Advertisement

வெளியே சென்று திரும்பிய மிஷாலுக்கு அங்கே நடந்ததை சதாம் சொல்ல, மிஷாலுக்கு ஆர்யன் மேல் கோபமும், ருஹானாவை நினைத்து கவலையும் ஏற்பட்டது. ருஹானாக்கு போன் செய்ய அவள் மிஷாலுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு வேண்டினாள். ‘அது பரவால்ல, ருஹானா. உன்னை அவன் ஏதும் காயப்படுத்தினானா?” என கேட்க “இல்லல்ல மிஷால். என்கிட்டே அவர் கடுமையா எதும் நடந்துக்கல” என்று ஆர்யனை பற்றி தவறாக சொல்லாமல் மறைத்தாள்.

மறைந்திருந்து அதை கேட்டு கோபமடைந்த கரீமா மிஷாலுக்கு போன் செய்து ஆர்யன் அவளை கண்டபடி திட்டியதாகவும், ருஹானா மிஷாலை நினைத்து அழுதுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தாள். ஆங்காரமான மிஷால் “ருஹானாவை ஆர்யன் துன்புறுத்தினால் அவளுக்காக நான் எதுவும் செய்வேன்” என்று சொல்ல கரீமாவுக்கு நிம்மதியானது.

கரீமாவிடம் பேசி முடித்த மிஷால், மேசையறையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரி பார்க்க, இது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சதாம் கவலையுடன் நின்றான்.

——-

“இது தூங்குற நேரம்” என சொல்லி ருஹானா இவானை படுக்க வைக்க “நாம பேசிட்டே இருந்தா என்ன ஆகும், சித்தி?” என இவான் கேட்க “நம்ம கனவு காணும் நேரம் தாண்டிடும், செல்லம்” என்றாள். உடனே படுத்துக்கொண்ட இவான் “மிஷால் அண்ணா செஞ்சி கொடுத்த படகு எனக்கு ரொம்ப பிடிச்சது, சித்தி. எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னார். உங்களுக்கு அது என்னன்னு தெரியுமா?” எனக் கேட்டான்.

சோகத்தை மறைத்துக்கொண்ட ருஹானா “எனக்கு எப்படி தெரியும், அன்பே? சர்ப்ரைஸ் ரகசியமா தானே இருக்கும்?” என சொல்ல “சித்தப்பா கோபப்படலனா நாம இன்னொரு முறை அங்க போகலாமா, சித்தி?” என கேட்டான். ‘ஒருமுறை போனதுக்கே உன் சித்தப்பா இந்த ஆட்டம் ஆடுறார்’ என நினைத்ததை சொல்லாமல் “அது பத்தி அப்புறம் யோசிக்கலாம். இப்போ நீ கண்ணை மூடி தூங்கு, அன்பே” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டு தூங்க வைத்தாள்.

கதவை மூடி வெளியே வந்தவள் கரீமா மிஷாலை பற்றி பயமுறுத்தியது நினைவு வர ஆர்யன் அறை வாசலில் தயங்கி நின்றாள். எப்போதும் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்பவள், ஆர்யனுக்கு மருந்து போட கதவு தட்டாமல் கூட உள்ளே செல்பவள், இன்று கதவை இருமுறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்றாள்.

எந்த சத்தமும் உள்ளிருந்து வராததால் திரும்பி தன் அறை நோக்கி நடக்க, கதவு திறக்கப்படும் ஓசையில் அப்படியே நின்றாள். கதவு திறந்து வெளியே வந்த ஆர்யன் ருஹானாவை பார்த்து கோபமுகம் காட்டியே நின்றான். கோபம் சற்று குறைந்திருந்ததோ, அவளே பேச வந்ததால்?

அவனை நோக்கி நடந்தவள் அவன் முன்னே நின்று “என்னை… நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்பறேன். இவானை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனது என் சொந்த முடிவு தான்” என்று சொல்ல ‘வேறு எதோ சொல்லப்போகிறாள்’ என அவள் முகம் நோக்கி கேட்டிருந்தவன் இப்போது தலையை திருப்பிக்கொண்டான்.

“உங்க பாடிகார்ட்ஸ் எங்க கூட இருந்ததால ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைச்சேன். நான் என்ன சொல்ல வரேன்னா இதுக்கும் மிஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” மிஷால் பேர் கேட்டதும் ஆர்யன் விறைக்க “என்னால மிஷால் மேல நீங்க கோபமா இருக்குறதை நான் விரும்பல. உங்களை கெஞ்சி கேட்கறேன். மிஷாலை ஒன்னும் செய்யாதீங்க” என முடித்தாள்.

ஏதோ சொல்ல வந்தவன் பொங்கி வந்த கோபத்தில் அவளை முறைத்துவிட்டு தன் அறைக்கு போய் கதவை சாத்திவிட்டான். அவன் பின்னாலேயே போய் கதவருகே தயங்கி நின்றவள், பின் தன் அறைக்கு போய்விட்டாள்.

