Advertisement

இவானோ “ஆனா நாம அடிக்கடி பார்க்குக்கு வரதில்லயே, சித்தி!” என வற்புறுத்த, ஆர்யன் முகம் இறுகினான். அவன் முகத்தை பார்த்த ருஹானா ”நீ சொல்றது சரிதான், செல்லம்” என சொல்லி ஊஞ்சலில் அமரவும், இவானுக்கு சிரிப்பு அள்ளியது.

ருஹானா தானே காலை உந்தி மெதுவாக ஆட, ஆர்யன் தள்ளிவிட இவான் வேகமாக ஆட, இவான் சிறிது நேரத்தில் “சித்தப்பா! சித்தி ஊஞ்சலும் இப்படி வேகமா தள்ளி விடுங்களேன்” என்றான். ஆர்யனும், ருஹானாவும் சங்கடப்பட, ஆர்யன் மெல்ல நகர்ந்து ருஹானாவின் ஊஞ்சலை பிடித்தான். ஊஞ்சலை சட்டென்று நிறுத்திய ருஹானா “நானே ஆடிக்கறேன்” என்றாள். 

குனிந்து அவள் சாய்ந்திருந்த கட்டையை பிடித்திருந்த ஆர்யன் அருகே இருந்த ருஹானாவின் முகத்தை பார்த்து அசைவற்று நின்றான். அவள் கழுத்தருகே அவன் சுவாசம் அவள் வாசனையை பிடிக்க, முகத்தில் தொங்கிய கற்றை குழலை சரிப்படுத்திய ருஹானாவின் முக வசீகரத்தில் மெய்மறந்து போனான்.  

ஊஞ்சலையும் விடாது அவனும் அசையாமல் இருக்கவும் அவனை திரும்பி அவள் பார்க்க, கண்களை அவளிடமிருந்து எடுத்துக்கொண்ட ஆர்யன் “பயப்படாதே!” என்று சொல்லி ஊஞ்சலை தள்ளி விட்டான். ஊஞ்சல் ஆட பயப்படாதே என்றானா, அல்லது என்னிடம் பயப்படாதே என்றானா? அவளும் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே ஆட, அவன் மனமும் ஊஞ்சலில் தான் ஆடியது. 

ரஷீத் இப்போது ஆர்யனை பார்த்திருந்தால் முக்கியமான வியாபார சந்திப்பை விட்டுவிட்டு, பூங்காவில் தன் முதலாளி என்ன செய்கிறார் என அதிர்ச்சி அடைந்திருப்பானோ? அதுவும் எந்த பெண்ணை வீட்டைவிட்டு துரத்த சென்றானோ, அதே பெண்ணுக்கு பாதுகாப்பாக ஊஞ்சலை தள்ளி விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்ன நினைப்பான்?

இங்கு ஆர்யனுக்கோ ஊஞ்சல் அவனை விட்டு தள்ளி செல்லும்போது அவளுடைய அருகாமைக்கு மனம் தவிக்க, அவள் அருகே வரும்போது அவள் அழகில் மனம் மயங்க, தவிப்பும், மயக்கமும் மாறி மாறி தாக்க புதுவித உணர்வில் இருந்தான். அவள் அத்தனை அழகாக இருந்தால் அவளிடம் வீழாமல் அவனால் எப்படி மீள முடியும்?

ஆசைதீர விளையாடி முடித்துவிட்டு இவான் ஒரு கையில் கோன்ஐஸ் வைத்து சுவைத்துக்கொண்டே மறுகையில் சித்தியை பிடித்துக்கொண்டே ஆர்யன் அருகே நடக்க, ஆர்யன் இருவரையும் திரும்பி பார்த்தான். இவானின் துள்ளாட்டமான நடையும், இவானின் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த ருஹானாவின் முகமும் ஆர்யனுக்கும் அவர்களுடன் நெருக்கத்தை தந்தது. பூங்கா யோசனையை சொன்ன சல்மாவிற்கு ஆர்யன் மனது நன்றி சொல்லுமோ? ஒரே குடும்பமாய் அவர்கள் மூவரும் பூங்காவில் நடந்து வெளியே காருக்கு வந்தனர்.

        

தவறை சீர்செய்யும் பரிசளிப்பான பூங்காவில்

சிறகை விரித்து சிறுகுஞ்சு பறப்பதை 

காண காண கோடி இன்பமே..!

தங்க கூட்டில் தத்தி தாவிடும் சிறகு

பெருவெளியில் மேலும் கீழும் பறந்தோடிட

இளகிய இருமனங்களும் சேர்ந்து களித்திட

ஒற்றையாய் கலங்கிய சிறகையும்

பாறையாய் இறுகிய அக்னி பறவையையும்

குடும்பமாய் உணர வைத்தவள் மலரவளே..!

