Advertisement

மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள் சற்று நகர்ந்து சென்று பேச, அந்த சமயத்தில் ருஹானாவோடு அங்கே வந்த இவான் “சித்தப்பா!” என்று ஓடிவந்து அம்ஜத்தின் கழுத்தை கட்டிக்கொண்டான். அம்ஜத் பாசமுடன் அவனை முத்தமிட, ருஹானாவும் “காலை வணக்கம், அம்ஜத் அண்ணா” என்றாள். முதல்முறையாக அண்ணா என அவள் பாசத்துடன் அழைத்தாலும் அம்ஜத் அவளுக்கு மறுமொழி சொல்லவில்லை. அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“எப்படி இருக்கீங்க?” என அவள் மேலும் கேட்க, அம்ஜத் குற்ற உணர்ச்சியுடன் ருஹானாவை பார்த்தான். அதற்குள் அங்கே ஓடிவந்த கரீமா “நல்லா இருக்கார், ருஹானா. லேசா சோர்வு. சாராவிடம் மூலிகை தேநீர் தயாரிக்க சொல்லி இருக்கேன். அது குடிச்சா சரியாகிடுவார்” என அம்ஜத்தின் முழங்கையை பிடித்துக்கொண்டு பதிலளித்தாள்.

“வாங்க அம்ஜத்! போய் டீ குடிக்கலாம்” என அவனை பேச விடாமல் நகர்த்த பார்க்க, இவான் ஓடிவந்து அம்ஜத் கையை பிடித்தான். “நான் சித்தப்பாவுக்கு தோட்டத்தில உதவி செய்யலாம்னு வந்தேனே!” கரீமா “சித்தப்பா சோர்வா இருக்கார், இவான் டியர். நீ அப்புறம் வந்து உதவி செய்” என்று அம்ஜத்தை கையோடு கூட்டி சென்றாள். இவான் கவலையோடு பார்க்க, ருஹானா ஒன்றும் புரியாமல் நின்றாள்.

———

“லிட்டில் சாருக்கு இப்போ சூப் வேணுமா? நான் இந்த மாவை விட்டுட்டு வந்தா எழும்பி வராதே” என மாவு பிசைந்துகொண்டே சாரா வருத்தப்பட, புன்னகையுடன் ருஹானா சூப் செய்ய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினாள். “அவனுக்கு எப்படி இப்போ எசோகிலின் சூப் ஞாபகம் வந்ததுன்னு தெரியல” என வியந்த ருஹானா “இவான் ஆசைப்பட்டான்ல, நான் இப்பவே செய்றேன்” என சொல்ல “செய் செய் மகளே! நீ இல்லாதபோது இவான் சார் சரியாவே சாப்பிட மாட்டார். அல்லாஹ் கருணை நீ இங்க வந்தது. இப்போ தான் அவர் முகத்துல சிரிப்பு வருது” என்று சாரா மகிழ “எனக்கும் அவன் கூட இருக்கறது தான் சந்தோசம்” என ருஹானா பதில் சொன்னாள்.

சூப்புக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு ருஹானா செய்துக் கொண்டிருக்கும்போது சல்மா உள்ளே வந்து “ரெண்டுபேரும் சமையல் செய்றீங்களா?” என கேட்டாள் ருஹானா வரவேற்பாய் தலையாட்ட, சாரா “எதும் வேணுமா, சல்மா மேம்?” என்று கேட்டார்.

சல்மா பதில் சொல்லும்முன் ருஹானாவின் கையிலிருந்த பாத்திரம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது. ருஹானா சங்கடத்துடன் அதை எடுக்க “நல்லவேளை, அம்ஜத் மச்சான் இதை கேட்கல. அதிர்ந்து போயிருப்பார்” என சல்மா சொல்ல “இது என் தவறு தான்” என ருஹானா சொல்ல “எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல. அம்ஜத் மச்சானுக்கு தான் சிக்கல். அவர் அதிகமா உணர்ச்சிவசப் படக்கூடியவர். ஏற்கனவே இப்போ நடந்த நிகழ்ச்சியால பாதிக்கப்பட்டு இருக்கார்” என புகார் படிக்க, சாரா சல்மாவை விசித்திரமாக பார்த்தார்.

