Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 27

பாலையும் கவிழ்த்துவிட்டு ருஹானாவின் மனதையும் உடைத்துவிட்டு  நின்ற ஆர்யன், ருஹானாவின் கலங்கிய முகத்தை கண்டு திரும்பி நடந்தான் வேகமாக அவன் கையை பற்றி தடுத்த ருஹானா “ஏன் இப்படி நடந்துக்கறீங்க?” என கோபமாக கேட்டாள். கரீமா தூணுக்கு பின் மறைந்திருந்து இங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

ருஹானாவை திரும்பி முறைத்த ஆர்யன் விடுக்கென கையை உதறிக்கொண்டு நடக்க, கரீமா மகிழ, “நான் என்ன செஞ்சேன், சொல்லுங்க?” என ருஹானா கத்தினாள். ஆர்யன் படியிறங்கி செல்ல, முன்னே வந்த கரீமா “ஆர்யன் இத்தனை கோபப்பட்டு சமீபத்தில் நான் பார்க்கலயே!” என சொல்லிக்கொண்டிருக்கும்போது, கீழேயிருந்து “அண்ணி!” என குரல் வந்தது.

“ருஹானா டியர்! நீ அவனை இன்னும் கோபப்படுத்தாமல் உன் ரூமுக்கு போய்டு. நான் என்ன விஷயம்னு தெரிஞ்சிட்டு வரேன். நீ போ” என்ற கரீமா, இவான் அறைக்கு ருஹானா செல்லவிடாமல் தடுத்துவிட்டு கீழே சென்றாள். கண்ணீர் கன்னம் தாண்டி வடிய ருஹானா இவான் அறையை பார்த்தபடி மெல்ல நடந்தாள்.

கீழே வந்த கரீமா வேகமாக நடந்துக்கொண்டிருந்த ஆர்யனிடம் கேட்டாள்.

“ஆர்யன்! என்ன நடக்குது இங்க? எனக்கு ஒன்னும் புரியலயே?”

“இனி இவானை நீங்க கவனிச்சிக்கங்க”

“நானா? அப்போ அவனோட சித்தி?”

“நீங்க பார்த்துக்கங்கன்னு நான் சொல்றேன்ல..! முன்னாடி நடந்த மாதிரியே எல்லாம் நடக்கட்டும்”

“சரி ஆர்யன், சரி.. நீ சொல்றது போல செய்றேன்”

ஆர்யன் வெளியே செல்ல, ஆனந்தத்தில் கரீமாவுக்கு புன்னகை விரிந்தது.

——–

சல்மா இவானுக்கு பால் கொடுக்க ஒரு மடக்கு குடித்துவிட்டு அவன் வேண்டாமென மறுக்க, “ஏன் டியர், சூடா இருக்கா?” என சல்மா கேட்க திரும்பவும் தலையாட்டினான்.

“என் சித்தி எங்க?”

“நான் தான் இன்னைக்கு உன்னை தூங்க வைக்கப் போறேன்”

“ஏன்? என் சித்தி எனக்கு கதை சொல்வாங்களே!”

“நானும் கதை சொல்றேன். எங்க இருக்கு புக்” என தேடியவள் மேசையில் இருந்த புத்தகமும் அதன் மேல் இருந்த ஸ்கார்ஃபும் தென்பட்டது. ஸ்கார்ஃபை இருவிரல்களால் அருவெறுப்பாய் அவள் தூக்க, “என் சித்தியோடது!” என சத்தமாக கூறிய இவான் அதை வெடுக்கென்று பிடுங்கி கொண்டான். சல்மா உதட்டை பிதுக்க, அதை நெஞ்சோடு பிடித்தவன் முகர்ந்து பார்த்தான்.

——

அலுப்பாக உள்ளே வந்த சல்மாவை பார்த்த கரீமா “என்னாச்சி? இவானை தூங்க வச்சிட்டியா?” என கேட்க, தங்கை அதற்கு பதில் சொல்லாமல் அவள் மடிக்கணினியை எடுத்தாள்.

“என்ன பதில் சொல்ல மாட்ற, சல்மா?”

“அக்கா! அவனுக்கு கதை படிச்சி படிச்சி என் தாடை எலும்பெல்லாம் வலிக்குது”

“சல்மா! இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம பயன்படுத்திக்கணும். அவன் சித்தி மாதிரி நீ அவனுக்கு நெருக்கமாகணும். என்ன, நான் சொல்லிட்டே இருக்கேன். நீ லேப்டாப் பார்த்துட்டு இருக்கே!”

“அக்கா! நீ சொன்ன வேலை தான் பார்த்துட்டு இருக்கேன்” என சல்மா கரீமாவுக்கு அவள் கணினி திரையை பெருமையுடன் காட்ட, கரீமா பூரித்துப் போனாள்.