      

“அன்பே! நான் கடைக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன். நீ வீட்டுக்கு போனதும் நஸ்ரியா அக்காவை பாத்ரூம்ல விட சொல்லு. குளிச்சிட்டு சாப்பிடு. சரியா செல்லம்?” என ருஹானா இவானுக்கு அறிவுறுத்த, ஐஸ்கீரீமை சாப்பிட்டுக்கொண்டே அவனும் தலையாட்டினான்.

இவானை காரில் பின் இருக்கையில் அவள் அமர வைக்க, தூரத்தில் கடத்தல் பேர்வழிகள் ஏமாற்றமாக பார்த்திருந்தனர். ருஹானாவின் அன்பான பேச்சையும், செய்கைகளையும் பார்த்தபடி இருந்த ஆர்யன் “நீயும் எங்க கூட வா. நீ எங்க போகணுமோ அங்க விடுறேன்” என்று இன்னும் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும்விதமாக அழைத்தான்.

“நன்றி. நானே போய்க்குவேன்” என்று மறுத்த ருஹானா திரும்பி செல்லப்போனவள், மீண்டும் திரும்பி வந்து “பூங்காக்கு கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி. இவானை இவ்வளவு மகிழ்ச்சியா இதுக்கு முன்னே நான் பார்த்தது இல்ல” என்றாள். இவானின் மகிழ்ச்சி ஆர்யன் முகத்தையும் மலர வைக்க “எனக்கு நன்றி தேவையில்ல” என்றான்.

“நீங்க சொல்றதும் சரிதான். இங்க நன்றிக்கு அவசியமில்ல தான். சின்ன பையன் பூங்காக்கு விளையாட வந்துருக்கான். சாதாரண மக்கள் தங்களோட பிரியமானவங்களுக்கு இதெல்லாம் செய்வாங்க. அவங்களை பத்தியே நினைச்சிருப்பாங்க. அவங்களுக்காக எதுவும் செய்வாங்க” என ருஹானா சொல்ல ஆர்யன் முகம் கூர்மையானது.

“ஆனா நீங்க …..” என நிறுத்திய ருஹானா ஆர்யனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள். அவன் முகம் சுருங்கிவிட்டது. அவள் இவான் பக்கம் திரும்பி “பை செல்லம்” என சொல்ல இவானும் சிரித்துக்கொண்டே கையை ஆட்டினான். யோசித்துக்கொண்டே இவர்களை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் பின் காரில் ஏறி ஓட்டி சென்றான்.

சிறிது தூரம் சென்று ஆர்யன் சிக்னலில் காரை நிறுத்த, இவான் “சித்தப்பா! இங்க பாருங்க, சித்தி இதை மறந்திட்டாங்க” என ருஹானா கூந்தலில் மாட்டியிருந்த கிளிப்பை எடுத்து நீட்டினான். அதை கையில் வாங்கியதும் ஆர்யன் மனம் ஊஞ்சலுக்கு சென்று அவள் கழுத்தோரம் நின்றது. சில நிமிடங்கள் அதை கையில் வைத்திருந்தவன், அதை டாஷ்போர்டில் போட்டு மூடினான்.

சிக்னலை பார்த்துக்கொண்ட ஆர்யன் போனை கையில் எடுத்து சில கட்டளைகள் அளித்தவன் “உடனே நான் சொன்ன வேலைகள் நடக்கணும்” என்று சொல்லி அழைப்பை துண்டித்து காரை எடுத்தான்.

———— 

இவானுடன் மாளிகை திரும்பிய ஆர்யன் சாராவிடம் அவனை கவனிக்க சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து அலுவலக வேலையில் மூழ்கினான். சிறிது நேரம் சென்று அவனுக்கு காபி எடுத்துக்கொண்டு ஜாஃபர் வர, வேலையை நிறுத்திய ஆர்யன் “கிச்சன் வேலையெல்லாம் முடிஞ்சதா? நான் சொன்னபடி செஞ்சிட்டீங்களா?” என கேட்டான்.

“எல்லாம் முடிஞ்சது, சார். சின்ன சின்ன மாற்றங்கள் மட்டும் மீதம் இருக்கு” என ஜாஃபர் சொல்ல “அதையும் இப்பவே சரிசெய்துடுங்க” என ஆர்யன் சொல்ல “கவலைப்படாதீங்க, சார். இப்பவே முடிச்சிடுறேன்” என ஜாஃபர் உறுதி அளித்தான். ஆர்யன் தலையாட்டவும் ஜாஃபர் அங்கிருந்து சென்றான்.