“இப்படியெல்லாம் நடக்கணும்னு நானும் ஆசைப்படல. எதிர்பார்க்காம நடந்ததுக்கு நானும் அம்ஜத் அண்ணாக்காக வருத்தப்படறேன்” என குன்றிய முகத்துடன் ருஹானா சொல்ல, அப்போதுதான் சல்மாவுக்கு நிம்மதியானது.

“எனக்கு காபி வேணும், சாரா” என சல்மா சொல்ல “இதோ இப்பவே தரேன்” என சாரா மாவுக்கையை கழுவ போக அவரை தடுத்த சல்மா “உன்னால எனக்கு காபி போட்டு தர முடியுமா?” என ருஹானாவிடம் கேட்டாள். “நான் போட்டு தரேன்” என ருஹானா சொல்ல “என் ரூம்க்கு எடுத்துட்டு வந்துடு” என தோளை குலுக்கி சல்மா நகர்ந்தாள்.

“விடு, நானே போடுறேன்” என சாரா முன்வர, “நீங்க வேலையை பாருங்க. நான் சீக்கிரம் செஞ்சிடுவேன்” என ருஹானா சொன்னபடி காபி தயாரிக்க, இவானின் சித்தியை சல்மா வேலைக்காரியாக நடத்துவதை பார்த்து சாரா மனம் வருந்தினார்.

———

ஆர்யனின் அலுவலகத்தில் ரஷீத்துடன் வேலையில் ஆர்யன் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, வேலை முடிந்ததும் “ஆர்யன்! யாசின் ஊரை விட்டே போய்ட்டான். வாடிக்கையாளர்களுக்கு சரக்கு சப்ளை செய்ய முடியாதுன்னு தகவல் அனுப்பி இருக்கான். அவனுக்கு சரியான பாடம் சொல்லி தந்தீங்க” என்று பாராட்டிய ரஷீத் மகிழ்வுடன் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.

ஆர்யன் தன் முன்னே இருந்த காபி கோப்பையை கையில் எடுக்கவும், காலையில் ருஹானா அழகாக நடந்து வந்து காபி தந்ததும், பேசியதும் அவன் நினைவுக்கு வந்தது. எடுத்த கோப்பையை கீழே வைத்துவிட்டு அவளிடம் சென்ற மனதை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேலையில் நிறுத்தினான்.

———-

சமையலறை சிறிய மேசையில் அமர்ந்து வாடிப்போன செடிக்கு மருந்து தெளித்துக்கொண்டிருந்த அம்ஜத் பதட்டமாகவே காணப்பட்டான். “போகாதே! போகாதே! என்னை விட்டு போகாதே! அப்புறம் நானும் கவலைப்படுவேன்” என அவன் புலம்ப, இவானுக்கு சூப் கொடுத்து திரும்பிய ருஹானா அம்ஜத் அழுகை கேட்டு கிண்ணத்தை வைத்துவிட்டு வேகமாக அவன் அருகே வந்தாள்.

“அம்ஜத் அண்ணா! என்ன நடந்தது?”

“ருஹானா!” என அழைத்த அம்ஜத் அவளை பார்க்காமல் குனிந்து கொண்டான்.

“ஸாரி! ரொம்ப ஸாரி! என்னை மன்னிச்சிடு! மன்னிச்சிடு! மன்னிச்சிடு!”

“ஏன் இப்படி பேசுறீங்க, அம்ஜத் அண்ணா? ஸாரி சொல்ல என்ன இருக்கு?” குழப்பம் அவளுக்கு.

“நீ போனதும்… நீ போனதும் நான் ரொம்ப பயந்திட்டேன்…. பயந்திட்டேன்.. நீயும் தஸ்லீம் போல…” கைகளை இறுக்கமாக மடித்து கண்களை மூடிக்கொண்டான், அந்த காட்சியை காண்பவன் போல.

