Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 28 

‘திருமணம் உன்னோடு ஒருபோதும் இல்லை’ என்ற ருஹானாவின் வாய்மொழி கேட்டு உள்ளம் குளிர்ந்து நின்ற ஆர்யன், அதோடு திருப்தி அடைந்து அவள் அறையை விட்டு சென்றான் இல்லை. இருந்த இடம் நகராமல் இன்னும் அவள் மிஷாலுடன் பேசுவதை நாகரீகம் இன்றி கேட்டிருந்தான்.

“நீ செய்ற உதவிக்கெல்லாம் மிக்க நன்றி மிஷால். ஆனா இந்த விஷயம் பத்தி நாம இனி பேச வேணாம்”

“நீ சொன்னா சரிதான், ருஹானா. உனக்கு புரியுதுல, இவானுக்காக தான்…”

“உன் நேரத்தை நான் இன்னும் எடுத்துக்க விரும்பல, மிஷால். நம்ம புது முறை சமையல் பத்தி அப்புறம் பேசுறேன். பை” 

அவள் பேசி முடித்தவுடன் தான் ஆர்யனுக்கு தான் நிற்கும் இடம் புரிந்து நகர முற்பட்டான். அதற்குள் போனை அடைத்து திரும்பிய ருஹானா அவனை பார்த்துவிட்டாள். ‘சற்று முன்பு அவன் அறையில் காட்டுக்கத்தல் கத்தி தன்னை வெளியேற்றியவன் இப்போது ஏன் இங்கு வந்து நிற்கிறான்?’ என ருஹானா பார்க்க, ஆர்யன் அவளை பார்த்து தடுமாறி திரும்பி நடந்தான்.

“என் ரூம்ல என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” அவன் அளித்த வேதனையின் கண்ணீர் இன்னும் மிச்சமிருக்க கோபமாகவே கேட்டாள்.

ஆர்யன் வேகமாக யோசித்தும் எந்த காரணமும் சொல்ல வராததால் “இவான்” என தொடங்கி விட்டான். அவளுக்கும் அவனுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இவான் தானே! பின் சட்டென்று நினைவு வர “அவனுக்கு டாக்டர்ட்ட எப்போ ஹெல்த் செக்அப்க்கு போகணும்?” என்று கேட்க “அது அடுத்த மாசம் பத்தாம் தேதி” என அவள் உடனே சொல்ல, அவளை ஏறிட்டு பார்த்து தலையாட்டிவிட்டு சென்றான். 

அவளை பெட்டி படுக்கைகளோடு அந்த நிமிடமே வெளியேற்ற ஆவேசமாக உள்ளே வந்தவன், அவள் மறுப்பு கேட்ட நிமிடம் பெட்டி பாம்பாய் அடங்கி குதூகலமாக வெளியே போனான்.

அம்ஜத் மாடி தோட்டத்தில் இருப்பதை பார்த்தவன் அண்ணனை நாடி சென்றான். ரம்மியமாய் மலர்ந்த பூக்களுக்கு இடையே இருந்த அம்ஜத் “வா வா ஆர்யன்! இதுல எந்த பூ அழகா இருக்கு, சொல்லு” தம்பியை பார்த்த மகிழ்வுடன் கேட்டான். “எல்லாமே மிக அழகா இருக்கு, அண்ணா. எப்படி ஒன்னை மட்டும் சொல்றது?” என தம்பி பதில் கேள்வி கேட்க “நீ மகிழ்ச்சியா இருக்கே! அதான் உன் கண்ணுக்கு அப்படி தெரியுது” என்றான் உடன் பிறந்தவனின் மனம் அறிந்த தமையன்.

மூத்தவனிடம் முறுவல் காட்டிய இளையவன் “எனக்கு மீட்டிங்க்கு நேரம் ஆச்சு, அண்ணா! நான் வரேன்” என கைக்கடிகாரம் பார்த்துக்கொண்டே விடை பெற்றான். வேகமாக கீழே வந்தவனை மறித்த சல்மா “ஆர்யன்! இவான்….“ என தொடங்கவும் அவள் முகம் பார்த்து நின்றான்.

“இவானும் நானும் விளையாடினோம். புக் படிச்சோம். கலர் கூட அடிச்சோம். ஆனாலும் அவனுக்கு போரடிக்குது. வேற எதாவது செய்யலாமா? பூங்கா மாதிரி எங்கயாவது கூட்டிட்டு போகலாமா?” என முழு ஒப்பனையுடன் வந்திருந்த சல்மா கேட்க, ஆர்யன் யோசிக்க ஆரம்பித்தான். 

