தேநீர் அருந்தியபடியே தோழிக்கு காத்திருக்கும் நடிப்பில் மிஷாலுடன் பேசிக்கொண்டிருந்த கரீமா “இந்த இடமும், சூழலும் நல்லா இருக்கு. அதனால தான் ருஹானா இங்க வர விரும்புறா!” என அவனை குஷிப்படுத்த, புன்னகை செய்த மிஷால் “இந்த நேரம் அவ இங்க வந்திருக்கணுமே! இன்னும் காணோமே! அங்க எல்லாம் சரியாத் தானே இருக்கு?” என கேட்டான்.
அவன் கேட்ட கேள்விக்கு ‘இருக்கு, இல்ல’ என நேர்பதில் சொல்லாத கரீமா “அவ தான் எதையும் வெளிப்படையா பேச மாட்டாளே! ஆனா உன் விசயத்தில தனி தான். இங்க வேலை செய்யப்போறேன்னு அவ என்கிட்டே வந்து சொல்லும்போது உற்சாகமா இருந்தா. அவ கண்ணு அப்படியே மின்னுச்சி” என அவன் உடல்மொழியை கவனித்துக்கொண்டே சொன்னாள்.
மிஷால் சந்தோசமாக சிரிக்க, மேலும் அவனை பொய்யான பாதைக்கு கரீமா தூண்டிவிட்டாள் “உன் குணம் பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டதும் அவ சந்தோசத்துக்கான காரணத்தை நான் புரிஞ்சிக்கிட்டேன். ருஹானா அதிர்ஷ்டசாலி. ஒரு பொண்ணுக்கு எப்பவும் எங்கேயும் ஆதரவா இருக்கிறவன் கிடைக்கிறது பாக்கியம்தான்”
வெட்க புன்னகையுடன் மிஷால் கரீமாவின் வார்த்தைக்கு அர்த்தம் யோசிக்க, அவன் தெளியும்முன் கிளம்பிட நினைத்த கரீமா போனை பார்த்தவள் “என் தோழி இங்க வரலன்னு செய்தி அனுப்பி இருக்கா. நாங்க இன்னொரு நாள் வரோம்” என்று சொல்லி சென்றுவிட்டாள்.
———
ருஹானாவை தற்செயலாக சாலையில் சந்தித்த பழைய வீட்டு உரிமையாளரின் மனைவி ‘தான் தடுத்தும் கேளாமல் தன் கணவர் வாடகை நிலுவைக்காக ருஹானா மீது புகார் அளிக்க இருப்பதாக’ வருத்தத்துடன் தெரிவித்தார். அவருக்கு நன்றி சொல்லி நடந்த ருஹானா, என்ன செய்வது என யோசித்தபடியே வேகமாக மிஷால் உணவகத்திற்குள் நுழைந்தாள்.
கண்ணாடி முன் நின்று சிகை அலங்காரத்தை சரி செய்துக்கொண்டிருந்த மிஷால் ருஹானாவை பார்த்ததும் மகிழ்வாக வரவேற்றான். அவனை கவனிக்காமல் யோசித்தபடியே ருஹானா உள்ளே செல்ல அவளை தடுத்து நிறுத்தினான்.
“என்ன ஆச்சு உனக்கு? என்ன நடந்தது? அந்த ஆள் தானே? உன்னை துன்புறுத்தினானா?” என்று அவன் கேள்விகளை அடுக்க, திடுக்கிட்ட ருஹானா “இல்லல்ல” என்று வேகமாக மறுத்தவள் “எனக்கு லேசா சோர்வா இருக்கு. அவ்வளவு தான்” என்று சொல்லி சமையலறைக்கு போனாள். மிஷால் முகத்தில் ஆர்யன் மேல் கோபம் கொப்பளிக்க, அவளை நம்பாமல் பார்த்திருந்தான்.
——-
அர்ஸ்லான் மாளிகை வரவேற்பு அறையில் ஏகப்பட்ட கோப்புகளை பிரித்து வைத்துக்கொண்டு ஆர்யனும், ரஷீத்தும் ஆய்வு செய்துக் கொண்டிருக்க, ரஷீத் ஆர்யனிடம் கேட்டான்.
“ஆர்யன்! ஸ்பானியர்களோடு வேலை செய்றதுல உறுதியா இருக்கீங்களா? இது நமக்கு ஆபத்தா முடியலாம். யாசின்ஸ் கோட்டை அது. அவங்க நம்ம மேல விரோதம் காட்டுவாங்க”
ரஷீத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாமல் “என் முடிவு உறுதியானது” என்று ஆர்யன் திட்டவட்டமாக சொன்னான்.
