Advertisement

“உறுதியா சொல்றீங்களா?” ரஷீத் கேட்க “ஆமா! நீயும் நானும் மட்டும் போதும். ரிஸ்க் எடுக்க முடியாது” என சொல்லியபடி துப்பாக்கியை சரிபார்த்து பின்னால் செருகினான்.

ரஷீத் போன் எடுத்து ஆர்யன் கட்டளையை செயலாக்க, வேட்டைக்கு புறப்படும் புலியென ஆர்யன் பாய்ந்து செல்ல, பின்னால் ரஷீத்தும் விரைந்து ஓடினான்.

——-

மாளிகையின் முன்னால் இருக்கும் நீரூற்றில் காகித படகை விட்டபடியே இவான் “நஸ்ரியாக்கா, நானும் சித்தியும் நிஜ கப்பல்ல போவோம் தெரியுமா?” என்று சொல்ல, நஸ்ரியா “அப்படியா?” என கேட்டாள். “சித்தி நிறைய பேகல் வாங்கி தருவாங்க” என இவான் கதை சொல்ல “ஓஹோ!” என நஸ்ரியா சோகமாக கேட்டுக்கொண்டு இருந்தாள். 

“நாங்க அதை பறவைகளுக்கு போடுவோம்”

“ஆனா இப்போ இல்ல. இப்போ சித்தி வீட்ல இல்லல”

“சித்தி வெளிய போயிருக்காங்க. சித்தப்பா அவங்கள கூப்பிட போயிருக்கார்” என சொல்லியபடியே இன்னும் கப்பல்களை எடுத்து தண்ணீரில் விட்டான். நஸ்ரியா அவன் தலையை பாசமாக தடவ, வாசலில் நின்று கரீமாவும், சல்மாவும் இதை பார்த்தனர்.

“எதாவது தகவல் தெரிஞ்சதா, அக்கா?”

“இன்னும் இல்ல”

“இவானுக்கு தெரியுமா, அவன் சித்தி காணோம்னு”

“ஜாக்கிரதை சல்மா. நீ வாய் தவறி சொல்லிடாதே. அம்ஜத்க்கும் ருஹானா கடத்தப்பட்ட நிகழ்ச்சி தெரியாது”

பின்னாடி செடித்தொட்டி கீழே விழுந்து உடைந்தது. இவான் உட்பட எல்லாரும் திரும்பி பார்க்க அம்ஜத் கலங்கிப்போய் நின்றிருந்தான்.

“இவான்! ஒன்னுமில்ல. உன் பெரியப்பா தொட்டியை கை தவறி விட்டுட்டார். நீ விளையாடு. சல்மா அக்கா வருவா” என சமாளித்த கரீமா சல்மாக்கு ஜாடை காட்டினாள். சல்மா சலித்துக்கொண்டே இவான் அருகே செல்ல “வாங்க அம்ஜத். நீங்க மாத்திரை சாப்பிடுற நேரம் ஆச்சு” என்று அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

——-

ஆர்யன்  ஓட்டி வந்த கார் கீச்சென வந்து நிற்க, துப்பாக்கியை கையில் எடுத்த ஆர்யன், தன்னோடு இறங்க தயாரான ரஷீத்தை தடுத்தான்.

“ரஷீத்! நான் மட்டும் போறேன்”

“இல்ல.. நான் உங்களை தனியா விட மாட்டேன்”

“என்னை குறி வச்சி தான் அவளை கடத்தியிருக்காங்க. எனக்காகத்தான் அவ இங்க இருக்கா. நான் பார்த்துக்கறேன்” என அழுத்தமாக சொல்ல ரஷீத்தால் மறுத்து பேச முடியவில்லை.

துப்பாக்கியை தயாராக கையில் வைத்துக்கொண்டு மாடிப்படியில் ஏறி மிக கவனமாக உள்ளே வந்த ஆர்யன் ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. கயிறு கீழே கிடக்க நாற்காலி காலியாக இருந்தது. ஆர்யன் விட்ட உதையில் அந்த நாற்காலி தூர போய் விழுந்தது.

