Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 3

அர்ஸ்லான் மாளிகை.. 

தன் அன்னையின் அறை கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இவான் அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தில் வாசலை நோக்கினான்..

“என் கைய விடு.. விடு என்னை!” என்று அழுதபடியே தரையில் வந்து விழுந்தாள், ருஹானா… அவளை அறையினுள் நெட்டி தள்ளிய ஆர்யன் பின்னால் நின்றான்.. முகத்தை மூடிய முடியை தள்ளி, நிமிர்ந்து பார்த்த அவளுக்கு விழிநீர் வடிய உட்கார்ந்திருந்த இவான் தென்பட்டான்.. அவன் கண்ணீரை பார்க்கவும் கோபம் கொண்டு மேலே ஆர்யனை நோக்கி ஒரு அனல் பார்வை வீசி திரும்பினாள்.

இவானை பார்த்து லேசாக ருஹானா புன்னகைக்க… இவானும் இவளை பார்த்து ‘சித்தி!’ என எழுந்தான்.. இத்தனை நேரம் யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்த பையன் வாய் திறந்தது கண்டு ஆர்யன் ஒரு கணம் யோசித்தான். 

அதற்குள் தரையில் கிடந்த அவள் பாய்ந்து சென்று “என்னுயிரே!” என அவனை கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.. அவன் “சித்தி” என அணைத்து கொள்ள.. இவானின் வீங்கிய முகத்தை பார்த்து அதிர்ந்து போனவள், “என் கண்ணே! என்னை பார்.. ஏன் இப்படி இருக்கே, இவான்?.. என்று அவனை தடவியபடியே கேட்டாள்…..

ஆர்யன் இவர்களின் பாச பிணைப்பை பார்த்துக் கொண்டே, “சாரா” என கூப்பிட அவரும் ஒரு கிண்ணத்தில் உணவை கொண்டு வந்து மேசை மேல் வைத்துவிட்டு சென்றார்.. ருஹானாவை பார்த்து உணவை கண்களால் காட்டி ஆணையிட்டான், ஆர்யன்..

“அவனுக்கு ஊட்டி விடு”

ஒன்றும் புரியாமல் விழித்த ருஹானா “என்ன?” என கேட்டாள்..

“அந்த… சூப்பை… அவனுக்கு… ஊட்டு”.. ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தான்..

ஆர்யனை முறைத்த ருஹானாவை “சித்தி” என அழைத்து தன் பக்கம் திருப்பிய இவான் “என் அம்மா இறந்துட்டாங்க..” என பாவமாக சொன்னான்.. இருவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது… “அன்பே” என அவனை இறுக்கி கொண்டாள்… “அழாதே என்னுயிரே! சித்தி இருக்கேன்… உனக்காக சித்தி இருக்கேன்”…

இவானின் கண்ணீர் சற்று மட்டுப்பட… சித்தியிடமிருந்து விலகியவன், “அம்மா சொர்க்கத்துக்கு போய்ட்டாங்கன்னு சொல்றாங்க.. அங்கயே இருப்பாங்களா?.. திரும்பி வர மாட்டாங்களா?” என்று கேட்க… என்ன மறு மொழி சொல்ல என தெரியாமல் விழித்தாள்.. ஒருவாறு யோசித்தவள் அவனுக்கு பதில் சொல்ல எத்தனிக்கும் வேளையில் மீண்டும் ஒலித்தது, ஒரு உணர்ச்சியற்ற குரல்..

“அவனுக்கு உணவு கொடு” 

ருஹானா ஆத்திரம் தாளாமல் எழுந்தவள், ஆர்யன் அருகே வந்து “அவனுக்கு இப்போ தேவை, உணவு இல்ல… அன்பு”, என அழுத்தமாக உரைத்தாள்..  

“அப்படினா முதல்ல அன்பை கொடு.. அப்புறம் உணவை கொடு” அவன் அலட்சியமாக கூற…

‘இப்படியும் ஒரு மனிதனா!’ என அவள் திகைப்பாக பார்க்க.. அவளை முறைத்துக் கொண்டே கதவை அடைத்து வெளியேறினான்..

அழுதவாறே திரும்பிய அவள் இவானின் கண்ணீரை கண்டு தன் விழி நீரை துடைத்தவள், அவனை அணைத்துக் கொண்டு கூறினாள்..

