Advertisement

அந்த சத்தத்தில் பயந்து போனவள், ‘இனி மிஷால் உணவகத்திற்கு போக போவதில்லை என்பதை சொன்னால் அவன் சந்தோசப்படுவானோ?’ என எண்ணி “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்றாள். ‘மிஷாலை கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன்’ என சொல்லிவிடுவாளோ என பயந்த ஆர்யன் “அப்புறம்னு சொன்னா உனக்கு புரியாதா?” என இரைந்தான்.

அவன் கத்தலில் அவளுக்கு கண் கலங்கியது. அவனையே பார்த்தவள், சிதறிக் கிடந்த கண்ணாடி துகள்களை கவனித்தாள். பின் மெதுவாக திரும்பி சென்றுவிட்டாள். அவளையே பார்த்திருந்த ஆர்யனின் சீற்றம் சற்றும் குறையவில்லை.

——— 

மாளிகையின் முன்னே இருந்த செயற்கை நீரூற்று குளத்தில் இவான் கப்பல் விட்டு விளையாட, திண்டில் அமர்ந்திருந்த ருஹானா கவலையாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். “சித்தி! இங்க பாருங்க என் கப்பல் அழகாக போகுது” என இவான் அழைக்க, ருஹானா “ஆமா என் செல்ல குட்டி!” என்றாள்.

சித்தியின் கைகளை பிடித்துக்கொண்ட இவான் “சித்தி! நீங்க வேலைக்கு போகாம என்கூடவே இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான். 

“அப்படியா, இவான் செல்லம்? இனி நான் வேலைக்கு போகல. வீட்ல இருந்தே சமைச்சிக் கொடுக்க போறேன்”   

“ஹேய்! எனக்கு ஜாலி தான்”

“என்னுயிரே! இனி உன்னை தனியா விட்டுட்டு எங்கயும் நான் போக மாட்டேன். எப்பவும்” என அவள் சொல்ல இவான் சித்தியை அணைத்துக் கொண்டான்.

———–   

அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன், ருஹானா அறை எதிரே நின்றவன் தயங்கியபடி நடந்து அவள் அறைக்கு போனான். கதவு தட்ட கையை எடுத்தவன் பின் மனம் மாறி கையை கீழே போட்டான். மீண்டும் கதவு தட்ட கையை உயர்த்தியவன் கதவருகே சென்ற கையை இழுத்துக் கொண்டான்.   

திரும்பி நடந்தவன் படியருகே ருஹானாவும், இவானும் ஏறி வருவதை பார்த்து நின்றான். ருஹானாவை ஓரக்கண்ணால் பார்த்தவன் “இவான்! என்ன செஞ்சே இன்னைக்கு?” என கேட்டான். அவள் அவனை பாராமல் தலையை திருப்ப, “நானும், சித்தியும் கப்பல் விட்டோம், சித்தப்பா” என இவான் மகிழ்வுடன் சொன்னான்.

இப்போதும் ஓரப்பார்வையில் அவளை பார்த்தவன் “வெரிகுட்” என இவான் தலையை தடவியபடி நடந்தவன் எதிரே ருஹானாவும் வர எதிரெதிரே மோதிக் கொள்ள போனார்கள். அவன் ஒதுங்கி வலப்புறம் நகர, ருஹானாவும் அதே திசையில் நகர திரும்பவும் மோதல் நிகழவிருந்தது.

அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து ருஹானா ஒதுங்கிக் கொள்ள, வலப்பக்க படிக்கட்டில் ஆர்யன் இறங்கி சென்றான். இவானும், ருஹானாவும் இவான் அறைக்கு சென்று படம் வரையலானர்.

——-   

புஹாரா உணவகத்தில் ‘மிஷால் மணம் புரிய கேட்டானா, ருஹானா என்ன சொன்னாள்’ என தெரிந்துக் கொள்ளாமல் கரீமாவுக்கு தலை வெடித்துவிடும்போல இருந்தது. மிஷாலுக்கு போன் அடிக்க மனம் சோர்வாக இருந்த அவன் போனை எடுக்கவில்லை. ஏமாற்றமடைந்த கரீமா ருஹானாவிடம் தகவல் கறந்து வருவதாக தங்கையிடம் சொல்லி ருஹானாவை நாடி சென்றாள்.

“சித்தி! இந்த மரத்துக்கு என்ன கலர் அடிக்க?”

“இந்த நீலக்கலரை அடி, இவான்”

“மரம் நீல கலர்ல இருக்குமா, சித்தி?”

“இல்லனா என்ன? நாம உருவாக்குவோம், அன்பே”

கரீமா உள்ளே வர “என்ன இவான் டியர் படம் வரையறீங்களா? என கேட்டாள்.

