Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 26 

திருமணத்திற்கு கேட்டவனையும், திருதிருவென விழித்திருந்தவளையும் மாறிமாறி பார்த்த ஆர்யன் பின் விறுவிறுவென திரும்பி ஸ்பானியர்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டான். ஸ்பானியர்களை பார்த்து “நான் அவசரமா போகணும். நம் புதிய உறவுக்கு வாழ்த்துக்கள்!” என்று சொல்லி நின்றான்.

அதை சல்மா அவர்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் சொல்ல, மரியாதை நிமித்தம் எழுந்துக் கொள்ள போனவர்களை தடுத்த ஆர்யன், ரஷீத்திடம் “பார்த்துக்கோ, நான் அப்புறம் பேசுறேன்” என்று சொல்லி மேசையில் இருந்த தன் கைபேசியை எடுத்து கோட் பாக்கெட்டில் வைத்தவன், விடுவிடுவென நடந்தான்.

வெளிவாசல் செல்லும்முன் திரும்பி ருஹானா இருக்கும் இடத்தை பார்த்தான். அங்கே இருந்து பார்க்கும்போது நேர் எதிரே இருந்த இருவரும் முழுமையாக அவனுக்கு தெரிந்தார்கள். மனதில் தீப்பிடிக்க கடகடவென வெளியே சென்றுவிட்டான்.

ருஹானா தண்ணீர் எடுத்துக் குடிக்க, அவள் பதிலுக்கு காத்திருக்க முடியாத மிஷால் “நீ ஒன்னும் சொல்லலயே?” என்று கேட்டான். ருஹானா மெல்ல கேட்டாள், “மிஷால்! நீ இப்படி நினைக்கிற மாதிரி நான் என்ன செய்தேன்?”

முகம் வாடிய மிஷால் நகைப்பெட்டியை கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். “நான் என்ன சொல்றேன்னா…“ என ருஹானா துவங்க, இடைவெட்டிய மிஷால் “நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டே.. அதாவது… இது என்னோட தப்பு தான். நான்.. என்னோட.. நான் சொன்னது இவானுக்காக” என தடுமாறி சமாளித்தான்.

ருஹானா குழப்பமாக பார்க்க “நான் இவானுக்காக தான் இப்படி சொன்னேன்” என்றான், மிஷால்.

“இவானுக்காகவா?”

“ஆமா, இவான் உன்கூட இருக்கணும்னா சில நிபந்தனைகள் இருக்கு.. நான் நினைச்சேன்…… நீயும் நானும்….. நாம ஃபார்மாலிட்டிக்கு கல்யாணம் செஞ்சிக்கிட்டா இவானோட உரிமைய வாங்கிடலாம்” அப்படியே கதையை மாற்றி போட்டான்.

நெகிழ்ச்சியில் கண்கலங்கிய ருஹானா “நீ எனக்காகவா இப்படி கேட்டே?” என ‘தன் நலம் நாடும் நண்பனை ஒரு கணம் தவறாக எண்ணிவிட்டோமே!’ என்ற குற்ற உணர்வில் கேட்டாள்.

“ஆமா!” என அவள் கண்களை நேரே பார்க்காமல் சொன்ன மிஷால் “நீ இவான் மேலே வச்சிருக்கிற அன்பு எனக்கு தெரியும், ருஹானா! ஆர்யன்ங்கற மனுசன்ட்ட அவனை விட்டு வைக்க மாட்டே. அப்புறம் இவானும் அவனை போலவே கடுமையா வளருவான். எனக்கும் இது விருப்பம் இல்ல. அதனால உனக்கு உதவி செய்றேன். உங்க ரெண்டு பேருக்காக” என்று அவள் பாசவலையில் அவளையே விழ வைக்க முயற்சி செய்தான்.

மிஷால் மனம் நோகாமல் இதை எப்படி மறுப்பது என யோசித்த ருஹானா திரும்பவும் நீர் எடுத்து அருந்தினாள். அவள் யோசிப்பதை பார்த்து மனம் மாறிவிடுவாள் என நம்பிக்கை இருந்தும், அவளை நேர்மையாக நோக்க இயலாமையோடு மிஷால் அங்கங்கே பார்த்தான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என்னை மன்னிச்சிடு. நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்” நேர்மையாக மன்னிப்பு கேட்டாள்.

