Advertisement

முகமெல்லாம் சிவந்து போய் தலையில் கை வைத்துக்கொண்டு “ஸாரி! ஸாரி” என இருபது முறைக்கும் மேலாக அம்ஜத் புலம்பிக்கொண்டிருக்க, உள்ளே வந்த கரீமா கவலையுடன் அவன் அருகே அமர்ந்து கேட்டாள்.

“யாருக்கு கிட்டே ஸாரி கேட்கிறீங்க, அம்ஜத் டியர்?”

“ருஹானாவிடம்”

“ஏன்?”

“அவட்ட என்னால சொல்ல முடியல. நான் அவ கிட்டே சொல்லணும்”

“என்ன சொல்லணும்?”

திரும்பி கரீமாவை முறைத்த அம்ஜத் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவன் எண்ணங்கள் பின்னோக்கி போனது. தஸ்லீமை கரீமா மிரட்டியதும், ஆர்யனிடம் உண்மையை சொல்ல போன தஸ்லீமை அவள் கைப்பற்றி இழுத்ததும், அந்த போராட்டத்தில் தஸ்லீம் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்ததும் அவனை உருக்குலைத்தது.

தஸ்லீம் மரணத்துக்கு சாட்சியான அவன் “நான் பார்த்தேன். நீ தான் அவளை தள்ளிவிட்டே. தஸ்லீம் இனி இல்ல. அவ செத்துட்டா.. அவளும் போய்ட்டா.. ஏன்.. ஏன்.. நீ ஏன் அப்படி செய்தே?” என கத்த வேகமாக கதவை சாத்திய கரீமா “அம்ஜத் டியர்! நான் ஒன்னும் செய்யல. அவளே தான் தடுமாறி விழுந்தா” என பயத்துடன் சொன்னாள்.

“நான் அவளை காப்பாத்த தான் முயற்சி செய்தேன். நான் சாகடிப்பேனா? நான் கரீமா, உங்க மனைவி” என கரீமா, அம்ஜத் கையை பிடிக்க வர அவன் வெடுக்கென கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

“நான் பார்த்தேன். நீ அவளை தள்ளிவிடும்போது நான் பார்த்தேன். நீ கொலைகாரி” என அவளை தள்ளிவிட்டான்.

“இப்போ என்ன ஆகும்? இவானுக்கு அம்மா இல்ல. அவனோட நிம்மதி, அமைதி எல்லாம் போச்சி. எல்லாம் உன்னால. நீ தான்… நீ தான் செய்தே” என அவள் கழுத்தை பிடித்தான்

நடுங்கிபோன கரீமா மூச்சுக்கு தவிக்க, அம்ஜத் கன்னத்தில் ஒரு அறை வைத்தாள்.

“கரீமா! எல்லாம் போறாங்க! தஸ்லீமும் போறா!”

“நான் இருக்கேன், உங்களுக்காக.. நான் எப்பவும் இருப்பேன். ஐ லவ் யூ… நானும் தஸ்லீம் போல போகணுமா?“ என்று கரீமா மிரட்ட, அம்ஜத் கண்ணீருடன் தலையாட்டினான்.

“நீங்க ஆர்யன் கிட்டே நடந்ததை சொன்னீங்கனா, அவன் என்னை மாளிகையை விட்டு துரத்திடுவான். அம்ஜத்! அப்புறம் நீங்க தனியா தான் இருக்கணும். என்னை நீங்க திரும்ப பார்க்கவே முடியாது. என்னையும் இழக்க போறீங்களா?” என அவள் விடாமல் குரல் உயர்த்தி பேச, அம்ஜத் அழுதுக்கொண்டே இல்லை என மறுத்தான்.