“இல்ல.. வண்ணம் தீட்றோம். சித்தி நீல கலர் போட சொன்னாங்க”

“உன் சித்தியின் வாழ்வும் இன்ஷா அல்லாஹ் வண்ணமயமாகட்டும்” என போலி சிரிப்புடன் சொன்ன கரீமா ருஹானாவிடம் கேட்டாள். “என்ன ஆச்சு ருஹானா, உங்க வேலை?”

“ஓ! அது எங்களுக்கே கிடைச்சிடுச்சி. நாங்க கொண்டு போன உணவு வகைகள் அவங்களுக்கு பிடிச்சி போச்சி”

“மாஷா அல்லாஹ்! அத்தனை பெரிய ஹோட்டல்ல உங்களுக்கு ஆர்டர் கிடைச்சது மகிழ்ச்சியான செய்தி. நீங்க எப்படி அந்த வெற்றியை கொண்டாடினீங்க? வெளிய எங்க போனீங்க?”

“இல்ல.. நேரம் ஆயுடுச்சே! என்னை கொண்டுவந்து விட்டுட்டு மிஷால் அவன் ஹோட்டலுக்கு போய்ட்டான். நான் இவான் தேடுவானேன்னு இங்க வந்துட்டேன்” என ருஹானா இவான் தலையில் முத்தமிட்டாள்.

“சரி, சரி.. நான் அம்ஜத் என்ன செய்றார்னு பார்க்கறேன்” என கரீமா வெளியே வந்தவள் தங்கையிடம் சென்று பொருமினாள்.

“இவ தான் கல்லுளிமங்கையாச்சே! இவ கிட்ட ஒரு வார்த்தை வாங்க முடியுமா? நான் நாளைக்கு மிஷால்ட்ட போய் கேட்கறேன்”

“அங்க எப்படி போவே?”

“எதாவது காரணம் தேடுறேன்” என கரீமா யோசிக்கலானாள்.

———– 

இரவில் கட்டிலில் படுத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனுக்கு, ருஹானாவை மிஷால் மணம் செய்ய கேட்டது, மாளிகையின் முன் இருவரும் பேசிக்கொண்டு நின்றது அவனறை விட்டத்தில் ஓடியது. அதை தாளாமல் ஒருக்களித்து படுத்தவனை தன்னிடம் பேச வந்த ருஹானாவின் கலங்கிய முகம் எழுப்பி விட்டது.

எழுந்து உட்கார்ந்து ‘அவளிடம் பேசியிருக்கலாமோ?’ என யோசித்தவன், வெளியறைக்கு வந்தான். ‘தன் திருமணம் பற்றி அவள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என நினைத்து நடை பயின்றவன், தனது அறை படிக்கட்டில் ஏறி கதவருகே நின்று, ‘ருஹானா கதவு தட்டி தன்னிடம் பேச வருவாளோ?’ என எதிர்ப்பார்த்தான்.

அப்படி எந்த அறிகுறியும் இல்லாத காரணத்தால், பெருமூச்சு விட்டவன் கதவு திறந்து வெளியே வந்து இவான் அறைக்கு சென்றான். இவான் மறுபக்கம் திரும்பி படுத்திருக்க, பக்கத்து மேசையில் ருஹானாவின் ஸ்கார்ஃப் இருப்பதை பார்த்து அதை எடுக்க குனிந்தவன் அதை எடுக்காது பார்த்தவாறே நின்றான்

திரும்பி படுத்த இவான் “சித்தப்பா!” என்றபடி எழுந்து உட்கார்ந்தான். 

“இன்னும் தூங்கலயா நீ?”

“சித்திக்காக காத்திருக்கேன்”

“சரி, இப்போ தூங்கு. நீ தூங்குற வரை நான் இருக்கேன். இனிமே நான் அடிக்கடி உன்னை தூங்க வைக்கறேன். சரியா?”

“நீங்களா?” என ஆச்சரியமாக கேட்டவன், “சித்தியும் வரட்டும். அவங்களும் இருப்பாங்க. நீங்களும் இருங்க. சரியா?” எனவும் ஆர்யன் முகம் மாறியது.

“சித்தி சொன்னாங்க, சித்தப்பா! இனி அவங்க என்னை தனியா விட்டு போகவே மாட்டாங்களாம்” தன் சந்தோசத்தை சித்தப்பாவுடன் பகிர்ந்து கொண்டான்.

‘இது எப்படி சாத்தியம்?’ என குழம்பிய ஆர்யன் “அப்படியா சொன்னாங்க?” என கேட்டான்.

“ஆமா” என சொன்ன இவான் சித்தப்பாவின் யோசனையான முகம் பார்த்து “அவங்க எனக்கு பால் கொண்டு வர போயிருக்காங்க” என்றான்.