——-

தோட்டம் வந்த ஆர்யனை அங்கே வீசிய குளிர்காற்றாலும் குளிர்விக்க முடியவில்லை. கண்கள் ஒருநிலையில் இல்லாமல் சுற்ற அவள் அறை பால்கனியில் நின்ற ருஹானாவை பார்த்துவிட்டான். ஆகாயம் வெறித்து நின்ற அவளை பார்த்தவன் மேலும் புழுங்கிப் போய் உள்ளே வந்துவிட்டான்.

இவான் சங்கிலியை பிடித்தபடி வெளிமாடத்தில் சிறிது நேரம் நின்றிருந்த ருஹானா, தூங்கும் இவானை பார்க்கும் ஆசையில் அறைக்கு உள்ளே வந்தாள். கதவை திறந்து வெளியே செல்ல போனவள், ஆர்யன் வருவதை பார்த்ததும் கதவை மூடி கதவிடுக்கில் கவனித்தாள்.

ஆர்யன் இவான் அறைக்கு அருகே செல்வதை பார்த்தவள் கதவை நன்றாக மூடிவிட்டாள். ஆர்யன் இவான் அறை வாசலில் நின்று ருஹானாவின் மூடிய கதவை சில விநாடிகள் பார்த்தவன் இவான் அறைக்குள் நுழைந்தான்.

இவானை பார்க்க முடியாமல் மனம் வருந்திய ருஹானா அவன் தஸ்லீமுடன் இருக்கும் படத்தில் முத்தமிட்டு படுத்துக்கொண்டாள். துக்கம் சூழ தூக்கம் விலகி சென்றது. அதிகாலையில் கண் அசந்தவள் அரக்க பறக்க இவான் அறைக்கு ஓடினாள்.

கரீமா அவளை பின்னால் இருந்து கூப்பிட்டாள்.

“ருஹானா! எங்க வேகமா போறே?”

“அலாரம் அடிச்சது தெரியாம தூங்கிட்டேன். இவானை சாப்பிட வைக்கணும்”

“அவனை சல்மா கவனிக்கிறா. ஆர்யன் உத்தரவு. நீ என்னை தப்பா நினைக்காதே. ஆர்யன் சொல் மீற முடியுமா?”

“கரீமா மேம்! நான் என்ன தப்பு செஞ்சேன்?”

“எனக்கு தெரியலயே?”

“ஏன் என்மேல கோபமா இருக்கார்னு எனக்கு புரியல”

“எனக்கும் தான் புரியல. அவனை புரிஞ்சிகிட்டவங்க யார் தான் இருக்காங்க? ஆங்.. சையத்னு ஒருத்தர் இருக்கார். அவரை நான் பார்த்தது இல்ல. அவர் ஒருத்தர் வார்த்தையை தான் இவன் காது கொடுத்து கேட்பான்” சையத் பற்றி ருஹானாவுக்கு தெரியாது என நினைத்து கரீமா நீளமாக பேசிக்கொண்டே போனாள்.

“எப்படியோ.. இவன் ஆர்யன் அர்ஸ்லான். அவன் கோபம் குறைஞ்சாதான் எல்லாம் நார்மலுக்கு வரும். நீ கவலைப்படாதே. எல்லாம் சரியாகிடும்”

ருஹானா கண்ணீருடன் தலையாட்டினாள்.

“நீ போய் சாப்பிடு. இவான் உன்னை இப்படி பார்த்தா அவனும் கவலைப்படுவான். போ டியர்” என்று ருஹானாவை கீழே அனுப்பிவிட்டு சிரிப்புடன் சல்மாவை பார்க்க சென்றாள்.

இவான் குளியலறையில் இருக்க, சல்மா கைபேசியில் இருந்தாள். சல்மாவை கையை பிடித்து இழுத்து தூரம் சென்ற கரீமா “அவளை இவானை பார்க்க விடாம கிச்சன் அனுப்பிட்டேன். நீ ஒரு நொடி கூட இவானை விட்டு பிரியாதே” என்று சொன்னாள்.

“நீ கவலைப்படாதே, அக்கா. இவானோட ஆர்யனும் என்னோட நேரம் செலவழிக்க போறாங்க. நீ பார், என் சாமர்த்தியத்தை” என்று சல்மா பெருமையடிக்க, தங்கையை பாராட்டிய அக்கா “அப்படியே தொடர்ந்து செய். நான் போய் மிஷால் கல்யாண விஷயம் என்ன ஆச்சுன்னு அவன் கிட்ட தெரிஞ்சிட்டு வரேன்” என்று சொல்லி சென்றாள்.

———

எதிரே இருந்த உணவை பார்க்காமல் ருஹானா எங்கோ பார்த்துக்கொண்டு இருக்க, சாரா “ருஹானா!” என்று அழைத்தார். அந்த அன்பான குரல் ருஹானாவின் செவியை சென்றடையவில்லை. அருகே சென்ற சாரா, அவள் தலையை தடவி “ருஹானா!” என்று அழைக்க அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.

“நான் கூப்பிடறதே நீ கவனிக்கல. அப்புறம் இந்த வெள்ளரி ‘என்னை சாப்பிடேன்’னு சொல்றதை நீ எங்க கவனிக்க போறே?” என கேலி செய்து அவளை சாப்பிட வைத்தார்.

