Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 30 

காணொளி கண்டு ஸ்தம்பித்து நின்ற ஆர்யன், சவப்பெட்டியில் சாய்ந்த ருஹானாவை காப்பாற்றும் வழி தெரியாது திகைத்து போனான். சில வினாடிகளில் தன்னை திரட்டிக்கொண்டு, அந்த நிலவறையிலிருந்து ஒரே ஓட்டமாக மேலே ஏறி வந்தான். காரின் அருகே வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாரும் இருப்பது போல தெரியவில்லை. திரும்பவும் அந்த காணொளியை ஓட விட்டு உற்று நோக்கியவன், அதன் பின்னணியை ஆராய்ந்தான். அது யாசின்ஸின் ஆயுத சேமிப்புக் கிடங்கு என கண்டுகொண்டவன் பாய்ந்து காரில் ஏறி பறக்கவிட்டான்.

——-

கரீமா போனை காதில் வைத்திருக்க, அக்காவின் அறை உள்ளே வந்த சல்மா கேட்டாள்.

“என்ன அக்கா! ஏதாவது தகவல் தெரிஞ்சதா?”

“இன்னும் இல்லயே! ஆர்யனும், ரஷீத்தும் போனை எடுக்க மாட்றாங்களே”

“உன் கையாள் ஒருத்தன் இருப்பானே, அவனை கேட்க வேண்டியது தானே?”

“அவனும் தான் எடுக்கல. அங்க என்ன நடக்குதுன்னே புரியல”

இவர்கள் இருவரும் இங்கே அங்கலாய்க்க, அங்கே ஆர்யன் யாசின்ஸ் கிடங்கை வந்தடைந்திருந்தான். காணொளி கொண்டு பின்னால் இருந்த மரங்களை கவனித்துக்கொண்டே வந்தவன், ஓரிடத்தில் புது மண் பிரண்டிருப்பதை பார்த்துவிட்டான்.

மின்னல் வேகத்தில் அங்கே ஓடியவன் மண்டியிட்டு அமர்ந்தான். குனிந்து “நான் வந்துட்டேன். போகாதே” என சத்தமிட்டவன் அரக்க பரக்க கைகளால் வேகமாக மண்ணை தோண்டினான். “நான் பேசுறது கேட்குதா?” என கத்தினான். மண்ணை தள்ளிக்கொண்டே வேறு ஏதும் ஆயுதம் கிடைக்கிறதா என கண்களால் தேட நல்லவேளையாக அங்கே ஒரு மண்வெட்டி கிடந்தது.

ஓடிச்சென்று அதை எடுத்துவந்து வேகவேகமாக மண்ணை அள்ளி மேலே தள்ளினான். “இரு.. போய்டாதே!” என சொல்லிக்கொண்டே வெகுவேகமாக செயல்பட்டவன், மரப்பலகை தெரியவும் மண் வெட்டியை தூர போட்டுவிட்டு கைகளால் மண்ணை அள்ளி போட்டான். கூர்மையான கற்கள் கைகளை காயப்படுத்தியும் “நான் இங்க தான் இருக்கேன். உனக்கு கேட்குதா?” என இரைந்தபடி விடாமல் முயற்சி செய்துகொண்டே இருந்தான். 

அவன் கோட் நழுவ அதை கழட்டி வீச, அவன் கைக்கடிகாரமும் தள்ளி போய் விழுந்தது. அந்த கடிகாரம் தந்தையின் மரணத்தை நினைவுப்படுத்த, இன்னொரு அன்பிற்குரியவரின் மரணத்தை கண் முன் காண இயலாத ஆர்யன் இன்னும் வேகமாக செயல்பட்டான்.

“நான் இருக்கேன். காத்திரு. போயிடாதே” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே மண்ணை தள்ளிவிட்டான். அவன் நெற்றியெல்லாம் வியர்வை. அவன் மேல்சட்டை வியர்வையால் உடலோடு ஒட்டியிருந்தது.   பலகையின் ஓரம் தெரியவும் மண்வெட்டி கொண்டு அந்த மூடியை சுற்றி மண்ணை விலக்கினான். பின் மூடியை எடுத்து விலக்கிப் பார்க்க உள்ளே ருஹானா அசைவற்று கிடந்தாள். அவள் முகம், உடல் பூராவும் மண் படிந்திருந்தது. 

“இல்லை” என கத்திக்கொண்டே அந்த மூடியை மேலே தூக்கிப் போட்டான். பெட்டிக்குள் குதித்து இறங்கினான். ருஹானாவின் கையை பிடித்து தூக்கியவன், அவளை இருகைகளிலும் ஏந்திக்கொண்டான். அவள் முகத்தை அருகே கொண்டு வந்தவன் மூச்சு வராமல் போகவும் பயந்து விட்டான்.

