Advertisement

ஆர்யன் அப்படியே திகைத்து போய் அவளை பார்த்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, உரிமையான அவள் செயலில் அவன் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது. மௌனம் வார்த்தைகளை விட பலம் வாய்ந்தது தான். ஆனால் மௌனத்தின் மொழியை புரிந்துக் கொண்டால் வீண் சந்தேகங்கள் இல்லையே!

அர்ஸ்லான் மாளிகையில் சல்மா இவானை பார்த்துக்கொண்டிருக்க, இங்கே இவர்கள் இருவரும் காட்டுக்குள் பறவைகள் பின்னணி பாட எதிரெதிரே அமர்ந்து கண்கள் கலந்து ஒரு வார்த்தை பேசாமல் மௌனமாக பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர். இப்படி உணவை பகிர்ந்து கொள்பவர்கள் உள்ள உணர்வுகளையும் பகிர்ந்துக்கொண்டால் குழப்பங்களுக்கும், கோபதாபங்களுக்கும் இடம் ஏது?

சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து கொண்ட ஆர்யன் “வா போகலாம்! என்கூட கார்ல தான் நீ வீட்டுக்கு வர்றே” என்றான். எதிர்ப்பு ஏதும் சொல்லாமல் எழுந்த ருஹானா சையத்துக்கு தலையாட்டிவிட்டு நடந்து சென்று காரில் அமர்ந்துக்கொண்டாள்.

அவள் தனியாக நடந்து வருவதை பார்த்த யாசின்ஸ் ஆட்கள் வேகமாக காரை கிளப்ப, அவள் ஆர்யனின் காரில் அமரவும் என்ன செய்வது என குழம்பினர். ஆர்யனும் காரை நோக்கி செல்லவும் சையத் “மகனே!” என அழைத்தார். அவன் பக்கம் வர “ஏன் அந்த பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கறே?” என கேட்டார்.

சையத்திடம் எல்லாம் சொல்லிவிட்டாள் என புரிந்துக்கொண்ட ஆர்யன் “அவ போக போறா. இவானை வருத்தப்பட வைக்க போறா” என்றான். ஆர்யனை திறந்த புத்தகம் போல படிக்கும் திறமையுள்ள சையத் “இவானை மட்டுமா?” என புருவம் உயர்த்தி கேட்டார்.

‘இல்லை. தனக்குமே தாங்கமுடியாத துன்பம் தான்’ என அந்த நொடியில் உணர்ந்துக்கொண்ட ஆர்யன் “சையத் பாபா!” குரலில் மென்மை குழைந்து தலையை சாய்த்து கூப்பிட்டான். அவரும் என்ன என சைகையில் வினவ அவருக்கு பதில் சொல்லாமல் காருக்கு நடந்தான்.

முதல் முறை இருவரும் சேர்ந்து வந்தார்கள். ருஹானா அவசரமாக தனியாக சென்றுவிட்டாள். இப்போது அவள் முதலில் வர, அவன் பின்னால் வர இருவரும் சேர்ந்து செல்கிறார்கள். இருவரும் இனிமையாக இணைந்து வந்து இனிதாக பேசி உண்டு மகிழ்ந்து திரும்பும் நாளும் வருமோ?

காரில் மௌனமே ஆட்சி செய்ய, ஜன்னல் புறம் திரும்பியிருந்த ருஹானாவை பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்திய ஆர்யன் அவளிடம் எதோ கேட்க வந்தவன் கேட்காமல் சாலையில் கண் பதித்தான். ‘இவானை மட்டுமா?’ என்ற சையத்தின் கேள்வி அவன் செவியில் மோத, ருஹானாவின் நினைப்பு கருப்பு முத்தில் இருக்க அவனை திரும்பி பார்த்தாள்.

———-

அர்ஸ்லான் மாளிகைக்கு எதிரே சாலையில் மிஷால் ருஹானாவுக்காக காத்திருந்தான். ‘அவள் வெளியே சென்றிருக்கிறாள்’ என்ற தகவலை வாயிற்காப்போன் மூலம் அறிந்தவன் கையில் ஒரு உறையோடும், மோதிர பெட்டியோடும் பொறுமையின்றி தன் கார் அருகே நடந்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் ஆர்யன் கார் வர, முன்னிருக்கையில் ருஹானா அமர்ந்து வர, அதை பார்த்த மிஷாலின் முகம் சுணங்கிப் போனது. ருஹானா மிஷாலை குழப்பமும், பயமுமாக பார்க்க, ஆர்யன் குரோதத்துடன் மிஷாலை பார்த்துக்கொண்டே வண்டியை மாளிகையின் உள்ளே திருப்பினான்.

