Advertisement

அவள் பேசுவதை உற்றுக் கேட்ட ஆர்யன் கண் இமைகளை தட்டிக் கொண்டான். ரஷீத்திடம் ஏதோ சொல்ல வந்தவன், பின் ருஹானாவை பார்த்து “சரி, நான் எங்கயும் போகல” என்று சொல்ல, கரீமாவின் புருவங்கள் திகைப்பில் மேலே ஏறியது. போக விடாமல் தடுத்த ருஹானாவுக்குமே நம்ப முடியவில்லை. அவளுக்கு மட்டுமா, சொன்ன அவனுக்கே வியப்பு தான். தன் ஆச்சர்ய பார்வையை மாற்றிக்கொண்ட ருஹானா “நான் போய் இவானை பார்க்கறேன். என்னை தேடிட்டு இருப்பான்” என்று சமாளித்தாள்.

ஆர்யன் தலையாட்டவும் திரும்பி நடந்த ருஹானாவையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை பார்த்திருந்த ரஷீத் “இப்போ நாம என்ன செய்ய போறோம்?” என கேட்டான்.

———-

நஸ்ரியா இவானுக்கு உடை மாற்றிக்கொண்டிருக்க, உள்ளே வந்த சித்தியை பார்த்து இவான் சிரித்தான். ருஹானா நஸ்ரியாவுக்கு நன்றி சொல்ல அவள் இவள் நலம் விசாரித்தாள். ருஹானா நன்றாக இருப்பதாக சொல்லவும் நஸ்ரியா வெளியே சென்றாள்.

“இவான் செல்லம் தூங்க போறீங்களா?” என ருஹானா கேட்க ஆமென தலையாட்டிய இவான் “சித்தி! நீங்க குளிச்சீங்களா? உங்க மேல இருந்த அழுக்குலாம் போய்டுச்சே! எப்படி சித்தி உங்க முகம் பூரா மண்ணாச்சி?” என இவான் கேட்க, மிஷால் உணவகத்தில் சமைக்க காய்கறிகள் பறிக்க தோட்டம் போனதாகவும், அங்கே கீழே விழுந்துவிட்டதாகவும், அங்கே பார்த்த செடிகொடிகளை அவள் பெரியதாக விவரிக்க கேட்டுக்கொண்டிருந்த இவான் தூங்கிவிட்டான்.

அப்போது உள்ளே வந்த ஆர்யன் இவான் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து நிம்மதியடைந்தான். பின் ருஹானாவை பார்த்து “என்கூட வர முடியுமா?” என அவன் கேட்க அவளும் சம்மதித்தாள். இருவரும் இவான் அறையை விட்டு வெளியே சென்றனர்.

——–

கரீமா அம்ஜத்துக்கு மாத்திரை எடுத்துக்கொண்டே ருஹானா ஆர்யனை வெளியே செல்ல விடாமல் தடுத்ததையும், ஆர்யன் அவள் சொல்பேச்சு கேட்டதையும் நினைத்துக்கொண்டிருக்க, உள்ளே வந்த சல்மா “என்னக்கா, இந்த மாளிகையோட மகிழ்ச்சி ஊற்று திரும்ப வந்துடுச்சா?” என சலித்துக்கொண்டே எதிரே அமர்ந்தாள்.

கரீமாவிடம் பதில் வராததால் “எல்லாரும் சந்தோசமா இருக்காங்க… சரி, உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே?” என சல்மா கேட்க “நான் ஆசைப்பட்டேன், அந்த பொண்ணு …..“ என சொல்லிக்கொண்டு இருக்கும்போது அம்ஜத் உள்ளே வந்தவன் சல்மாவை பார்த்து “சல்மா! உனக்கு தெரியுமா, இவான் சித்தி வந்துட்டா” என சிரிப்புடன் சொன்னான். 

