Advertisement

மருத்துவமனையில் சாக கிடக்கும் தந்தையை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்து ருஹானா அழுது கொண்டிருந்தவள், ஒரு முடிவுக்கு வந்து தன் மொபைலில் அகாபாவில் இருக்கும் லாயர்களில் தேடி… ஒரு வக்கீலை தேர்ந்தெடுத்து அவரை பார்க்க சென்றாள்..

எல்லா விவரங்களையும் கேட்டு கொண்ட வக்கீல் “கண்டிப்பா கார்டியன்ஷிப் வாங்கிடலாம்.. டோண்ட் வொரி… நீங்க அந்த சித்தப்பா பேர் மட்டும் சொல்லுங்க.. கேஸ் போட்டு பையனை வாங்கிடலாம்” என்று நம்பிக்கை அளிக்க.. நிம்மதி அடைந்த ருஹானா சொன்னாள்.. “ஆர்யன் அர்ஸ்லான்”…

திகைப்படைந்த லாயர் ஆர்யனுக்கு எதிராக தன்னால் நிற்க முடியாது என மறுத்ததோடு, அவளையும் அந்த முயற்சியை கைவிட அறிவுறுத்த, கவலையானாள் ருஹானா…

                              ———–

தூங்கி கொண்டிருந்த ஆர்யன் கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தவன், தன் மணிக்கட்டை பற்றி கொண்டு     அப்படியே வியர்க்க வியர்க்க அமர்ந்து கொண்டான்.. முகத்தில் அதே தீ பிழம்பு…

           —————–

அடுத்த நாள் காலையில் சாரா உணவு தட்டு ஏந்திபடி கூட வர, இவான் படுத்திருந்த அறைக்கு ஆர்யன் வந்தான்.. இவான் முதுகு காட்டி கட்டிலில் உட்கார்ந்து இருந்தான்..

“எழுந்திரு இவான்” ஆர்யன் சொல்ல இவான் திரும்பி கூட பார்க்கவில்லை..

“டாக்டரை வர சொல்லலாமா, ஆர்யன் சார்” என சாரா கேட்க… “தாய் இழந்த பிள்ளைய டாக்டர் பார்த்து என்ன செய்ய போறார்?.. நீங்க அவனுக்கு சாப்பாடு ஊட்டுங்க” என ஆர்யன் கடுமையுடன் கட்டளையிட்டான்..

அவரும் மேலே ஒன்றும் பேசாமல் இவான் பக்கத்தில் அமர்ந்து ஸ்பூனில் உணவு எடுத்து வாயருகே கொண்டு சென்று “சாப்பிடு இவான்.. வாயை திற” என ஊட்ட முயல… இவான் வாயை திறக்கவே இல்லை.. ஆர்யனும் “இவான்!” என்று அதட்ட அப்போதும் அவன் அசையவில்லை..

“லிட்டில் சார்! வாயை திறங்க” என சாரா கெஞ்ச.. ஆர்யன் குரலை உயர்த்தி “இவான் வாயை திற” கட்டளையிட.. வாயை திறந்து சூப்பை வாங்கிய இவான் அதை அப்படியே துப்பிவிட்டான்.. சாரா ‘அச்சோ!’ என பதறி துணி கொண்டு இவானின் வாயை துடைக்க… அதிர்ச்சியடைந்த ஆர்யன் என்ன செய்வது என தெரியாமல் குழம்பினான்.…

                     —————–

ஐசியு

வெளியே அவள் வளர்ப்பு தாய் பர்வீனுடன் அழுது கொண்டே ருஹானா நிற்க… “ரெண்டு நாள்ல உரு குலைந்துட்டாரே” என பர்வீன் வருத்தப்பட.. “பர்வீன்ம்மா… அவர் பேரனை பார்த்து பூரிச்சி இருந்தார்.. இவான் வயசுக்கு இறங்கி ஆனந்தப்பட்டார்.. காட்டுமிராண்டி மனிதன் வந்து கொடூரமா இவானை தூக்கிட்டு போயிட்டான்.. நான் எவ்வளோ முயற்சி செய்தேன், பர்வீன்ம்மா… ஆனா ஒன்னும் நடக்கல.. அல்லாஹ் உம் உதவி செய்யல.. எத்தனையோ லாயர்ங்களை போய் பார்த்தேன்.. அவனை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்ல… அவன் மனுஷனே இல்ல.. கொடூர மிருகம்.. அப்பா எழுந்து இவானை கேட்டா நான் என்ன செய்வேன், பர்வீன்ம்மா” என குலுங்கி குலுங்கி அழுதாள்..