காபி குடித்துக்கொண்டே தன் முன்னே இருந்த ருஹானாவின் கிளிப்பை பார்த்தவன், காபியை கீழே வைத்துவிட்டு அதை கையில் எடுத்தான். காரில் மூடி போட்டது இங்கே எப்படி வந்தது? அதை பார்த்துக்கொண்டே ஆர்யன் ருஹானாவை முதன்முதலாக சந்தித்த நாள் முதல் இப்போது வரை அவள் தோற்றங்களை மனதில் ஓட விட்டான்.

——–

“பெரியம்மா! உங்களை தூக்கிட்டு வேற நல்ல சமையல்காரர் வர போறாரா? கிச்சன்ல இவ்வளவு மாற்றங்கள் நடக்குதே?” என நஸ்ரியா குறும்புடன் சாராவிடம் கேட்க, சாரா “அப்படின்னா உன்னை தான் முதல்ல அனுப்பணும். நீ தான் ஒரு வேலையும் செய்றது இல்ல” என்று சாரா கிண்டல் செய்தார்.

கரீமா இவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்க, அங்கே வந்த ஜாஃபர் “என்ன, நான் சொன்னதுலாம் செஞ்சிட்டீங்களா? ஆர்யன் சார் இப்போ கூட கேட்டார்” என சொல்ல “கிச்சன் பற்றி ஆர்யன் சார் இவ்வளவு அக்கறையா கேட்டதே இல்லயே? இப்போ ஏன் கேட்கிறார்?” என நஸ்ரியா ஜாஃபரிடம் கேட்டாள்.

“அது உனக்கு தேவையில்லாத விசயம்” என முறைத்தபடி ஜாஃபர் சொல்ல, சாரா வாயை மூடிக்கொண்டு சிரிக்க, நஸ்ரியா உதட்டை பிதுக்கி கழுத்தை வெட்டினாள். உண்மை காரணம் தெரிந்த கரீமா கோபத்துடன் அங்கிருந்து சென்றாள்.

———    

ருஹானாவின் உலகத்திலிருந்த ஆர்யனை அங்கிருந்து பூமிக்கு இழுத்தது, விடாமல் அடித்த அவன் கைபேசி. கிளிப்பை மேசை இழுப்பறையில் வைத்து மூடிய ஆர்யன், போனை எடுத்து காதில் வைத்தவுடன் “ஆர்யன் அர்ஸ்லான்!” என்று எகத்தாளமாக அழைத்தவனை இனம் கண்டுக்கொண்டான்.

“யாசின்ஸ்! இந்த உலகத்தில நான் கேட்க விரும்பாத குரல்” அவனையும் விட ஏளனமாக சொன்ன ஆர்யன் “என்ன வேணும் உனக்கு?” என கடுப்பாக கேட்டான்.

“உன் ஆணவம் உன்னை எப்படி அழிக்க போகுதுன்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு” என யாசின் சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ஸ்பெயின் டெண்டர் விசயமா? உனக்கு எதும் கிடைக்காது. வீணா முயற்சி செய்யாதே. போனை வை”

“இந்த முறை நான் சொல்றதை தான் நீ கேட்க போறே, ஆர்யன் அர்ஸ்லான்! உனக்கு பிரியமான ஒரு அரிதான பொருள் என்கிட்ட இருக்கு. அதை பார்க்கறியா?”

“உன்கிட்டே இருக்கற எதுவும் எனக்கு பார்க்க வேணாம். மறுபடியும் எனக்கு போன் செஞ்சி தொல்லை செய்யாதே” என வார்த்தைகளை கடித்து துப்பிய ஆர்யன் கோபமாக போனை வைத்து மேசை மேல் தூக்கி போட்டான்.

சில வினாடிகளில் அவன் போனில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டு போனை எடுத்து பார்த்த ஆர்யனின் கண்கள் அதிர்ச்சியால் மிக பெரிதானது. உள்ளே வந்த மூச்சு வெளியே போக மறந்தது. அவன் இதயம் ஒரு நொடி நின்று பின் அதிவேகமாக துடித்தது. 

கையும், காலும் கட்டப்பட்டு ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த ருஹானாவின் வாயும் கருப்பு பட்டியால் ஒட்டப்பட்டிருக்க அவள் பச்சை வண்ண விழிகள் கண்ணீரில் மிதந்திருந்தன.

“நான் இவளை கொல்றதுக்கு முன்னே நீ இவளுக்கு விடை கொடுக்க விரும்புவேன்னு நான் நினைச்சேன்” என்ற செய்தியுடன் வந்திருந்தது அந்த படம்.

(தொடரும்)

Advertisement