“நைட்ல நீங்க பயந்து எழுந்திருக்கும் போது நான் இருக்க மாட்டேன். இதுக்கும் மேல நீங்க ஆர்யன்ட்ட சொல்லணும்னா சொல்லிக்கோங்க. நான் எதுவுமே செய்யலனாலும், நான் தான் செஞ்சேன்னு போய் சொல்லுங்க” என அவன் மூளையை மழுங்கடித்தாள்.

அம்ஜத் அலங்க மலங்க முழிக்க, அவன் தன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டான் என புரிந்துக்கொண்டவள், “அம்ஜத்! கவனமா கேளுங்க! இது ஒரு விபத்து! வெறும் விபத்து தான். நீங்க நம்ம அமைதியை கெடுக்க போறீங்களா?” என கேட்க, அம்ஜத் அதிர்ந்துப்போய் தலையாட்டினான்.

“சரி, சரி, நான் உங்க கூடவே இருக்கேன்” என அவனை அணைத்து ஆறுதல்படுத்தினாள். அவளும் ஆசுவாசமானாள்.

இப்போது கண்முன்னே அனைத்தையும் நினைவுப்படுத்திய அம்ஜத்க்கு தஸ்லீமின் மரணம் இன்று நடந்தது போல் தோன்றியது. “என்னாச்சி, அம்ஜத் டியர்?” என்ற கரீமாவின் கேள்விக்கு அவன் பதில் அளிக்கவில்லை.

“தஸ்லீம்! தஸ்லீம்! தஸ்லீம்” என ஆடிக்கொண்டே அமர்ந்திருந்தவனை பார்த்து கரீமாவுக்கு கிலி பிடித்தது.

“அம்ஜத்! அமைதியா இருங்க! என்னை பாருங்க”

கட்டிலில் இருந்து குதித்து எழுந்த அம்ஜத் “நீ தான் தஸ்லீமை தள்ளி விட்டே. நீ தான் அவளை சாகடிச்சே! நான் பார்த்தேன்” என விரல் நீட்டி குற்றம் சாட்டினான்.

பயமாய் அதிர்ந்து போன கரீமா வேகமாக எழுந்தாள். “பைத்தியக்காரத்தனமா பேசாதீங்க, அம்ஜத். அவளா தான் விழுந்தா. உங்களுக்கு ஞாபகம் இல்ல” என அவனை நெருங்கினாள்.

“என்கிட்டே வராதே! தள்ளி போ! நான் சொல்றேன். விலகி போ.. போ.. போ” என காட்டுக்கத்தல் கத்தினான்.

————

மாவு பிசைந்துகொண்டிருந்த ருஹானா, சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்யனிடம் பேச்சு கொடுத்தாள். “நான் செய்றது இவானுக்கு சர்ப்ரைஸ். லெமன் குக்கீ அவனுக்கு அதிகமா பிடிக்கும். புதுசான எலுமிச்சை பழம் கிடைச்சா இதோட சுவை இன்னும் நல்லா இருக்கும்” என அவள் சொல்ல, அவளை திரும்பி பார்த்தவன், பதிலேதும் சொல்லவில்லை.

அப்போது அவனுக்கு இருமல் வர “இருங்க! நான் தண்ணீ கொண்டு வரேன்” என்று ருஹானா மாவுக்கையை கழுவ போக அதற்குள் ஆர்யன் எழுந்து வந்திருந்தான். “நீ அதை முடி. நான் எடுத்துக்கறேன்” என தண்ணீர் பிடித்து குடித்தான்.

அவன் திரும்பவும் இரும, “இது சீரகப்பொடியால தான். அதான் உங்க தொண்டைல சிக்கிடுச்சி. மீதியை சாப்பிடாதீங்க. விட்ருங்க” என அவள் பாவமாய் சொல்ல, ஆர்யன் அவளை பார்த்துவிட்டு மீண்டும் பழைய இடத்துக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். சமையலில் நிபுணியான ருஹானா எப்படி மிளகுத்தூளுக்கு பதில் சீரகத்தூள் சேர்த்தாள்? அவளுக்கும் ஆர்யன் அருகில் பதட்டம் தானா?

