Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                       அத்தியாயம் – 31

‘ஆர்யனின் உள்ளே மறைந்திருக்கும் நல்ல குணம் தான் ருஹானாவை காப்பாற்ற வேண்டி அவன் எதிரியிடம் மன்னிப்பு கேட்க வைத்தது’ என சையத்  சொல்ல, ஆர்யன் மனக்கண்ணில் ருஹானா கதறலோடு தன்னிடம் ஆறுதல் தேடி அணைத்து கொண்டது படமாய் விரிந்தது. அந்த நினைவில் மூழ்கியவன் சாப்பிடவும் மறந்து கையிலிருந்த கத்தியையும் தவற விட்டான். அது கிளிங் என்ற சத்தத்துடன் கீழே விழ, அதன் சத்தத்தில் தான் இருக்கும் இடம் உணர்ந்தவன் தன்னையே உற்று பார்த்துக் கொண்டிருக்கும் சையத்தை பார்த்து மறுத்து தலையாட்டினான்.

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவன் “அது அப்படி இல்ல, சையத் பாபா. நான் என்னோட எந்த கோட்பாட்டையும் மாத்திக்கல. விட்டும் விலகல. நான் செய்தது எல்லாம்…“ என சற்று பேச்சை நிறுத்த, சையத் புருவம் உயர்த்தி ஆர்யனின் பேச்சை கவனிக்க “நான் செய்ததெல்லாமே இவானுக்காக தான்” என்று சொன்னான். மன்னிப்பு கேட்டது, அவளை காப்பாற்றியது, எதிரியை கொல்லாமல் விட்டது அனைத்தும் அண்ணன் மகனிற்காக என ஆர்யனின் வாய் சொன்னாலும் மனமோ அவளின் நெருக்கத்திலேயே நின்றது.

சையத் நம்பாமல் பார்க்க, ஆர்யனோ தான் சொன்னதை உறுதிப்படுத்த விழைந்தான். “இவானுக்கு ஐந்து வயசு தான். அப்பாவை இழந்தவன். இப்போ அம்மாவையும் இழந்துட்டான். இன்னும் எத்தனை இறப்புகள் தான் அவன் தாங்குவான்? என்னால அவனுக்கு அந்த வேதனையை தர முடியாது. அவனோட வலியை விட என்னோட பெருமை எனக்கு பெருசா தெரியல. ‘உனக்கு இதுல ஏதாவது வருத்தம் இருக்கா?’ன்னு நீங்க கேட்டீங்கன்னா, எனக்கு கண்டிப்பா இல்ல” என தலை அசைத்தான்

“நீ செய்தது சரி தான் மகனே! கெட்டதுக்கு பதிலா கெட்டது செய்றது தப்பு. உண்மை தான் வாழ்க்கையின் வழி. நீ செய்தது பவித்ரமானது. அவன் வேணும்னா அதை பெருமையா நினைச்சிட்டு போகட்டும்” என சையத் அவனை ஒட்டியே பேச, ஆர்யன் சரி என தலையசைத்து “நான் கிளம்பறேன், சையத் பாபா” என எழுந்தான்.

“நீ சரியா சாப்பிடலயே” என அவர் கேட்க “போதும்! வயிறு நிறைஞ்சிடுச்சி” என ஆர்யன் சொல்ல “சரி, உன்னை பார்த்துக்கோ” என சையத் விடை கொடுத்தார். காரில் ஏறி புறப்பட்டவன் சையத் சொன்னவற்றை நினைத்து கொண்டே காரை செலுத்தினான்

————-

காலையில் சமையலறையில் பால் காய்த்து கொண்டு இருந்த ருஹானாவின் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியாக தோட்டத்துக்கு சென்றது. அங்கே ஒரு நாற்காலியில் கை மேல் தலை சாய்த்து சோர்வாக ஆர்யன் அமர்ந்திருந்தான். ஏதோ யோசித்தவளாக இரண்டு கோப்பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

வாசல் அருகே சற்று தயங்கியவள், பின் ஆர்யனை நோக்கி நடந்தாள். அவள் வரும் அரவம் கேட்டு திரும்பிய ஆர்யன் அன்ன நடை நடந்து வருபவளை பார்த்துக்கொண்டே இருந்தான், பக்கம் வரும்வரை. அவள் அருகே வர, இவன் தலையை திருப்பிக்கொண்டான்.

