்று சொன்னவள், இருவருக்கும் இரவு வணக்கம் கூறினாள். ருஹானாவும் பதிலுக்கு சொல்லி வெளியேற, அம்ஜத்தை அமர வைத்து ஆர்யனும் அறையை ஒரு நோட்டமிட்டு பின் தொடர்ந்தான்.

நடைவழியில் நின்ற ருஹானா, ஆர்யனும் நடந்து அருகே வந்து அவளை பார்க்கவும் “என்னால இப்படி ஆகும்னு நான் நினைக்கல. என்னை மன்னிச்சிடுங்க” என்று உடைந்த குரலில் சொல்ல, ஆர்யன் திகைத்து போய் அவள் கலங்கிய கண்களை பார்த்தான். “நான் கடத்தப்படாம இருந்திருந்தா…“ என்று தொடங்கியவளுக்கு முடிக்க முடியவில்லை.

அவள் வருந்துவது தாளாத ஆர்யன் “மன்னிப்பு கேட்கற அளவுக்கு நீ எதும் செய்யல. அண்ணன் ரெண்டு, மூணு நாள்ல சரியாகிடுவார்” என்று சொல்லி மீண்டும் அவள் கண்களை சந்திக்காமல் அவளை தாண்டி சென்றுவிட்டான்.

அம்ஜத்துக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்த கரீமா, “காலைல உங்களுக்கு எல்லாம் சரியாகிடும், அம்ஜத் டியர். இப்போ நிம்மதியா தூங்குங்க” என்று போர்வையை மூடிவிட்டாள்.

————

தூங்கி எழுந்த இவானுக்கு உடை மாற்றிவிட்டு, காலுறையை மாட்டிக்கொண்டே ருஹானா சொன்னாள்.

“அன்பே! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேனே, நான்”

“சர்ப்ரைஸா, சித்தி? உண்மையாவா?” இவான் முகம் பளிச்சிட்டது.

“ஆஹ்ஹா.. ஆனா நீயே தான் கண்டுபிடிக்கணும், செல்லம்”

“க்ளு இல்லாமலா, சித்தி?” அவனுக்கு ஆர்வம் பொங்கியது.

“ம்.. ம்… அப்படினா ஒரு சின்ன க்ளு தரேன், செல்லக்குட்டி. நீ வருவேன்னு அது கிச்சன்ல உனக்காக காத்திருக்கு” என ருஹானா சிரிப்புடன் சொல்லவும் இவான் முகம் புன்னகை பூசிக்கொண்டது.

ருஹானாவின் போன் அடித்து அழைக்க, அதில் பேசிய பழைய வீட்டின் சொந்தக்காரரின் மனைவி ‘மின்சாரம் மற்றும் தண்ணீர் உரிமை ருஹானாவின் பெயரிலேயே இன்னும் இருப்பதாகவும், அதை மாற்றி தரவும்’ அழைத்தார். ருஹானாவும் வருவதாக ஒப்புக்கொள்ள, இன்னொரு காலுறையை மாட்டிக்கொண்டிருந்த இவானின் முகம் சுருங்கியது.

“நீயே போட்டுட்டியா, செல்லம்?”

ஆமென தலையாட்டினான் இவான் “நீங்க வெளிய போறீங்களா, சித்தி?”

“ஆமா அன்பே. ஒரு மணி நேரத்தில வந்துடுவேன்” 

“சித்தி! நானே சாக்ஸ் மாட்டிகிட்டேன். ஆனா நான் இன்னும் பெரிய பையனாகல. நான் பெரியவனாகிட்டேன்னு நீங்க நினைச்சிடாதீங்க. இன்னும் எனக்கு பேண்ட் போட தெரியாது. குளிக்க தெரியாது. என்னை விட்டுட்டு போயிடாதீங்க” பாவமாக சொன்னான்.

“ஆருயிரே! சித்தி செல்லமே! என் கண்ணே! நீ எவ்வளவு பெரியவனானாலும் நான் உன்னை விட்டு போகவே மாட்டேன்” என்று அவன் கையை பிடித்து முத்தம் கொடுத்த ருஹானா “ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துடுவேன்” என்று உறுதியளித்தாள்.

“ஒரு மணி நேரம்ங்றது சின்னது தானா?”

“ரொம்ப சின்னது. நீ விளயாடறதுக்குள்ள வந்துடுவேன்”

சோகமாக இருந்த இவானின் முகத்தில் புன்னகை மெல்ல அரும்பியது. தாவி வந்து சித்தியின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

——–

போனை எடுத்து கோட் பையில் வைத்துக்கொண்டு, மேசையில் இருந்த கைக்கடிகாரத்தையும் கட்டிக்கொண்டு அறை விட்டு வெளியே செல்ல கிளம்பிய ஆர்யன் வெளியே இவானின் குரல் கேட்டு அப்படியே நின்றான்.

“எனக்காக லெமன் குக்கீஸ் செய்தீங்களா, சித்தி? எப்போ செய்தீங்க?”