———–

“அவளும் போய்ட்டா. தஸ்லீம் போல இவளும் போறா. ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா எல்லாரும் போறாங்க” என அம்ஜத் ஓவென அழ, கரீமா அவன் முதுகை தடவிக் கொடுத்து சமாதானப்படுத்தினாள். “அவ திரும்பி வந்துடுவா. ஆர்யன் கண்டிப்பாக அவளை கூட்டிட்டு வந்துடுவான். வருத்தப்படாதீங்க” என அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

“யாரும் போக கூடாது. என்னால தாங்க முடியாது” என அம்ஜத் விம்ம, கரீமா அவனுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்தாள். அப்போது அவள் போன் அடிக்க தள்ளி வந்து பேசினாள்.

“சொல்லு, என்ன நடந்தது?”

“கரீமா மேம் நீங்க சொன்னது போல நான் யாசினை எச்சரிச்சிட்டேன். ஆர்யன் இந்த இடத்துக்கு வர்றான்னு சொன்னதும் அவன் அவளை வேற இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டான்”

“ஆர்யன் வந்துட்டானா?”

“ஆமா! ஆனா அவர் வரதுக்குள்ள இவங்க இடம் மாறிட்டாங்க”

“நல்லது. ஆர்யனுக்கு ஒன்னும் ஆகலயே?”

“இல்ல.. நாம எச்சரிக்கலனா இங்க பெரிய சண்டையே நடந்திருக்கும்”

“அவன் அவளை காப்பாத்த தான் வந்தான். ஆர்யனை எந்த அபாயத்திலயும் நான் சிக்க வைக்க மாட்டேன்”

“கரீமா மேம்! யாசின்ஸ் ஆளுங்க யாரும் இங்க இல்ல”

“அவங்க அவளை துன்புறுத்தினாங்களா?”

“தெரியல, மேம். ஆனா யாசின் ஆர்யன் மேல அதிக கோபமா இருக்கான்”

————–

கை, வாயோடு கண்களும் கட்டப்பட்டிருந்த ருஹானா யாசின் முன்னே நிறுத்தப்பட்டாள். அவள் கண்கட்டை எடுக்க சொன்ன யாசின் “உன் பாய்பிரண்ட் உன்னை கை விட்டான் போலயே! அவனோட கர்வத்தால உன் உயிர் போக போகுது. உன் நிலைமை பரிதாபம் தான். ஆர்யன் அர்ஸ்லான் யார்க்கும் தலை வணங்க மாட்டான். அது எனக்கு நல்லா தெரியும். ஆனா உனக்காக வருவான்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன். எத்தனை அழகான பெண் நீ. இப்படி அநியாயமா சாக போறியே” என வராத கண்ணீரை துடைத்தான்.

வாய்க்கட்டோடு அவள் கத்த அவளை பாவமாக பார்த்தவன் “அந்த போனை எடு. ஆர்யன் அர்ஸ்லான் என்ன சொல்றான்னு கேட்கலாம்” என தன் கையாளுக்கு ஆணையிட்டான்.

கார் அருகே தவித்துக்கொண்டிருந்த ஆர்யனிடம் ரஷீத் “நம்ம ஆளுங்கள்ல யாராவது யாசினுக்கு தகவல் சொல்லியிருப்பாங்களா? என கேட்க “எது வேணும்னாலும் நடந்திருக்கும், ரஷீத்” என ஆர்யன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆர்யன் போன் அடித்தது.

“ஏன் கோழையா ஓடி போனே நீ?” 

“ஏன்னா நம்ம டீலை நீ மீறிட்டே, அர்ஸ்லான்”

“எங்க இருக்கே இப்போ?”

“நான் வச்ச கெடு முடியப்போகுது. இன்னும் அரைமணி நேரம் உனக்கு இருக்கு. நீ மன்னிப்பு கேட்க போறியா இல்லையா?”