ஆர்யன் தன் அறையின் உள்ளே தன்னை சமப்படுத்திக்கொள்ள வேக மூச்சுகளுடன் குறுக்கும் மறுக்கும் நடந்தவன் மிஷாலுக்காக ருஹானா தன்னிடம் கெஞ்சியதையே நினைத்துப் பார்த்தான். அந்த நேரம் போன் அடிக்க ரஷீத் ‘ஸ்பெயின் ஒப்பந்தம் வந்துவிட்டதாகவும் அதை சல்மா மொழிபெயர்ப்பு செய்துக்கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்தான். அதைக் கேட்டுக்கொண்ட ஆர்யன் ‘மற்ற விசயங்களை நாளை பேசிக்கொள்ளலாம்’ என போனை அடைத்தான்.

அவனுடைய மேசையில் வைக்கப்பட்டிருந்த காகித உறையை எடுக்க, அதனுள்ளே இவான் பிறந்தநாள் விழா புகைப்படங்கள் இருந்தன. இவானின் தனித்தனி அழகு படங்கள் பார்க்க அவனுக்கு மனம் கனிந்தது. அடுத்து ருஹானாவின் மிக அழகான படம் ஒன்று வரவும், மற்ற படங்களை மேசையில் வைத்துவிட்டு ருஹானா படத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பார்த்தான்.

ருஹானா மிஷாலோடு உணவருந்தியது மனதில் தோன்ற முகம் சுருக்கி, அந்த அழகிய படத்தை கிழித்து வீசி எறிந்தான். பின் மற்ற படங்களை பார்த்துக்கொண்டே வந்தான். அவனும் ருஹானாவும் நிற்கும் படம் வந்ததும் அவன் கை நின்றது. ருஹானா தன் பெரிய கண்களால் அவனை நிமிர்ந்து பார்க்க, ஆர்யனும் அவளை பார்த்தபடி நிற்க மிகவும் அழகாக அமைந்த அந்த படத்தை பார்த்தபடியே அவனும் நின்றான்.

அப்போது கதவு தட்டப்பட அந்த படத்தை மற்ற படங்களுக்கு இடையே வைத்து மறைத்துக்கொண்டு “வரலாம்” என்றான். கையில் ஃபைலுடன் வந்த சல்மா “ஸ்பானிஷ் ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட முழுசா மொழிபெயர்ப்பு செஞ்சிட்டேன். அதுல சில சந்தேகம் இருக்கு. நீங்க அது சொல்லிட்டிங்கனா முடிச்சிரலாம். நாம ரெண்டுபேரும் இப்போ அதை பார்க்கலாமா?” என்று கேட்டாள். “நான் இப்போ பிஸியா இருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்” என்று ஆர்யன் சொல்லவும் சல்மா முகமே விழுந்துவிட்டது.

‘ஒன்றும் செய்யாமல் சும்மா தானே நிற்கிறான். இத்தனை அழகாக வந்து நிற்கிறேனே, என்கூட நேரம் செலவழித்தால் என்ன?’ என்று மனது ஆசைப்பட தயங்கியபடி தலையாட்டிவிட்டு திரும்பி சென்றாள்.

சல்மா சென்றபின் புகைப்படங்களுடன் சென்று சோபாவில் அமர்ந்தவன் முன்னே இருந்த மேசையில் எல்லா படங்களையும் பரப்பிப் போட்டு, இருவரும் கண்ணோடு கண் நோக்கி இருந்த அந்த படத்தை தேடி எடுத்தான். அதை கையில் தூக்கி வைத்து பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு, அவனுள் புதியதாக தோன்றும் உணர்வுகளை அவனால் இனம் காண முடியவில்லை.

அவன் பார்வை வட்டத்தில் வேறு படம் விழ, அதை எடுத்தான். மிஷால் வாசலில் நின்று ருஹானாவை பார்த்தபடி இவானின் பரிசுகளை கொடுக்க ருஹானா அதை வாங்க, சில நொடிகளுக்கு மேல் அதை பார்க்க முடியாமல் அதையும் கிழித்து தூர எறிந்தான். கோபத்தோடு படுக்க சென்றான்.

காலையில் எழுந்து வந்த ஆர்யன் சிதறிக் கிடந்த படங்களை பார்த்து அனைத்தையும் ஒன்றாக சேகரித்தான். அவனை ருஹானா பார்க்கும் படத்தை எடுத்தவன் அதை கிழிக்க முயன்றான். அவனால் முடியவில்லை. அவன் இதயம் பேசும் மொழி அவனுக்கு புரியவில்லை.

புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இவான் அறைக்கு வந்தவன், ருஹானா இவானுக்கு சட்டை போட்டுக்கொண்டே பேசிக்கொண்டு இருப்பதை கேட்டான். “பசிக்குதா, சாப்பிட போகலாமா?” என அவள் கேட்க, இவான் ஆர்யனை பார்த்து “குட்மார்னிங், சித்தப்பா” என்றான். ஆர்யன் இவானை பார்த்து மென்மையாக தலையாட்டினான்.

