Advertisement

மிஷால் உணவகத்தில் கரீமா நுழைய, மிஷால் சோகமாக பார்த்துக் கொண்டிருந்த மோதிர பெட்டியை அவள் கவனித்து விட்டாள். சதாம் கரீமாவை வரவேற்கும் சத்தம் கேட்டு கலைந்த மிஷால் கையிலிருந்த நகைப்பெட்டியை மூடி பின்னால் மறைத்தான்.

“வாங்க கரீமா மேம்! என்ன செய்தி? ருஹானா நல்லா இருக்கா தானே?” என வேகமாக கேட்டான். “அவ நல்லா இருக்கா. நீ பதட்டப்படாதே. நான் இந்த பக்கமா வந்தேன். இங்க சாப்பிட ஆசையா இருந்தது. அதான் வந்தேன். வரலாம் தானே” என கரீமா சிரித்தாள்.

“தாராளமா வரலாம். வாங்க. உட்காருங்க”

“நான் வரும்போது ருஹானா வீட்ல தான் இருந்தா. ஏன் இன்னைக்கு அவ வேலைக்கு வரலயா?”

“அவ இனி வீட்ல இருந்து தான் வேலை செய்ய போறா. அவசியம்னா இங்க வருவா”

———

சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்த ருஹானாவை பின்பற்றி ஒரு காரும் மெல்ல வந்துக் கொண்டிருந்தது. அவள் நின்று திரும்பி பார்க்கவும் காரிலிருந்து வாட்டசாட்டமான மூவர் கீழே இறங்கி அவளை நோக்கி வந்தனர்.

அதற்குள் ஒரு வாடகை கார் வர ருஹானா கைகாட்டி அதை நிறுத்தி அதில் ஏறிவிட்டாள். மீண்டும் அவர்கள் காருக்கு ஓடி ஏறிய மூவரும் ருஹானா சென்ற காரை பின்தொடர ஆரம்பித்தனர்.

——–

தோட்டத்தில் இவான் கையைப்பற்றி சல்மா வில்லை பிடிக்க சொன்னாள், “இப்படி பிடிக்கணும் இவான்! இதோ இங்க பிடி” என்று சொன்னவள், ஆர்யனை பார்த்து “இது சரிதானா ஆர்யன், நீங்க சரியான்னு பாருங்களேன்” என கொஞ்சினாள்.

ஆர்யன் கவனமில்லாமல் தலையாட்ட, “வா இவான்! இதை விடலாம்” என்று சல்மா ஆர்யனை பார்த்துக்கொண்டே சொல்ல “என் சித்தி எங்கே?” என்றான், இவான். அங்கே பானங்கள் கொண்டுவந்த நஸ்ரியா “உங்க சித்தி வெளிய போனாங்களே, லிட்டில் சார்” என்று சொல்ல, ஆர்யனின் கவனம் முழுதும் அங்கே குவிந்தது.

“எங்க போனா?” என ஆர்யன் வேகமாக நஸ்ரியாவிடம் கேட்க “எதும் சொல்லிட்டு போகல, ஆர்யன் சார்” என அவள் பதில் தந்தாள். யோசித்த ஆர்யன் வேகமாக செல்ல “ஆர்யன், பாருங்க இவான் அடிக்க போறான்” என அவன் கவனம் திருப்ப பார்த்தாள்.

“இவான் சோர்வாகிட்டான். அவனுக்கு மதியம் தூக்கம் தேவை” என சொல்லிவிட்டு அவன் மின்னலென மறைந்துவிட்டான். ‘அத்தனை உழைப்பும் வீணாக போனதே!’ என சல்மா மனம் சோர்ந்தாள்.

———-

மரங்கள் அடர்ந்த திறந்தவெளி சையத் உணவகத்திற்குள் ருஹானாவின் கார் நுழைய, அவள் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் அவள் சாப்பிட்டு திரும்பும்வரை தூரமாக நின்று காத்திருக்க முடிவு செய்தார்கள். சையத் அவளை உற்சாகமாக வரவேற்று சாப்பிட சொல்லி உபசரிக்க, ருஹானாவோ “நன்றி, எனக்கு பசியில்ல. நான் உங்ககிட்ட முக்கியமா பேச வந்தேன்” என்றாள்.

