Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 29 

கட்டுண்டு கிடந்த ருஹானாவை கண்கொண்டு பார்க்க முடியாத ஆர்யன் போனை மூடி மேசையில் போட்டுவிட்டு, கோபம் எல்லை மீற, காபி கப்பை எடுத்து ‘ஆஹ்!’ என கத்திக் கொண்டே சுவரில் அடித்தான். பின் போனை எடுத்து யாசினுக்கு அழைத்தவன் “உடனே அவளை அனுப்பி வை” என இரைந்தான். 

“போட்டோ சரியா வந்துச்சா?” பதிலுக்கு யாசின் கிண்டலடித்தான்.

“உனக்கு நான் சொல்றது கேட்கலயா? அவளை இப்பவே விட்டுடு! டெண்டரை நீயே எடுத்துக்கோ”

“உன் காதலி உனக்கு உயிரோட வேணும்னா நீ இப்படி அதிகாரம் செய்றதை நிறுத்து”

‘உம்.. உம்..’ என்ற ருஹானாவின் முனகல் சத்தம் ஆர்யனுக்கு கேட்டது.

“எங்க இருக்கே நீ? நான் இப்பவே வரேன்”

“எனக்கு தெரியும், நீ உன் காதலியிடம் வர ஆசைப்படுவேன்னு.  ஆனா என் ஆசையை முதல்ல நிறைவேத்து.  உனக்கும் எனக்கும் இருக்கற சிக்கலை தீர்த்து வை”

“என்ன சிக்கல்? அதை மட்டும் சொல்லு. அதிகமா பேசாதே”

“நீ என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்” யாசின் நிதானமாக சொன்னான்.

கேட்ட ஆர்யனுக்கு இரத்தம் கொதிநிலை அடைந்தது. பேச்சிழந்து போனான். கண்களும் சிவந்தன. 

“உன்னை கொன்னுடுவேன்டா, ராஸ்கல்” 

“நீ தானே அவ வேணும்னு கேட்டே! நான் என் நிபந்தனைய சொன்னேன். உனக்கு வேணாம்னா போ”

“நீ அவள இப்போ விடலனா நடக்கறதே வேற”

“அதுக்கு நீ மன்னிப்பு கேட்கணும், அர்ஸ்லான்! நீ இங்க வரணும். என்கிட்டே மன்னிப்பு கேட்டு கெஞ்சணும். நாளைக்கு மதியம் வரை தான் உனக்கு டைம். 12 மணி நேரம் இருக்கு. ஸாரி சொல்றியா இல்ல அவ பிணத்தை தூக்கிட்டு போறீயா.. நீயே முடிவு செய்” என ஆர்யனை பேசவிடாமல் யாசின் மிரட்டி வைத்தான். 

ஆர்யன் பேயறைந்தது போல நின்றான் என்றால், எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ருஹானா திக்பிரமை அடைந்தாள். “உன் வாழ்க்கையே அவன் கேட்கப்போற மன்னிப்புல தான் ஊசலாடுது. உன் காதலன் இங்க வந்து மன்னிப்பு கேட்டா நல்லது. இல்லனா உன்னோட கடைசி ஊர்வலத்தை தொடங்கிடலாம்” என ருஹானாவை பயமுறுத்திய யாசின், சத்தமிட்டு அழுதுக்கொண்டே ஏதோ பேச முயற்சி செய்யும் அவளின் வாய்பட்டியை எடுக்க சொன்னான்.

“இப்போ சொல்லு”

“நாங்க காதலர்கள் இல்ல. என் அக்கா மகனுக்காக நான் அங்க தங்கி இருக்கேன்”

“நீ என்ன விளையாடுறீயா? நான் கேட்கறதுக்கு முன்னாடியே டெண்டரை அவன் விட்டுத் தர்றான். ஆனா நீ சொல்றே, காதலர்கள் இல்லன்னு” சத்தமாக யாசின் சிரித்தான்.

“நான் சத்தியமா சொல்றேன், நாங்க காதலிக்கல. என் அக்கா மகனை பார்க்க தான் நான் அங்க இருக்கேன். அவன் சின்ன குழந்தை. அவனுக்கு யாரும் இல்ல. தயவுசெய்து என்னை விட்டுடுங்க” என ருஹானா கதறினாள்.