“பழசை நினைக்க கூடாது, அன்பே.. எல்லா துன்பமும் முடிந்தது.. இனி உனக்கு நான் இருக்கேன், எப்பவும்.. உன்ன விட்டு எங்கயும் போகமாட்டேன்”

இவானும் அவளை அண்டி அமர்ந்து கொண்டான்…

———–

வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த கரீமா மேலே நிமிர்ந்து படிக்கட்டுக்கு மேலே தெரிந்த முதல் மாடி வளைவை பயமாக பார்த்தாள்.. மேலே பார்த்தவள் கீழே தரையையும் பார்த்தாள்.. அன்று நடந்தது அவள் கண் முன்னே வந்து போனது..

இவானின் அம்மா தஸ்லீம் ஆவேசமாக பேசினாள் “நீ… நீதான் என்னை பற்றி தப்பா வதந்தியை பரப்புனது..” 

அதற்கு கரீமா “என்ன பேசுற நீ!.. உன் புத்தி கித்தி கெட்டு போச்சா? மருந்து அதிகமாக சாப்பிடுறதால இப்படி ஆயிட்டியா?” என கோபமாக பதில் சொல்ல.. 

தஸ்லீமும் “எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு.. நீதான் வதந்தியை பரப்பினே, உருவாக்கினது எல்லாம் நீ தான்…” என்று கத்தினாள். 

“என்னுடைய இடத்தை அபகரிக்க பார்த்தா நான் சும்மா விடுவேன்னு நினைச்சியா” என்று கரீமா கொக்கரித்தாள்.. இருவருக்கும் சண்டை உச்சநிலை அடைந்தது..  

“அதெல்லாம் முடிஞ்சது.. நீ எவ்வளவு பெரிய துரோகினு எல்லாருக்கும் தெரியட்டும்..” என்று தஸ்லீம் அந்த இடம் விட்டு நகரப் போக..

“உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா.. வாயைத் திறந்து என் கிட்ட பேசுறதுக்கு?.. அப்படினா நீ என்னோட உண்மையான முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்” என கரீமா மிரட்ட..

“நீ என்ன என்னை பயமுறுத்திறியா….? என் உயிரை எடுக்க போறியா?… எடுத்துக்கோ… அது தவிர உன்னால் என்ன செய்ய முடியும்?” என இவானின் தாய் திரும்பி கரீமாவை பார்த்து தைரியமாக பேச… 

“உன் உயிர் இல்ல… ஆனா உனக்கு உயிரான உயிர் பறி போய்டும்” பாதகி கரீமா கொடூரமாக சொல்ல…

அதிர்ந்த தஸ்லீம் “நான் ஆர்யன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல போறேன்.. எல்லாத்தையும்…” என வேகமாக நடந்தாள்..

போகாதே நில்லு! போகாதே கரீமா பயந்து போய் தஸ்லீமின் இரு கைகளையும் பிடித்து இழுத்தாள்.. 

“விடு! விடு! என்னை” 

“நீ உன் வாய மூடு! வாய மூடு!”

“விடு விடு”

இப்படியே கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்த போராட்டத்தில் கரீமா கையை வேகமாக விடவும், தஸ்லீம் தன்னிலை தடுமாறி மாடி வளைவுகளில் மோதி  சடாரென மேலிருந்து கீழே விழுந்தாள்.. 

கரீமா அதிர்ந்து நிற்க.. தஸ்லீம் தலை தரையில் மோதியது.. ரத்தம் மளமளவென வெளியேறியது.. கரீமா வாயில் கையை வைத்துக்கொண்டு எட்டி பார்த்தவள், தஸ்லீம் கைகால்களை விரித்தப்படி மயக்க நிலையில் கிடப்பது கண்டு அப்படியே திகைத்து நின்றாள்.. 

இப்போது நினைத்து பார்த்தாலும் அந்த குளிரிலும் கரீமாவுக்கு வேர்த்தது..  அப்போது நஸ்ரியா குடிக்க பானம் கொண்டு வர.. அதை வாங்கிக்கொண்ட அவளிடம் நஸ்ரியா கேட்டாள்.. “இவான் சித்தி அவனை சாப்பிட வச்சிருப்பாங்களா?”

