Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 25

ஆர்யனும், மிஷாலும் சண்டைக்கோழிகளாய் எதிரெதிரே சிலிர்த்து நிற்க “நான் வந்துட்டேன். நீ பேசு” என்று ஆர்யன் அலட்சியமாகவே சொன்னான். மிஷாலும் பேசினான்.

“நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலயும் ஆயிரம் பேர் உன்கூட இருக்காங்க. உனக்கு மரியாதை கொடுக்குறாங்க. உன்னை பார்த்து பயப்படறாங்க. ஏன்னா நீ ஆர்யன் அர்ஸ்லான்!”

‘இவன் என்ன சண்டைக்கு கூப்பிட்டுட்டு என்னை பத்தி பேசுறான்?’ என ஆர்யன் பார்த்து நின்றான்.

“நான் ஒரு சாதாரண ஹோட்டல் முதலாளி. என் ஆணைக்கு கீழ்படிய ஆயிரம் நாய்கள் இல்ல. நான் பணக்காரனும் இல்ல. புகழ் பெற்றவனும் இல்ல. எனக்கு கருப்பு பக்கமும் இல்ல”

மேலும் கீழும் மிஷாலை பார்த்த ஆர்யன் லேசாக கண்கள் சுருக்கினான்.

“ஆனா உனக்கு ஒன்னு சொல்ல ஆசைப்படறேன். அவசியப்பட்டால்….. “ என்று சொல்லி மிஷால் பின்னால் செறுகியிருந்த துப்பாக்கியை எடுக்க, ஆர்யன் சற்றும் அசையவில்லை. ஆனால் அவன் பின்னால் நின்ற இரு காவலர்களும் துப்பாக்கியை எடுத்து மிஷாலை நோக்கி பிடித்தனர்.

“நான் துப்பாக்கியை பயன்படுத்த பயப்பட மாட்டேன். அதுவும் ருஹானாக்காகன்னா ஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன். உன்னை சுட்டு தள்ளிடுவேன்” என்று மிஷால் சொல்ல ஆர்யன் அப்போதும் ஒன்றும் பேசவில்லை.

மிஷாலில் துப்பாக்கி பிடித்த கையை பார்த்தான். அவன் விரல்களை மாற்றி மாற்றி துப்பாக்கியை பிடிப்பதை பார்த்தவன், அதில் புல்லெட் இல்லை என்பதை கண்டு கொண்டான். பின்னால் திரும்பி கண்ணை அசைக்க, அவன் காவலர்கள் துப்பாக்கியை கீழே இறக்கினர்.

மாஸா வர்றான் சூப்மேன் மிஷாலு

பட்டைய கிளப்ப போறான் அடிதூளு

பட்டுன்னு நீட்டுறான் துப்பாக்கி

புல்லட்டே போடலடா நீ பக்கி….!

“இது என்னோட முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இன்னொரு முறை நீ அவளை வருத்தப்படவோ, துன்புறுத்தவோ செஞ்சா உன்னை சும்மா விட மாட்டேன். சுட்டு கொன்னுடுவேன். புரிஞ்சுதா?” என மிஷால் மிரட்டினான்.

எள்ளளவு கூட அசராத ஆர்யன் மிஷாலின் துப்பாக்கியை பார்த்து “இதை வச்சா, இந்த காலி கன் வச்சா?” என இடக்காக கேட்டான்.

“ஆமா, நான் உன்கூட பேச வரல. எச்சரிக்க வந்தேன். ஆனா அடுத்த முறை என் துப்பாக்கி தான் பேசும்” என திரும்பவும் மிரட்டினான்.

அந்த சமயம் தூரத்தில் “மிஷால்!” என சத்தமாக கூப்பிட்டபடியே ருஹானா வேகமாக ஓடிவர, தன் துப்பாக்கியை அவசரமாக பின்னால் மறைத்தான். அருகே வந்த ருஹானா “மிஷால், உனக்கு ஒன்னும் இல்லயே?” என்று தோழனை பார்த்துக் கண்கலங்க கேட்டாள்.

பின் காவலர் புடை சூழ நிற்கும் ஆர்யனை பார்த்து “இங்க என்ன நடக்குது?” என கோபமாக கேட்டாள். ஆர்யன் அவளை திரும்பி பார்த்தான்.

