Advertisement

ஸ்பெயின் நாட்டவர்களின் வியாபார நடைமுறைகளை படித்துக்கொண்டிருந்த ஆர்யன் அறைக்கதவு தட்டப்படவும் “வரலாம்” என்று சொல்லி, திரும்பி பார்க்காமல் ‘வந்தது சல்மா’ என நினைத்து “அவங்க போக்குவரத்து…” என பேசியவன் ருஹானாவை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்.

“உங்களுக்கு நேரம் இருக்குமா?” என மேல்படிக்கட்டில் நின்றுக்கொண்டே ருஹானா கேட்க, தலையை திருப்பிக்கொண்டவன் அமைதியாகவே இருந்தான்.

“நான் உங்ககூட பேசணும்” அப்போதும் அவன் ஒன்றும் பேசவில்லை. படியிறங்கி அவன் அருகே வந்து நின்றாள்.

“என் ஒரே அக்கறை இவான் தான். அவனுக்காக எதுவும் செய்வேன். இந்த வேலையும் அவனுக்காக தான் செய்றேன்” அவளை பார்க்க சொல்லி மனம் ஆட்டம் போட, லேசாக தலையை திருப்பியவன் அவளை பார்க்காமல் திரும்ப நேராக பார்வையை செலுத்தினான்.

“ஆனா இவானோட அமைதி உங்களாலயும் மிஷாலாலயும் கெட்டு போகுது. இதுக்கு நான் எவ்வளவு யோசித்தாலும் தீர்வு கண்டுபிடிக்க முடியல. இந்த போராட்டத்துல இருந்து நான் வெளிய வரணும். அதுக்காக தான் உங்க கிட்ட பேச வந்தேன்” ஆர்யன் உன்னிப்பாக கேட்கலானான்.

“மிஷால் எங்க குடும்பத்தில் ஒருத்தன் போல” ஆர்யன் கண்கள் சுருங்க, மனமும் சுருங்கியது. “அவன் என்னோட அண்ணனை போல” என ருஹானா சொல்ல ‘என்ன சொல்றா இவ, நெஜம் தானா?’ என ஆர்யன் மனம் குதியாட்டம் போட அவன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“அவன் என்னை காப்பாத்த முயற்சி செய்றான். அதனால அவனுக்கு ஏதாவது கஷ்டம் நடந்தா, என்னால தாங்க முடியாது” என ருஹானா சொல்ல ‘அப்பாடா! இவ்வளவுதானா? நான் தான் பயந்திட்டேனா?’ என மனம் ஆசுவாசம் அடைய, ‘இப்போதாவது அவள் முகத்தை பார்’ என மனம் தூண்ட கீழ்பார்வையாய் அவளை பார்க்க விழைய கதவு தட்டப்பட்டது.

ஆர்யனின் மௌனத்தில் ருஹானா குழப்பத்தில் இருக்க, “ஆர்யன்!” என்று அழைத்தபடி உள்ளே வந்த சல்மா, ருஹானாவை பார்த்ததும் “நான் அப்புறம்…” என திரும்ப போக “இல்ல.. நான் போறேன்” என்று ருஹானா சல்மாவிடம் சொல்லி ஆர்யனை திரும்பி பார்த்தாள். அவன் அப்போதும் அவளை பார்க்கவில்லை. பேசவில்லை. ருஹானாவும், ஆர்யனும் ஒரு சேர பெருமூச்சு விட, ருஹானா சென்றுவிட்டாள்.

எப்போதும் அவள் வெளியே செல்லும்வரை பார்ப்பவன் இன்று அந்த திசை கூட திரும்பவில்லை. ஆனால் அவன் மனம் நிம்மதியடைந்து அவள் கூடவே சென்றுவிட்டது.

“நான் மீட்டிங்க்கு இடம் முடிவு செய்திட்டேன். அது ஒரு அழகான இடம்” என்று சொல்லிக்கொண்டே வந்த சல்மா, ஆர்யன் அமர்ந்திருந்த சோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். ஆர்யனிடமிருந்து அதற்கு பதில் வராததால் “ஸாரி, உங்க அனுமதி இல்லாமல் நான் புக் பண்ணிட்டேன்” என சல்மா மேலும் பேச்சை வளர்க்க “பரவாயில்ல” என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த ஆர்யன் சொன்னான்.