ஆர்யன் தலையாட்ட சல்மா பூரித்துப் போனாள். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நிற்பதை இலட்சியம் செய்யாமல் ருஹானா தாண்டி செல்வதை பார்த்த ஆர்யன் “இங்க பார்!” என அவளை கூப்பிட்டான். அவள் நின்று திரும்பி பார்க்கவும் “இவானை தயார் செய். நீங்க பூங்காக்கு போறீங்க” என ஆர்யன் சொல்ல சல்மா விக்கித்து நின்றாள்.

ருஹானாவின் மனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காட அவளும் அசையாது அப்படியே நின்றாள். “சீக்கிரம் கிளம்புங்க. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. போற வழில உங்களை விட்டுட்டு போறேன்” என்று ஆர்யன் சொல்ல ருஹானா மெல்ல தலையாட்டினாள்.

ஆர்யனும் அவளை பார்த்தபடி செல்ல, சல்மா அவளை முறைத்தபடி நிற்க, இது எதையும் கவனிக்காத ருஹானாவிற்கு சையத் சொன்ன ‘ஆர்யன் தன் தப்பை உணர்ந்தால் அதற்கு ஈடு செய்வான். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டான்’ வாசகமே நினைவிலாடியது.

தன் திட்டம் தலைகீழாய் மாறிப்போனதால் கொதிநிலையில் இருந்த சல்மா வேகமாக நடந்துவந்து சிந்தனையில் நின்றிருந்த ருஹானா மீது மோதினாள். அவள் மோதியதில் ஆடிய ருஹானா தன்னை சமாளித்துக்கொண்டு நின்றாள். “ஸாரி!” என சல்மா திமிராக சொல்லி செல்ல அது எதுவுமே ருஹானாவை பாதிக்கவில்லை. அவள் உற்சாகமாக ஆர்யனை தயார் செய்து கிளம்பினாள். வீட்டுக்கு வெளியே யாசின்ஸ் காரும் அடியாட்களுடன் காத்திருந்தது.

பூங்கா நோக்கி கார் செல்ல இருவருக்கும் இடையே இருந்த இவானுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டே சிரிப்புடன் வந்தான். ஆர்யன் வெளிப்புறம் பார்த்து வர அவனை நோக்கிய ருஹானா “நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என சொல்லவும், அவன் திரும்பி அவளை பார்த்தான்.

“நான் இனி உணவகத்துக்கு போக போறதில்ல. ஆனா என் வேலைய விடல. வீட்ல இருந்தே சமைச்சி தர போறேன்” என்று மூன்று நாட்களாக சொல்ல முயன்று முடியாமல் போன தகவலை சொல்லி முடித்து விட்டாள். ‘இதை தான் சொல்ல வந்தாளா? இதுக்கு போய் அவளையும் பாடாய்படுத்தி நானும் கஷ்டப்பட்டேனே!’ என நினைத்த ஆர்யன் “ரொம்ப நல்லது” என்று மட்டும் அவளிடம் சொன்னான்.

“உங்க வீட்டு கிச்சனை நான் பயன்படுத்திக் கொள்ளலாமா? அதுக்கு தனியா பணம் தந்துடுவேன்” என ருஹானா சொல்ல ‘யாருக்கு வேணும், அந்த பணம்?’ என்பது போல அவளை பார்த்துவிட்டு தலையை திருப்பிக்கொண்டான். ‘நீ மிஷால் உணவகத்துக்கு போகாமல் இருந்தாலே போதுமே அவனுக்கு’.

“சாரா மேம் வேலைக்கு தொந்தரவு இல்லாம பார்த்துக்குவேன். சின்ன மாறுதல்கள் மட்டும் செஞ்சிக்கிறேன்” என அவள் தொடர்ந்து சொல்ல அவனுக்கு அதெல்லாம் பெரிய விசயமாகவே தெரியவில்லை. லேசான மனதுடன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான்.

“அப்புறம் எனக்கு சில பொருட்கள் வாங்கணும். பூங்காக்கு போயிட்டு கடைக்கு போறேன். அதிக நேரம் எடுக்காது” என அவள் சொல்ல கண்களை மூடி சரியென தலையாட்டினான். அவளும், அவனும் நிம்மதி பெருமூச்சை விட்டனர்.

———- 

“அது என் பிளான், அக்கா! அவ ஈஸியா தட்டிட்டு போய்ட்டா. நான் அவ்வளவு சிரமப்பட்டு இவானுக்கு வேலை பார்த்தது எல்லாம் வீணா போச்சே!” என சல்மா கொதித்து கொண்டிருக்க “அமைதியா இரு, சல்மா” என கரீமா அவளுக்கு மாத்திரை எடுத்துக்கொடுத்தாள்.