அப்படியே அவளை அள்ளி மேலே ஏறியவன், அவளை மடியில் கிடத்தி “கண்ணை திற! மூச்சை விடு” என அவளை உலுக்கினான். அவளிடம் ஒரு அசைவும் இல்லை. ஆர்யனுக்கு உலகமே அசையாது நின்றது. அவள் கழுத்துக்கு அடியில் இருந்த  தன் கையை உயர்த்தி அவள் தலையை தாங்கி அவள் உடலை அசைத்தான். “கண்ணை திற!” என கண்கலங்க கதறினான்.

ஆர்யன் மிகவேகமாக உலுக்க ருஹானா சட்டென்று இருமினாள். அவனுக்கு அப்போது தான் பூமி சுற்ற தொடங்கியது. அவள் மூச்சோடு சேர்ந்து அவனது மூச்சும் வேகமாக வரவும் தான் அவனும் இத்தனை நேரம் மூச்சு விடாமல் இருந்தது அவனுக்கே தெரிந்தது.

இருவரும் வேகமான சுவாசத்துடன் ஒருவரையொருவர் பார்க்க, ருஹானா அவன் கழுத்தை தன்னிரு கைகளாலும் இறுக்கி கட்டிக்கொண்டு, பெரும் அபாயத்திலிருந்து காத்த அவனிடம் அடைக்கலம் அடைந்ததுபோல் அவன் தோளில் முகம் புதைத்து தேம்பினாள். ஆர்யனது பூமிப்பந்து விர்ரென்று சுழன்றது. இருண்டு கிடந்த அவன் உலகமும் பளீரென வெளிச்சமானது. இவான் அணைத்தபோது பெருகிய பாசப்பிணைப்பு போன்றே இந்த நேசப்பிணைப்பும் மனதிற்கு சொல்லொணா ஆறுதலை தந்தது. மெல்ல அவன் கைகளும் எழுந்து அவளை தழுவிக்கொண்டன.     

மரணக்குழியில் மயங்கி கிடந்த

கன்னியவளை பார்த்த நொடி

பரிதவிப்பின் உச்சம்…

பேச்சுமூச்சற்று காணவா 

மன்னிப்பை யாசித்தான்..?

மனம் தீண்டியவளை உயிர்மீட்டிட

மொத்த சக்தி கொண்டு உலுக்கிட

உயிர் தந்து உயிர் பெற்றான்..

பட்ட துன்பத்தையெல்லாம் அவள் 

பாய்ந்தணைத்து வெளியேற்ற

நெருக்கம் பெருகும் உறவின் தொடக்கமாய் 

இருவரின் இறுகிய அணைப்பு…!

ஆர்யனிடம் ஆறுதல் தேடி சரண் புகுந்தவள், அவன் கரம் அவள் முதுகை தட்டிக்கொடுக்கவும் சத்தமிட்டு அழுதாள். “சரி, சரி, அழாதே! எல்லா ஆபத்தும் விலகிப் போச்சி. நீ இப்போ பத்திரமா இருக்கே! பயப்படாதே!” என சொன்னபடி அழுகையால் குலுங்கும் அவளை ஆறுதல் படுத்தினான்.

அவள் படபடப்பு குறையும்வரை ஆர்யனை அணைத்திருந்த ருஹானா, தான் இருக்கும் நிலை உணர்ந்து மெல்ல விலகி அவன் முகம் நோக்கினாள். அப்போதும் அவள் தோளை பற்றி இருந்தவன் “எழுந்திரு! வா! வீட்டுக்கு போகலாம்” என அவளை தூக்கினான்.

தடுமாறி எழுந்தவள் அழுதுக்கொண்டே நிற்க, அவளது ஒவ்வொரு கண்ணீர்துளிக்கும் யாசினை கொன்று புதைக்கும் வெறி ஆர்யனுக்குள்ளே அதிகரித்தது. இருவர் மீதும் மண் பரவியிருக்க அவளை கைத்தாங்கலாகப் பற்றி ஆர்யன் நடத்தி சென்றான். குனிந்து தன் கோட்டையும், கடிகாரத்தையும் அவன் எடுக்கும்போது ரஷீத்தின் அழைப்பு வந்தது. 