———-

இவான் அறை சோபாவில் அமர்ந்து அழகிய புகைப்படங்களை தேர்ந்தெடுத்து ருஹானாவும், இவானும் அதை சட்டங்களில் மாட்டிகொண்டு இருந்தனர். ஒவ்வொரு படமாக இவான் பார்த்துவிட்டு ருஹானாவிடம் கொடுக்க அவளும் அதை ரசித்தாள். “சித்தி! இது நீங்களும், என் சித்தப்பாவும்” என்று சொல்லி ருஹானாவிடம் இவான் கொடுத்த படம், ஆர்யனால் கிழிக்க முடியாத படம்.

ருஹானா அதை கையில் வாங்கி பார்க்க, ‘சித்தப்பா’ என்ற சொல் கேட்டு இவான் அறையை கடந்து சென்ற ஆர்யன் நின்று திரும்பி வந்தான். அவன் கதவு பக்கம் நின்று பார்க்க, ருஹானா கையில் வைத்திருக்கும் படம் அவனுக்கு தெரிந்தது.

ருஹானாவின் புறம் எட்டிப்பார்த்த இவான் “என் சித்தப்பா அட்டகாசமா இருக்கார். அப்படித்தானே, சித்தி?” என கேட்டான். ருஹானாவின் முகம் கல்லானது. ‘அவள் என்ன சொல்லப் போகிறாள்?’ என ஆர்யனோடு அவன் மனமும் சேர்ந்து காத்திருந்தது. அவளின் மௌனம் அவனை திணறடிக்க, முகம் சுருக்கி பார்வையை திருப்பினான். அப்படித்தானே அவன் மௌனம் அவளுக்கு இருந்திருக்கும்?

“நான் ஒரு சின்ன இளவரசனை பார்த்தேன். அவன் தான் இருக்கறதுலயே அழகானவன்னு நான் நினைக்கிறேன்” என்று இவானின் தலையை தடவியபடி ருஹானா சொல்ல, ஏமாற்றமான ஆர்யன் திரும்பி வேகமாக நடந்தான். காலடியோசை கேட்டு திரும்பிய ருஹானா ஆர்யன் செல்வதை பார்த்தாள். ‘கேட்டுருக்குமோ?’ என சங்கடமடைந்தவள் பின் ‘கேட்டால் கேட்கட்டுமே, உண்மையை தானே சொன்னேன்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் “வா, இவான்! இதை போடுவோம்” என்று சொல்லி, இருவரும் அதை சட்டத்தில் மாட்டி சமையலறைக்கு எடுத்து சென்றனர். சாராவும், நஸ்ரியாவும் அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்க “விழா அன்னைக்கு உங்களுக்கு ஓய்வே இல்லாத வேலை. அப்போ எங்களால நன்றி சொல்ல முடியல. எங்களோட சின்ன பரிசு” என்று ருஹானா நன்றி சொன்னாள்.

ஜாஃபர், சாரா, நஸ்ரியாவோடு இவான் இருக்கும் அந்த அழகான படம் சட்டமிடப்பட்டிருந்தது. “என்ன அருமையான பரிசு!” என சாரா நெகிழ்ந்து போக, நஸ்ரியா மிகவும் மகிழ்ந்து போனாள். இருவரும் ருஹானாவிற்கு நன்றி சொல்லி “லிட்டில் சாருக்கு மிக்க நன்றி” என இவான் கன்னம் கிள்ளி கொஞ்சினர்.

“எப்பவும் பார்க்கிற மாதிரியான இடத்துல மாட்டப் போறேன்” என சாரா சொல்ல, “ஏன் இன்னைக்கு வேலைக்கு போகல?” என நஸ்ரியா ருஹானாவிடம் கேட்க, “கொஞ்சம் இடைவேளை விடலாம்னு யோசிக்கிறேன்” என ருஹானா சொன்னாள். “ஏன்? ஏதாவது பிரச்சினையா?” என சாரா கவலையுடன் கேட்க, ருஹானாவின் போன் அடித்தது. அவர்களிடம் மன்னிப்பு வேண்டி போனை எடுத்தவள் தூரம் வந்தாள்.

“சொல்லு மிஷால்!”

“நான் உன்கிட்டே முக்கியமா பேசணும், ருஹானா”

“இன்ஷா அல்லாஹ்! ஏதும் சிக்கல் இல்ல தானே?”

