Advertisement

காரில் சல்மா லண்டன் பெருமைகளை அளந்துக்கொண்டே வர, கேட்கத்தான் ஆள் இல்லை. “நீங்க லண்டன் போயிருக்கீங்களா?” என சல்மா கேட்க, ருஹானா போட்டோவை பார்த்திருந்த ஆர்யன் காதில் விழவே இல்லை. சல்மா அருகில் இருக்கும் உணர்வே அவனுக்கு இல்லை. “நிறைய ஐரோப்பா நாடுகளுக்கு போயிருக்கீங்க, ஏன் லண்டன் மட்டும் போகல?” ஆர்யன் கைகள் ருஹானா படங்களை நகர்த்த கண்ணும் கருத்தும் அங்கேயே.

சதி செய்யும் மதி

மதியை வெல்லும் விதி..!

வேற்றுமொழி காட்டி கவர முயல

கண்டதோ பெருந்தோல்வி

கவனம் சிதறுவது எல்லாம்

தேவதை பெண்ணிடம்

பேரழகி பக்கம் இருந்தும்

பாதிப்பது இல்லை அவனை..!

“ஆர்யன்! லண்டன் போயிருக்கீங்களா?” என அவன் பெயர் சொல்லி அழைத்து சத்தமாக கேட்டதும் தான் இல்லையென தலை அசைத்தான், அதுவும் அவள் புறம் திரும்பாமல். சல்மா பொறுமை இழக்க ஆரம்பித்தாள். ரஷீத் போன் அடிக்க ‘ஸ்பானியர்களின் வக்கீல் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாத நிலையில் சந்திப்பு சாத்தியமில்லை’ என வருத்தத்துடன் செய்தி வந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை அகாபா நகரத்திற்கு அவர்களே சந்திக்க வருவதாகவும் தெரிவித்தார்கள். ரஷீத் இந்த தடங்கலை சாக்கிட்டு ஸ்பானியர்களோடான தொடர்பை தடுக்க நினைத்து “ஆர்யன்! சந்திப்பை ரத்து செய்திடலாமா?” என ஆர்வமாக கேட்க, ஆர்யனோ “வெள்ளிக்கிழமை நம்ம சிட்டிக்கு வர சொல்லு, ரஷீத்” என ஆணையிட ரஷீத் உடனே பணிந்தான். கார் மாளிகை திரும்பியது. சல்மா காற்றுப்போன பலூனாக மாறிப்போனாள்.

——-

மிஷால் உணவத்தில் இவானுக்கு நொறுக்குத்தீனி கொடுத்து பக்கத்தில் அமர வைத்து ருஹானா வேலை செய்துக்கொண்டு இருந்தாள். “நான் வேலை செய்ற இடம் உனக்கு பிடிச்சிருக்கா, அறிவுச்செல்வம்?” ருஹானா கேட்க, இவான் வாய் முழுவதும் தின்பண்டம் இருக்க தலையாட்டினான். அப்போது மிஷால் அங்கே வந்தவன் “கப்பல் செய்ய ரெடியா, இவான் கேப்டன்?” எனக் கேட்க “நான் ரெடி” என்று இவான் உற்சாகமாக சொன்னான். “சரி, நாம தொடங்கலாம்” என்று சொன்ன மிஷால் கத்தி கொண்டு உருளைக்கிழங்கை செதுக்கி கப்பல் செய்யலானான்.

“இது சிந்துபாத்தோட கப்பல். உன்னை மாதிரி தான் அவரும் கேப்டன். ஆனா வயசானவரு. பெரிய கடல்ல இந்த கப்பல்ல பிரயாணம் போவார். சிந்துபாத் நிறைய சாகசம் செய்துருக்கார்” என மிஷால் சுவையாக கதை சொல்லிக் கொண்டே கப்பல் செய்ய, இவான் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, மாவு பிசைந்துக் கொண்டிருந்த ருஹானா முகத்திலும் புன்னகை.

கதை சொல்லி முடித்த மிஷால் “கப்பல் பயணத்துல புதுசு புதுசா நிறைய ரசிக்கலாம். துணிச்சலா ஒவ்வொன்னும் எதிர்கொள்ளலாம்” என கப்பலையும் செய்து முடித்தான். “இது தான் சிந்துபாத் கப்பல். உனக்குத்தான் வச்சிக்க. இவான் கேப்டன்! நீயும் சாகசம் செய்ய ரெடியா?” எனக் கேட்டான். மிஷாலிடம் தலையாட்டிய இவான், ருஹானாவிடம் கப்பலை காட்டினான்.

“சித்தி! இங்க பாருங்க”

“அழகா இருக்கே இந்த கப்பல்!”