“ரஷீத்! நானே உன்னை கூப்பிடணும்னு இருந்தேன். நான் சொல்றதை கவனமாக கேளு” என ருஹானாவை பார்த்தபடியே ஆர்யன் பேச ஆரம்பிக்க, அவள் விசும்பியபடி மெல்ல நடந்து கார் அருகே சென்றாள். பேசி முடித்துவந்து காரை எடுத்த ஆர்யன் நிதானமாக செலுத்த அங்கே அமைதியே குடிக்கொண்டது.

ஆர்யன் ருஹானாவின் முகத்தையும், சாலையையும் கவனித்துக்கொண்டே ஓட்ட அவள் சிந்தனையில் இருந்து விடுபட்டு ஆர்யனிடம் கேட்டாள்.

“என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“அதை பத்திலாம் இப்போ யோசிக்காதே. அங்க தண்ணி பாட்டில் இருக்கு பார். எடுத்து குடி”

அர்ஸ்லான் மாளிகை வந்துவிட கார் உள்ளே சென்று நின்றது. ருஹானா மெல்ல இறங்கி நிற்க ஆர்யன் உள்ளே செல்லுமாறு தலையசைக்க, அவள் அடிமேல் அடி எடுத்து வைத்தாள்.

வாசலில் பூத்தொட்டியுடன் நின்றிருந்த அம்ஜத் பக்கத்திலிருந்த கரீமாவிடம் “அல்லாஹ்க்கு நன்றி. ருஹானா பத்திரமா வந்துட்டா. இனி நம்ம கூடவே இருப்பா. இவானும் சந்தோசமா இருப்பான்” என்று சொல்ல கரீமா அவனுக்கு தெரியாமல் பல்லைக் கடித்தாள்.

“வா வா ருஹானா! நான் ரொம்ப பயந்துட்டேன், நீ திரும்ப வர மாட்டியோன்னு.. இங்க பார்.. உனக்காக எனக்கு பிடிச்ச செடியை கொண்டு வந்திருக்கேன்” என அம்ஜத் நீட்ட, ருஹானாக்கு எதுவும் பிடிபடவில்லை. கண்கள் எதிரே நோக்கினாலும் கருத்தில் கவனமில்லை. கரீமா “அம்ஜத் டியர்! அவளை பாருங்க. எத்தனை சோர்வா இருக்கா. நீங்க அப்புறமா இதை கொடுங்க” என்று சொல்லி ருஹானாவை அணைத்து வரவேற்றாள்.

“இவான் எங்க இருக்கான்? அவனுக்கு இதெல்லாம் தெரியுமா?” என ருஹானா கவலையோடு கேட்க “இல்ல.. எதுவும் தெரியாது. நீ வேலைக்கு போயிருக்கேன்னு சொல்லியிருக்கோம். நீ கவலைப்படாதே” என்று கரீமா சொன்னாள். ஆர்யன் கரீமாவுக்கு சைகை செய்ய “நீ உள்ளே வா. குளிச்சிட்டு ஓய்வு எடு” என்று அவள் ருஹானாவை உள்ளே அனுப்ப, ஆர்யனும் அவளோடு சென்றான்.

“அவளை பார்க்க பாவமா இருக்கு. ஆடையெல்லாம் ஒரே புழுதி” என அம்ஜத் வருத்தப்பட்டு சொல்ல “சரியாகிடுவா.. நீங்க இந்த தொட்டியை வெளிய வச்சிட்டு வாங்க” என கரீமா சொன்னாள்.

இன்னும் தான் உயிருடன் இருப்பதை நம்ப முடியாமல் தயங்கி தயங்கி நடந்து வந்த ருஹானா படிக்கட்டுக்கு அருகே வரவும், அவள் பின்னால் வந்த ஆர்யனிடம் “நான் என் ரூம்க்கு போறேன். இந்த நிலைமைல இவான் என்னை பார்க்க வேண்டாம்” என சொல்ல ஆர்யனும் தலையசைத்தான்.

அப்போது “சித்தி!” என உற்சாக குரல் கேட்டது. ஓடிவந்த இவான் சித்தியை பாய்ந்து கட்டிக்கொண்டான். அவனுடைய பாசத்தழுவலில் ருஹானாவிற்கு இத்தனை நேரம் சற்று நின்றிருந்த கண்ணீர் மடை திறந்துக் கொண்டது. அவளை பார்த்த இவான் “என்ன ஆச்சு சித்தி? ஏன் உங்க டிரஸ்லாம் மண்ணா இருக்கு?” என்று கேட்டான்.