ஆர்யன் மௌனமே சாதித்தான்.

“உன் குரல் எனக்கு கேட்கலயே, அர்ஸ்லான். இன்னுமா முடிவு எடுக்காம இருக்கே?”

அப்போதும் ஆர்யன் பேசவில்லை.

“நான் முகவரி அனுப்புறேன். அங்க வந்து நீ ஸாரி சொன்னா, நான் உன்னை அவ இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போவேன். என்ன சொல்ற? ஆனா நீ தனியா தான் வரணும்” என சொல்லி போனை மூட அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ருஹானா கதிகலங்கி கண்ணீர் உகுத்தாள்.

கடிகாரத்தில் நேரம் பார்த்துட்டுக்கொண்டே அமர்ந்திருந்த யாசின் எழுந்து தன் அடியாட்களிடம் “நான் வெற்றியடையாத ஒரே ஒருத்தன் இந்த ஆர்யன் அர்ஸ்லான் தான். அவனோட சாம்ராஜ்யமே அழிந்தாலும் அவன் தலை வணங்க மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா இந்த பொண்ணுக்காக வருவான்னு தப்பா நினைச்சிட்டேன். சரி, நீங்க என்ன செய்யணுமோ அதை செய்ங்க” என சொல்லியபடி திரும்பியவன் வாய் திறந்தபடி நின்றான்.

யாசின் பேசியதைக் கேட்டுக்கொண்டே ஒற்றை ஆளாக நிதானமாக எதிரியின் பாசறையில் வந்து நின்ற ஆர்யன் யாசினை எரித்துவிடுபவனைப் போல் பார்த்தான்.

“வாவ்! ஆர்யன் அர்ஸ்லான்! என்னை இப்பவும் ஆச்சரியப்படுத்துற நீ!” என்று யாசின் ஏளனமாக வரவேற்றான்.

ஆர்யன் அந்த இடத்தை சுற்றி பார்த்தபடி உறுதியான நடையில் யாசினை நெருங்கி “எங்கே அவள்?” என கேட்டான்.

“அவ பத்திரமா இருக்கா. நீ செய்ய வேண்டியதை செய். அதுக்கு அப்புறம் மத்தது என் வேலை”

இன்னும் அவனை நெருங்கிய ஆர்யன் அனல் மூச்சுடன் முகம் சுருக்கி கடுமையான குரலில் “மன்னிச்சிடு” என்றான். அவன் நெற்றி முழுதும் வியர்வை துளிகள்.

அரும்பாய் மலர்ந்து மனம் பரவிட

புதிதாய் சில மாற்றங்கள்… 

மன்னிக்கவே பிடிக்காதவன்

மன்னிப்பு கோரும் விந்தை…. 

கன்னியவள் கண்ணிலிருந்து மறைய

மனதின் தேடலை செயலாக்கி

அவளை தேடி களைத்து தவிக்க… 

முழுதாய் அவளிடம் சரணடைந்த மனது

அவளுக்காக அவன் எதிரியிடமும்… 

யாசின் முகத்தில் ஈயாடவில்லை. மெல்ல தெளிந்தவன் முகத்தில் சிரிப்பு பொங்க “கடைசியா நீ சொல்லிட்டே. நான் சாதிச்சிட்டேன். இனி நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். தி கிரேட் ஆர்யன் என்கிட்டே…., இந்த யாசின்ஸ்ட்ட மன்னிப்பு கேட்டுட்டான். எழுதி வச்சிக்கோங்க, பசங்களா” என யாசின் கொக்கரித்தான்.

“அதிகமா பேசாதே! நீ கேட்டது நான் செஞ்சிட்டேன். அவளை திருப்பி அனுப்பு” என ஆர்யன் அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான்.