“எனக்கு அர்ஸ்லான் பத்தி நல்லா தெரியும். அவன் உயிரைக் கூட கொடுப்பான். ஆனா எனக்கு விட்டு கொடுக்க மாட்டான். ஆனா இப்போ அவன் நொடிகூட யோசிக்கல. டெண்டரை தூக்கி போடுறான். அவன் இங்க வந்து என்கிட்டே மன்னிப்பு கேட்கும்போது அவன் உன்னை எவ்வளவு காதலிக்கிறான்னு நீ தெரிஞ்சிக்கோ”

ருஹானா தலையாட்டி மறுக்க, “அப்படி ஆர்யன் வரலனா…..“ என முகம் மாறிய யாசின் துப்பாக்கியை எடுத்து ருஹானா தலையில் வைத்தவன் “உன்ன சுட்டு தள்ள நான் இரக்கமே படமாட்டேன்” என கோபமாக சொன்னான்.

கதிகலங்கிய ருஹானாவின் தைரியம், சையத் சொன்ன ‘உயிரை விட்டாலும் விடுவானே தவிர மன்னிப்பு கேட்க மாட்டான்’ என்ற வாக்கியத்தோடு ஓடிப் போனது. திரும்பவும் அவள் வாயை அடைக்க சொல்லிவிட்டு யாசின் செல்ல ருஹானாவின் கண்ணீர் ஆறாய் ஓடியது.

———

மேசை மேல் இருந்த பொருட்களை ஆர்யன் ஆவேசமாக தள்ளி விட, சத்தம் கேட்டு கரீமா ஓடி வந்தாள்.

“என்ன நடந்தது, ஆர்யன்? ஏன் இப்படி?” பதட்டமாக கேட்டாள்.

“யாசின்ஸ் இவான் சித்தியை கடத்தி வச்சிருக்கான்” கோபமாக சொன்னான். 

அதிர்ச்சி அடைந்த கரீமா “ஏன், என்ன வேணுமாம், அவனுக்கு?”

“ஏலத்தை விட்டு தர சொல்றான்”

“தரலனா என்ன செய்வானாம்?” ஆர்யன் நிச்சயமாக தர மாட்டான் என்ற நம்பிக்கையில் கரீமா கேட்டாள்.

“நான் எடுத்துக்க சொல்லிட்டேன்”

திகைப்பான கரீமா சுதாரிக்க சில விநாடிகள் எடுத்துக்கொண்டு “அப்போ அவளை அனுப்பிடுவான் தானே?” என கேட்டாள்.

ஆர்யன் மணிக்கட்டை பற்றிக் கொள்ள, கரீமா அவனையே பார்த்து நின்றாள். “இல்ல.. அவளை கொல்ல போறான்”

“இன்னும் என்ன அவனுக்கு? ஏன் விட மாட்டான்?” என கரீமா கேட்க கையை விடுவித்துக்கொண்டவன், கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு, சொல்வதற்கு வாய் வராமல் சிறிது நேரம் கழித்து “என்னை அவன்கிட்டே ஸாரி கேட்க சொல்றான்” என வெறுப்புடன் சொன்னான்.

“என்னது?….. ஸாரியா?…… நீ?……. யாசின்ஸ்ட்ட…….?” நம்ப முடியாமல் விட்டு விட்டு கேட்டவள் தீவிரமாக யோசித்தாள். அதன் பிறகு அசையாது நின்ற ஆர்யனிடம் சொன்னாள், “யாசின்க்கு நல்லா தெரியும், நீ அவன்கிட்டே ஸாரி கேட்க மாட்டேன்னு…. அவளை கொன்னுட்டு அந்த பழியை உன்மேல போட பார்க்கறான்”

அப்போதும் ஆர்யன் பதில் பேசவில்லை.

“ஆனா வாழ்நாள் பூரா அந்த குற்ற உணர்ச்சியோட நீ எப்படி இருக்க முடியும்?”

கண்களை சுருக்கி ஆர்யன் யோசிக்க, கரீமா “உன்னோட ஒரே வார்த்தையால ஒரு உயிரை காப்பாத்த முடியும்னா…. கொஞ்சம் அமைதியா யோசி” என்றாள்.