“சித்தி! இதை நான் சித்தப்பாக்கு எடுத்துட்டு போகட்டுமா?”

சிரிப்பு மறைந்து ருஹானாவும், மிஷாலும் பெருமூச்சு விட்டனர். சில விநாடிகள் அமைதிக்கு பின் ருஹானா கேட்டாள்.

“ஏன் செல்லம்?”

“சித்தப்பாட்ட நிறைய கப்பல் இருக்கு. அதிகமா வேலை செய்றார்ல. இந்த கப்பலை பார்த்தா அவரும் சந்தோசப்படலாம். என் கூட விளையாட வருவார்ல?”

‘அந்த கடுவன்பூனைக்கு விளையாடயெல்லாம் தெரியுமா?’ என்பது போல ருஹானாவும், மிஷாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ருஹானா பதில் சொல்லாததால் “உனக்கு எப்பலாம் விளையாட ஆசையோ என் கூட விளையாட வா” என்று மிஷால் சொன்னான்.

இவான் அவனுக்கு நன்றி சொன்னவன், ருஹானாவிடம் கேட்டான் “நான் சித்தப்பாட்ட கேட்கவா?” அவளும் தலையாட்டினாள். ‘சித்தப்பா மேல் இவான் வைத்திருக்கும் பாசத்தையும், ஆர்யனின் அண்மைக்காக இவான் ஏங்குவதையும்’ உணர்ந்துக்கொண்ட ருஹானா யோசனையில் ஆழ்ந்து போக, அகாபா நகரத்தின் பெரிய கப்பல்களின் உரிமையாளனின் வாரிசு உருளைக்கிழங்கு கப்பலை ஆனந்தமாக செலுத்தினான்.

——–

கரீமா காபி குடித்துக் கொண்டு இருக்கும்போது ஆர்யனும், சல்மாவும் மாளிகைக்குள் நுழைந்தனர். “என்ன ஆச்சு, ஏன் திரும்பிட்டீங்க?” என கரீமா கேட்க, சோபாவில் தொப்பென அமர்ந்த சல்மா “மீட்டிங் தள்ளி போயிடுச்சி” என்று சலித்தாள். ஆர்யன் கரீமாவிடம் கேட்டான்.

“இவான் எங்கே?”

“அவங்க இன்னும் வரலயே!”

“வரலயா? காலைல போனவங்க, இப்போ வரை பூங்கால என்ன செய்றாங்க?”

“ருஹானாவோட வேலை முடியாம இருந்திருக்கலாம்”

“என்ன சொல்றீங்க?” குழப்பமும் கோபமும் அவனிடம்.

“ருஹானாவும், இவானும் ஹோட்டலுக்கு போயிருக்காங்க. அவளுக்கு வேலை இருக்குன்னு போன் வந்தது”

அவன் கோபம் அதிகமானது.

“கவலைப்படாதே, ஆர்யன்! கார்ல தான் போயிருக்காங்க.. கூடவே செக்யூரிட்டீஸ் இருக்காங்க. ஏதாவது தப்பா நடந்திருந்தா அவங்க நமக்கு சொல்லி இருப்பாங்களே!” என கரீமா பயங்காட்டினாள்.  அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆர்யன் திரும்பி நடந்து போய்விட்டான்.

ஆனந்தமாக தங்கை பக்கம் திரும்பிய கரீமா “என்ன, உன்னோட திட்டம் தடுமாறிடுச்சா?” என கிண்டல் செய்தாள்.  “இப்போ என்னோட கெட்ட நேரம். ஆனா கூடிய சீக்கிரமே நடக்கும். நான் ஜெயிச்சி காட்றேன்” என சல்மா சவடாலாக சொன்னாள்.

——-

பாய்மரபடகு வடிவில் கட்லெட் மேல் சீஸை வைத்து உணவு தயாரித்து மிஷால் இவானுக்கு கொடுத்தான், “இவான் கேப்டனோட படகு வந்துடுச்சி.” இவான் ஆசையாக அதை சாப்பிட, அவன் அருகே ருஹானாவும் உணவருந்த, மிஷால் எதிரே அமர்ந்தான்.

சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர், “உன் குடும்பமா மிஷால்?” என கேட்க, மகிழ்ச்சி அடைந்த மிஷால் ருஹானாவை பார்த்தவாறே “என் விருந்தாளிகள்” என வெட்க புன்னகையுடன் பதில் அளித்தான்.