“அது என்னோட தப்பு தான். நான் முதல்ல உனக்கு விளக்கி சொல்லியிருக்கணும்”

“நன்றி, உனக்கு”

“சரி, உன் முடிவு?” இன்னும் நம்பிக்கை இருந்தது அவனுக்கு

“மிஷால்! நீ இவ்வளவு தூரம் எனக்காக யோசிச்சதுக்கு மிக நன்றி. ஆனா என்னால முடியாது. ஃபார்மாலிட்டியா கூட என்னால இப்படி கல்யாணம் செய்ய முடியாது” அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கன்னத்தில் கை வைத்தான்.

“உன் உணவகத்தில என்னை சேர்த்துக்கிட்டு நீ எனக்கு பெரிய உதவி செய்ற. அதுக்கு நன்றி”

“அப்போ இவான்? அவனுக்கு என்ன செய்ய போறே?”

“அவன் என் அக்காவோட வாரிசு. கூடிய சீக்கிரம் அவனை நான் அர்ஸ்லான் விட்டு கூட்டிட்டு போய்டுவேன். ஆனா இந்த வழில இல்ல”

மிஷால் ஏமாற்றமாக தலையாட்டினான்.

“அவன் இப்போ தான் அவன் அம்மாவோட இழப்புல இருந்து வெளிய வந்துட்டு இருக்கான். என்னோட தேவை அவனுக்கு அதிகம். அவனோட அமைதியை கெடுக்கிற எந்த செயலும் என்னால செய்ய முடியாது”

,மிஷாலுக்கு ஒட்டியிருந்த நம்பிக்கையும் விடைபெற்றது.

“அதனால…. நான்..” ருஹானா தயங்க “சொல்லு” என அவளை ஊக்கினான், மிஷால். “இவானை விட்டு அதிக நேரம் பிரிஞ்சி இருக்கக்கூடாதுன்னு நான் முடிவு செய்திருக்கேன்”

“எப்படி?” மிஷால் கேட்டான்.

“நான் வீட்ல இருந்தே உனக்கு சமைச்சி தரேன்”

‘உள்ளதும் போச்சே’ என நொந்தே போனான், மிஷால்.

“அதனால இவானோடவே நான் இருக்கலாம். இதுக்கு நீ அனுமதி கொடுப்பியா?”

———-

மிஷால் கேட்ட திருமண சம்மதம், ஆர்யனை கண்மண் தெரியாத வேகத்தில் காரை செலுத்த வைத்தது. சிக்னலில் சிவப்பு விளக்கு தடுப்பதை கவனிக்காமல் வந்தவன் இறுதி நொடியில் சுதாரித்து காரை நிறுத்த, எதிரே திரும்பிய காரில் மோதாமல் தவிர்த்தான்.

மரங்கள் அடர்ந்த பகுதியில் காரை நிறுத்தி இறங்கி நின்றவனின் சிந்தனையை அந்த நிகழ்ச்சியே ஆக்கிரமித்தது. ரஷீத் போனில் அழைத்து “என்னாச்சி ஆர்யன், ஏன் அப்படி நடுவில கிளம்பிட்டிங்க?” என கேட்டான்.

“ஒன்னுமில்ல.. முக்கியமா ஏதுமில்ல” 

“நீங்க அப்படி எந்த மீட்டிங்லயும் பாதில போனதில்லயே!” எந்த பெண்ணும் இதுவரை இப்படி அவனை பாதிக்கவில்லையே.

எப்போதும் அவளை பற்றி பேசும்போது வெளிப்படும் பெரிய மூச்சை இழுத்து விட்டவன் “இவானின் சித்தி” என்றான்.

ரஷீத்திடம் ஆச்சரியம் கலந்த மௌனம்.

“அவ கல்யாணம் செய்துட்டு மாளிகைல இருந்து வெளியே போக போறா”   

“சரி, நீங்க அவங்களை வெளிய அனுப்ப தானே முயற்சி செஞ்சிங்க?” சரியான புள்ளியை பிடித்துக் கேட்டான், ரஷீத்.

“என்னோட விருப்பம் இதுல எதுவும் இல்ல. இவானுக்கு நல்லது இல்ல. அவ கூட அதிகம் பழகிட்டான்”

நம்ப முடியாமல் தலையாட்டிய ரஷீத் கேட்டான், “இப்போ என்ன செய்ய போறீங்க?”

“எனக்கு தெரியல. ஆனா இதால இவான் பாதிப்படைய நான் விட மாட்டேன்” 

உடனிருப்பவன் உணருகிறான்

உண்மைக் காரணத்தை..