பாய்ந்து வந்தா பாரு நண்பி

பயந்தவன் சொல்லை நம்பி

அவனுக்கு காட்றா கரிசனம்

எனக்கு காட்றா பெருஞ்சினம்…!

“கவலைப்பட ஒன்னும் இல்ல. பேசிட்டு தான் இருந்தோம்” என மிஷால் சொல்ல, ஆர்யன் ருஹானாவிடம் இருந்து பார்வையை திருப்பி மிஷாலை ஏறிட்டு பார்த்தான். ‘இத்தனை நேரம் என்னை மிரட்டிட்டு, பேசிட்டு இருந்தேன்னு அவ கிட்டே சொல்றியா?’ என குறிப்பாக மிஷாலை உற்று நோக்கினான்.

“நீ இங்க வந்திருக்கவே கூடாது” என ருஹானா சொல்ல, மிஷால் “வரவேண்டியிருந்தது. சொன்னேன் தானே பேசினோம்னு” என ருஹானாவிடம் சொன்னவன், ஆர்யனை பார்த்து “உனக்கு நான் சொன்னதுலாம் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று திரும்பி நடந்தான்.

ஒத்தைக்கு ஒத்தைன்னு வந்தான்

ஒத்திகை பார்த்துட்டு போறான்

எதிர்பார்த்தது பயங்கர டெரரு

நடந்தது என்னவோ ஹுயுமரு…!

ருஹானா ஆர்யன் மேல் கோபப் பார்வை வீசவும், ஆர்யன் ‘நான் என்ன செய்தேன்?’ என்பது போல அவளை கண்கள் சுருக்கி பார்த்தான். “மிஷால் நில்லு, நானும் வரேன்” என ருஹானா ஓட, ஆர்யன் முகமும் சுருங்கி போனது. துறைமுகம் வந்ததிலிருந்து மெத்தனமாக இருந்தவன் இப்போது கோபத்தின் வசப்பட்டான்.

மிஷால் காரை கிளப்ப, ருஹானா அவன் அருகில் அமர ‘என்கூட வராம அவன் கூட போறாளே!’ என பொருமியவன் ரஷீத்க்கு போன் செய்தான். “ரஷீத்! இந்த மிஷால்ங்கறவனை பத்தி எல்லா தகவலும் எனக்கு வேணும்” என கேட்டவன் காரில் ஏறி கிளம்பினான்.

——–

“நீ ஏன் துப்பாக்கியோட அவரை பார்க்க போனே? அவங்க உன்னை அடிச்சி போட்டுருக்கலாம். நீ என் அதை யோசிக்கல?” ஏப்ரானை மாட்டிக்கொண்டே ருஹானா மிஷாலிடம் கேட்டாள்.

“கவலைப்படாதே! அவன் இனி உனக்கு கஷ்டம் கொடுக்க மாட்டான்”

“மிஷால்! தயவு செய்து நான் சொல்றதை கேளு. நீ பயப்படாம இருக்கலாம். ஆனா அவங்க உன்னை காயப்படுத்திடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு”

“என்னை பத்தி கவலைப்படாதே!”

“எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கே! உனக்கு நான் நன்றிக்கடன் பட்டுருக்கேன். என்னால உனக்கு எதாவது கெடுதல் நடந்திருச்சினா…..” ருஹானா அதன் விளைவை சொல்லாமல் தயங்க, அவளுக்கு தன் மீது இருக்கும் பாசத்தை கண்டு மிஷால் ஆனந்தமானான்.

“அப்படி ஏதும் நடக்கக்கூடாது. தயவுசெய்து அவர் கூட சண்டைக்கு நிக்காதே!”

“இந்த விஷயத்தை இதோட விடு. நான் என்ன சொல்லணுமோ அதை அவனுக்கு சொல்லிட்டேன். இனி ஒழுங்கா இருப்பான். நீ போய் வேலையை பாரு” என்றான் மிஷால். இவனுடைய மிரட்டலோ, அதட்டலோ ஆர்யனை ஒரு துளி கூட பாதிக்காது என்று மிஷாலுக்கு புரியவே இல்லை.