“தஸ்லீம் போல.. உன் அக்காவை போல… நீயும் திரும்பி வர மாட்டியோன்னு நடுங்கி போயிட்டேன்.. பயந்து போயிட்டேன்”

“அம்ஜத் அண்ணா! இங்க பாருங்க! எனக்கு ஒன்னும் ஆகல! நான் நல்லா இருக்கேன்”

கைகளை முகத்தில் தேய்த்துக்கொண்டு அம்ஜத் விடாமல் மூச்சு விட “இருங்க, உங்களுக்கு தண்ணி கொண்டு வரேன்” என ருஹானா வேகமாக ஓடினாள்.

தண்ணீர் எடுத்துக்கொண்டு அவள் திரும்ப அங்கே அம்ஜத்தை காணவில்லை. ருஹானா திகைத்து போய் நின்றாள்.

———

வானத்தில் அழகாய் ஜொலித்த வெண்ணிலாவை கருமேகம் வந்து மூட, அதன் அழகை ரசிக்காமல் இருளை வெறித்தபடி நின்றிருந்தான், ஆர்யன். கதவு தட்டப்படவும் கவனம் கலைந்து திரும்பிய ஆர்யனை ஜாஃபர் இரவு உணவு உண்ண அழைக்க ஆர்யன் பசியில்லை என மறுத்தான். ருஹானாவை பார்ப்பதை தவிர்க்க அவன் நினைக்க “நீங்க நல்லா இருக்கீங்க தானே? சாரா உங்களுக்காக மன்ட்டி செஞ்சிருக்காங்க” என்று ஜாஃபர் வற்புறுத்த, “எனக்கு வேலை இருக்கு. எனக்காக மத்தவங்க காத்திருக்க வேண்டாம். சாப்பிட சொல்லுங்க” என கட்டளையாக ஆர்யன் குரல் ஒலிக்க, சரியென பணிந்து ஜாஃபர் வெளியே சென்றான்.

மேசைக்கு முன் சென்று நாற்காலியில் அமர்ந்த ஆர்யன் எழுதுவதற்காக பேனாவை எடுக்க, விரல்களில் அப்போதும் படிந்திருந்த மை கறையை கவனித்தவன், காலையில் சமையலறையில் பார்த்த ருஹானாவின் முகவடிவை மனதில் கொண்டுவந்தான். அப்புறம் எங்கே வேலை செய்ய? அந்த நினைவுகளிலேயே மூழ்கி போனான்.

ஆர்யன் அறையிலிருந்து வெளியே வந்த ஜாஃபரை எதிர்கொண்ட கரீமா கேட்டாள். “என்ன ஜாஃபர்? ஆர்யனை சாப்பிட கூப்பிட வந்தீங்களா?”

“ஆமா, கரீமா மேம்! சார் சாப்பிட வரல. அவருக்காக காத்திருக்க வேணாம்னு சொன்னார்”

“ஓ! அம்ஜத்துக்கும் பசிக்கலையாம். நீங்க அப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு ரூம்க்கு அனுப்பிடுங்க”

“சரி மேம்” என்று சொல்லி ஜாஃபர் கீழே சென்றான்.

தஸ்லீம் மரணம் பற்றி அம்ஜத் ஏதும் உளறிவிடுவானோ என கரீமா அவனை அடை காக்க, ஆர்யன் தன் மனதை அடக்க ருஹானாவை சந்திப்பதை மறுக்க, அந்த பெரிய உணவு மேசை ஆள் அரவம் இன்றி சோகமாய் கிடந்தது.

————-

சமையலறையில் ருஹானா காரட் சீவிக்கொண்டிருக்க, “சாரா! எனக்கு ஒரு ஆம்லேட் செய்ங்க” என சத்தமாக கேட்டபடி சட்டை கை பட்டனை குனிந்து போட்டுக்கொண்டே ஆர்யன் உள்ளே நுழைந்தான். நிமிர்ந்து பார்த்தவன் ருஹானாவை கண்டதும் இனிதாக அதிர்ந்தான். “சாரா அக்கா தூங்க போய்ட்டாங்க. நான் உங்களுக்கு போட்டு தரேன்” என்று ருஹானா சொல்லவும் “இல்ல.. வேணாம்.. குட்நைட்..“ என்று வாசல் புறம் திரும்பினான்.