தலைவன் மனம் சுணங்கிட

பிரிவு காரணமென…!

அருகே சேர்க்க 

மறுத்தவன் தானே இவன்..!

வினவுகிறான் என்ன இப்போது..? 

வருந்துவதெல்லாம்

சிறகின் துயருக்காய்…

தனக்காய் இல்லையாம்

கதை கூறும் தலைவன்..!

———

வாங்க வேண்டிய பொருட்களை வரிசையாக சாரா சொல்லிக்கொண்டிருக்க, ஜாஃபர் அதை எழுதிக்கொண்டு இருந்தான். “மாவு, எண்ணை, அரிசி, லிட்டில் சாருக்கு ஷாம்பூ, போன முறை வாங்கினது அவருக்கு கண் எரிஞ்சது, வேற வாங்குங்க, அப்புறம் வினிகர் பத்து பாட்டில்” 

“என்னது பத்து பாட்டிலா? அவ்வளவு எதுக்கு?” என ஜாஃபர் அதிர்ச்சியாக, “தேவைப்படுது தானே! கோவிட் பயத்துல காய்கறிலாம் வினிகர் தண்ணில தான் சுத்தம் செய்றேன்” என்று சாரா பதிலளித்தார்.

அம்ஜத் அப்போது அங்கே வந்தவன், இருவரையும் பார்த்து முறுவலிக்க, சாரா “எதும் சாப்பிடுறீங்களா, அம்ஜத் சார்?” என கேட்க “இல்ல.. எனக்கு எதும் வேண்டாம். என் செடிகளுக்கு தான் வினிகர் வேணும். வாடிப்போன செடிகளுக்கு ஊட்டம் கொடுக்க தேவை” என அம்ஜத் கேட்டான்.

சாரா சிரித்தபடி ஜாஃபரை பார்த்துக்கொண்டே வினிகர் புட்டியை அம்ஜத்திடம் நீட்டினார். “நான் பனிரெண்டு பாட்டிலா எழுதிக்கிறேன்” என ஜாஃபர் சொல்ல சாராவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

அப்போது அங்கே இவானை கூட்டிக்கொண்டு வந்த நஸ்ரியா “பெரியம்மா! லிட்டில் சார் அவரோட சித்தி இல்லாம சாப்பிட மாட்டாராம்” என புகார் சொல்ல, சாரா “அது அப்படி? அவர் சித்தி வந்தா வருத்தப்படுவாங்களே!” என்று சொல்லி “நான் இப்போ உங்களுக்கு பிடிச்ச சூப் செய்து தரேன்” என்று இவானுக்கு ஆசை காட்டினார்.

இவானை கனிவுடன் பார்த்திருந்த அம்ஜத் “இவான்! சூப் குடிச்சிட்டு தோட்டத்துக்கு வரீயா? இன்னைக்கு நிறைய பூ பூத்திருக்கு” என்று அழைக்க, இவான் வேகமாக தலையாட்டினான். குனிந்து அவன் தலையில் பாசத்துடன் முத்தமிட்ட அம்ஜத் வினிகரோடு தோட்டம் சென்றான்.

இவானை தூக்கி நாற்காலியில் அமர வைத்த சாரா, நஸ்ரியாவிடம் “வா! என்ன பார்த்துட்டு நிக்கிற? வந்து சூப்புக்கு வெங்காயம் வெட்டிக்கொடு” என்று கூப்பிட “வெங்காய வாசனை என் கைல ஒட்டிக்கும்” என நஸ்ரியா சிணுங்க “வினிகர் போட்டு கழுவினா போய்டும்” என சாரா புன்னகையுடன் ஜாஃபரை பார்த்துக்கொண்டே சொன்னார்.

ஜாஃபர் வேகமாக எழுந்து வெளியே செல்ல போக “லிட்டில் சார் உங்களுக்கும் வினிகர் வேணும் தானே?” என இவானை பார்த்து கண்சிமிட்டியபடி சாரா கேட்க, அவர் விளையாட்டை புரிந்துக்கொண்ட இவான் “ஆமா, ஆமா, எனக்கும் வேணும்” என சிரிப்புடன் கேட்டான். ஜாஃபரும் சிரிக்க அங்கே சிரிப்பலை சந்தோசமாய் பரவியது.  

