Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 24

ருஹானா இவானுக்கு சட்டை மாட்டிக்கொண்டே கேட்டாள்.

“நல்லா தூங்குனியா, இவான் செல்லம்?”

“தூங்கினேன் தான். ஆனா இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சம் இருக்கு, சித்தி”

“ஓ! அப்படியா? நான் இப்போ சொல்லப் போறதை கேட்டா உன் மிச்ச தூக்கமும் பறந்து போய்டும், என் அன்பே!”

“சொல்லுங்க சித்தி!”

“இன்னைக்கு பூரா நான் உன்கூட தான் இருக்க போறேன். வேலைக்கு போகல”

“ஹேய்! நீங்க போகலயா?”

“இல்லயே, தேனே! சரி சொல்லு, நாம என்ன செய்யலாம்?”

“அம்மா கூட ஒரு பூங்காக்கு போவேன். அங்க போக முடியுமா, சித்தி?”

ருஹானா சோகமாக, இவான் மேலும் சொன்னான்.

“சித்தப்பா அங்க போக விட மாட்டாங்க. ஏன்னா அந்த பூங்கா வெளிய இருக்கு”

சிந்தனையில் ஆழ்ந்தவள் “நீ சாப்பிட போ, குட்டி செல்லம். நான் பின்னாடியே வரேன்” என இவானை அனுப்பி வைத்தாள்.

உணவு மேசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்த ஆர்யன் மனதில் நேற்றிரவு ருஹானா கூறிய ‘என் அன்பு விலைமதிப்பு இல்லாதது’ என்பதோடு அவள் பேசியது எல்லாமே ஓடியது. “குட்மார்னிங், சித்தப்பா!” எனும் இவானின் குரலில் கலைந்தவன், “குட்மார்னிங், அக்னி சிறகே!” என்று இவானை பார்த்தவாறே மலர்ந்து கூறினான்.

“என் சித்தி இப்போ வந்துருவாங்க” என இவான் சொல்லவும் மலர்ந்த முகம் கூம்பியது. ருஹானா நடந்து வரும் ஓசை கேட்டு முகத்தை கல்லாக்கிக் கொண்டான். ருஹானாவும் காலைவணக்கம் சொல்லி சமாதானத்தின் முதல்படி எடுத்து வைத்தாள். ஆனால் அந்த படியில் ஆர்யன் ஏற மறுத்தான், பதில் வணக்கம் சொல்லாமல்.

“சித்தப்பா! உங்களுக்கு தெரியுமா? சித்தி இன்னைக்கு வேலைக்கு போகல” இவான் மகிழ்ச்சியுடன் சொல்ல ஆர்யனுக்கு உள்ளே தென்றல் வீசினாலும் முகத்தில் கோடை வெப்பமே இருந்தது. “இன்னைக்கு ஒருநாள் மட்டும் தான்” அதையும் கெடுத்தாள், ருஹானா.

“அதானே! இவள் எப்படி போகாம இருப்பா?” என்று நினைத்தவன் அவளை கண்டுகொள்ளாமல் எதிரே இருந்த சீஸ் தட்டை தொட, ருஹானாவும் அதை இவானுக்காக எடுக்க, அவன் தட்டில் இருந்து கையை எடுக்கவில்லை. ருஹானா விட்டுவிட அவன் தன் தட்டில் வைத்துக் கொண்ட பிறகு அதை இருந்த இடத்தில் வைத்தான். எப்போதும் அவள் தொட்டால் விட்டுக் கொடுப்பவன் இன்று எதிர்மறையாக நடந்து கொண்டான்.

அடுத்து சாலட்டை எடுத்தவன், அவள் புறம் வைக்காமல் தள்ளியே வைத்தான். அவனிடம் மாற்றம் உணர்ந்த ருஹானா எழுந்து நின்று ஒவ்வொன்றாக ஆர்யன் எடுத்தபின்னே வரிசையாக இவான் தட்டில் எடுத்து வைத்து அமர்ந்தாள்.