“அக்கா! இப்போ அவ குதிச்சிட்டு இருப்பா. சரியான பசப்புக்காரி, அவ. ஒன்னும் தெரியாதவ மாதிரி பாவமா முகத்தை வச்சிக்கிட்டு சாதிச்சிட்டா”

“நீ மாத்திரையை போடு. உன்னை இப்படி கோபப்படுத்தினதுக்கு அவளுக்கு திருப்பிக் கொடுக்கலாம். கவலைப்படாதே!”

“எப்படிக்கா, ஆர்யன் அவ முகத்தைக் கூட பார்க்காம தானே இருந்தான். அப்புறம் எப்படி அவள கூட்டிட்டு போறான்?”

“அவனுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த பொண்ணு ஹோட்டல்காரன் கூட கல்யாணத்துக்கு மறுத்தது ஆர்யனுக்கு தெரிய வந்திருக்கும்” சரியாக கணித்தாள், கரீமா.

——–         

“சித்தி! நான் இப்படியே சறுக்கி வரவா?” இவான் ஆனந்த கூச்சலிட்டான்.

“வா அன்பே! நான் உன்னை பிடிச்சிக்கறேன்”

“3…. 2….. 1… நான் வரப்போறேன்” கத்திக்கொண்டே கீழே வந்த இவானை அள்ளி தூக்கி சுற்றினாள், ருஹானா.

“சித்தி! நான் திரும்பவும் சறுக்குறேன்” என இவான் ஓட அவனை சிரிப்புடன் ருஹானா பார்த்திருக்க, சற்று தள்ளி நின்று பாதுகாவலர்கள் சூழ ஆர்யன் அவர்களை மகிழ்வுடன் கவனித்திருந்தான்.

அப்போது அவன் போன் அடிக்க “ஆர்யன்! மீட்டிங் தொடங்கப் போகுது. நீங்க எங்க வந்துட்டு இருக்கீங்க?” என ரஷீத் கேட்க, ஆர்யன் சற்றும் யோசிக்காமல் “நாளைக்கு மீட்டிங்கை தள்ளி வச்சிரு, ரஷீத்” என்றான். “சரி, உங்க விருப்பம்” என ரஷீத் சொல்ல, போனை கோட் பையில் போட்டவன் பாதுகாவலரிடம் “நீங்க வீட்டுக்கு போங்க. நான் இங்க இருக்கேன்” என உத்தரவிட்டான்.

“உங்கள் ஆணைப்படி” என அவர்களும் அகல, ருஹானாவுக்கும், இவானுக்கும் தானே பாதுகாப்பு பணியை ஏற்றுக் கொண்டு ஆர்யன் மகிழ்ச்சியாக நிற்க “செக்யூரிட்டியும் போய்ட்டாங்க” என்று தகவலை யாசினுக்கு தெரிவித்தனர், அவர்கள் பின்னாலேயே வந்து நோட்டம் விட்டபடி காத்திருக்கும் கடத்தல்கார்கள்.

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கூச்சலையும் மீறி இவானின் சந்தோசக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அவனையும் அவனோடு  இணைந்து சிரிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த ருஹானாவையும் பார்த்த ஆர்யனை ருஹானாவின் மலர்ந்த புது முகம்  யோசிக்க வைத்தது. 

‘இவான் தான் எனக்கு உயிர். அவன் தான் எனக்கு எல்லாமே’ என ருஹானா தன் முன்னே வந்து பேசியதையும், தான் அதை நம்பாமல் பொய் என பணத்தை இறைத்து அவளை விரட்டியதையும் எண்ணி பார்த்தான். ‘அவளுடைய ஆனந்தம் இவான் மட்டும் தான்’ என ஆர்யனுக்கு புரிந்தது.      

சறுக்குமரம் தாண்டி இவான் பார்வை ஏற்றப்பலகையில் விழ “சித்தி! சீசா விளையாடலாமா?” என அவன் ருஹானாவிடம் கேட்க இருவரும் அதை நோக்கி நகர்ந்தனர். சித்தியின் கையை பிடித்துக்கொண்டு நடந்த இவான் ஆர்யனை பார்த்துவிட “சித்தி! அங்க பாருங்க, சித்தப்பா. இன்னும் இங்க தான் நிக்கிறாங்க” என கத்தினான்.