ருஹானா அழுதுக்கொண்டே ஆர்யனை பார்க்க, தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்ட ஆர்யன் “சிங்க பையா! உனக்கு நான் சொல்றேன். சித்தியை தொந்தரவு செய்யாதே” என சொல்லி “சாரா! இவானை கூட்டிட்டு போங்க” என்றான். சாராவும் “வாங்க லிட்டில் சார்! உங்க சூப் ஆறுது” என அவனை உள்ளே அழைத்து போனார்.

ருஹானா ஆர்யனிடம் தலையசைத்து விட்டு மெதுவாக கைப்பிடியை பிடித்துக்கொண்டு படியேற, அவளை பாவமாக பார்த்திருந்த ஆர்யன் யாசினை நினைக்கவும் முக பாவம் மாறி கண்களை இடுக்கி கடுமையாக பார்த்தான்.

குளித்துவிட்டு கட்டிலில் அமர்ந்து தலைவாரிக்கொண்டிருந்த ருஹானாவின் பார்வை குளியலறையில் கழட்டி போட்ட உடையின் மீதே இருக்க, அவள் அழுகை நின்றபாடில்லை. அழுதுக்கொண்டே எழுந்து சென்று குளியலறை கதவை மூடிவிட்டு அந்த கதவின் மேல் சாய்ந்து தேம்பினாள். கதவை தட்டிவிட்டு கதவை திறந்த ஆர்யன் அழும் ருஹானாவை பார்த்து அப்படியே நின்றான்.

அவள் நடந்து வந்து கட்டிலில் அமரவும் அவனும் உள்ளே வர அந்த சத்தத்தில் ருஹானா மிரண்டு போய்விட்டாள். “நான் பயந்திட்டேன்” என அவள் சொல்ல “நான் கதவு தட்டினேன். உனக்கு கேட்கல போல” என சொன்ன ஆர்யன் “இப்போ எப்படி இருக்கு? டாக்டரை வர சொல்லவா?” என கேட்டான். அவள் வேண்டாம் என மறுக்கவும் “உன்னை அவங்க துன்புறுத்தினாங்களா?” என கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் கண்ணீர் பெருக்கவும், ஆத்திரமடைந்த அவன் “என்ன நடந்தது? ஆரம்பத்தில இருந்து எனக்கு சொல்லு” என கேட்டான். ருஹானா விம்மிக்கொண்டே “என்னை இழுத்துட்டு போனாங்க. என் கண்ணை கட்டிட்டாங்க. முதல்ல ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. கை, காலை கட்டி உக்கார வச்சாங்க. அப்புறம் இன்னொரு இடத்துக்கு கொண்டு போயிட்டாங்க. அப்புறம்.. அப்புறம்… அந்த சவப்பெட்டியில….“ என்று சொல்லியபடி வெடித்து கதறினாள்.

கை முஷ்டி இறுக்கி கைகள் இரத்தமென சிவக்க அவள் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்தவன் அவளை நெருங்கி “வேற ஏதும் தப்பா உன்னை தொட்டாங்களா?” என கேட்டான். அவள் இல்லையென தலையாட்ட “அப்படி எதும் நடந்திருந்தா என்னோட கையாலயே குழி தோண்டி அவனை பொதைச்சிருவேன்” என அவள் மேல் உரிமையுணர்வு மேலோங்க ஆங்காரமாய் கத்தியவன் “உண்மைய சொல்லு. அவன் உன்னை தொட்டானா?” என மறுபடியும் கேட்டான்.

திகைப்பான ருஹானா கண்ணீரோடு மீண்டும் தலையசைக்க சற்று அமைதியானான். அப்போது அவன் போன் அடிக்க “சொல்லு ரஷீத், சரி.. இதோ வரேன்” என சொன்னபடி வெளியே நடந்தான். அவன் எதிரே வேகமாக வந்த ரஷீத் “ஆர்யன்! யாசின் இருக்குற இடம் கண்டுபிடிச்சாச்சி. வாங்க போலாம்” என அழைத்தான். ஆர்யனும் அவனோடு நடக்க பின்னோடு ருஹானா ஓடிவந்து “நில்லுங்க!” என்றாள்.

ஆர்யன் நின்று அவளை திரும்பி பார்க்க “நீங்க அங்க போகாதீங்க. உங்களை கெஞ்சி கேட்கறேன். அந்த ஆள் பயங்கரமானவன். எதுவும் செய்வான். தயவு செய்து போகாதீங்க” என கண்ணீர் மல்க கேட்டாள். தூணுக்கு பின் மறைந்திருந்து கரீமாவும் பார்த்திருந்தாள். ‘ஆர்யனையாவது, இந்த சிறு பெண் தடுத்து நிறுத்துவதாவது’ என எண்ணி ரஷீத் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

Advertisement