அவள் சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாத ஆர்யன் “அண்ணனுக்கும், இவானுக்கும் இந்த விஷயம் தெரிய வேணாம். நீங்க இவானை கவனிச்சிக்கங்க” என்று சத்தமாக சொல்ல கரீமா “சரி” என்றாள். ஆர்யன் போன் எடுத்து ரஷீத்துக்கு அழைப்பு விடுக்க கரீமா வெளியே சென்றாள்.

சல்மாவிடம் நடந்ததை கரீமா பகிர்ந்துக்கொள்ள “என்ன ஆர்யன் டெண்டரை விட்டுட்டானா? அதிசயமா இருக்கு” என சல்மா ஆச்சரியமானாள். “அக்கா! கண்டிப்பா ஆர்யன் அந்த பொண்ணை காதலிக்கறான், இல்லனா இது எப்படி நடக்கும்?” என சல்மா சொல்ல, ஆமாம் என தலையாட்டிய கரீமா “ஆனாலும் யாசின் அவளை விடல. நடக்கவே முடியாததை கேட்கறான்” என்றாள்.

“அப்படி என்னக்கா கேட்கறான்?”

“ஆர்யன் அவன்கிட்டே மன்னிப்பு கேட்கணுமாம்”

“ஆர்யனும் மன்னிப்பும் சேரவே முடியாத கோடுகள் ஆச்சே!”

“அதான்.. ஆனா ஸாரி கேட்கலனா அவளை யாசின் சுட்டுடுவான்” 

“நெஜமா சாகடிச்சிடுவாங்களா, அக்கா?”  

“என்ன ஆகுமோ தெரியல. ஆர்யன் என்கிட்டே எல்லா தகவலும் சொல்லல…”

சகோதரிகள் இருவரும் கலவரமாய் பேசிக்கொண்டிருக்க, அங்கே ஆர்யன் மொட்டைமாடியில் நின்று நகரத்தை வெறித்துக்கொண்டிருந்தான். அவன் அம்மாவிடம் அவனுடைய அப்பா மன்னிப்பு கேட்டு கெஞ்சியதும், அதை மதிக்காமல் அவள் வெளியே நடந்ததும், ஆர்யனையும் உதறி தள்ளியதும் அவை அனைத்தும் இரணங்களாய் நிலைத்து அவனுக்கு அப்போதும் வலித்தது.

ரஷீத் உள்ளே வர “ஏதாவது தகவல் தெரிஞ்சதா?” என ஆர்யன் வேகமாக கேட்க, தலையாட்டிய ரஷீத் “நீங்க சொன்னபடி எல்லா இடமும் தேடிட்டு இருக்கோம். சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்” என சொல்ல “அவ பத்திரமா வீடு வந்து சேரணும்” என ஆர்யன் ஆணையிட்டான்.

“கவலைப்படாதீங்க. நம்ம ஆளுங்க தீவிரமா யாசின்ஸ் இடங்கள்ல தேடிட்டு இருக்காங்க”

“அவ கிடைச்ச பின்னாடி இருக்கு அவனுக்கு!” ஆர்யனுக்கு கோபம் கொப்பளித்தது.  

“டெண்டர் கொடுக்க தான் ஒதுக்கிட்டோம்ல. அப்புறம் என்ன அவனுக்கு? ஏன் விடமாட்றான்? நம்மளை நம்பலையா, அவன்?”

“வேற விஷயம் இருக்கு”

“என்ன ஆர்யன்?”

“அதை விட்டு தள்ளு”

“ஆர்யன்?” என குரல் உயர்த்தி ரஷீத் கேட்டான்.

வெப்ப மூச்சு விட்ட ஆர்யன் சொல்ல தயங்கினான். ரஷீத் விடாது நோக்க “அவ உயிருக்கு பதிலா என்னோட மன்னிப்பு வேணுமாம்” சிரமப்பட்டு சொல்லிவிட்டான்.

ரஷீத் அதிர்ந்து நிற்க “வா, நமக்கு நேரம் இல்ல. இவானோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு. நாமும் தேடி போலாம், வா” என ஆர்யன் அழைத்தான்.