“இரு.. இரு.. நான் இந்த தருணத்தை அனுபவிக்கிறேன். எவ்வளவு நாளா இதுக்காக காத்திருக்கேன்” என சந்தோஷம் மிக சொன்ன யாசின் முகத்தில் கோபத்தை கொண்டுவந்து  “உனக்கு நியாபகம் இருக்கா? காரக் ஹார்பர்ல நீ என்கிட்டே என்ன சொன்னே? எனக்கு எப்பவும் மறக்காது. அந்த வார்த்தைக்கு உன்னை பழிவாங்குவேன்னு நான் தினமும் சொல்லிப்பேன். ‘நாய் பிரார்த்தனை செய்தா வானத்துல இருந்து எலும்பு தான் கொட்டும்’னு நீ என்னை பார்த்து சொன்னே. இன்னைக்கு நான் சாதிச்சிட்டேன்” என்று மீண்டும் சிரித்தான்.

“நான் அவளை அனுப்ப சொல்லி கேட்டேன்” என ஆர்யன் பல்லை கடித்துக்கொண்டு சொல்ல “இங்கயே காத்திரு. உன் போனுக்கு மெசேஜ் வரும், அவ இருக்குற இடம் பத்தி” என யாசின் பொறுமையை சோதிக்க ஆர்யன் முஷ்டியை மடக்கி கோபத்தை அடக்க பார்த்தான்.

ஆனால் அவனால் அது முடியாமல் போக யாசின் சட்டையை பிடித்து தள்ளிக்கொண்டு போய் எதிரே இருந்த தூணில் சாய்த்தான். “என்கிட்டே வம்பு வச்சிக்காதே” என ஆர்யன் இரைய, யாசின் ஆட்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு ஆர்யனை நெருங்கினார்கள். 

அவர்களை கை காட்டி விலக்கிய யாசின் “கோபப்படாதே, அர்ஸ்லான்! இன்னும் பொண்ணு என்கிட்டே தான் இருக்கா. மறக்காதே! நம்ம ஆட்டத்தோட விதிமுறை உனக்கு தெரியும். நான் வாக்கு தவற மாட்டேன். தகவலுக்காக காத்திரு” என்று சொல்லி தன் கூட்டாளிகளுடன் விலகி சென்றுவிட்டான்.

போனை கையில் வைத்துக்கொண்டே ஆர்யன் அங்கே நடந்துக்கொண்டிருக்க, போனில் செய்தி வந்த சத்தம் கேட்க அதை எடுத்து பார்த்தான். அந்த வீடியோவை பார்த்த ஆர்யனின் நெற்றி வியர்வை மழையாய் கொட்டியது. இரத்த ஓட்டம் தடைப்பட்டு முகம் வெளுத்துப்போனது. கண்கள் தெறித்து வெளியே விழுந்துவிடும் போலானது.

இரு ரவுடிகள் ருஹானாவை சிரித்துக்கொண்டே நெருங்க அவள் “இல்ல.. இல்ல.. இல்ல..“ அழுதுக்கொண்டே பின்பக்கமாக நடக்க அவள் பின்னே பெரிய பள்ளம் வெட்டப்பட்டிருந்தது. அவளை வேகமாக ஒருவன் தள்ள அவள் இரு கைகளையும் தூக்கிக்கொண்டே அந்த பள்ளத்தில் இருந்த சவப்பெட்டியில் விழுந்தாள். 

“இருட்டா இருக்கும். பயப்படாதே” என்று சொல்லி அவளை தள்ளியவன் ஒரு டார்ச் லைட்டை அந்த பெட்டியில் தூக்கி போட்டு அதன் மேலே ஒரு பலகையை வைத்து மூடினான். “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!” என பெட்டிக்குள்ளே கிடந்த ருஹானா அலறினாள்.

இருவரும் மணலை தள்ளி அந்த பெட்டியை மூட தொடங்க, “தயவு செய்து எனக்கு உதவி செய்ங்க.. யாராவது இருக்கீங்களா? உதவி.. உதவி.. என்னை காப்பாத்துங்க” என்ற ருஹானாவின் கூக்குரல் சத்தம் தேய்ந்து பலவீனமானது. 

(தொடரும்)

Advertisement