சங்கடமடைந்த ருஹானா முகமும் இறுக்கமாக, மிஷால் அவளையே பார்க்க, ருஹானா மிஷாலை ஏறிட்டு பார்க்கவில்லை. இவான் கதை பேசிக்கொண்டே சாப்பிட “இவன் இப்படி உற்சாகமாக சாப்பிடறது, இப்போ தான் முதல் முறையா பார்க்கிறேன்” என ருஹானா சொல்ல, புன்னகைத்த மிஷால் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என இவானை பார்த்து சொன்னான். “சர்ப்ரைஸ்!” என இவான் ஆனந்தமாக கத்த, மிஷால் போன் அடித்தது.

பேசி முடித்த மிஷால் “எனக்கு வேலை இருக்கு. நான் சீக்கிரம் போகணும்” என்றான். ருஹானாவும் “சரி தான், நாங்களும் சாப்பிட்டதும் கிளம்பிடுவோம்” என்றாள். இவான் தலையை தடவிக் கொடுத்த மிஷால் ருஹானாவோடு சாப்பிடுவதை எண்ணி மகிழ, மூவரும் சிரித்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

டொயோட்டா செக்வயாவில் கோபமாக வந்து இறங்கிய ஆர்யன், இந்த காட்சியை பார்த்து கொந்தளித்து நின்று விட்டான். இவான் கையை அசைத்து ஏதோ விவரிக்க, பக்கத்தில் ருஹானா சிரிப்புடன் அதை ரசிக்க, எதிரே மிஷால் அதற்கு பதில் சொல்ல, தூரத்தில் இருந்து பார்த்த ஆர்யனின் முகத்தில் எரிமலை கொதித்தது. மூன்று பேரும் ஒரே குடும்பம் போல தோற்றமளிக்க ஆர்யனின் எரிமலை குழம்பை கக்க ஆரம்பித்தது.

“என் அனுமதி இல்லாம இவங்களை இங்க கூட்டிட்டு வந்தீங்களா?” என தன் காவலர்களிடம் எரிந்து விழ அவர்கள் தலைகுனிந்து நிற்க, உணவகம் நோக்கி நடந்த ஆர்யன் வெளியே வந்த மிஷாலை பார்த்ததும் நின்றுக்கொண்டான். மிஷால் சதாமுடன் பேசிக்கொண்டே வெளியே வந்தவன் “அரை மணி நேரத்தில் வரேன்” என்று சொல்லி சென்றான்.

ஆர்யன் அருகே நெருங்க, இவானின் வாயை துடைத்த ருஹானா “குட்பாய்! சாப்பிட்டு முடிச்சிட்டியே” என சொல்லிக்கொண்டு இருக்கும்போது, இவான் நடந்து வந்துகொண்டிருந்த ஆர்யனை பார்த்துவிட்டான். “சித்தப்பா!” என ஆசையாக அழைக்க, அதிர்ந்து போன ருஹானா எழுந்து நின்று விட்டாள்.

ஆர்யன் அருகே வர “நீங்களும் சாப்பிடறதுக்காக இங்க வந்தீங்களா, சித்தப்பா?” என்று இவான் எரிகிற எரிமலையில் நெய்யை ஊற்ற, தன் கோபமுகம் மாற்றிய ஆர்யன் “எனக்கு பசியில்லை. உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன், சிங்கப்பையா. வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லி தன் பின்னே நின்ற காவலனிடம் கண் காட்ட அவன் வந்து இவான் கை பிடித்தான்.

“சித்தி! நீங்களும் என் கூட தானே வர்றீங்க?” என இவான் ருஹானாவை கேட்க, அவளோ ஆர்யனின் கோபம் கணித்து ‘தன்னை திட்டுவதற்காக தான் இவானை அனுப்புகிறான்’ என அனுமானித்து “நீ போய் கார்ல உக்காரு, நான் பின்னாடியே வரேன், செல்லம்” என்று சொல்லவும் இவான் சென்றான்.

“நான்.. வந்து.. இவானுக்காக….” வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற ருஹானாவின் கண்கள் கலங்கின. உள்ளங்கை உயர்த்தி தடுத்த ஆர்யன் அவளை உக்கிரமாக முறைத்தான். மேசை விட்டு வெளியே வந்து அவன் முன் நின்ற ருஹானா “இங்க அதிகமா ஆர்டர் வந்ததால உதவிக்கு என்னை கூப்பிட்டாங்க. என்னால தவிர்க்க முடியாம வந்தேன். இவானும் என்னோட வர ஆசைப்பட்டான். அவன் வற்புறுத்தவும் நான்….” என விளக்கத்தை முடிக்கவில்லை.

ஆர்யன் கண்கள் பெரியதாக முழங்கால் கொண்டு மேசையை தட்டிவிட்டான். அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேசை மேல் கூட அவனுக்கு அவ்வளவு எரிச்சல்.