ருஹானா “நான் இன்னைக்கு இவானோட வெளிய போக போறேன்” என சொல்ல, வாயில் சீஸை வைத்த ஆர்யன் அப்படியே முள்கரண்டியை எடுக்காமல் இருந்தான். “பூங்காக்கு போறோம்” என அவள் சொல்ல, இவான் ஆவலோடு ஆர்யன் முகம் பார்க்க, ஆர்யன் அவள் புறம் திரும்பாமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான்.

சில விநாடிகள் கடந்த பின் “செக்யூரிட்டிய கூட்டிட்டு போங்க!” என ஆர்யன் இவானை பார்த்து சொல்ல, அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தலையாட்டிய ருஹானா நன்றி சொல்வதற்காக அவனையே பார்க்க, அவன் அவளை பார்க்காமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் மற்றவர்களும் சாப்பிட இணைந்துக்கொள்ள, கரீமா கேட்டாள் “ஆர்யன்! இன்னைக்கு வெளியூர் போறீயா?”

“ரஷீத் மொழிபெயர்ப்பாளரை கூட்டிட்டு வந்ததும் கிளம்பணும்”

சல்மா சிரித்தபடி சாப்பிட ரஷீத் ‘இனிய உணவு’ என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவன் “மொழிபெயர்ப்பாளருக்கு உடம்பு சரியில்லாம போச்சி. கடைசி நேரத்துல வேற யாரும் கிடைக்கல. சந்திப்பை ரத்து செய்ய வேண்டியதுதான்” என வருத்தமாக சொன்னான்.

“மொழிபெயர்ப்பவங்க கிடைக்கலன்னு பயணத்தை நிறுத்துவியா, ரஷீத்?” ஆர்யன் கோபப்பட “உங்களுக்கு அந்த சந்திப்பு முக்கியம்னா என்னால உங்களுக்கு உதவ முடியும்” சல்மா அவர்கள் பேச்சுவார்த்தையின் உள்ளே புகுந்தாள். “நான் உங்களுக்கு மொழிபெயர்ப்பாளரா வரேன்”

“உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா?” ரஷீத் தான் சந்தோசமாக கேட்டான். ஆர்யன் தன் இடப்புறம் இருக்கும் சல்மா பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. நேராக பார்வையை பொருத்தி இருந்தான். வலப்பக்கம் சாப்பிடும் ருஹானாவையே இன்று அவன் கண்கள் காணவில்லையே!

“நல்லா தெரியும்” என சல்மா சொல்ல, ரஷீத் அனுமதி வேண்டி ஆர்யன் முகம் நோக்க “கிளம்பறதுக்கான வேலைய பாரு, ரஷீத்” என மறைமுகமாக ஆர்யன் சம்மதித்தான். “நானும் போய் சீக்கிரமா கிளம்பி வரேன்” என ஒரு துள்ளலுடன் சல்மா ஓட, கரீமாவுக்கு பெருமையும், சந்தோசமும் பிடிபடவில்லை.

சாப்பிட்டு முடித்து எழுந்த ஆர்யன் “இவானை கவனமா பார்த்துக்கோ, சீக்கிரம் வந்துடுங்க” என்று ருஹானாவை நோக்கி சொல்ல, அவளும் தலையாட்டினாள்.

—–

பெட்டியில் துணி அடுக்கிக்கொண்டு இருந்த சல்மாவிடம் கரீமா வேகமாக தயாராகும்படி சொல்ல “ஏன் அக்கா, அவங்க காத்திருக்கட்டுமே!” என்று சல்மா அசட்டையாக சொன்னாள். “கிடைச்ச சந்தர்ப்பத்தை நீயே கெடுத்துக்காதே, சல்மா. உனக்கு விஷயம் தெரியுமா? ஆர்யன் வெளியூர் போனாலும் அந்த சித்தியை நம்பி இவானை அவ கூட வெளிய அனுப்புறான்” என்று கவலையாக கரீமா சொன்னாள்.