———

“நேத்து என்னாச்சி, ஆர்யனோட ஸ்பெயின் வேலை பார்த்தியா?” கரீமா சல்மாவிடம் கேட்க “இல்ல! அவன் நாளைக்கு பார்க்கலாம்ன்னு சொல்லிட்டான்” என அவள் சொன்னாள். “நான் தான் சொன்னேனே, இதெல்லாம் வேலைக்காகாது. இவான் மூலமா போறது தான் நல்லதுன்னு. அதை அவ நல்லா புரிஞ்சிக்கிட்டா. இப்போ இவானோட சேர்ந்து அவ பின்னாடியே ஆர்யன் சுத்துறான்” என கரீமா கத்தினாள்.

“அக்கா! நீ எப்பவும் ஓவரா தான் போறே! இப்போ என்ன… ஆர்யனும் அந்த சாதாரண பொண்ணும் காதல்ல விழுந்துட்டாங்கன்னு சொல்ல போறீயா?” என சல்மா சலித்துக்கொண்டாள்.

“இன்னைக்கு நடக்கலனா நாளைக்கு நடக்கும். நாம அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பிட்டு இருக்கக்கூடாது. இப்போ அவங்க இவானுக்காக பக்கம் இருக்காங்க. அப்புறம் வேற எதுக்காவது சேரலாம். எப்படியும் ஆர்யனோட பார்வை வட்டத்துல அவ விழுந்துட்டா. அது நல்லது இல்ல. இனி நீ ஆர்யனை உன் பக்கம் இழுக்க பார்க்கணும்”

“சரி அக்கா!”

“இன்னைக்கு மிஷால் துப்பாக்கியோட ஆர்யனை மிரட்டியிருக்கான்”

“அட! அப்புறம்? ஆர்யன் அவனை சும்மாவா விட்டான்?”

“ருஹானா நடுவுல போய் சண்டை நடக்க விடாம செஞ்சிட்டா”

“அடடா!”

“இந்த மிஷால் பையனை நாம சரியா உபயோகப்படுத்திக்கணும். தப்பு இல்லாம செஞ்சிட்டோம்னா நாம எளிதா ஜெயிச்சிடலாம்”

கைக்கடிகாரத்தை பார்த்த கரீமா “எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் முடிச்சிட்டு வந்துடுறேன்”

“எங்க போறே அக்கா?”

“மிஷால் ஹோட்டல்க்கு”

“அங்க எதுக்கு?”

“மிஷாலோட உணர்ச்சி பெருக்கை குறைய விடக்கூடாது. இந்த பிரச்சனை முடிஞ்சதுன்னு அவன் இருக்கக்கூடாது”

கபடமாக சிரித்த கரீமா வெளியே சென்றாள்.

———

ஆர்யன் அலுவலக அறையில் ரஷீத் மிஷாலை பற்றிய செய்திகளை சொல்லிக்கொண்டிருக்க, ஆர்யன் பாறையாய் இறுகி அமர்ந்திருந்தான்.

“மிஷால் சின்னவயசுல இருந்து ருஹானா மேம் கூட அன்பா பழகியிருக்கான். அவங்க பழைய வீட்டு உரிமையாளர் தான் இந்த தகவல்களை தந்தாங்க. அவங்களை கல்யாணம் செய்ய கேட்கறதுக்கு இருந்திருக்கான். அதுக்குள்ள ருஹானா மேம் அப்பா இறந்துட்டார். அதுக்கு அப்புறம் அவனால கேட்க முடியல” என்று சொல்லி முடித்த ரஷீத் “இப்போ என்ன செய்யலாம்?” என கேட்டான்.

“நம்ம வேலையை பார்க்கலாம்” என்று அதை முடித்த ஆர்யன், முன்னே இருந்த கோப்புகளை திருப்பினான். திகைத்து பார்த்த ரஷீத் சுதாரித்துக்கொண்டு அவனும் அதை பார்த்தான். “இந்த ஃபைலை ஸ்பானியர்களுக்கு அனுப்பலாமா?” என ஆர்யன் கேட்க ரஷீத் அதை ஆராய்ந்தான். ரஷீத் கவனத்தை அதில் திருப்பிய ஆர்யன், தன் கவனத்தை மிஷால் செய்திகளில் வைத்து எதிரே இருந்த சுவரை வெறித்தான்.