ருஹானா அவனை பார்த்தபடி எழுந்து நிற்க, அவளை பார்த்தவன் போன் அடிக்கவும் அதை எடுத்தான்.

“ஹலோ! ஆமா, நான் தான்”

“நாம பேசணுமே! நீயும் நானும் மட்டும்” கார் ஓட்டிக்கொண்டே மிஷால் பேசினான்.

ஆர்யன் கண்கள் வியப்பால் விரிய “நல்லது. ஹார்பருக்கு வா” என்றான்

“வந்துட்டே இருக்கேன்”

ஆர்யன் போன் அடைக்கவும் அவன் முன்னே வந்த ருஹானா “நேத்து மிஷால்…..” என்று தொடங்க அவள் குரல் கேட்காதது போல் பாவித்தவன், அவளை தாண்டி இவானை எட்டி பார்த்து “அக்னி சிறகே! இது உனக்காக வந்துருக்கு, நான் வெளியே போறேன். நீ சாப்பிடு” என காகித உறையை அங்கே வைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.

ஆர்யன் தன்னை தவிர்த்ததால் சங்கடமடைந்து ருஹானா நிற்க, இவான் உறையை எடுக்க அதிலிருந்த விழா படங்களை பார்த்து ஆனந்த கூச்சலிட்டான். தன் வருத்தத்தை மறைத்துக்கொண்ட ருஹானாவும் இவானுடன் சேர்ந்து அந்த படங்களை பார்க்கலானாள்.

——-

துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த மிஷால் காரிலிருந்த துப்பாக்கியை எடுத்து தன் பின்னால் செருகிக் கொண்டான். அப்போது சதாம் போனில் அழைக்க போனை அடைத்து காரிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினான். பின் வீராவேசமாக ஆர்யன் வரவை எதிர்நோக்கி விறைத்துகொண்டு நின்றான்.

——-

குளியலறையில் இவான் இருக்க, சோபாவில் அமர்ந்து ருஹானா புன்னகையுடன் புகைப்படங்களை பார்த்திருந்தவள் “இவான் செல்லம்! சீக்கிரம் வா” என்றாள். அப்போது அவள் போன் ஒலித்தது.

“சொல்லு சதாம்”

“அக்கா! மிஷால் அண்ணா துப்பாக்கியை எடுத்துட்டு போயிருக்கார். ஒரு புல்லெட் கீழ கிடக்குது”

அதிர்ச்சியில் எழுந்துக் கொண்டே “என்ன? என்ன சொல்ற?” என்று கேட்க அவள் மடியில் இருந்த படங்கள் கீழே விழுந்தன.

“நேத்து ஹோட்டல் மேசையை உடைஞ்ச விஷயத்தை மிஷால் அண்ணாட்ட சொல்லும்போது உங்ககிட்டே அந்த ஆள் கோபமா நடந்துக்கிட்டார்னு நான் சொல்லிட்டேன். அதை நான் சொல்லியிருக்கக் கூடாது. அது கேட்டதுல இருந்து அண்ணன் கோபமாவே இருந்தார். இப்போ அண்ணாவும் காணோம். துப்பாக்கியும் அதோட இடத்துல இல்ல”

திகைத்த அவள் “சரி சதாம், எனக்கு புரிஞ்சது. நீ பயப்படாதே” என்று போனை வைத்தாள்.

‘மிஷால் இங்க வருவானோ?’ என யோசித்த ருஹானாக்கு ஆர்யன் ‘ஹார்பருக்கு வா’ என்று போனில் பேசியது ஞாபகம் வந்தது. மிஷாலுக்கு போன் செய்தாள். அது காரில் அடிக்க மிஷால் எடுக்காததால் ருஹானா பதட்டமானாள். பின் ஆர்யனுக்கு போன் செய்ய அவன் இணைப்பு கிடைக்கவில்லை. “அல்லாஹ் எனக்கு உதவி செய்ங்க” என பிரார்த்தித்தபடி வெளியே ஓடினாள்.

குளியலறையிலிருந்து வெளியே வந்த இவான் ருஹானா அங்கே காணாததால் “சித்தி! எங்க இருக்கீங்க?” என தேடினான். பின் அறைக்கு வந்தவன் புகைப்படங்கள் கீழே கிடப்பதை பார்த்து அவற்றை எடுத்தான்.

———

துறைமுகத்தின் உள்ளே ஆர்யன் கார் வர, மிஷால் விறைப்பானான். ஆர்யன் காவலன் ஒருவன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபடி நிற்க, மற்றொருவன் கார் கதவை திறக்க, ஆர்யன் இறங்கி மிஷாலை நோக்கி நடந்து வந்தான். மிஷால் கைமுஷ்டிகள் இறுக நிற்க, ஆர்யன் அவன் முன்னே வந்து நின்றான்.

——-

ருஹானா வந்த வாடகைக்கார் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ள, மிஷாலுக்கு போன் செய்தபடியே உள்ளே அமர்ந்திருந்த ருஹானா பரிதவித்து போனாள்.

(தொடரும்)

Advertisement