              ———————

சோகமாக உட்கார்ந்திருந்த இவான் அருகில் உட்கார்ந்திருந்த கரீமா போன் அடிக்கவும் பேசியபடியே எழுந்து ரூமின் வெளியே வந்தாள் “சல்மா செல்லம்! நீ உடனே புறப்பட்டு இங்க வந்து சேரு.. இதான் சரியான சமயம்… உனக்கு ஏன் புரியல” என ஆதங்கப்பட…

“அக்கா! உன் கனவைலாம் தூக்கி போடு… அவருக்கு என் மேல துளி கூட விருப்பம் இல்ல…”

“முட்டாள் மாதிரி பேசாதே.. இப்போ சூழ்நிலையே மாறி போச்சி.. பையனோட அம்மா போய் சேர்ந்துட்டா… இவான் தனியா நிக்கிறான்.. ஆர்யனுக்கு இவான் ரொம்ப முக்கியம்.. இவான் தான் ஆர்யனோட வீக் பாய்ண்ட்… நான் எதுக்கு உன்னை லண்டனுக்கு படிக்க அனுப்பினேன்…? உன் கிறுக்கு மச்சானோட ஏன் இன்னும் இருக்கேன்…? தஸ்லீம் வந்து எல்லாத்தையும் மாத்த பார்த்தா.. நான் கொடுக்காதது அவ கொடுத்தா.. இப்ப எல்லாம் முடிஞ்சது.. நீ ஆர்யன் மனைவியாகணும், சல்மா.. இந்த செல்வத்தை, சாம்ராஜ்யத்தை அடைய அது ஒன்னு தான் வழி.. உன் மூட்டை முடிச்செல்லாம் கட்டிட்டு உடனே கிளம்பு.. அவ்வளவு தான்” என்று பேசி முடித்த கரீமா ஒரு வில்லி பார்வை பார்த்தாள்..

                                                            —————–

அடுத்த நாள்…. படுக்கையில் படுத்து அழும் இவானை பார்த்துக் கொண்டே நின்றிருந்த ஆர்யன் ஒரு முடிவுக்கு வந்தவனாக… இவானை தூக்கி அப்படியே தரையில் நிறுத்தினான்..

“இங்க பார், அக்னி சிறகே… நீ ஒரு பையன்.. இப்படி பெட்ல படுத்துட்டு அழுறதுலாம் கூடாது.. நம்ம ரூல்ஸ் என்னன்ன..” என்று ஆர்யன் கேட்கவும்.. இவான் விழித்து பார்த்தான்..

“இதை பத்தி நாம ஏற்கனவே பேசி இருக்கோமே…. உனக்கு நினைவு இருக்கா?” என்று வினவ… இவான் ஆம் என தலையசைத்தான்…

“வரிசையா சொல்”

“பயப்படக்கூடாது.. தைரியமா இருக்கணும்… யாரையும் நம்பக்கூடாது….. அழக்கூடாது”

இவான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல தலை ஆட்டிக்கொண்டே வந்த ஆர்யன், “சரியா சொன்னே.. இப்போ அந்த ரூல்ஸ் நீ ஃபாலோ செய்யணும்… பயப்பட மாட்ட… அழ மாட்ட… நம்ம டீல் அதானே…?” என்று கேட்க…. இவான் அமைதியாக நின்றான்… “நம்ம டீல் அதானே…?” என திரும்ப அழுத்தி கேட்கவும்… இவான் வேகமாக ஆமோதித்தான்..

நிம்மதி பெருமூச்சு விட்ட ஆர்யன் கீழே குனிந்து பார்க்க.. இவான் பேன்ட்டில் ஈரம் செய்திருந்தான். அதிர்ந்து போன ஆர்யன் சலிப்புடன் சாராவை சத்தமாக அழைத்தான்..

உள்ளே வந்த சாரா இவானை பார்த்ததும் புரிந்து கொண்டு “ஒன்னும் இல்லை, லிட்டில் சார்.. வாங்க.. சுத்தம் செஞ்சிக்கலாம்” என இவானை கூட்டிக்கொண்டு பாத்ரூம்க்குள் சென்றார்..