“தயவு செய்து என்னை செய்ய அனுமதிங்க” என ருஹானா சொல்லவும், அவள் புறம் திரும்பினான். அதற்குள் இரண்டு முட்டைகளை எடுத்து ருஹானா உடைக்கவும் அவளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தான். அவளை தாண்டி நடந்து மேசையில் அமர போனவன் அங்கிருந்து அவள் நன்றாக தெரிகிறாளா என்று பார்த்து நாற்காலியில் அமர்ந்தான்.

ருஹானாவை பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தவன், காலை உணவும், இரவு உணவும் தவிர்த்தவன், மைக்கறையுடனும் பசியுடனும் நாள் முழுவதும் இருந்தவன்,  அவளை பார்க்கமுடியாதபடி பின்புறம் திரும்பி அமர வேண்டியது தானே! பக்கவாட்டில் அவள் தரிசனம் கிடைக்கும்படி ஏன் அமர வேண்டும்? இப்படி அவளை பார்த்துக்கொண்டே இருந்தால், சையத் பாபாவிற்கு என்ன பதில் சொல்வான்? அவன் மனசாட்சியை எப்படி சமாதானப்படுத்துவான்?

ருஹானா முட்டைகளை நன்கு அடித்துவிட்டு கைகளை கழுவினாள்.

இவன் போனை வைத்துக்கொண்டு பார்வையை மட்டும் அதில் பதித்தான்.

ருஹானா குளிர்சாதனப்பெட்டி அருகே சென்றாள்.

இவன் மெதுவாக திரும்பி அவளை பார்த்தான்.

பச்சை, சிவப்பு நிற குடைமிளகாய்களை எடுத்துக்கொண்டு அவள் திரும்பினாள்.

இவனும் திரும்பிக்கொண்டான். போனை நோக்கினான்.

அவள் குடைமிளகாய்களை குழாயில் கழுவினாள்.

அவன் கண்கள் தானாக அவளை நோக்க முகம் சுருக்கி தலை திருப்பினான்.

வேலையே கண்ணாய் ருஹானா அழகழகாய் வெட்ட ஆரம்பித்தாள்.

ஆர்யன் நன்கு திரும்பி முகம் மென்மையுற அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

இரு வாணலிகளை அடுப்பில் வைத்தவள் அதில் எண்ணெய் ஊற்றினாள்.

இவன் ஆசைத்தீ எண்ணெய் இல்லாமலே கொழுந்துவிட்டு எரிந்தது.

அவள் இவனை நிமிர்ந்து பார்க்கும்முன் இவன் தலை போன் நோக்கி குனிந்தது.

கத்தியும், முள்கரண்டியும் கொண்டு வந்து அவன் முன்னே வைத்தாள்.

அருகில் வந்த அவளை தலை தூக்கி இன்னும் அருகே கண்டு களித்தான்.

ஒருபக்கம் மிளகாய்களை வதக்கியவள், மறுபக்கம் முட்டையை ஊற்றினாள்.

அவள் கைகளையும், முக பாவனைகளையும் அவன் ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

வேகும் சமயம் அவனை மீண்டும் அவள் பார்க்க, அவன் அவசர அவசரமாக திரும்பிக் கொண்டான்.

எல்லாவற்றையும் சேர்த்து நடுவில் ஒரு கொத்தமல்லி இலையும் வைத்து அலங்கரித்து அவன் முன்னே வைத்தவள் “இனிய உணவு! இன்ஷா அல்லாஹ்! இது உங்களுக்கு பிடித்த மாதிரி அமையட்டும்” என்றாள்.

வழக்கம்போல அவள் அடுப்பருகே செல்லும்வரை அவளையே பார்த்தவன், சாப்பிட ஆயத்தமானான்.