“கண்டிப்பா பேசலாம். அதுக்கு முன்னே கொஞ்சம் சாப்பிடு, மகளே! விருந்தாளி சாப்பிட்டா, உணவு தந்தவனுக்கு அதிர்ஷ்டம் தரும். இது உனக்கு தெரியும் தானே! வா வந்து உட்காரு” என சையத் சொல்ல அவளுக்கு மறுக்க முடியவில்லை. யாசின்ஸ் ஆட்கள் அவள் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தபடி இருக்க, ருஹானா சென்று தனியான ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

உணவை அடுப்பில் வேக போட்டுவிட்டு சையத்தும் அவள் எதிரே அமர “எனக்கு வேற வழி தெரியாததால தான் இங்க வந்திருக்கேன். உங்களை தவிர யார் பேச்சையும் அவர் கேட்க மாட்டார். என்னன்னு தெரியல, இவானை பார்க்கக்கூட என்னை விட மாட்றார். என்னை எத்தனை துன்பப்படுத்தினாலும் நான் தாங்கிக்குவேன். ஆனா ஏன் இவானை கவனிக்க விட மாட்றார்ன்னு எனக்கு புரியவேயில்ல. என்ன கேட்டாலும் பதில் சொல்ல மறுக்குறார். மூடின பெட்டி மாதிரி இருக்கார்” என ருஹானா அவள் ஆதங்கத்தை கொட்டினாள்.

“கருப்பு முத்துக்கு விலை மதிப்பு அதிகம். ஏன்னு உனக்கு தெரியுமா?”

ருஹானா இடமும் வலமுமாக தலையை ஆட்டினாள்.

‘நான் சொல்றேன்’ என்பதுபோல கண்களை மூடித்திறந்த சையத் “சிப்பியின் ஓடு மிக கடினமானது. ஆனா அதை லட்சியம் சின்ன மண் துகள் அதை துளைச்சி எப்படியோ உள்ள போய் வருட கணக்கா தங்கிடும். சிப்பியால அதை தடுக்க முடியாது. வெளிய தள்ள பார்க்கும். சிப்பியால முடியாது.

உள்ளே பாதிப்பு ஏற்பட்டுச்சினா அதை அத்தனை எளிதா தூக்கி போட முடியாது.  அந்த மண் துகளும் உள்ள கருப்பாகி சிப்பியோட தசைகளை திடப்படுத்துது. மண்துகள் சிப்பியோட கலந்திடுது. சிப்பிக்குள்ள முத்து உருவாகும். அதனால கருப்பு முத்தோட மதிப்பு உயர்ந்திடுது. அதுக்கு அப்புறம் என்ன நடக்குது?” என ருஹானாவிடம் கேட்டார்.

அவர் சொல்வதை ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்த ருஹானா “சிப்பி முத்தை வெளியே விடாது” என்றாள்.

வேகமாக தலையாட்டிய சையத் “ஏன்னா சிப்பி தன் வலி கொண்டு அந்த முத்தை உருவாக்கி இருக்கு. ஒருத்தரோட ஆழ் மனசு ஆறாத ரணத்தை தொடறது அத்தனை லேசுப்பட்ட காரியம் இல்ல. நீ சின்ன பொண்ணு தான். ஆனா நெருப்புக் கோளங்களை தாண்டி வந்துருக்கே. நான் சொல்றது சரிதானே?” என கேட்டார்.

ருஹானா கண்கலங்க, சையத் “எனக்கு தெளிவா தெரியுது. ஆர்யன் உன்னை கஷ்டப்படுத்துறான். ஆனா கவலைப்படாதே. அவன் தவறை உணர்ந்துட்டான்னா நீ பட்ட துன்பத்துக்கு ஈடு செய்வான். அவனை எதும் கேட்காம தனியா விடு. ஆனா ஆர்யன்ட்ட இருந்து மன்னிப்பு மட்டும் எதிர்பார்க்காதே. உயிரை விட கூட துணிவான். ஆனா ஸாரி மட்டும் அவன் வாயில இருந்து வராது” என ஆர்யனின் இயல்பை ருஹானாக்கு புரிய வைத்தார்.