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, பின் அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்தனர். அவள் கைப்பக்குவம் சுவைத்தபின் அவனால் சாப்பிடாமல் நிறுத்த முடியுமா? அவள் லெமன் குக்கீஸ் செய்து முடிக்கும்வரை அத்தனை மெதுவாக சாப்பிடுகிறானே, சுவை சரியில்லையா அல்லது அவளுடன் தனிமையில் நேரம் கழிக்கவா!

ஆம்லேட்டின் கடைசி பகுதியில் ஆர்யன் இருக்க, குக்கீ ட்ரேயில் வட்ட வட்டமாக அடுக்கிய ருஹானா சூடுபடுத்தப்பட்ட ஓவனில் அதை வைத்தாள். கையுறை இல்லாமல் அவள் ட்ரேயை உள்ளே தள்ளும்போது கையில் சுட்டுக்கொண்டாள்.

“ஆஆ!” என்ற அவளது சத்தத்தில் ஆர்யன் விரைந்து அவள் அருகே ஓடினான். “எங்க சூடுபட்டுச்சி?” என அவன் கேட்க உள்ளங்கையின் பின்புற ஓரத்தை அவள் காட்ட அந்த இடம் மிகவும் சிவந்திருந்தது. ஆர்யன் கையை நீட்டி அவள் கையை பிடிக்க போனவன் “குளிர் தண்ணில வைக்கணும்” என்றான்.

“தேவையில்ல.. இது சின்ன காயம் தான்”

“ஆனா வலிக்குமே!” என்று சொன்ன ஆர்யன் அவள் கையை பற்றி குழாய் அருகே அழைத்து சென்று காயத்தின் மேல் தண்ணீர் திறந்து விட்டான். நாயை வைத்து கடிக்க விட்டவன், இன்று அதே கை காயத்துக்கு பதட்டப்படுகிறான். அவனின் மாற்றம் அவனே உணரவில்லை.

ஆர்யன் பின்புறமாய் நின்று அவள் கையை பிடித்துக்கொண்டிருக்க, இருவரும் மிக அருகே நெருங்கி நின்ற நிலை அவளுக்கு தர்மசங்கடமாக இருக்க, ஆர்யன் அவள் பெரிய அழகிய கண்களை பார்த்தான்.

அப்போது “கரீமா! இல்ல.. இல்ல..“ என அம்ஜத்தின் அலறல் கேட்க இருவரும் மேலே ஓடினர்.

“எல்லாம் உன்னால தான். நீ தான் காரணம். நீ தான்” என அம்ஜத் எல்லா பொருட்களையும் உடைத்துக்கொண்டிருந்தான்.

“நீ தான் தஸ்லீமை கொன்னது.. நீ கொலைகாரி” என கத்திக்கொண்டே அலமாரியிலிருந்த துணிகளையெல்லாம் இறைத்து போட்டான்.

“நான் ஏதும் செய்யல. அது விபத்து. நீங்க கத்தாதீங்க” என கரீமா அழ…

“நீ தான்.. என் பக்கம் வராதே!” என கப்பை தூக்கி போட்டவன், அது உடைந்து சிதற “இப்படி தான் தஸ்லீம் கீழே விழுந்தா. நீ தான் தள்ளி விட்டே! நீ கொலைகாரி!” என கத்தியபடியே கீழே அமர்ந்தான்.

அப்போது வேகமாக கதவை திறந்துக்கொண்டு ஆர்யன் உள்ளே வந்தான். ருஹானாவும் பின்னே வந்தாள். அறையின் அலங்கோலத்தையும், அண்ணனின் கலங்கிய கோலத்தையும் பார்த்து திகைத்த ஆர்யன், பேயறைந்தது போல நின்ற கரீமாவை உற்று நோக்கினான்.

(தொடரும்)

Advertisement