உப்பு தூள், மற்ற தூள் டப்பாக்களை இருந்த இடத்தில் அடுக்கியவள், கையில் இருந்த ஒரு டப்பாவை பார்த்து திகைத்தாள்.

“நிறுத்துங்க! சாப்பிடாதீங்க!” என்று ஓடிவந்து அவன் முன்னே இருந்த தட்டை எடுத்தாள்.

வியந்து போய் அவளை ஆர்யன் பார்க்க “மிளகுத்தூளுக்கு பதில் சீரகத்தூள் போட்டுட்டேன். இது நல்லா இருக்காது. நான் வேற செய்து தரேன்” என அவள் சொல்ல, ஆர்யன் அவள் கையில் இருந்த தட்டை பிடுங்கினான்.

“நான் இதே சாப்பிடுறேன்”

“இல்ல. இதுல சீரகம் இருக்கு” என அவளும் தட்டை இழுத்தாள்.

“எனக்கு சீரகம் ரொம்ப பிடிக்கும்” என அவன் புருவம் உயர்த்தி சொல்ல, அவள் தட்டை விட்டுவிட்டாள்.

“நான் இன்னொரு முறை செய்யக்கூடாதுன்னு தானே நீங்க இப்படி சொல்றீங்க?” என அவள் கேட்க, அவனோ அதற்கு பதில் சொல்லாமல் கத்தியால் வெட்டி ஒரு துண்டை வாயிலிட்டு சுவைத்தான்.

ருஹானா அவன் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருக்க “நிஜமாவே அதிக ருசியா இருக்கு” என்று ஆர்யன் சொல்லிவிட்டு மேலும் சாப்பிட முனைந்தான்.

அடுப்பு மேடை அருகே சென்றவள், திரும்ப ஒரு டப்பாவை கொண்டு வந்தாள். தயக்கத்துடன் “இது மிளகுத்தூள்” என்று அவள் சொல்ல, அவள் முகத்தையும், டப்பாவையும் பார்த்துவிட்டு “உறுதியா தெரியுமா?” என ஆர்யன் சிரிக்காமல் கேட்க, ருஹானா சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையாட்டினாள்.

அவனும் சரியென தலையாட்ட, அருகே வந்து குனிந்து மிளகுத்தூளை மெதுவாக தூவினாள்.

அவள் கன்னங்களையும், முன்னால் வந்து விழுந்த கூந்தலையும் பிரமித்து பார்த்தவன், தன்னை தானே கடிந்துக்கொண்டு குனிந்துகொண்டான்.

ருஹானா அடுப்பு அருகே சென்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க போனவள், அவன் தன்னை பார்ப்பது கண்டு “நீங்க வசதியா உக்காந்து சாப்பிடுங்க. நான் அப்புறம் வந்து வேலை பார்க்கறேன்” என்று நகர போனாள்.

“இல்ல.. நீ உன் வேலைய பாரு. ஒன்னும் பிரச்சனை இல்ல” என ஆர்யன் சொல்ல ருஹானா சரியென தலையசைத்தாள். ‘நீ வேலையை பார். நான் உன்னை பார்க்கிறேன்’ என அவன் ஆசைமனம் கும்மாளம் போடுமோ?

மனதை அதட்டி அடக்கிவிட்டு தலை திருப்பாமல் அவன் சாப்பிட, இப்போது ருஹானா அவனை பார்க்க ஆரம்பித்தாள், ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டே.

சாப்பிட்டுக்கொண்டே இருந்தவனுக்கு தன் மேல் விழும் அவள் பார்வையின் வீச்சும் உணர முடிய ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். அவளுக்கும் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருக்குமோ என யோசித்தவனுக்கு அது ஏற்புடையதாக இல்லை. தன்னுடைய மனதையே புரிந்துக்கொள்ளாதவன், பெண்களை அடியோடு வெறுப்பவன், அன்பின் வழி அறியாதவன் அதை வரவேற்கவில்லை.

————

Advertisement