“ஆனா மன்னிப்பு கேட்கிறவனும் நன்றி சொல்றவனும் சிறந்த மனிதர்கள் இல்லயா?” என கேட்ட ருஹானா தன் தேவையை வலியுறுத்தி “எனக்கு அவர் கிட்ட இருந்து ஸாரி வேணாம். இவானை பார்க்க விட்டா மட்டும் போதும்” என்றாள்.

“மனிதனுக்கு உண்டாகிற காயங்கள் வித்தியாசமானது. ஒருத்தனுக்கு அன்பு செலுத்த பயம். ஒருத்தனுக்கு யாரையும் நம்பறதுக்கு பயம். இன்னொருத்தனுக்கு மன்னிப்பு கேட்க பிடிக்காது” இது எல்லாமே ஆர்யனை குறிக்கும் என பூடகமாக அவளுக்கு உணர்த்தினார்.

“அவனோட கருப்பு முத்து உருவாக எவ்வளவு வலி தாங்கினான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும். நீ தான் பொறுமையா இருக்கணும்” என்று சொல்லி அவளுக்கு சிந்திக்க அவகாசம் கொடுத்து உணவு கொண்டுவர எழுந்து சென்றார். கன்னத்தில் கை வைத்தபடி ருஹானா யோசனையில் ஆழ்ந்தாள்.

———

“அக்கா! நடக்காம இப்படி உட்காரேன்! நீ நடக்கறது எனக்கு தலை சுத்துது”

“சல்மா! எனக்கு ரத்தம் கொதிக்குது. நீ விளையாடுறியா?”

“என்னன்னு சொல்லிட்டு சத்தம் போடு, அக்கா”

“அந்த சித்தி மிஷாலை கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா. அதோட ‘வேலைக்கும் வரல, இங்க இருந்தே சமைச்சி அனுப்புறேன்’னு சொல்லியிருக்கா”

“என்ன அக்கா சொல்லற? நாம இப்போ என்ன செய்ய போறோம்?”

“அதான் எனக்கும் புரியல. நல்லவேளையா அவ மறுத்தது இன்னும் ஆர்யனுக்கு தெரியல”

“சீக்கிரம் தெரிஞ்சிடுமே!”

“அதுக்குள்ள நாம வேகமா வேலை செய்யணும், சல்மா. முக்கியமா இவான் சம்பந்தமா.. நீ இன்னைக்குலாம் அவன் கூட தானே இருந்தே?”

“ஹப்பா! அவனை தூங்க வைக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு! சித்தி எங்கே சித்தி எங்கேனு உயிரை வாங்கிட்டான்”

“நல்லது செஞ்சே! இவான் தான் நம்மோட துருப்பு சீட்டு”

“அவனுக்கு தானே நானியா இருக்கேன்”

“ஆர்யனுக்கு அவ கல்யாணம் வேணாம்னு சொன்ன தகவல் தெரியறதுக்குள்ள நீ இவானோட நெருக்கமாகு. அப்போ தான் இந்த ஒட்டுண்ணியை வெளிய அனுப்ப முடியும். அவளோட இடத்துக்கு தூக்கி அடிக்க முடியும்”

———–

ருஹானா கன்னம் தாங்கி இன்னும் சிந்தனை செய்தபடி இருக்க, சையத் அவளுக்கான உணவை தயாரித்திருந்தார். அவள் முன்னே உணவு தட்டை வைத்து ‘இனிய உணவு’ என சொன்னவர் மிகுதியாக செய்த உணவை கையில் வைத்திருந்தார்.

ஆர்யன் கார் உள்ளே வர, யாசின்ஸ் கையாட்கள் காரினுள் பதுங்கிக் கொண்டனர். காரை அருகே கொண்டுவந்து நிறுத்தி இறங்கிய ஆர்யன் சையத்தை பார்த்தவன், அவரை நோக்கி நடந்து வந்தான். சையத்தும் அவனை வியப்பாக பார்த்தவர் ருஹானாவை பார்க்க அவள் குனிந்தபடி இருந்தாள்.