“நீ தூங்கிட்டு இருக்கும்போது செய்தேன், செல்லம்”

கேட்டுக்கொண்டு நின்ற ஆர்யன் உடனே அந்த நேரம் அந்த இடத்துக்கு பறந்து விட்டான். அவள் ஆம்லேட் செய்ததும், அவன் கைப்பிடித்து தண்ணீரில் வைத்ததும் நினைவிற்கு வந்து வதனம் மலர்ந்தது. கண்கள் மிதந்தன.

“நீ கிச்சன் போ. நஸ்ரியா அக்கா உனக்கு பாலும், குக்கீஸும் தருவாங்க. நான் சீக்கிரம் வந்துருவேன். பார்த்து படி இறங்கு”

இவான் படியிறங்கும் சத்தமும், ருஹானாவின் காலடியோசை தன் அறை கதவருகே கேட்கவும், ஆர்யன் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஒரு பைலை எடுத்துக்கொண்டான். கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் “வரலாம்” என்று சொல்ல, ருஹானா உள்ளே வந்தாள். கதவருகே நின்று கொண்டே “உங்களுக்கு நேரம் இருக்கா?” என கேட்க, ஆர்யன் தலையாட்ட, படிகளில் இறங்கி அருகே வந்தாள்.

பைலை பார்த்துக்கொண்டே “என்ன? சொல்லு” என்று அவன் கேட்க ருஹானா வெளியே போகும் விவரம் சொன்னாள். குனிந்துகொண்டே சரியென அவன் சொல்ல அவள் திரும்பி நடக்க “எப்படி போக போறே?” என அவன் சத்தமாக கேட்க அவன் புறம் திரும்பினாள். “நேத்து நடந்தது பார்த்தேல, அண்ணன் எவ்வளவு மோசமா பாதிக்கப்பட்டார்னு” என அவள் முகம் பார்த்து அவன் கேட்கவும் “ஆமா, நீங்க சொல்றது சரிதான். அம்ஜத் அண்ணாவை பார்த்ததிலிருந்து நான் அதிக கவனமா இருப்பேன். மாளிகைல இருந்து எப்பவும் கூப்பிடற டாக்ஸி கம்பெனில இருந்து தான் டாக்ஸி எடுக்கறேன்” என்று அவள் சொல்ல “அப்படியே செய்” என்று சொன்னவன் பைலில் கவனம் போல் பாவனை செய்தான்.

ருஹானா படியேறி கதவு அருகே சென்று அவனை திரும்பி பார்க்கும்வரை அப்படியே இருந்தான். அவள் கதவு சாத்தி சென்றதும் பைலை தள்ளிவைத்து நாற்காலியில் சாய்ந்து கவலையாய் யோசித்தான். அவள் காலடியோசை தேய்ந்து மறையும்வரை கதவையே பார்த்திருந்தான்.

———   

அம்ஜத்தை சிறுகுழந்தை போல அழைத்து வந்த கரீமா தோட்டத்திற்கு கூட்டி செல்ல முயல, அம்ஜத் முரண்டு செய்தான்.

“அம்ஜத் டியர்! ஏன் இப்படி தொல்லை செய்றீங்க? உங்களுக்கு பிடிச்ச கடிகாரம் கட்டி விட்டுருக்கேன். இதோ! நீங்க சொன்ன பச்சை ஜாக்கெட்டை அல்லல்பட்டு தேடி எடுத்துருக்கேன். இன்னும் என்ன செய்யணும்? ஏன் இப்படி அமைதி இல்லாம இருக்கீங்க?”

“எனக்கு ஆர்யனை பார்க்கணும்” என அம்ஜத் சொன்னதை கேட்டு அவள் பயந்துவிட்டாள்.

“எதுக்கு? ஏன்?” என அவள் கேட்க அம்ஜத் பதில் சொல்லவில்லை.

சிறிது யோசித்தவள் “சரி வாங்க.. நாம சைடு தோட்டத்துக்கு போகலாம். அங்கே நிறைய பூச்செடிகள் வந்திருக்கு. அதை நட்டு வைக்கலாம். ஆர்யனுக்கு பிடிக்கும்” என ஆசை காட்டினாள்.

“ஆர்யன் சந்தோசப்படுவானா?” என அம்ஜத் முகம் மலர கேட்க “ஆமா.. சாயந்தரம் அவன் ஆபீஸ்ல இருந்து திரும்பி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என அவள் அவன் மனதை மாற்ற அவனும் ஆனந்தமாக தலையாட்டினான்.

“சரி, நீங்க போங்க. நான் மண்வெட்டி எடுத்துட்டு பின்னாடியே வரேன். ஆனா நீங்க யார்கூடவும் பேசக்கூடாது. சரியா? யாராவது எதாவது கேட்டா என்கிட்டே வந்துடுங்க, என்ன? சர்ப்ரைஸ் வெளிய தெரியக்கூடாது. சரியா? இந்தாங்க இந்த ஜாக்கெட்டை போட்டுக்கங்க” என்று சொல்லி கொடுத்துவிட்டு அவள் கிச்சனுக்குள் சென்றாள்.

அம்ஜத் மாடிவளைவையும், தஸ்லீம் கீழே விழுந்த இடத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே நின்றான். தஸ்லீம் தடுமாறி மாடியிலிருந்து விழுந்தது அவன் கண்முன்னே தெரிந்தது.

Advertisement