ருஹானா பயந்து போய் பெரிய மூச்சுக்கள் விட, சத்தத்தில் சதாம் ஓடி வந்து “அக்கா!” என அழைத்து ஆர்யனின் ஆங்காரம் கண்டு பயந்து நின்றான். “நீ உள்ளே போ, சதாம்” என அவனை உள்ளே அனுப்பிய ருஹானா ஆர்யனையே பார்க்க, அவளை கசப்புடன் பார்த்தவன் திரும்ப எத்தனிக்க, பின் நின்று கோட் பாக்கெட்டில் இருந்து கத்தையாக பணம் எடுத்து அவன் கீழே தள்ளிய மேசைமேல் விட்டெறிந்தான்.

திகைத்த ருஹானா தள்ளாடியபடி பலத்துக்கு மேசையை பிடிக்க, சதாம் “என்னாச்சு அக்கா?” என ஓடி வந்தான். ருஹானா மேசையை தூக்க முயற்சிக்க “அக்கா, அவங்கள காக்க வைக்காதீங்க. நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க “ என்றான். அவள் உள்ளே போய் கைப்பை எடுத்து வந்தவள் தடுமாறி நடந்து போனாள்.

கார் பிரயாணத்தில் சித்தப்பாவின் கோபமுகத்தையும், சித்தியின் சோகமுகத்தையும் மாறி மாறி பார்த்த இவானும் கவலையானான். வீடு வந்ததும் “இவானை உள்ளே கூட்டிட்டு போ!” என்று ஆர்யன் டிரைவரை ஏவ, இவான் சித்தி முகம் பார்த்தான். “நீ போ அன்பே! நான் சீக்கிரம் வரேன்” என்று ருஹானா இவானை காரிலிருந்து இறக்கி விட்டாள்.

இவான் சென்றதும் ஆர்யனுக்கு பேச இடம் கொடுக்காமல் “நீங்க கத்த ஆரம்பிக்கிறதுக்குள்ள நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. ஏன் நீங்க இவ்வளவு அதிகப்படியான நடந்துக்கிறீங்கன்னு எனக்கு தெரியல. பூங்காக்கும், ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்? உங்க செக்யூரிட்டி தான் எங்களோட இருந்தாங்களே! அவங்க வேலையும் பார்த்துட்டு தான் இருந்தாங்க! ஏன் இவ்வளவு ஆத்திரம் உங்களுக்கு? மிஷால் தான் காரணமா?” ருஹானா தன்மையாக ஆரம்பித்து சந்தேகத்தில் முடித்தாள்.

கோபத்தில் பெரிதான கண்கள் அவளையே முறைப்புடன் பார்க்க “நீயோ உனக்கு உதவுற உன் தோழனோ எனக்கு ஒரு பொருட்டே இல்ல. இவான் பற்றி மட்டும் தான் என் அக்கறை. அவனோட பாதுகாப்பு தான் என் கவலை. நீ என் வேலையை ரொம்ப கஷ்டமாக்குற!” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“நானா? இவானுக்கு ஆபத்து வர்ற மாதிரி ஏதாவது நான் செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

“கல்லறைல என்ன நடந்ததுங்றதை மறந்துடாதே. அவங்க எவ்வளவு ஆபத்தானவங்கன்னு உன் கண்ணால பார்த்தே தானே? அப்படி இருந்தும் கூட உன் ஜாலிக்காக இவானை ஆபத்துல மாட்டி விடற!”

பெரிய கண்களை இன்னும் விரித்தவள் “என் ஜாலியா? போதும் நிறுத்துங்க. உங்க அநியாயமான பழியை நான் கேட்க மாட்டேன்” என்று கதவை திறந்து இறங்க போனாள்

“நான் இன்னும் பேசி முடிக்கல” இரைந்தபடி ஆர்யன் அவள் கையை பிடித்து இழுத்தான். “பேசி முடிங்க!” அவள் பல்லை கடித்து சொன்னாள்.

“இதுக்கு மேல இதே மாதிரி ஏதாவது நடந்துச்சினா விளைவுகள் உனக்கு தான் தீமையா முடியும். இதை நல்லா மண்டைல ஏத்திக்கோ.”

அவன் பிடியிலிருந்து தன் கையை வெடுக்கென உதறியவள் “இது போல என்கிட்டே நடக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. எனக்கு வேலை செய்ய தேவை இருந்ததால தான் மிஷால் அவன் இடத்தில என்னை சேர்த்துக்கிட்டான். என் அக்கா மகனை நான் வேலை செய்த இடத்துக்கு கூட்டிட்டு போனேன், அதுவும் உங்க செக்யூரிட்டி கூட. அவ்வளவு தான் நடந்தது.