“இவானுக்கு பால் சூடுப்படுத்தினேன்” என அவள் சொல்லவும், அவன் தலை உயர்த்தி அவளை பார்க்க “இது அவனுக்கு, இது உங்களுக்கு” என ஒரு கோப்பையை ஆர்யன் புறம் நீட்டினாள். “பால் சேர்த்த காபி” என சொல்லி அவன் முகம் பார்க்க, நீட்டிய கோப்பையை வாங்காமல் அவனும் அவளையே நோக்க “இது தூக்கம் இல்லாம இருந்ததுக்கு இதமா இருக்கும்” என சொல்ல, ஆர்யனுக்கு ஆச்சர்யமானது.

‘நேற்றிரவு நான் தூங்காம இருந்தது இவளுக்கு இப்படி தெரியும்?’ என ஆர்யனின் வியந்த பார்வை அவள் மேல் பாய “நீங்க எனக்காக செய்தது மிகப் பெரிய செயல்” என்று அவள் உணர்ந்து சொல்ல, லேசான தலையசைப்பு மட்டும் அவனிடம். ‘உனக்காக இல்லை. இவானுக்காகத் தான்’ என்று இப்போது அவளிடம் சொல்ல வேண்டியது தானே! சையத்திடம் சொன்னது இவளிடம் ஏன் சொல்ல முடியவில்லை?

அவன் காபியை வாங்காததால், முன்னே நீண்டிருந்த கையை அவள் பின்னே இழுக்க, ஆர்யன் வேகமாக கை நீட்டி காபி கப்பை பிடித்தான். கப்பிலிருந்து தன் கையை விடுவித்தவள், “புது போனுக்கும் நன்றி” என்றாள். அவனிடமிருந்து ஒரு அசைவும் இல்லை. மெல்ல திரும்பி அவள் நடக்க, செல்லும் அவளையே அவன் பார்க்க, மேலிருந்து சல்மா இந்த இனிய காட்சியைக் கண்டு வயிறெரிந்தாள்.

———-

முகச்சுளிப்புடன் தூங்கிக்கொண்டு இருந்த அம்ஜத் “தஸ்லீம்! தஸ்லீம்!” என கண் திறக்காமல் கத்தினான். பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த கரீமா படக்கென்று முழிக்க அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு பக்கென்றானது.

“அம்ஜத்! கண்ணை திறங்க! எழுந்திருங்க”

“தஸ்லீம்! ருஹானா!”

“என்ன ஆச்சு, அம்ஜத்? நீங்க ஓகே தானே”

எழுந்து அமர்ந்த அம்ஜத் “நான் கனவு கண்டேன். தஸ்லீம் போல ருஹானாவும் இறந்து போறா” என சொல்லி தலைமுடியை பிய்த்துக் கொண்டான்.

“அது கனவுல தானே! கவலைப்படாதீங்க”

“இல்ல.. அவளும் சாகப்போறா”

“கனவு தான் அம்ஜத். நிஜத்தில இல்ல”

“கனவு தானா? ருஹானா வீட்ல இருக்காளா?”

“ஆமா! அவ வரும்போது பாருங்க”

“ருஹானா இருக்கா” என பலமுறை அம்ஜத் சொல்ல

“நீங்க எழுந்து போய் குளிச்சிட்டு வாங்க” என சல்மா அவனை அனுப்பினாள்.

அப்போது கதவை திறந்து கொண்டு வந்த சல்மா “அக்கா! எழுந்திட்டியா? விடியக்காலைல அந்த பொண்ணும், ஆர்யனும் தோட்டத்துல தனியா பேசிட்டு இருந்தாங்க” என்று படபடத்தாள். இவள் மேலே இருந்து சரியாக கவனிக்கவில்லை போல. அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!

“நீ போ! அப்புறம் பேசலாம்” என கரீமா அவளை அனுப்ப பார்க்க “நீ இப்படியே விட்டா அவ இந்த வீட்டையே மாத்திடுவா. நாம ஏதாவது செய்தாகணும்” என சல்மா எரிச்சல்பட, குளியல் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு தங்கையை வெளியே தள்ளினாள், கரீமா.

———–

அலுவலக கோப்புகளை சரிபார்த்து எடுத்து அலுவலக பையில் அடுக்கிய ஆர்யன், வெளியே செல்ல கதவருகே வர, வெளியே ருஹானா இவானுடன்  பேசும் சத்தம் கேட்டு கதவு திறக்காமல் அப்படியே நின்றான்.