சல்மா அவனிடம் பொய்யாய் புன்னகைக்க, கரீமா அவனை மாத்திரை சாப்பிட அழைத்தாள். “ரெண்டு நாளா நீங்க தூங்கல. இதை போட்டுட்டு தூங்குங்க” என கரீமா சொல்ல சல்மா எழுந்து வெளியே செல்ல, அம்ஜத் மாத்திரை போட்டு மகிழ்வுடன் படுக்க சென்றான்.

——— 

ஆர்யன் ருஹானாவை அழைத்து வந்தது, அவர்கள் மாளிகை நிலவறைக்கு. அந்த இடத்தை பயத்துடன் பார்த்த ருஹானா, அங்கே ரஷீத்தும் இருப்பதை கவனித்தாள். “இங்க ஏன் வந்துருக்கோம்?” என அவள் கலவரமாக ஆர்யனிடம் கேட்க, ஆர்யன் முகம் கடுமையாக ரஷீத்தை அவன் பார்த்தான். ரஷீத் வாசலுக்கு சென்று “உள்ளே கூட்டிட்டு வாங்க” என கட்டளையிட, ருஹானா அச்சத்துடன் ஆர்யன் அருகே சென்று நின்று கொண்டாள்.

இரு காவலர் இழுத்து வர முகத்தில் இரத்த காயங்களுடன் யாசின் உள்ளே வரவும் ருஹானாவிற்கு தூக்கிவாரி போட்டது. “ஆர்யன்! உங்க கட்டளையை  நிறைவேத்திட்டோம். யாசினோட கிடங்கை கொளுத்திட்டோம். இதோ இவனை பிடிச்சி உங்க முன்னாடி நிறுத்திட்டோம்” என ரஷீத் பெருமையாக சொல்ல, ருஹானா மலைத்து போனாள். அவள் அடைபட்டு கிடந்த இடத்தையும் எரித்து கடத்தியவனையும் கைதியாக்கி கண் முன்னே நிறுத்தி இருப்பவனை கண்கள் விரிய பார்த்தாள்.

யாசின் “நான் பெரிய தப்பு செய்திட்டேன்… பெரிய தப்பு… நான் மன்னிப்பு கேட்கறேன். நடந்ததுலாம் மறந்து என்னை விட்ருங்க. இனி நான் உங்க கண்ணுலயே படமாட்டேன். இது சத்தியம்” என கொல்லும் வேங்கையாய் எதிரே நிற்கும் ஆர்யனிடம் மன்னிப்பு வேண்டினான்.

“நீ மன்னிப்பு கேட்டு கெஞ்ச வேண்டியது என்கிட்டே இல்ல” என கடின குரலில் சொன்ன ஆர்யன் தன் பக்கத்திலிருக்கும் ருஹானாவை பார்த்தான். அவளும் அவனையே பார்த்திருக்க. யாசின் ருஹானா முன் மண்டியிட்டு “என்னை மன்னிச்சிடுங்க. நான் செஞ்சதுக்கு வருத்தப்படுறேன். தப்பு பண்ணிட்டேன்” என யாசித்தான். ருஹானாவின் தொண்டையடைக்க அவள் யாசினிடமிருந்து பார்வையை திருப்பி ஆர்யனை நோக்கினாள்.

ஆர்யன் ரஷீத்தை பார்த்து கண் காட்ட, மண்டியிட்ட கிடந்த யாசினை காவலர் தூக்கி நிறுத்த, ருஹானா ஆர்யனை திகைப்பாக பார்க்க, ரஷீத் “நீங்க வேற எதும் குறிப்பிட்டு சொல்லலனா, நம்ம வழக்கம்போல செய்திடவா?” என ஆர்யனை கேட்டான்.

ஆர்யன் யாசினை குரோதத்துடன் பார்க்க, யாசின் மரண பீதியாக ஆர்யனை பார்க்க, ரஷீத் ஆர்யனின் கண் அசைவுக்காக பார்த்திருக்க, இடையே நின்ற ருஹானா மூவரையும் மாறி மாறி பதட்டத்துடன் பார்த்தாள். ஆர்யன் பார்வை ரஷீத் புறம் திரும்ப, ருஹானா வேகமாக ஆர்யன் எதிரே வந்து நின்றாள்.