ருஹானாவும் ஆர்யனை திரும்பி பார்க்க அவனும் இவர்களை அமைதியாக  பார்த்துக்கொண்டிருந்தான். “சித்தி! நான் போய் சித்தப்பாவையும் விளையாட கூப்பிடவா?” என இவான் கேட்க, சற்று யோசித்த ருஹானா “உன் விருப்பம், செல்லம்” என அவள் சொல்ல, இவான் குதித்துக்கொண்டு ஆர்யனிடம் ஓடினான்.

“சித்தப்பா!” என ஆர்யன் கையை பிடித்தான்.

“என்ன சிங்க பையா?”

“சித்தப்பா! எங்க கூட சீசா விளையாட வரீங்களா?” 

ஆர்யன் யோசனையுடன் ருஹானா பார்க்க அவள் முகத்தில் வரவேற்போ, மறுப்போ எதுவுமில்லை

“சித்தப்பா! நீங்க விளையாடலனா கூட பரவால்ல. எங்க கூட வாங்களேன்” என இவான் பாசமாக அழைக்க, ஆர்யனும் அவனுடன் சென்றான்.

ருஹானா ஒருபக்கம் ஏற்ற பலகையில் அமர்ந்திருக்க, மறுபக்கம் இவானை அமரவைத்து ஆர்யன் பிடித்துக்கொண்டான். இவான் பக்கம் ஆர்யன் கீழே இழுக்க மறுபக்கம் ருஹானா மேலே போனாள். இவன் பிடியை தளர விடும்போது அவள் கீழே வந்தாள். இவானின் ஆனந்தம் முகத்தில் தெரிய, ஆர்யனுக்கோ அது உள்ளம் பூராவும் நிறைந்திருந்தது.

ருஹானாவின் முகத்தை ரசித்துக்கொண்டே ஆர்யன் இவானை ஏற்றி இருக்க அவள் தான் நேரே பார்க்க முடியாமல் திணறி போனாள். அங்குமிங்கும், வலப்பக்கம், இடப்பக்கம், மேலேகீழே என பார்வையை மாற்றிக்கொண்டே இருந்தாள்.

வேக ஆட்டம் முடித்து இறங்கும்வேளையில் அவள் தடுமாற, ஆர்யன் பதறிப்போய் “உனக்கு அடி படலயே?” என கேட்டு, மிக மெதுவாக அந்த புறம் பலகையை விட, கீழே இறங்கிய ருஹானா “ஒன்னுமில்ல” என தலைகுனிந்து பதில் சொன்னாள்.

இவான் அடுத்து ஊஞ்சலை பார்த்துவிட சித்தியிடம் கேட்காமல் சித்தப்பாவிடம் கேட்டான், “ஊஞ்சல் ஆடலாமா?” என்று. சித்தப்பாவின் கடுமை முகத்தை மட்டும் கண்டும் கூட அவனிடம் மிகுதியான அன்பு வைத்திருந்த அந்த சின்ன குழந்தை, இப்போது சிறிய தந்தை தன்னிடம் இலகுவாக நடந்துக்கொள்ளவும் அவனிடம் மேலும் நெருக்கமானான்.

ஆர்யன் தலையாட்ட அவன் கையை பிடித்துக்கொண்டு ஊஞ்சல் பக்கம் நகர்ந்த இவான் மறுகையில் சித்தியையும் இழுத்துக்கொண்டு சென்றான். ஊஞ்சலில் இவானை பத்திரமாக அமர வைத்து கொக்கியை மாட்டிவிட்ட ஆர்யன் “அக்னி சிறகே! நீ ரெடியா?” என கேட்க, இவான் ஆர்வமாக தலையசைக்க மெதுவாக ஊஞ்சலை ஆட்டிவிட்டான்.

சிறிதுநேரம் ஆடிய இவான் சித்தி பக்கத்தில் அமைதியாக நிற்பதை பார்த்து “சித்தப்பா! கொஞ்சம் நிறுத்துங்க” என சொல்லவும் ஆர்யன் ஊஞ்சலை ஆடாமல் பிடித்துக்கொண்டான். “சித்தி! இந்த ஊஞ்சல்ல நீங்களும் உட்காருங்க. நாம சேர்ந்து ஆடலாம்” என பக்கத்தில் இருந்த ஊஞ்சலை காட்டினான். குனிந்து ஊஞ்சலை பிடித்துக்கொண்டிருந்த ஆர்யனும் நிமிர்ந்து ருஹானாவை பார்த்தான்.

“இப்போ நீ ஆடு, அன்பே. நான் உன்னை பார்த்துட்டு இருக்கேன். இன்னொருமுறை நானும் வரேன்” என அவள் சொல்ல இவானை விட ஏமாற்றம் அடைந்த ஆர்யன் தலையை திருப்பிக்கொண்டான்.

Advertisement