தோளில் மாட்டிய கைப்பையுடன் உள்ளேயிருந்து ஓடிவந்த ருஹானா “என்ன மிஷால்? ஏன் இங்க வந்தே?” என கேட்க “உன்னோட இந்த வார சம்பளத்தை கொடுக்க வந்தேன்” என காகித உறையை நீட்டினான். “இதுக்கு இப்போ என்ன அவசரம்? ஏன் உனக்கு சிரமம்?” என கேட்டபடியே அதை வாங்கி கைப்பையில் வைத்தாள்.

‘உன் மனம் மாறியதா என தெரிந்துக்கொள்ள இதை சாக்காக கொண்டு வந்தேன்’ என சொல்லாமல் “ஒருவேளை இது உனக்கு தேவைப்படலாம்னு நினைச்சி கொண்டு வந்தேன்” என சொன்ன மிஷால், ருஹானா நன்றி சொன்னபின் “நீ ஏன் சோர்வா தெரியுறே? எல்லாம் சரி தானே? இவான் நல்லா இருக்கான் தானே?” என ‘அவள் ஆர்யனுடன் எங்கே சென்று வருகிறாள்’ என்று தெரிந்து கொள்ள வினவினான்.

“இவான் நல்லா இருக்கான்” என ருஹானா ஒற்றை பதிலில் முடிக்க “நான் கேட்டது பத்தி யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க?” என ஆவலோடு கேட்க ருஹானா பெருமூச்செறிந்தாள். அதிலேயே அவளின் இல்லை என்ற பதிலை புரிந்துக்கொண்டவன், “வேணா.. இப்போ சொல்லாதே. நாம வேற சந்தர்ப்பத்தில இதை விரிவா பேசுவோம். உனக்கும் யோசிக்க அவகாசம் கிடைக்கும். நான் அப்புறம் உனக்கு போன் செய்றேன்” என சொல்ல ருஹானா சரியென தலையாட்ட, காரில் ஏறி சென்றான்.

———

மிஷால் ருஹானாவை தேடி மாளிகைக்கே வந்ததை தாங்க இயலாத ஆர்யன், சிகப்பு நிறம் கண்ட காளையை போல மூச்சிரைத்துக்கொண்டு தன் அறையை சுற்றி வந்தான். அப்போது கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த ருஹானா மெல்ல அவன் அருகே வர “என்ன?” என அவள் மேல் கோபத்தை திருப்பினான்.

“கண்டிப்பா எதோ நடந்திருக்கு. என்னை அறியாம நான் உங்களை கோபப்படுத்தியிருக்கேன். அதனால தான் நீங்க இவானை என்கிட்டே இருந்து தள்ளி வைக்கிறீங்க. அவன் விஷயத்துல நான் தவறு செய்வேன்ன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என சோகமாக ருஹானா கேட்க, எதிர் திசையை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனின் கோப முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“ஆனா நான் என்ன செய்தேன்னு இப்போ உங்களை கேட்க மாட்டேன். ஆனாலும் உங்ககிட்டே நான் ஒன்னு சொல்லணும். நீங்க அதை கேட்கணும்” என அவள் சொன்னதை கேட்டு ஆங்காரமான ஆர்யன் அவளை நோக்கி தலையை வேகமாக திருப்பினான்.

“இவானை பற்றி என்மேல உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தா, அதுக்கு அவசியமே இல்ல. என் உயிரை விட மேலா நான் இவானை நேசிக்கிறேன். அவன் துன்பப்படும்படியா நான் எப்பவும் நடக்க மாட்டேன். அவனுக்காக தான் நான் உயிரோட இருக்கேன்” என ‘இவானை கவனிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுவிட வேண்டும்’ என்ற தீர்மானத்தில் அவள் பேசிக்கொண்டே போக “தேவையில்லாததை பேசாதே. என்ன சொல்ல வந்தே?” என்றான் அவன் உக்கிரமாகவே.

“தேவையில்லாம நான் எதும் பேசல. இவான் மேல நான் எத்தனை அன்பு வச்சிருக்கேன்னு தான்னு உங்களுக்கு புரிய வைக்கிறேன்” என ருஹானா குரல் தழுதழுக்க, “அதான் சொல்றேன். அவசியம் இல்லாதது பேசாம என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லு” என அவன் உரக்க சொன்னான். அவள் திருமணம் பற்றி கேட்க மனதை தயார் செய்துக்கொண்டானோ?

‘இவானை பற்றி தானே சொல்ல வந்தேன். இவன் என்ன வேற எதையோ சொல்ல சொல்றான்?’ என அவனை விசித்திரமாக பார்த்த ருஹானா இன்னும் அவனுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கத்தில் “எனக்கு எல்லாமே இவான் தான். அவனோட ஒவ்வொரு வளர்ச்சியும் அவன் பக்கத்தில இருந்து பார்க்க ஆசைப்படுறேன். இதுக்காக நான் எதுனாலும் செய்வேன். என் வேலையை பத்தி சில முடிவுகள் எடுத்துருக்கேன்” அது என்ன என சொல்ல வரும்போது ஆர்யன் குறுக்கிட்டான்.