 “இன்ஷா அல்லாஹ், நஸ்ரியா…   குழந்தை ரொம்ப பரிதாபமா இருந்தான்” என பெரியம்மா கரீமா பொய்யாய் பாவப்பட… உண்மையான வருத்தத்துடன் பணியாள் நஸ்ரியா கிச்சன் செல்ல.. “நான் போய் பார்க்கிறேன்” என்று கரீமா மேல் மாடிக்கு சென்றாள்..  

அங்கே அறை வாசலில் மூடிய கதவின் முன்னே ‘அண்ணன் மகன் சாப்பிட்டானோ இல்லையோ’ என்ற கவலையில் ஆர்யன் நடைபயின்று கொண்டிருக்க.. சாராவும் பாடிகார்டும் ஓரமாய் நின்றுகொண்டிருந்தார்கள்.. 

கரீமாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டவள், ஆர்யனிடம் தன் வேலையை ஆரம்பித்தாள்.. “நல்ல விஷயம் செய்தே, ஆர்யன்.. அவ இவானோட சித்தி.. அவனைப் பார்க்கற உரிமை அவளுக்கும் இருக்குதானே.. நல்ல பொண்ணா தான் தெரியுறா.. இவான் மேல அன்பு வச்சிருக்கா.. பார்த்தாலே தெரியுது” நல்லவிதமாய் பேசிக்கொண்டு வந்தவள்.. ஆர்யன் கூர்மையாய் தனக்கு செவி சாய்ப்பதை உறுதி செய்து கொண்டு அவன் மனதில் விஷமேற்ற முயன்றாள்..

“ஆனா ஒரு வேளை அவனோட அம்மாவை அவ இவானுக்கு நினைவுப்படுத்தலாம்.. என்ன பண்றது.. அப்படினா அது மோசமா போயிடுமே.. இல்லல்ல.. அப்படி நடக்காது.. எனக்கு நம்பிக்கை இருக்கு” என அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யன் முகம் மாறியது.. இன்னும் கூட கோபம் ஏறியதோ.. 

வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல… காலியான உணவு கிண்ணத்தை பார்த்ததும் நிம்மதியானான்.. முகம் தெளிவாக இருந்த இவான் தன் சித்தியிடம் கேட்டுக்கொண்டிருந்தான்… “அப்படின்னா அம்மா சிக் ஆக மாட்டாங்கனு சொல்றீங்களா, சித்தி.. என் அம்மாக்கு இனிமே உடம்பு சரியில்லாம போகாதுல.. அதானே சொல்றீங்க… எனக்காக எப்பவும் காத்திருப்பாங்க.. அப்படித்தானே?.. 

 “ஆமா என் கண்ணே! எப்பவும் உனக்காக இருப்பாங்க.. உன்ன பாத்துட்டே இருப்பாங்க… நீ சாப்பிட்டியா…. சந்தோஷமா இருக்கியா… இதெல்லாம் கவனிச்சுட்டு இருப்பாங்க…” ருஹானா அவன் துயர் நீக்கி வேறு திசை திருப்ப முயன்றாள்.. “அப்ப நான் சந்தோஷமா இருந்தா அவங்க கவலைப்பட மாட்டாங்கல?” இவான் சித்தியிடம் தன் சந்தேகம் தீர்க்க கேட்டான்… 

“ஆமா செல்லம்! நீ கவலைப்பட்டா அவங்களும் கவலைப்படுவாங்க.. நீ சிரிச்சா உன் அம்மாவும் சிரிப்பாங்க.. நீ சாப்பிட்டு சத்தமா சிரிச்சி விளையாடினா அவங்க தான் உலகத்திலேயே சந்தோஷமான அம்மா… நீ உங்க அம்மாவை சந்தோஷப்படுத்துவே தானே?” ருஹானா அவன் முகத்தை தடவியபடியே வினவ… இவான் ஆம் என தலையை ஆட்டினாள்..

இத்தனையும் அழுது கொண்டே சொன்னவள், தன் கண்ணீரை துடைத்தபடி திரும்பினாள்.. பொம்மை போல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த ஆர்யனை கண்டாள்.. இருவர் பார்வையும் சேர இவள் இரக்கமாய் இருக்க.. அவன் இரக்கமின்றி நின்றான்… வெளியே நின்றிருந்த கரீமா எதையோ யோசித்தவாறு ஒரு விலகல் தன்மையுடன் தன் அலட்சிய நடையுடன் அங்கிருந்து  அகன்றாள்…

“என்னை விட்டு போகாதீங்க சித்தி.. என்ன விட்டு போக மாட்டீங்க தானே..” பாவமாக இவான் கேட்க.. “கண்டிப்பா போக மாட்டேன், கண்ணே! இப்போ போனாலும் நிச்சயம் திரும்பி வருவேன்… நீ கவலைப்படாதே” நம்பிக்கையுடன் சொன்னாள்.. இதைக் கேட்ட ஆர்யன் ஒரு கோப மூச்சு விட்டான்..  