ஆனா நீங்க ஹோட்டலுக்கு வந்து பயங்கர ஆட்டம் போட்டீங்க. உங்களுக்கு இது தப்புன்னு நான் எப்படி விளக்கி சொல்றது?  நான் சந்திச்ச மனுசங்கள்லயே நீங்க தான் கடுமையானவர். காட்டுமிராண்டி” என அழுத்தி சொன்னவள் கீழே இறங்கி கார் கதவை அடித்து மூடினாள்.

ஆர்யன் என்ற எரிமலை வெடித்து சிதறியது. பல விநாடிகள் அசைவற்று  இருந்தவன் பின்இருக்கையில் இருந்து இறங்கி முன்னால் ஏறி கார் ஓட்டி சென்றான்.

தளர்வாக வீட்டுக்குள் வந்த ருஹானாவை பார்த்து அகமகிழ்ந்து போன கரீமா, பாசாங்காய் “என்ன நடந்தது?” என பதறிப்போய் அவளை உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள். “இது என்னோட தப்பு தான். ஆர்யனோட மீட்டிங் ரத்தாயிடுச்சி. அது எனக்கு எப்படி தெரியும்? வீட்டுக்கு வந்ததும் அவன் இவானை பார்க்க நினைப்பான். இவான் இல்லனா அவனுக்கு கோபம் வரும். அதனால தான் நான் சொல்ல வேண்டியதாயிடுச்சி” என்று தன் மேல் பழி வராமல் தப்பித்துக்கொண்டாள்.

“அங்க ஏதாவது மோசமா நடந்ததா?” என ஆவலுடன் கேட்டாள். “என்னால மிஷால் உணவகத்தில பாதிப்பாச்சி. அப்போ மிஷாலும் அங்க இல்ல. நான் எப்படி அவன் முகத்தில முழிப்பேன்?” என குரல் தழுதழுக்க ருஹானா சொல்ல “நீ வருத்தப்படாதே, டியர். மிஷால் நல்லவன். கண்ணியமானவன். உன்னை புரிஞ்சிக்குவான். ஆனா என்னால புரிஞ்சிக்கவே முடியல. இந்த ஆர்யன் ஏன் தான் இப்படி செய்றானோ? அவன் எப்போ தான் மாறுவான்? இத்தனைக்கும் நான் சொன்னேன், நான் தான் உன்னை போக சொன்னேன்னு. அவன் எங்க கேட்டான்?” என்று கரீமா புளுகினாள்.

ருஹானாவின் கண்ணீர் பார்த்தும் கரீமா மனம் இளகாமல் “ஆர்யனும் மிஷாலை போல இருக்கக் கூடாதான்னு நான் ஆசைப்படறேன். நல்லவேளை. இதோட நின்னது, அதிசயம் தான். இதை விட மோசமா நடந்திருக்கலாம். அல்லாஹ் அருளால நீ தப்பிச்சிட்டே. எனக்கு மிஷாலை நினைச்சா தான் கவலையா இருக்கு. உன்மேல இருக்கிற கோவத்தால ஆர்யன் மிஷாலுக்கு கெடுதல் செய்வானோன்னு பயமா இருக்கு. இன்ஷா அல்லாஹ் ஆர்யன் கோபம் குறையணும்” என்று ருஹானாவின் கவலையை அதிகப்படுத்தினாள்.

ருஹானா திகைப்பாக பார்க்க “மிஷாலோட உன்னோட நட்பு வலிமையானதுதான். ஆர்யன்னால அது கெட்டுப் போகாம இருக்கணும். மிஷாலை போல நல்லவங்க இந்த காலத்துல கிடைக்கிறது சிரமம். இந்த நட்பை காப்பாற்றிக்கோ” என்று கரீமா சொல்ல ருஹானா அழுகையுடன் தலையாட்டினாள்.

இவானை பார்க்க எழுந்தவளை தடுத்த சல்மா “சாரா அவன்கூட இருக்காங்க. உன்னை கவலையோட பார்த்தா அவனும் வருத்தமாகிடுவான். நீ போய் ஓய்வெடு” என சொல்ல, அவள் நடிப்பை நம்பிய ருஹானா “நீங்க எனக்கு ஆறுதலா இருக்குறதுக்கு நன்றி” என்று சொல்ல “எங்க இவானோட நீ இருக்குறது தான் எனக்கு மகிழ்ச்சி” என  கரீமா மேலும் நடித்தாள்.

——–

Advertisement