சையத் நல்வரவு சொல்லவும், அவருக்கு தலையாட்டி திரும்பிய ஆர்யனும், நிமிர்ந்த ருஹானாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ‘மிஷாலை தேடி போயிருப்பாள்’ என அனுமானித்து சையத்திடம் புலம்ப வந்தவன், அங்கே அவளை கண்டதும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான். அவளுமே அவனை பற்றி சையத்திடம் கேட்க வந்தவள், அவனே அங்கே வரவும் அவனை பாவமாக பார்த்தாள். மனஆறுதலுக்காக ஒரே இடம் தேடி வந்தவர்களின் மனப்பொருத்தத்தை என்னவென்று சொல்வது?

சையத் உடல் காயத்திற்கு மட்டும் சிகிச்சை தருபவர் அல்ல போலும். மனக்காயத்தையும் ஆற்றி இவானுக்கு அடுத்தபடியாக இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக பிணைக்கிறார்.

சையத் ஆர்யனிடம் “உன் அதிர்ஷ்டம் இது!” என இரு பொருள்பட சொன்னவர், கையில் இருந்த இன்னொரு தட்டை ருஹானா எதிரே வைத்து “உட்கார். சாப்பிடு“ என்று சொல்லி செல்ல, அவனும் அவள் எதிரே அமர்ந்தான்.

அவளை பார்க்காதவரை உடனே பார்க்க வேண்டுமென தேடி தவித்தவனுக்கு அவளை கண்டதும் செய்வதறியாது மூளை காலியானது போன்ற உணர்வு ஏற்பட வழக்கம்போல அவளையே பார்த்தான். அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவள் குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் அசையவும், அவளிடமிருந்த பார்வையை உணவில் திருப்பியவன் தானும் சாப்பிட துவங்க, இருவரின் மௌனராகத்தை தூரம் நின்றே சையத் பார்த்துக் கொண்டே சமைத்தார்.

முதன்முறை ஆர்யன் அவளை இங்கே சாப்பிட அழைத்து வந்தபோது நேரம் கடத்துவதாய் ருஹானா கோபப்பட்டாள். இன்று கோபத்தோடு வந்த ஆர்யன் அமைதியடைந்து அவளோடு உணவருந்துகிறான். இரு சமயங்களிலும் அவர்கள் வாய் பேசவில்லை.

சாலட்டை இருவரும் எடுக்க வர, ஆர்யன் அவளுக்கு விட்டுக்கொடுத்தான். அவள் எடுத்துக்கொள்வதை ஓரகண்ணால் பார்த்த பிறகே, அவன் தட்டில் போட்டுக்கொண்டான். உப்பு எடுக்க எடுக்க வந்தவள், ஏற்கனவே அதை ஆர்யன் தொட்டிருப்பதை பார்த்து கையை இழுத்துக்கொண்டாள். இந்த முறையும் அவன் எடுக்கவில்லை. அவள் போட்டுக்கொண்டு அவன் புறம் வைக்க, அதன் பின்பே எடுத்தான்.

இப்படியே இவர்கள் கண்கள் நடனமாட சாப்பிட்டுக்கொண்டிருக்க, அங்கே கடத்தல்காரர்கள் காத்திருந்தனர். கூடையில் இருந்த கடைசி ரொட்டி துண்டையும் இருவரும் எடுக்க வர, வழக்கம்போல ஆர்யன் கையை சுருக்கிக் கொண்டான். அந்த ரொட்டித்துண்டை எடுத்த ருஹானா அதை சரிசமமாக பிய்த்தாள். தனக்கு ஒரு பாதியை கையில் வைத்துக்கொண்டவள், மறுபாதியை கூடையில் வைக்காமல் எந்த தயக்கமுமின்றி இயல்பாக ஆர்யன் தட்டில் வைத்தாள்.

Advertisement