அடுப்பில் வெண்டைக்காயை வதக்கிக் கொண்டிருந்த நஸ்ரியா “பெரியம்மா! எனக்கு கை வலிக்குது. இன்னும் எவ்வளவு நேரம் இதை செய்றது?” என கேட்க, சாரா முறைக்க, ருஹானா எழுந்து வந்து “நான் செய்றேன். நீ போ, நஸ்ரியா” என்றாள்.

குதித்துக்கொண்டு அடுப்பை விட்டு வெளியே வந்த நஸ்ரியாவை “போய் கீரையை சுத்தம் செய்” என்று சாரா சொல்ல “அச்சோ! அது இதை விட கடினமான வேலை” என நஸ்ரியா முகம் சுருக்க “உனக்கு எது தான் எளிதான வேலை?” என சாரா கோபப்பட, ருஹானாவின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.

———

சல்மா ஆர்டர் செய்திருந்த வில்லும், அம்பும் டெலிவரி செய்யப்பட்டிருக்க, அதை வாங்கிய சல்மா “இது இவானுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லிக்கொண்டே ஆர்யனை பார்த்தாள். வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தவன் டேப்லெட்டில் கவனமாய் இருந்தான்.

“ஆர்யன்! இங்க பாருங்க, இது இவானுக்காக வாங்கினேன். அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்” என்று சல்மா சொல்ல, ஆர்யன் அந்த வில்லை மட்டும் பார்க்க, இவானுக்கு பழச்சாறு கொண்டுவந்து கொண்டிருந்த ருஹானாவும் அதை பார்த்தாள்.

“உங்களைப் போல பலசாலியா வரணும்னு அவன் ஆசைப்படுறான்” என்றாள் இவானின் விருப்பங்களையெல்லாம் அறிந்தவள் போல. “இது ஆன்லைன்ல பார்க்கவும் இவானுக்காக ஆர்டர் செய்தேன். குழந்தைகளின் புத்திசாலித்தனம் வளர வில்வித்தை உதவும்” ‘வில்வித்தையை கண்டுபிடித்தவளே அவள் தான்’ என்பது போல சல்மா கதை விட, ருஹானா ஆர்யன் முகத்தை பார்த்தாள், அவன் மறுப்பு சொல்வானென.

“ஆனா, இது எனக்கு சொல்லி தர தெரியாது. நீங்க எங்க கூட இருந்து இது சொல்லி தருவீங்க தானே?” என சல்மா நூல் விட்டு பார்த்தாள். ருஹானா அங்கே வந்து நின்று தன்னை பார்ப்பதை கவனித்த ஆர்யன் சரியென தலையசைத்தான். “இவான் சந்தோசத்துல குதிக்க போறான்” என சிரிப்புடன் சல்மா சொன்னாள்.

இடைபுகுந்த ருஹானா “இது ஆபத்தான விளையாட்டு, ஐந்து வயசு தான் இவானுக்கு” என்று சல்மாவிடம் சொல்ல, பதில் வந்தது ஆர்யனிடமிருந்து, “இது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்” என.

அதனால் உற்சாகமான சல்மா ருஹானாவிடம் இருந்து பழச்சாறு கோப்பையை பிடிங்கிக்கொண்டவள் “இதை இவானுக்கு நான் கொடுக்கறேன். அவன் தோட்டத்தில் இருக்கிறான்” என்று அதை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்.

ருஹானாவும், ஆர்யனும் சில நிமிடங்கள் அசைவற்று நிற்க, டேப்லெட்டை மேசையில் வைத்த ஆர்யன் எழுந்து நடக்க, அவன் எதிரே ருஹானா வேகமாக வந்து நின்றாள். “எத்தனை நாள் இது இப்படி போகும்? இவானிடம் இருந்து விலகி இருக்க என்னால முடியாது” என்று இரைந்தாள்.

அவளிடம் இருந்து நகர்ந்து ஆர்யன் ஒரு அடியெடுத்து வைக்க இவளும் அவனுக்கு முன்னே வந்து “ஏன் இப்படி செய்றீங்க? நான் எதும் தப்பா செய்திருந்தேன்னா சொல்லுங்க, நான் திருத்திக்கறேன். அதுக்காக இவானை என்கிட்டே இருந்து பிரிக்காதீங்க” என்று கெஞ்ச, அதுவரை அவளை பார்க்காமல் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவன் மேலும் விலகி அவளை பார்த்துவிட்டு வெளியே நடந்தான். ருஹானா அடுத்து என்ன செய்வது என புரியாமல் நின்றாள்.

இளகிய மனம் மீண்டும் இறுகிட

இளஞ்சிறகை காணவும் தடை…!

உயிர் உறவுக்கு வலி தர

தவறேதும் இழைத்து கோபம் தந்தேனோ..!

யோசனை கேள்வி ஆகிட

விடையில்லா வினாக்களுக்கு

குழப்பமும் தவிப்புமே

விடையாகிப் போனது….

——–

Advertisement