ஆர்யன் ருஹானாவை என்ன என பார்க்க அவள் கண்ணீருடன் வேண்டாம் என தலையை ஆட்டினாள். அவன் மிகவும் திகைப்புடன் அவளை உற்று நோக்க அவள் மீண்டும் தலையாட்டினாள். அவளை சாகடிக்க உயிரோடு புதைத்தவன் உயிரை எடுக்க தடுக்கும் அவளை ஆர்யன் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘என்ன பெண் இவள்!’ என அவளை வியந்து பார்க்க அவன் கோப முகம் அப்படியே மென்மையானது. 

அந்த பெரிய பச்சை கண்களையே அவன் பார்த்திருக்க, அவள் ‘விட்ருங்க’ என்பது போல் கண்களால் வேண்ட, அவன் மனம் அவளிடம் சரணடைந்தது. மற்ற அனைவரும் அவன் ஆணைக்காக காத்திருக்க, அவள் பார்வை வீச்சிலிருந்து மனமில்லாமல் வெளியே வந்தவன், யாசினை பார்த்து ரஷீத்தையும் பார்த்தான்.

உடனே யாசினை இழுத்துக்கொண்டு நகர போனவர்களை அவன் கை எழுந்து தடுத்தது. அவர்கள் அசையாமல் நிற்க, யாசினை நோக்கி சிங்க நடை நடந்தவன் “உன்னை நான் இன்னொரு முறை பார்த்தேன்னா, உன்னை மன்னிக்கவே மாட்டேன். உன் உயிர் உன்னோடது இல்ல. கேட்டுச்சா?” என இரைந்தான். “கேட்டுச்சி.. நல்லா கேட்டேன். மிக்க நன்றி. எப்பவும் உங்க கண் முன்னே வர மாட்டேன். இது சத்தியம்” என உயிர் பிழைத்தவன் கண்ணீருடன் கூற, ஆர்யன் ரஷீத்திடம் யாசினை விடுதலை செய்யுமாறு கண்காட்டினான். அதிர்ந்து போன ரஷீத் ஒரு அடி முன்னே வந்து ஆர்யனையும், ருஹானாவையும் பார்த்தான், ‘இந்த இரும்பு மனிதனை இந்த பொண்ணு என்ன செஞ்சி வச்சிருக்கா’ என. 

அவர்கள் யாசினோடு வெளியே செல்ல, ஆர்யன் ருஹானாவை திரும்பி பார்த்தான். அவளின் நன்றி சொல்லும் பார்வையை கண்டு அவன் யோசிக்க ருஹானாவும் அவனின் இந்த புதிய பரிணாமத்தில் ஆச்சரியப்பட்டு போனாள். 

ஆரம்பத்தில் அவள் சொன்னது எதையும் கேட்காதவன்… அவளை துளியும் நம்பாதவன், இன்று அவள் சொல்வதையும் கேட்கிறான்.. கண் காட்டுவதையும் செய்கிறான். ‘உண்மையில் இவன் அத்தனை கொடியவன் இல்லையோ’ என ருஹானா யோசிக்க, ‘இத்தனை கருணையுள்ள பெண்ணும் உலகத்தில் இருப்பாளா’ என ஆர்யன் சிந்தித்தான்.

வாக்கு தவறிய எதிரிக்கு

நரகத்தை கண்முன் காட்டியே

மரணத்தை பரிசளிக்கும் தீர்மானம்…

முடிவுகள் எல்லாம் முடிந்திடுமா

மலரவள் விழிமொழி மறுத்திட

பழிதீர்க்கும் கோபம் குறைந்து

அவள் ஜீவ காருண்யம் கண்டு

ஆச்சரியம் கொள்ளும் காதல் மனது..!