அவன் அப்படித்தான் முடிவெடுப்பான் என தெரிந்திருந்த ரஷீத் “சரி, நீங்க சொன்னா நான் அவங்களோட சந்திப்புக்கு ஏற்பாடு செய்றேன்” என்றான்.
அப்போது அங்கே முழு அலங்காரத்துடன் சல்மா காபி கோப்பைகளுடன் வந்தவள் “நஸ்ரியா வெளியே போயிருக்கா. அதான் நான் காபி கொண்டு வந்தேன்” என்று மயக்கும் புன்சிரிப்புடன் சொன்னாள். கரீமாவிடம் ‘என் வழியில் நான் பார்த்துக்கறேன்’ என்று சல்மா சொன்னது இதுதானா?
இருவரும் பதில் சொல்லாமல் கோப்புகளை பார்க்க, கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு நளினமாக ஆர்யன் அருகில் சென்று கப்பை வைத்தாள். ஆர்யன் பார்வை திரும்பவே இல்லை. ரஷீத் மட்டும் நன்றி கூறினான்.
“பிஸியா வேலை பார்க்கிறீங்களா?” என அவள் கேட்க மறுமொழி இல்லை. “நன்னாள்” என்று சொல்லி சல்மா விடைபெற, இப்போது ஆர்யன் நன்றி சொன்னான். சல்மா சீக்கிரமாக கிளம்புவதற்காக நன்றியுரைத்தான் போலும்.
ஏமாற்றமடைந்த சல்மா சமையலறை நோக்கி நடக்க, அப்போது வாய் திறந்த ஆர்யன் “ஸ்பானிஷ் சரியா தெரிஞ்ச ஒரு மொழிபெயற்பாளரை நாளைக்குள்ள தேடி வை, ரஷீத்!” என சொல்வதை கேட்டவாறே ட்ரேயுடன் உள்ளே போனாள்.
கூகுள் ரஷீத் தலையாட்ட அப்போது அவன் போன் அடிக்க அதை எடுத்து பேசி முடித்தான். “இவான் சித்தி ஏன் வேலைக்கு போறாங்கன்னு தெரிஞ்சிடுச்சி” என ரஷீத் சொல்ல, குனிந்து எழுதிக்கொண்டு இருந்த தாளை அப்படியே வைத்த ஆர்யன், ரஷீத் பக்கம் திரும்பினான்.
“வாடகை பாக்கி கட்டலன்னு அவங்க மேல புகார் வந்துருக்கு” என ரஷீத் சொல்லவும் ஆர்யன் இளகி போனான். உடல்நிலை பாதிப்படைந்த சமயத்திலும் ஓயாது உழைக்கும் அவள் மேல் இரக்கம் கொண்டான். நேர்மையான அவளை கண்டபடி பேசிய தன்னை நொந்துக்கொண்டான். ரஷீத் அருகில் இருக்கவும் சுதாரித்த ஆர்யன் விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்தான்.
——–
இவானை தூங்கவைத்துவிட்டு அவன் அறையிலிருந்து வெளியே வந்த ருஹானாவிடம் ஜாஃபர் “மேம்! உங்களுக்காக ஆர்யன் சார் ஆபிஸ்ரூம்ல காத்திருக்கார். உங்களை வர சொன்னார்” என்று சொல்ல அவள் ஏன் என்று கேட்டாள். தனக்கு தெரியாது என ஜாஃபர் சொல்லிவிட்டு செல்ல, ருஹானா தயக்கத்துடன் ஆர்யன் அறைக்கு வந்தாள்.
“என்னை கூப்பிட்டீங்களாமே!” என அவள் கேட்க, விறைப்பாகவே அவள் அருகே வந்த ஆர்யன் அவளிடம் ஒரு கவரை கொடுத்தான். “என்னது இது?” அவள் கேட்க “பிரிச்சி பாரு!” உத்தரவாக பதில் வந்தது.
பிரித்து படித்த ருஹானா திகைக்க, “நீ இனி வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்ல. உன் கடன்லாம் கட்டியாச்சி” அவன் மிதப்பாக சொல்ல அவள் ஆத்திரமாக பார்த்தாள். அவள் கோபத்திற்கு காரணம் புரியாமல் அவன் விழித்தான்.
“அது என்னோட கடன். என்னை கேட்காம நீங்க எப்படி அதை அடைக்கலாம்? இப்படி செய்றது எனக்கு உதவின்னு நினைச்சீங்களா? என் அனுமதி வேணாமா? நான் இதை ஏத்துக்குவேன்னு நினைக்கிறீங்களா?” பொரிந்து தள்ளினாள்.