சின்ன குட்டி தொடர்ந்து “ப்ராமிஸ்?” கேட்டது.. அவளும் “ப்ராமிஸ்.. உன்னை விட்டு நான் எப்படி போவேன்” அவன் நாடியை பிடித்து ஆட்டியபடி உறுதியளித்தாள்.. அதற்கு மேல் பொறுக்க முடியாத ஆர்யன், சாராவை சத்தமிட்டு அழைக்க அவரும் உள்ளே வந்தார்.. “இவானை அவன் ரூமுக்கு கூட்டிட்டு போங்க” கட்டளை வந்தது.. 

“வாங்க லிட்டில் மாஸ்டர்” என்ற சாராவின் கை பற்றி இறங்கியவன், தன் சித்தப்பாவிடம், “சித்தி… என் சித்தி வரலையா?.. அவங்களும் வரணும்” என கேட்டான்.. சாரா பாவமாக பார்க்க.. ஆர்யனோ பதில் சொல்லாமல் நிற்க… ருஹானா கட்டிலில் அமர்ந்தபடியே இவானின் கையை பற்றி, “செல்லம்! நீ உன் ரூமுக்கு போ.. அங்க எனக்காக காத்திரு..” அவனிடம் அன்பு முகம் காட்டியவள்.. ஆர்யனை இகழ்ச்சியாக பார்த்தபடி “உன் சித்தப்பா கிட்ட நான் பேசிட்டு வரேன்.. சரியா?… கண்டிப்பா வருவேன்.. ப்ராமிஸ்என்றாள்.. 

மேலும் அடம் பிடிக்காமல் இவான் சாராவுடன் சென்று விட்டான்… அவனைப் பார்த்துக் கொண்டே எழுந்த ருஹானா, ஆர்யனின் அருகே சென்று அவனை நிமிர்ந்து நோக்கி, “இவான் சாப்பிட்டான்” என்று சொல்ல.. அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன்… அவள் புறமிருந்து பார்வையைத் திருப்பி சுவரை பார்த்துக்கொண்டு, “உன் வேலை முடிந்தது.. நீ போகலாம்” தாட்சண்யமின்றி சொன்னான்.. 

அதனால் கோபமடைந்த ருஹானா “இவானை இந்த மாதிரி விட்டுட்டு என்னால போக முடியாது.. என் அக்கா மகனை நான் என் கூட கூட்டிட்டு போறேன்…” அதிகாரமாக சொல்ல.. விடுவானா ஆர்யன்?.. அவளை நெருங்கி “என்னது கூட்டிட்டு போறியா? இந்த மாளிகைக்குள்ள நீ திரும்ப வரவே முடியாது.. இந்த இடத்தை சுத்தி பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு உன்ன நான் பார்க்கவே கூடாது” என உறுமினான்..

அவள் அதற்கும் அசராமல் “ஏன் கூடாது?.. என் அக்கா பையனை நான் பார்க்க கூடாதா… இந்த அநியாயம் நீங்க இவானுக்கு எப்படி செய்வீங்க..? இப்பதான் அம்மாவை இழந்து இருக்கான்…. அவனுக்கு என்னோட தேவை எவ்வளவு முக்கியம்னு இப்போ நீங்க பார்க்கல!”… அவளிடம் ஏதும் பதில் சொல்லாமல் ஆர்யன் பின்னாடி திரும்பி தலையசைத்தான்.. 

பாடிகார்ட் உள்ளே நுழைய.. நடக்கப் போவதை அறிந்து கொண்ட ருஹானா “நான் இவானுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன்.. அவன் எனக்காக காத்திட்டு இருக்கான்… வாக்கு கொடுத்து இருக்கேன்… எனக்காக காத்திருக்கும் இவானை  என்னால் விட முடியாது… அதற்குள் பாடிகார்ட் அவள் கையை பற்ற… “விடு என்னை! விடு என்னை” உதறி தள்ளினாள் 

Advertisement