“அக்கா! ஆர்யன் வெளியூர் போறான். ஆனா என் கூட தானே?” என சல்மா கேட்க கரீமா புரியாது பார்த்தாள். “நான் சொன்னேன்ல, ஆர்யனை அடைய வேற வழியும் இருக்கு, இவான் மட்டும் இல்லன்னு” சல்மா பெருமையாக சொல்ல புரிந்துக்கொண்ட கரீமா “உன் அதிர்ஷ்டம், அந்த மொழிபெயர்ப்பாளர் வரல, இல்லனா நீ எப்படி இப்போ போக முடியும்?” என்று கேட்டாள்.

“அக்கா! உனக்கு புரியலல? அந்த மொழிபெயர்ப்பாளரை நான் தான் தடுத்தேன்” என பூடகமாக சிரிக்க “ஓ.. அப்படியா?” என கரீமாவும் தங்கையின் சாமர்த்தியம் கண்டு சிரித்தவள் “இருந்தாலும் கவனமா இரு. உன் மாத்திரை எடுத்துகிட்டியா? மனசை அமைதியா வச்சிக்கோ” என்று அறிவுறித்தினாள். “நான் பார்த்துக்கறேன், அக்கா. நீ கவலைப்படாதே!” என்று சொல்லி சல்மா விடைபெற்றாள்.

ரஷீத் முன் இருக்கையில் இருக்க, சல்மா ஆர்யனோடு பின்னிருக்கையில் அமர அவர்கள் பயணம் ஆரம்பமானது. காரில் மௌனமே நிலவ, சல்மா பேச்சை துவங்கினாள். “இந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கும் நல்லதுதான். ரொம்ப நாளா நானும் பயிற்சி செய்யவே இல்ல. என்னோட முதல் வருஷத்துலயே நான் ஸ்பானிஷ் கத்துகிட்டேன். என் ரூம்மேட் கூட ஸ்பானிய பொண்ணு தான்…” என்று இன்னும் பேசிக்கொண்டே வந்தாள்.

அவள் பேச்சை சிறிது நேரம் கேட்ட ரஷீத் பின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்திருந்தான். ஆர்யன் போனில் பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான். ருஹானாவும் இவானும் இருக்கும் அழகான படங்கள் நிறைய இருந்தன. “ஏன் பார்ட்டி போட்டோஸ் எனக்கு வந்திருக்கு, ரஷீத்?” என ஆர்யன் கேட்டான்.

“உங்களுக்கா அனுப்பிட்டாங்க? நான் ஜாஃபருக்கு தானே அனுப்ப சொன்னேன். இதோ, என்னன்னு பார்க்கறேன்” என ரஷீத் சொல்ல “விடு, அதான் வந்துருச்சே!” என சொல்லியபடி அவனும் இவானும் இருக்கும் படங்களை பார்த்திருந்தான். ருஹானா தனியாக இருக்கும் படத்தில் நிறுத்தி அதை நிதானமாக ஆர்யன் பார்க்க “நீங்க ஸ்பானியர்களோடு வேலை செய்யணும்னா நான் உங்களுக்கு ஸ்பானிஷ் சொல்லி தரேன்” என சல்மா சொன்னதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

போனை எடுத்து காதில் வைக்க சல்மா ஏமாற்றமாக திரும்பிக்கொண்டாள். “ஹலோ! இவானும், அவன் சித்தியும் கிளம்பிட்டாங்களா? அவங்களை கவனமா பாதுகாக்கணும், ஜாக்கிரதை” என்று சொல்லி ஆர்யன் போனை அடைத்தான்.

————-

ருஹானாவும் இவானும் பூங்கா செல்ல கிளம்பி வர கரீமா அவர்களை மாடிப்படிகளின் முடிவில் எதிர்கொண்டாள். “அடடே! இவான் டியர் அழகா கிளம்பிட்டானே!” என்று கரீமா சொல்ல இருவரும் புன்சிரிப்புடன் நின்றனர். அப்போது ருஹானாவின் போனில் மிஷால் அழைத்தான்.