“தோட்டத்துல வேர்வை வர்ற அளவுக்கு ஓடக்கூடாது, சரியா அன்பே?”

“சரி சித்தி! கதைல வர்ற ஆமை மாதிரி நடக்கிறேன், போதுமா?

“பந்து எடுத்துக்கோ! கீழே விழாம கவனமா விளையாடணும், செல்லம்”

“சரி சித்தி”

சையத் சொன்னதை பொய்ப்பிக்க ருஹானாவை பார்க்க கூடாது என முடிவெடுத்தவன் அவர்கள் செல்லும்வரை உள்ளேயே இருந்தான். ஆனாலும் அவளை பார்க்கவேண்டும், அவர்கள் பேச்சில் தானும் கலந்துக்கொள்ள வேண்டும் என ஆசை அடித்துக்கொண்டது. அவன் இதயத்துக்கும் மூளைக்கும் சண்டை நடக்க, கை திறந்திருந்த பேனாவை அழுத்தி பிடிக்க விரல்களில் மைக்கறை படிந்தது.

பேசிக்கொண்டே நடந்த இருவரும் படிகளில் இறங்கிக்கொண்டே “சித்தி! நாம கால்பந்து விளையாடலாமா? நீங்க கோல்கீப்பர். நான் கோல் அடிக்கிறேன்” என இவான் சொன்னான்.

“சரி அன்பே! விளையாடலாம்”

“நான் நிறைய கோல் அடிப்பேன். நாலு கோல் கண்டிப்பா அடிப்பேன்”

“ஆஹ்ஹா! பார்க்கலாம்” என்றபடி சமையலறையில் நுழைந்தனர்.

அவர்கள் பின்னால் சற்று தள்ளி இறங்கி வந்த ஆர்யன் காலை உணவு சாப்பிடாமல் அப்படியே வெளியே செல்ல போனவன் தன் கையின் கறையை பார்த்தான். ருஹானாவும், இவானும் தோட்டத்திற்கு தானே போனார்கள் என்ற அனுமானத்தில் கையை கழுவ சமையலறைக்கு சென்றான்.

அங்கே ருஹானா இவானுக்கு தண்ணீர் கொடுத்தபடி “இவ்வளவு தாகமா உனக்கு?” என்று சொல்ல, அங்கே அத்தனை பேர் இருக்க, அவளை தான் ஆர்யன் முதலில் பார்த்தான். தண்ணீர் குடித்து முடித்த இவான் “யானை போல நான் தண்ணி குடிக்கிறேன்ல, சித்தி” என சிரிக்க, ருஹானாவும் சிரித்தாள்.

சாராவும், நஸ்ரியாவும் அடுப்பில் வேலை செய்ய, ஜாஃபர் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க, தயங்கியபடி நின்ற ஆர்யனை இவான் பார்த்துவிட்டு “சித்தப்பா!” என சிரிப்புடன் அழைக்க, ருஹானா திரும்பி பார்க்க ஆர்யன் உள்ளே வந்தான்.

எழுந்து கொண்ட ஜாஃபர் “எதும் தேவையா, சார்?” என கேட்க “அது இன்னைக்கு செய்தித்தாளா?” என்று ஆர்யன் கேட்டதும் “ஆமா, சார்” என்று ஜாஃபர் அதை எடுத்து நீட்ட ஆர்யன் அதை வாங்கிக்கொண்டான். குனிந்து நின்ற ருஹானாவை ஓரக்கண்ணால் பார்த்தவன், பின் இவானை நோக்கி “சிங்கப்பையா! ஒழுங்கா சாப்பிடணும், சரியா?” என கேட்க, இவானும் “சரி சித்தப்பா” என்றான்.

கை கழுவ உள்ளே சென்றவன் அவளை பார்த்ததும் செய்தித்தாளை வாங்கிக்கொண்டு, மறுபடியும் அவளை ஒருமுறை நோக்கிவிட்டு வெளியே சென்றவன் கறையையும், தினசரியையும் பார்த்து நின்றான்.

அன்பு மனம் உணர்வதை 

அறிவு ஒப்புக்கொள்ள மறுக்கும்

சிறகுக்காகத்தான் என நடிக்கும்

விழி வழிபட துடிக்கும்

இதயம் மயங்கியே கிடக்கும்

இராட்சச அறிவு மறுத்து மறுத்து 

விலகி ஓடிட தவிக்கும்.

————

Advertisement