“உன் வேடிக்கை முடிஞ்சிதுன்னா நீ போகலாம்” என வெறுப்புடன் ஆர்யன் சொல்ல “எனக்கு புரியல?” என ருஹானா கேட்டாள். “உனக்கு புரிஞ்சது போதும். வெளியே போ” என மிக கடுமையாக ஆர்யன் கட்டளையிட ‘இவனுக்கு போய் பாவம் பார்த்தோமே’ என கோபப்பட்ட ருஹானாவுக்கு கையில் இருந்த உறையின் கவனம் வந்தது.

“இது என் கடனோட ஒரு பகுதி” என ருஹானா மேசை மேல் பணத்தை வைத்துவிட்டு ஏளனமாக ஆர்யனை பார்த்து “இந்த காகிதம் வச்சி உங்களுக்காக ஒரு ராஜாங்கம் அமைச்சிருக்கீங்க. எல்லாரையும் உங்களுக்கு வேலைக்காரங்களா வச்சிருக்கீங்க. ஆனா நான் உங்க வேலைக்காரி இல்ல. அப்படி மாறவும் மாட்டேன். இவானையும் அப்படி மாற விட மாட்டேன்” என அவள் பேச பேச ஆர்யனின் கோபம் தலைக்கேறியது.

“ஒருநாள் இவானை தூக்கிகிட்டு இங்க இருந்து போய்டுவேன். அந்த சமயம் உங்களாலயும் அதை மறுக்க முடியாது. அந்த நாள் வரும்போது நீங்களே இவானை உங்க கையால தூக்கி எனக்கு கொடுப்பீங்க” என ருஹானா சவால் விட, சுயக்கட்டுப்பாடு இழந்த ஆர்யன் “உன் பொய்யையும் பணத்தையும் எடுத்துக்கிட்டு இங்க இருந்து போய்டு” என பணத்தை எடுத்து அவள் மேல் வீசி எறிந்தான்.

‘என்ன மனிதன் இவன்!’ என அவனை கேவலமாக பார்த்த ருஹானா வேகமாக வெளியேற, உக்கிரம் தணியாமல் ஆர்யன் நின்றிருந்தான். அப்போது உள்ளே வந்த ரஷீத் சீறிக்கொண்டிருந்த ஆர்யனையும், சிதறிக்கிடந்த பணத்தையும் பார்த்து “ஆர்யன்! திரும்பவும் அதே பிரச்சனையா?” என கேட்டான், ‘இவங்களுக்கு இதே தான் வேலை போல’ என்ற தொனியில்.

“அதுக்கும் மேல. அவ கல்யாணத்துக்கு அப்புறம் இவானையும் கூட்டிட்டு போக திட்டம் போட்ருக்கா” என ஆர்யன் சொல்ல, ரஷீத் அதிர்ச்சியடைந்து “என்ன! அது எப்படி நடக்கும்?” என கேட்க “இப்போவே அவள வெளியே அனுப்புறேன்” என ஆர்யன் வேகமாக வெளியே சென்றான். ‘தன்னை விட்டு பிரிந்து போய்விடுவாளோ?’ என்ற பயத்தின் மேல் சினம் என்னும் போர்வை மூடிக்கொள்ள அவனின் மனதின் உண்மை காரணத்தை அவனாலேயே அறிய முடியவில்லை.

————–

ஆர்யனின் கோப தாக்குதலில் மூச்சு முட்ட, ருஹானா அவள் அறையின் வெளிமாடத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். அப்போது அவள் போன் அடிக்க, காத்திருக்க பொறுமையில்லாத மிஷால் அழைப்பில் வர, சூறாவளியாக ஆர்யனும் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான்.

அறையில் அவளை தேடி காணாது அவள் பேச்சுக்குரல் கேட்க மேன்மாடத்தை ஆர்யன் பார்க்க, அவள் போனில் பேசுவதை கேட்டபடி அப்படியே நின்றான்.

“எனக்கு தெரியும், ருஹானா. உனக்கு யோசிக்க நேரம் வேணும்னு. ஆனா…”

“மிஷால், உனக்கு நன்றி. ஆனா என் முடிவு மாறாது. என்னால உன்னை திருமணம் செய்ய முடியாது”

சூறாவளியின் சுழற்சி அப்படியே நின்றது.

“இது என்னைக்கும் நடக்காது” ருஹானாவின் குரல் தேனாய் காதில் பாய்ந்தது.

நின்ற சூறாவளி தென்றலாய் மாறியது.

தாறுமாறாக இருந்த சுவாசம் சீரானது.

சுருங்கியிருந்த முகம் மலர்ந்து மென்மையானது.

பாறையாய் இறுகியிருந்த உடல் முழுதும் பஞ்சை போல் லேசானது.

மனம் ஜிவ்வென்று உயரே பறந்து வானில் மிதந்தது.

(தொடரும்)

Advertisement