“ருஹானா! விடுமுறை நாள்ல உன்னை தொல்லை செய்றதுக்கு என்னை மன்னிச்சிடு. ஒரு பெரிய ஆர்டர் வந்துருக்கு. அவசரமா தயார் செய்து கொடுக்கணும். நீ இங்க வரமுடியுமா?”

“அப்படியா! இரு, மிஷால். நான் உன்னை கூப்பிடுறேன்”

இவானிடம் குனிந்தவள் “வேலை செய்ற இடத்துல என்னை வர சொல்றாங்க, செல்லம். நான் முடியாதுன்னு சொல்ல போறேன்” என்றாள்.

“சித்தி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்”

“ஹோட்டலுக்கா? பார்க் போக வேண்டாமா, அன்பே?”

தலையாட்டிய இவான் “பார்க் இன்னொரு நாள் போகலாம், சித்தி” என்றான்.

“ஏன் செல்லம்?”

“நீங்க வேலைக்கு போகும்போது உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீங்க அங்க எப்படி இருப்பீங்க, என்ன செய்வீங்கன்னு எனக்கு தெரியாதுல. அதனால அதையே யோசித்திட்டு இருப்பேன். இப்போ எனக்கு அந்த இடத்தை பார்க்க ஆசை, சித்தி”

இவான் சொன்னதும் அவன் அன்பின் ஆசையில் ருஹானா நெகிழ்ந்து போனாள். “யா அல்லாஹ்! உன்னால கற்பனை செஞ்சி பார்க்க முடியலயா, என்னுயிரே!” என சிரிப்புடன் கேட்க, இவானின் மூன்று முறை வேக தலையாட்டல் வந்தது.

கரீமாக்கு ‘இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதே’ என தோன்றியது. “சித்தி வேலை செய்ற இடம் பார்க்க உனக்கு அத்தனை ஆசையா?” என கரீமா கேட்க இவான் ‘ஆமாம்’ என்றான்.

“அவனுக்கு ஏமாற்றம் தராதே, ருஹானா”

“ஆனா.. எப்படி..?”

“நீ ஆர்யனை நினைச்சி தயங்குற…. ஆனா உன்னோட செக்யூரிட்டி இருப்பாங்க. நீங்க பத்திரமாத்தான் இருக்க போறீங்க. அது ஹோட்டலா இருந்தா என்ன, பூங்காவா இருந்தா என்ன?”

“நீங்க சொல்றது சரிதான்…. ஆனா… ?

“கவலைப்படாதே, டியர். ஆர்யன் பத்தி பயப்படாதே. அவனுக்கு இவான் பாதுகாப்பு தான் முக்கியம். அதுவும் இல்லாம இது இவானுக்கும் ரொம்ப தேவை. நாலு சுவத்துக்குள்ளேயே இருக்கான். அவன் பெரிய ஜெயில்ல இருக்கான்னு சில சமயம் எனக்கு தோணும். ஆர்யன் நாளைக்கு தான் வருவான். நீ நிதானமா உன் வேலையை முடிச்சிட்டு வா. இவானுக்கும் புது அனுபவம். வேற மக்களையும் அவன் சந்திப்பான்” என பலவாறாக ருஹானாவின் மனதை கரைத்தாள்.

“நிச்சயமா தான் சொல்றீங்களா, கரீமா மேம்?”

“கண்டிப்பா.. இப்போ ரெண்டு பேரும் கிளம்புங்க”

“நான் வேலையை முடிச்சதும் வந்துடுறேன்”

கரீமா சந்தோசமாக தலையாட்ட, இவானுக்கும் சந்தோசம். “நாம போறோமா?” என கேட்டான். சித்தியும் ஆமோதித்தாள்.

ருஹானா கரீமாக்கு நன்றி சொல்ல அவள் பத்திரம் சொல்லி அனுப்பினாள். இருவரும் சென்றதும் “போ.. போ.. இவானும் மிஷாலும் நல்லா பழகட்டும். அப்போ தான் அவங்க எதிர்காலத்துக்கு நல்லது” என்று சிரித்தாள்.

——

Advertisement