“அந்த படத்தை காட்டுங்க. எந்த இடத்துல வச்சிருக்கான்னு அதுல ஏதாவது க்ளு கிடைக்குதான்னு பார்க்கலாம்” என ரஷீத் கேட்க இருவரும் ஆர்யனின் போனில் ருஹானாவின் படத்தை கூர்ந்து கவனித்தனர்.

——— 

ருஹானா கண்ணீர் சிந்தியபடி கட்டிய கயிற்றிலிருந்து விடுபட போராட, போன் பேசியபடியே அங்கே வந்த யாசின் “நீ என்ன முயற்சி செய்தாலும் இங்க இருந்து தப்பிக்க முடியாது. ஆர்யன் வந்து என் முன்னால மண்டியிட்டு மன்னிப்பு கேட்கலனா, உன் முடிவு என் கைல தான். நீயும் சின்ன பொண்ணு தான். உனக்கும் வாழனும்னு ஆசை இருக்கும். துவா செஞ்சிக்கோ, உன் காதலன் சீக்கிரம் வரணும்னு. துவா ஒன்னு தான் உன்னை காப்பாத்தும்” என்று சிரித்தான்.

சுற்றி காவலுக்கு நின்ற அடியாட்களிடம் “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளியே போயிட்டு வரேன். அதுவரை இவளை கவனமா பார்த்துக்கங்க. எதாச்சும் ஏடாகூடமாக நடந்ததுன்னா உங்க உயிர் உங்களுது இல்ல. ஜாக்கிரதையா இருங்க” என எச்சரித்து விட்டு யாசின் வெளியே சென்றான்.

ருஹானா எதோ சொல்ல வருவதை பார்த்த கையாள் ஒருவன் அவள் வாய்க்கட்டை எடுத்துவிட்டான். “என்னை தயவு செய்து விட்டுடுங்க. என்னை நம்பி என் அக்கா பையன் இருக்கான். சின்ன பையன். இப்போ தான் அவன் அம்மாவை பறிகொடுத்து இருக்கான். பாவம் அவன். அவனுக்காகவாது என்னை விடுங்க” என ருஹானா கெஞ்சினாள்.

“ஆர்யன் அர்ஸ்லான் வரட்டும். நீ போகலாம்” என அவன் சொல்ல “ஆர்யன் அர்ஸ்லான் வந்து கண்டிப்பா மன்னிப்பு கேட்கமாட்டார்” என அவள் கத்த “நீ அதிகமா பேசுறே! உன் வாய் மூடியே இருக்கட்டும்” என அவன் கருப்புபட்டியை ஒட்ட வர அவன் கையை ருஹானா கடித்துவிட்டாள். வலி தாங்காமல் அலறியவன் அவளை பளாரென கன்னத்தில் அடித்தான்.

———-

இரவு முழுதும் சுற்றி அலைந்து ருஹானா இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியில் திரும்பிய ஆர்யன் வில்லெடுத்து தன் மனக்குமுறலை குறைக்க பார்த்தான். அப்போதும் அவன் அம்மா வந்து ‘நீ உன் அப்பாவை போல இருக்காதே’ என சொல்ல குழம்பிப்போய் வீட்டின் உள்ளே சென்றான்.

போனில் ருஹானாவின் படத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆர்யனுக்கு ஜாஃபர் காபி கொண்டு வந்து தந்தவன் ருஹானாவை பற்றி விசாரித்தான். இல்லையென தலையசைத்த ஆர்யன் அம்ஜத்க்கும், இவானுக்கும் எதுவும் தெரியக்கூடாது என எச்சரித்தான். ஜாஃபர் சரியென சொல்லும்போது தூங்கி எழுந்து இவான் உள்ளே வந்தான். ஜாஃபர் வெளியே செல்ல அருகே வந்த அண்ணன் மகனின் கையை பிடித்து ஆர்யன் காலை வணக்கம் சொன்னான்.

“சித்தப்பா! சித்தி அவங்க ரூம்ல இல்லயே! எல்லா எல்லா இடமும் தேடினேன். அவங்கள காணலயே! நீங்க என் சித்தியை பார்த்தீங்களா?”