“இல்ல… இல்ல.. அதெல்லாம் இல்ல.. எனக்கு ஒரு ஆர்டர் கிடைக்க உன் உதவி தேவை”

“சரி, மிஷால்! நானும் உன்கிட்டே பேசணும்”

“அப்போ சரி, மதியம் ரெண்டு மணிக்கு புஹாரா உணவகம் வந்துடு. அங்க தான் நமக்கு வேலை இருக்கு. அது முடிச்சிட்டு பேசலாம்”

மிஷால் சிரிப்புடன் போனை வைக்க, ருஹானா யோசனையுடன் போனை மூடி இவானிடம் சென்றாள். “செல்லம்! நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா? நீ இவங்களோட விளையாடிட்டு இருக்கியா?” என்று கேட்டாள்.

சாரா “நாங்க பார்த்துக்கறோம். நீ போயிட்டு வா” என்று சொல்ல “சீக்கிரம் வந்துடுவீங்க தானே?” என இவான் கேட்டான். “கண்டிப்பா, அன்பே” என்று ருஹானா சொல்ல இவான் தலையசைத்தான்.

ருஹானா மேலே செல்ல, சாரா இவானுக்கு தானியத்தில் கல் அகற்றும் வேலையை சொல்லி தர, இவானும் சமர்த்தாக தானியத்தில் கலந்திருக்கும் கற்களை எடுத்து பக்கத்தில் இருந்த சிறிய கிண்ணத்தில் போட ஆரம்பித்தான்.

———

ருஹானா வேலைக்கு செல்வது போன்ற உடையில் வருவதை பார்த்த கரீமா, ‘இது சரிவராதே’ என்று நினைத்தவள், ருஹானா இவானிடம் விடைபெறும் சமயத்தில் அவள் மேல் பழச்சாறை தட்டி விட்டாள். “அச்சோ! கிளம்பும் நேரத்தில் உன் ஆடையை அழுக்காக்கிட்டேனே” என கரீமா பதற “அதனால் என்ன? நான் போய் வேற மாத்திக்கறேன்” என்று ருஹானா சென்றாள்.

அவள் மாற்றுடை எடுத்துக்கொண்டிருக்கும் போது உள்ளே வந்த கரீமா “நான் தான் உன் உடையை பாழாக்கினேன். இது சல்மாவோடது, இப்போ தான் சலவைல இருந்து வந்தது. இதை போட்டு போ. இல்லனா என் மனசு கஷ்டமா இருக்கும்” என ஒரு நவீன ஆடையை கொடுத்து வற்புறுத்தினாள்.

“நீங்க கவலைப்படாதீங்க. அது தெரியாமல் நடந்தது தானே!” என ருஹானா மறுக்க “நீ இப்போ எந்த இடத்துக்கு போறே?” என கரீமா கேட்க ‘புஹாரா உணவகம்’ என ருஹானா சொன்னாள்.

“அது உயர்தரமான உணவகம், டியர். அங்க இது போல டிரஸ் தான் பொருத்தமா இருக்கும்” என கட்டாயப்படுத்த, அப்போதும் மறுத்துப் பார்த்த ருஹானாவை இன்னும் பேசி அணிய வைத்தாள், கரீமா.

———-

புஹாரா உணவகம்…

“இந்த நிபந்தனைக்கு நீங்க ஒப்புக்கொண்டீங்கனா, அடுத்த வாரம் உங்களுக்கு முதல் தவணை பணம் அனுப்பிடுவோம்” ஸ்பானியர்களோடு பேச்சுவார்த்தையில் ஆர்யன் இருக்க, சல்மா மொழி பெயர்க்க, ரஷீத் உடனிருந்தான். அவர்களும் அதை ஒத்துக்கொள்ள, கவர்ச்சியான உடையில் இருந்த சல்மாவை பாராமல் அவள் சொல்வதை மட்டும் தலை சாய்த்து ஆர்யன் கேட்டுக்கொண்டான்.

சல்மா உடலை சாய்த்து ‘ருஹானா வந்துவிட்டாளா?’ என எட்டி பார்த்தாள். அவளுக்கு ஏமாற்றம் அளிக்காமல் ஒரு அலங்கார மறைப்பிற்கு பின் இருந்த இருக்கையில் ருஹானாவும், மிஷாலும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

“வாழ்த்துக்கள், மிஷால். இது போல பெரிய இடத்து ஆர்டர் கிடைக்கிறது சுலபம் இல்ல. நீ சொன்னது சரி தான். எத்தனை கேள்வி கேட்கிறாங்க? என்ன எண்ணை பயன்படுத்துறீங்க, உங்க கிச்சன் எப்படி இருக்கும், அடேங்கப்பா” என ருஹானா வியந்து மிஷாலை வாழ்த்தினாள்.