——–

“நீ எவ்வளவு யோசித்தாலும், உன் மனசு கேட்கிற கேள்விக்கு ஒரே பதில் தான். நீ எப்பவும் செய்யவே மாட்டேன்னு சொல்றதை இப்போ நீ செஞ்சிட்டே!  உனக்கு நீயே இப்போ வேற ஆளா தெரியுறே! அதான் நீ ஆச்சரியப்படுறே, எது என்னை இப்படி செய்ய வச்சதுன்னு” சையத் சொல்லவும் நேராக பார்த்து யோசித்துக்கொண்டிருந்த ஆர்யன் பட்டென திரும்பி அவரை பார்த்தான். இருவரும் சையத் உணவகத்தில் அமர்ந்து நடந்தவைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

———-

இவானுக்கு பால் எடுத்துக்கொண்டு வந்த ருஹானாவை “ஆமா! இவான் சித்தி, ருஹானா” எனும் குரல் தடுத்தது. இவான் அறை கதவை திறக்க போனவள் பேச்சு சத்தம் ஆர்யன் அறையில் இருந்து வருவது கேட்டு அங்கே சென்று, மூடிய கதவின் அருகே நின்று கேட்டாள்.

“யாசினே அதை எதிர்பார்க்கல. அவனோட பரம எதிரி கிட்டே ஆர்யன் மன்னிப்பு கேட்டுட்டான்” என ரஷீத் போனில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பதை கேட்ட ருஹானா மலைத்துப் போனாள். சையத் ‘உயிரே போனாலும் ஆர்யன் மன்னிப்பு கேட்க மாட்டான்’ என்று சொன்னதை நினைத்து பார்த்தவள் “மன்னிப்பு கேட்டாரா?….. எனக்காகவா?” என்று சொன்னபடி திகைத்து நின்றாள்.

———

“ஆறும் முன்ன சாப்பிடு!” என முன்னே இருந்த உணவை சையத் நகர்த்த, ஆர்யன் மெல்ல சாப்பிட்டான். “உன்னோட எதிரிக்கும் நல்லா தெரியும், உன் நண்பனுக்கும் தெரியும், நீ யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டேன்னு. உன்னோட இந்த ரூலை ஒருத்தருக்காக உடைச்சிட்டே. அதே கேள்வி தான் இப்பவும் உன் மனசுல. யார் என்னை அப்படி செய்ய வச்சது?” என சையத் நிறுத்த ஆர்யன் அவர் சொல்வதை உள்வாங்கினான். 

“உனக்கு உள்ள மறைஞ்சிருக்க அந்த ஆர்யன், இத்தனை நாள் அமைதியா இருந்த ஆர்யன், நீ மறந்து போன ஆர்யன், நீ தவிர்த்த ஆர்யன், நீ புறக்கணிச்ச ஆர்யன்… அவன் தான் உன்னை இப்படி செய்ய தூண்டினது” என அவர் சொல்ல, சாப்பிடுவதை நிறுத்திய அவன் கண்கள் பெரிதானது.

“நீ மறுத்தாலும், மறைச்சாலும் உள்ளே இருக்கிற அவனை ஒருத்தங்க பார்த்துட்டாங்க, அவனை வெளியே வர இழுக்குறாங்க” என சையத் சொல்ல நற்குணங்களை உடைய ஆர்யனை  ருஹானா வெளியே கொண்டு வருகிறாள் என சையத் சொல்கிறார் என்று ஆர்யனுக்கு புரிந்தது. 

“எந்த ஆர்யனை இத்தனை நாள் நீ கவனிக்கலயோ, அந்த ஆர்யன் இப்போ வலிமையா மாறிட்டான். அவனை எப்படி புறக்கணிக்க போறே?” என்று சையத் கேட்க ஆர்யனிடம் அதற்கு பதில் இல்லை.   

         

(தொடரும்)

Advertisement