——-

ஒரு பெரிய பூங்கொத்துடன் மிஷால் உணவகத்திற்கு வந்த கரீமா அதை மிஷாலிடம் கொடுத்து ஆர்யன் நடந்துக்கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். ‘அதிகம் ஒன்னும் ஆர்யன் உடைக்கவில்லையே?’ என்று மனதிற்குள் கவலையும் பட்டுக்கொண்டாள்.

“ருஹானா உனக்காக ரொம்ப கவலைப்படறா. ஆர்யன் உன்னை காயப்படுத்திடுவான்னு பயப்படறா.”

மிஷால் தன் மகிழ்ச்சியை மறைக்க கீழே குனிந்துகொண்டான்.

“அவளுக்கு எப்பவும் ஆதரவா இரு. அவ அபாயத்துல இருக்கா. ஆர்யன் என் கணவரோட தம்பி. நான் அவனை பத்தி அதிகமா சொல்ல முடியாது”

“நான் அவளை பார்த்துக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க”

“இப்போ தான் எனக்கு நிம்மதியாச்சி. நான் கிளம்பறேன்”

நன்றி சொல்லி கரீமாவுக்கு விடைகொடுத்த மிஷால், தான் உணவு சப்ளை செய்ய இருக்கும் ஒரு பெரிய ஹோட்டல்க்கு அவர்கள் பெயரட்டை பார்த்து போன் செய்தான். கைபேசியை அங்கே வைத்துவிட்டு மறந்து சென்ற கரீமா திரும்பி வந்தவள் தன் ஒட்டுக்கேட்கும் வேலையை எளிதாக செய்தாள்.

“நான் மிஷால், இப்போ காலைல வந்தேனே. மதியம் எனக்கு ஒரு டேபிள் புக் செய்ங்க. நானும் என் தோழியும். ரெண்டு பேருக்கு தான். சிறந்த இடமா இருக்கட்டும். நன்றி” என மிஷால் பேசி முடித்து திரும்பியவன் கரீமாவை பார்த்தான்.

“என் போனை விட்டுட்டு போயிட்டேன்” என்று கரீமா மேசையில் இருந்த போனை காட்ட “நான் இதை பார்க்கவேயில்லயே” என மிஷால் சொல்ல “நான் பார்த்துட்டேனே!” என மிஷால் கையிலிருந்த ‘புஹாரா உணவகம்” பெயரட்டையை பார்த்து சொன்ன கரீமா தன் கைபேசியை எடுத்தாள்.

குதூகலத்துடன் மீண்டும் மிஷாலிடம் விடைபெற்று, மாளிகை வந்த கரீமா தன் ஆனந்தத்தை தங்கையிடம் பகிர்ந்துக்கொண்டாள்.

“உண்மையா தான் சொல்றியா, அக்கா? மிஷால் ப்ரோபோஸ் செய்ய போறானா?”

“பின்னே எதுக்கு அந்த உயர்தர உணவகத்தில டேபிள் புக் செய்றான்?”

“அப்படி என்ன அக்கா செய்தே?”

“லேசா தூண்டிவிட்டேன். அது வேகமா பிடிச்சிடுச்சி”

“அந்த பொண்ணு மறுத்துட்டா?”

“எனக்கு தெரிஞ்சவரை மிஷால் எளிதா விடக்கூடியவன் இல்ல”

சல்மாவும் சந்தோசப்பட “சீக்கிரம் இவங்க உறவு ஆர்யனுக்கு தெரிய வரணும். அது போதும்” என்று கரீமா சொல்ல தங்கையின் மூளையிலும் பல்ப் எரிந்தது.

“ஏன் அக்கா இந்த சந்திப்பையே ஆர்யன் பார்த்தா எப்படி இருக்கும்?”

“அது எப்படி நடக்கும்?”

“நானும் அதே புஹாரா உணவகத்தில ஸ்பானியர்களோட சந்திப்பை ஏற்பாடு செய்றேன்”

புளகாங்கிதம் அடைந்த கரீமா “வெல்டன், பாரு உனக்கு தேவைனா எப்படி நல்லா திட்டம் போடுறே!” என தங்கையை பாராட்டினாள்.

———-

Advertisement