“ஆமா, ருஹானா! அவங்களும் கவனமா இருக்கணும்ல. புகழ் வாய்ந்த உணவகம். அவங்க பேர் காப்பாத்தணுமாச்சே! உன் தயாரிப்பு அவங்களுக்கு பிடிக்கும், பாரேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னால தான் இத்தனை பெரிய ஆர்டர் நமக்கு கிடைச்சது” என மிஷால் சொல்ல, ருஹானா வெட்க புன்னகை புரிந்தாள்.

“அப்படிலாம் சொல்லாதே, மிஷால். என்னோட பங்களிப்பு சின்னதா இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்” என்று அவள் தன்னடக்கமாய் சொல்ல, மிஷால் மேலும் அவளை புகழ்ந்தான். “சின்னதாவா? உன் சமையலின் ருசிக்கு ஈடே கிடையாது”

உணவு வந்த பின்னும் அதை சாப்பிடாமல் அவஸ்தையாக உணர்ந்த ருஹானா “மிஷால்! நாம ஏன் இன்னும் இங்க இருக்கோம்?” என கேட்க “நீ எதோ சொல்லணும்னு என்கிட்டே சொன்னே! நானும் உன்கிட்டே பேசணும். அதனால இங்க இருக்கோம்” என்று சொன்ன மிஷால், அப்போதும் சங்கடமாக இருந்த ருஹானாவை மேலும் கீழும் பார்த்து “அழகா இருக்கே!” என்றான்.

சில விநாடிகள் யோசித்த ருஹானா நன்றி சொன்னவள் “ஆனா வேற டிரஸ் தான் போட்டுருந்தேன். அதுல ஆரஞ்ச் ஜூஸ் கொட்டிடுச்சி. கரீமா மேம் அவங்க தங்கை உடை தந்தாங்க” என்றாள்.

“டிரஸ்க்கு சொந்தக்காரங்க யாரோ, ஆனா உனக்கு இந்த டிரஸ் அற்புதமா இருக்கு” என்று புன்னகையுடன் மிஷால் சொல்ல, தர்மசங்கடமான ருஹானா சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அவன் பார்வையும் சந்திக்கவில்லை. அவனுக்கு நன்றியும் சொல்லவில்லை.

“நீ என்கிட்டே என்ன சொல்லணும்?” என ருஹானா கேட்க, தன் கோட் பையில் இருந்து ஒரு சிறிய நகைப்பெட்டியை எடுத்த மிஷால், அதை மேசைக்கு அடியில் வைத்துக்கொண்டு “ருஹானா! நான்.. நான் இதை பத்தி முன்னாடியே உன்கிட்டே பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா…“ என தயங்க, ருஹானா அவனை குழப்பத்துடன் பார்த்தாள்.

ஸ்பானியர்கள் சந்திப்பில் இருந்த ஆர்யன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எழுந்து ஓய்வறைக்கு வர, “எனக்கு புரியல” என்ற ருஹானாவின் குரல் கேட்டு நின்றான். ‘அவள் குரல் தான் அது’ என நொடியில் கண்டுகொண்டு ஆனந்தமடைந்தவன், அவள் முகம் பார்க்க ஆர்வமாய் திரும்பினான்.

மிஷாலுடன் அவளை பார்த்து அதிர்ந்தவன் “என்னை கல்யாணம் செய்துக்கறீயா?’ என சிரிப்புடன் மிஷால் ருஹானாவை பார்த்து கேட்கவும், இடி விழுந்தது போல் நின்றான். ருஹானா திகைத்து பார்க்க, ஆர்யன் கண்கள் அவள் மேல் அக்னி கணைகளை வீசியது.

விழிகள் மட்டுமல்ல

காதுகளும் உன் குரலுக்கு

கூர்மையடைகிறது…!

கண்களுக்கு விருந்தளிக்கிறாய்..!

விருந்தை கசப்பாக்குகிறது

உனக்கு வரும் காதல் மனு…!

காதல் தீ மனதில் ஒளிர…

கோபத்தீ அதை பொசுக்க…

தத்தளிக்கிறேன் நான்..!

(தொடரும்)

Advertisement