அப்போது அங்கே வந்த செகரட்ரி ரஷீத், “ஆர்யன்! அந்த சித்தி உங்க மேல கேஸ் போட லாயர்ஸை பார்த்துட்டு இருக்கா” என கூறவும் ஆர்யனின் கோபம் எல்லை மீறியது…

வீட்டு வாசலுக்கு வேகமாக வந்தவன், தன் மணிக்கட்டை பிடித்துக் கொண்டு சில வினாடிகள் நின்றான்.. பின்பு பின்னால் நின்றிருந்த ரஷீத்திடம் கை நீட்ட அவன் ஒரு பிஸ்டலை ஆர்யன் கையில் வைத்தான்.. அதை இடுப்பில் செருகி கொண்ட ஆர்யன் பாடிகார்ட்ஸ், டிரைவர் மற்றும் ரஷீத்தையும் தவிர்த்து விட்டு தானே காரை எடுத்து அதி வேகமாக செலுத்தினான்..

                     ———————

மருத்துவமனையில் ருஹானாவிடம் டாக்டர், “சீக்கிரம் பேசிட்டு வாங்க, ப்ளீஸ்.. அவரை கவலைப்படுத்தாதீங்க… சோர்வடைய வச்சிடாதீங்க” என அறிவுறுத்த ருஹானாவும் தலையசைத்து தந்தையை பார்க்க சென்றாள்…

“அல்லாஹ்க்கு நன்றி… நீங்க சுயநினைவுக்கு வந்துட்டீங்கப்பா.. ஆனா என்னை ரொம்ப பயமுறுத்திட்டீங்க..” என்று ருஹானா அழுதவாறே சொல்ல.. ஆக்ஸிஜன் குழாய் உதவியுடன் மூச்சிரைத்து கொண்டே இவான் ஏதோ பேச முற்பட்டார்..

“சொல்லுங்கப்பா”

“இவான்… இவானை அங்கே விடாதே.. உன் அக்காவின் சொத்து, வாரிசு.. என் பேரனை எங்கிட்ட கூட்டிட்டு வாம்மா… அவங்கட்ட விட்டுடாதே” என்று சொல்லியபடியே மயக்கத்திற்கு சென்று விட்டார்…

ருஹானா “மாட்டேன்… இவானை அங்க விட மாட்டேன்..” என்று கதறி அழுதாள்..

சோகமாக கண்ணீர் வடிய ஆஸ்பிட்டல் விட்டு வெளியே நடந்து வந்த ருஹானா, இவான் டாலர் மாட்டிய சங்கிலியை பற்றிக் கொண்டே படிக்கட்டுகளில் இறங்கி சாலைக்கு வந்தாள்..

அவள் அருகே சர்ரென ஒரு கார் வந்து நின்றது.. காரிலிருந்து வேகமாக இறங்கிய ஆர்யன் ருஹானாவின் முழங்கையை பற்றி இழுக்க… “என்னை விடுங்க… என்ன செய்றீங்க?” என ருஹானா கத்த கத்த… அவளை இழுத்துக்கொண்டே சென்று காரின் உள் தள்ளி கதவை அடைத்தான்.. ருஹானா “விடு.. விடு.. ஹெல்ப்.. ஹெல்ப்..” என கத்திக்கொண்டே கதவை திறக்க முயன்றாள்..

அதற்குள் மறுபக்கம் ஏறிய ஆர்யன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.. “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என கத்தியவள் “என்ன வேணும், உனக்கு?.. காரை நிறுத்து… விடு.. காப்பாத்துங்க…“ என்று கார் கதவை அடித்தாள்..

கடுமையான முகத்துடன் வேகமாக காரை ஓட்டிய ஆர்யன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் உதிரவில்லை… “என்னை எங்க கூட்டிட்டு போற…  காரை நிறுத்து… என்னை கொல்ல போறியா.. என்ன செய்ய போற.. நீ என்ன செய்தாலும் என் அக்கா மகனை உன்னிடம் நான் விட மாட்டேன்..“ என அவள் குரல் ஓங்கி ஒலிக்கவும் ஆர்யனின் முகம் இன்னும் இறுகியது…

“நான் சொல்றது காதுல விழலயா.. உன் கிட்ட தானே பேசுறேன்.. ஏன் பதில் சொல்ல மாட்ற.. விடு என்னை!” என அவள் காட்டு கத்தல் போட… கார் விர்ரென ஓரமாக ஒதுங்கி நின்றது..

ஒரு கையால் அவள் வாயை பொத்தியவன் மறு கையில் துப்பாக்கி எடுத்து அவள் தலையில் வைத்தான்.. தீ பார்வை அவன் பார்க்க… அவள் பயத்துடன் கண்களை மூடி கொண்டாள்..

(தொடரும்)

Advertisement