———-

“இது கொண்டு வர எனக்கு லேட்டாகிடுச்சு. ஆனா காத்திருந்ததன் பலன் இது” என்று ஆர்யனின் எதிரி யாசின்ஸ் கையாள், ஆர்யனும் ருஹானாவும் சையத் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்டினான். பெருஉவகை அடைந்த யாசின் “ஆஹா! இவ தான் ஆர்யனோட காதலியா?” என கண்களை விரித்துக் கேட்டான்.

“அப்படி தான் தெரியுது. ரெண்டு பேரும் ஒன்னாவே தான் எங்கயும் வர்றாங்க. அவளும் அர்ஸ்லான் மாளிகைல தான் தங்கியிருக்கா”

“மாளிகைலயேவா? யார் இவ?”

இவானோடு ருஹானா இருக்கும் படத்தை காட்டியவன் “இந்த பையன் ஆர்யனோட அண்ணன் பையன். இந்த பொண்ணு பையனோட சித்தி” என்றான்.

“ஓஹ் ஓஹோ! கதை அப்படி போகுதா?.. குட்” என சிரித்த யாசின் “இப்போ நம்ம இலக்கு தெளிவாயிடுச்சி” என தலை ஆட்டினான்.

——

அருகில் அமர்ந்து இவான் தலையை தடவிக் கொடுத்த ஆர்யன் “சரி அக்னி சிறகே! நீ இப்போ தூங்கணும்” என்று எழுந்தவன் இனிய இரவு சொல்ல இவானும் இனிய இரவு சொல்லி கண் மூடினான். கதவு மூடி வெளியே வந்த ஆர்யனை கையில் பாலுடன் வந்த எதிர்கண்ட ருஹானா “நல்லதா போச்சி, உங்களை பார்த்தது” என்றாள்.

‘ஆர்யன் மாளிகை சமையலறையை உபயோகிக்க அனுமதி கேட்கலாம்’ என எண்ணி “நான் உங்க கிட்ட பேச வந்த விஷயம் எதைப் பத்தின்னா…“ என பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்த ஆர்யன் “இவான் பாலுக்காக காத்திருக்கான்” என்று சொல்லி அவன் அறை நோக்கி நகர்ந்தான். 

“ஏன் நான் பேசறதை கேட்க மாட்றீங்க?” என குரல் உயர்த்தி ருஹானா கேட்டவள் “இவான்…“ என தொடர “இவானுக்கு….” என கோபமாக கேட்டுக்கொண்டே திரும்பிய ஆர்யனின் கை பட்டு பால் குவளை கீழே விழுந்து பால் கொட்டிவிட்டது.

திகைத்துப் போய் ருஹானா ஆர்யனை பார்க்க, அவனுக்கும் திகைப்பு தான். என்றாலும் “போய் இவானுக்கு வேற பால் கொண்டு வா” என கடுமையாகவே சொன்னான். சத்தம் கேட்டு வந்த கரீமா கொட்டிய பாலை பார்த்து நிற்க “நீங்க போய் இவானை பாருங்க” என ஆர்யன் ருஹானாவை பார்த்தபடியே கரீமாவிடம் சொன்னவன் “இந்த சத்தத்தில அவன் முழிச்சிருக்கலாம்” என சொல்லவும் ருஹானா அதிர்ந்து நின்றாள்.

அப்போது சல்மாவும் அங்கே வர ருஹானா ‘தன்னை விடுத்து இவானை பார்த்துக்கொள்ள கரீமாவை சொல்கிறானே!’ என வருத்தத்தில் பார்க்க ‘இந்த சந்தர்ப்பத்தை எப்படி உபயோகித்து கொள்வது?’ என கரீமா பார்க்க “என்ன அண்ணி?” என ஆர்யன் பதில் வராததால் கேட்டான்.

“நான்.. நான் அம்ஜத்துக்கு மாத்திரை கொடுக்கணும். சல்மா, நீ போய் இவானை பார்த்துக்கறியா?” என கரீமா தங்கையிடம் கேட்க, சல்மாவும் சிரிப்புடன் சம்மதம் சொல்ல ருஹானாவின் மனம் உடைந்தே போனது. ஆர்யனுக்குமே மனம் ஏதோ செய்தது. எனினும் தன்னை நோக்கும் ருஹானாவின் பார்வையை சந்திக்காமல் நேர்பார்வை பார்த்து நின்றான். 

அலட்சிய சிரிப்புடன் சல்மா பாவமாக நின்ற ருஹானாவை பார்த்துக் கொண்டே வந்து இவான் அறைக்கு சென்று கதவை மூடினாள். அவள் மூடும்வரை அவளையே பார்த்திருந்த ருஹானா பின் கோபமாக திரும்பி தன்னை பார்த்திருந்த ஆர்யனை முறைத்தாள்.      

(தொடரும்)

Advertisement