ஆர்யன் பதில் சொல்ல முடியாமல் யோசிக்க இவான் சொன்னான், “கண்டிப்பா அவங்க என்கிட்டே சொல்லிட்டு தான் போயிருப்பாங்க. நான் தான் தூக்கத்துல மறந்திட்டேன்”

இவானையே பார்த்திருந்தும் ஆர்யனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. இவான் மேசையிலிருந்த சித்தப்பாவின் போனை எடுத்து அவன் கையில் கொடுத்து “நாம சித்திட்ட பேசலாமா?” என கேட்டான்.

மனதை தயார் செய்துகொண்ட ஆர்யன் நீண்ட மூச்சு எடுத்து “உன் சித்தி ஒரு வேலையா வெளிய போயிருக்காங்க” என்றான்.

“அவங்க திரும்பி வர ரொம்ப நேரமாகுமா?”

“இல்ல.. சீக்கிரம் வந்துடுவாங்க” என ஆர்யன் உறுதியளிக்க இவான் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நான் உனக்கு சத்தியம் செய்றேன், அக்னி சிறகே! உன் சித்திய நான் கண்டிப்பா கூட்டிட்டு வருவேன்”

வேகமாக தலையசைத்த இவான் ஆர்யனை நெருங்கி அவன் கழுத்தை கட்டிக்கொண்டான். யாரிடம் ஒட்டி உறவாடி அறியாத ஆர்யன் அந்த அணைப்பில் தடுமாறிப்போனான். உயிரான இவானிடமே அன்பை வெளிப்படையாக காட்டாமல் கண்டிப்பான அறிவுரைகளையே சொல்லி வந்தவன், இவானின் அன்பு செய்கையில் ஆடி போனான். விலகி இருந்த அவன் கைகள் மெல்ல எழுந்து இவானை இறுக்கி கொண்டன.

——

சமையலறையில் ஜாஃபர் ‘ருஹானா இன்னும் கிடைக்கவில்லை’ எனும் தகவலை சொல்ல சாராவுக்கும், நஸ்ரியாவுக்கும் அழுகை வெடித்தது. “சின்ன சார் கேட்டா ஒடிஞ்சி போய்டுவாரே! அவரை நினைச்சி கவலைப்படறதா, இல்ல ருஹானாவை நினைச்சி வருத்தப்படுறதா.. எனக்கு ஒன்னும் புரியலயே! கடத்தினவன் நாசமாத்தான் போவான்” என சாரா சபிக்க, “பெரியம்மா! ருஹானா திரும்ப வர வாய்ப்பே இல்லயா?” என்று கேட்டு நஸ்ரியா அழுதாள். “அல்லாஹ் நிச்சயம் காப்பாத்துவார்” என சாரா சொல்ல மூவரும் பிரார்த்தனை செய்தனர்.

“ரெண்டு பேரும் கவனமா இருங்க. யார் காதுலயும் இது விழக் கூடாது. நஸ்ரியா நீ லிட்டில் மாஸ்டர் கூடவே இரு. இப்போ அவருக்கு சாப்பாடு கொண்டுபோய் கொடு” என ஜாஃபர் சொல்ல, “முகத்தை தொடச்சிட்டு போ. இல்லனா லிட்டில் சார் ஏன் அழுதேன்னு கேட்பார்” என சாரா சொல்ல நஸ்ரியா முகத்தை கழுவிவிட்டு இவானுக்கு உணவு கொண்டு சென்றாள்.

———  

மாடிப்படிகளில் வேகமாக ஓடிவந்த ரஷீத் ஆர்யன் அறைக்கு செல்ல கரீமா ஒளிந்து நின்று என்ன நடக்கிறது என பார்த்தாள். போன் பேசிக்கொண்டிருந்த ஆர்யன், ரஷீத்தின் வேகம் பார்த்து போனை மூடி அவனிடம் விரைவாக வர “ஆர்யன்! இவான் சித்தி இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சி! நம்ம ஆளுங்க அங்கே போயிட்டு இருக்காங்க” என ரஷீத் சொன்னான்.

முகத்தை கடுமையாக்கிய ஆர்யன் “அவங்களை திரும்ப வர சொல்லு. நீயும் நானும் மட்டும் போகலாம்” என்று சொல்லி வேகமாக நடந்து மேசைக்கு அடியில் இருந்து துப்பாக்கியை எடுத்தான்.

Advertisement