———–

புஹாரா உணவத்தில் நடந்தவற்றை சல்மா சிரிப்போடு கரீமாவுக்கு விவரிக்க, தமக்கை முகத்தில் புன்சிரிப்பு கூட இல்லை. “இவ்வளவு தூரம் ஆர்யனை இது பாதிக்குதுனா விஷயம் நம்ம கைமீறி போகுது. நாம அதி ஜாக்கிரதையா இருக்கணும். ஆர்யன் அவங்க கல்யாணத்தை தடுத்து நிறுத்த பார்ப்பான்”

“அவனால முடியுமா, அக்கா?”

“ஆர்யன் எதுவும் செய்யக்கூடியவன்”

“அக்கா! எனக்கு நம்பிக்கையே இல்ல. தி கிரேட் ஆர்யன், இவளை மாதிரி ஒரு சாதாரண பொண்ணு கிட்டே மயங்குவானா?”

“அது தான் காதல் மா காதல்” எரிச்சலுடன் சொன்ன கரீமா “எப்படியோ மிஷால் அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டான்னா நமக்கு நிம்மதி” என்றாள்.

——-

ருஹானாவை அர்ஸ்லான் மாளிகையில் கொண்டு வந்து விட்ட மிஷால் காரோடும் பாதையில் நின்று “நான் சொன்னதை இன்னொரு முறை நினைச்சி பாரு, ருஹானா.. இவானுக்காக” என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் உள்ளே நுழைந்த டொயோட்டா செக்வயாக்கு கேட் திறக்கப்பட அது உள்ளே வராமல் அங்கேயே நின்றது.

“நாம அவன் வாழ்கையை பாதுகாக்கலாம், உனக்கே தெரியும். அதுவும் இல்லாம இந்த மாளிகை சிறையிலயும் நீ இருக்க வேணாம்” என அந்த மாளிகையை பார்த்து சொல்ல, அருகருகே நின்ற அவர்களை பார்த்தபடி காரிலிருந்த ஆர்யன் ஸ்டீரிங்கை பிடித்த பிடியில் அது கதறியது.

“முடிவு உன் கைல தான். ஆனா ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசி”

“சரி தான் மிஷால், நான் யோசிக்கிறேன்” என அவள் சொல்லிவிட்டு நடக்க மிஷால் முகம் மலர்ந்தது. அவள் உள்ளே செல்லும்வரை நின்று அவளையே பார்த்திருந்த மிஷாலை காரில் உட்கார்ந்து பார்த்திருந்தான், ஆர்யன். பின் மிஷால் திரும்பி வாசலுக்கு நடக்க, ஆர்யன் உள்ளே காரை நகர்த்தினான். 

பக்கவாட்டில் திரும்பி மிஷாலை பார்த்தபடியே காரை ஆர்யன் ஓட்ட, அவனை பார்த்தபடியே மிஷால் நடந்து வெளியே சென்றான். இருவரின் பார்வையும் வெட்டவா, குத்தவா என்பதுபோல இருந்தது. ஆர்யன் காரிலிருந்து இறங்கிய பின்னும், மிஷால் வெளிகேட் தாண்டி சாலைக்கு செல்லும்வரை  வெறித்திருந்தான்.

அதற்குள் இவானை பார்த்துவிட்டு இவான் அறையில் இருந்து வெளியே வந்த ருஹானா, பக்கத்தில் தன் அறைக்கு செல்ல முயன்ற ஆர்யனை பார்த்து “நாம பேசலாமா? நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றாள். “அப்புறம்” என்றான், கடுமையாக ஆர்யன். அவள் முகம் சுருங்க “எனக்கு வேலையிருக்கு” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டான்.

வெகு வேகமாக மூச்சிரைத்த ஆர்யன் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் வேகமாக அங்குமிங்கும் நடந்தான். மேசையில் இருந்த ஒரு கண்ணாடி கோப்பையை சுழற்றி சுவரில் அடித்தான். அவனால் அப்போதும் அவனை நிதானத்திற்கு கொண்டு வர முடியவில்லை.

கதவு தட்டப்படும் ஓசையில் வேகமாக திரும்பியவன், யார் வந்தாலும் திட்டி தீர்த்திருப்பான். உள்ளே ருஹானா வரவும், அவன் ஆத்திரம் அணை உடைத்து பாய்ந்தது. வந்தவள் பேசவும் தொடங்க “நான் என்ன சொல்ல வந்தேன்னா..” ஆர்யன் “அப்புறம்னு சொன்னேன்ல?” என கத்தினான்.

Advertisement