“உன் கடன் பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்ல. நான் இதை இவானுக்காக செய்தேன். அவனுக்காக நான் எதுவும் செய்வேன்” அவள் தீவிர மறுப்பை பார்த்து இவான் மந்திரம் சொன்னவன் அடுத்த குண்டை போட்டான். “இனி நீ வேலைக்கு போக வேண்டியது இல்ல. மாளிகைலயே இருந்து இவானை பார்த்துக்கறது தான் உன் வேலை”
அவளை முறைத்தபடி நின்றவன் அவள் பேச வாயெடுக்கவும், திரும்பி படுக்கையறைக்கு செல்ல, ருஹானா அவன் பின்னால் போக அவள் முகத்தில் கதவை அடைத்தான். இயலாமையோடு தன் அறைக்கு திரும்பியவள் புலம்ப ஆரம்பித்தாள். “என் கடனை இவர் எப்படி கட்டலாம்? இவான் என்னோட வேலையா? அவன் என் உயிர். என் அக்காவோட பொக்கிஷம்”
சிறிது நேர யோசனைக்கு பின் எழுந்து பணப்பையை திறந்து பார்த்தவள் அதிலிருந்த சொற்ப பணத்தை கையில் எடுத்தாள். பையை தலைகீழாக கொட்டி பார்த்தாள். வேறு ஏதும் மொத்தமாக வந்து விழவில்லை. அதில் அவ்வளவே தேறியது. அதை எடுத்துக்கொண்டு விடுவிடுவென ஆர்யன் அறைக்கு சென்றாள்.
இரவு குளியலை முடித்த ஆர்யன் சட்டை மேல் துண்டை போட்டுக்கொண்டு வந்து நின்றவன், நீர் வடியும் முடியை ஒரு ஓரமாக துடைத்துக்கொண்டே தன் கணினியில் குனிந்து பங்குச்சந்தை நிலவரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். கதவு தட்டாமல் வேகமாக உள்ளே நுழைந்த ருஹானா அவனை பார்த்ததும் தயங்கி வேறுபுறம் பார்வையை வைத்து படியிறங்கினாள்.
குனிந்தவாறே அவளை திரும்பி பார்த்தவன் “என்ன வேணும் உனக்கு?” என்று முறைப்பாக கேட்க, அவளும் வீராப்பாக அவன் முன்னே மேசையில் பணத்தை வைத்தாள். “என்ன இது?” முறைப்போடு இப்போது குழப்பமும் அவன் கண்களில். “சின்ன தொகை தான். ஆனா என் கடனோட முதல் பகுதியா இதை நீங்க எடுத்துக்கங்க” என்று அவளும் முறைப்புடன் சொன்னாள்.
நிமிர்ந்து மூச்சை இழுத்துவிட்ட ஆர்யன் “உன் கடன் கட்டியாச்சி. அதோட அது முடிஞ்சது. எனக்கோ, வேற யாருக்கோ நீ இப்போ கடனாளி இல்ல” என்று சொன்னான். “அது என் கடன். அது முடிஞ்சதா இல்லயான்னு நான் தான் முடிவு செய்யணும். சீக்கிரமே மீதி பணத்தையும் நான் உங்களுக்கு கொடுத்துருவேன்” என உதடை மடித்து சொன்னவள் திரும்பி நடந்தாள்.
வேகமாக அவளுக்கு முன்னே வந்த ஆர்யன் “நீ என்னை சரியா புரிஞ்சிக்கல. உனக்கு இனி கடன் இல்லன்னு நான் சொன்னேன்” என்று சொல்ல “எனக்கு நல்லா புரிஞ்சது. உங்களுக்கு தான் புரியல” என்று தலையை உயர்த்தி சொன்னாள். “அப்போ சொல்லு, நான் கேட்கறேன்” முகம் சுருக்கி அவளிடம் கேட்டான்.
புருவத்தை உயரே தூக்கியவள் “நான் உங்ககிட்ட வேலை செய்யற ஊழியர் இல்ல. நான் இங்க இருக்குறது இவானுக்காக. நான் அவன் நானியும் இல்ல. அவனோட சித்தி. என் அக்கா என்கிட்டே ஒப்படைச்ச பொக்கிஷம் இவான். நீங்க எப்படி இவானையும் பணத்தையும் ஒரே வாக்கியத்துல சொல்வீங்க? பணத்துக்காக நான் இங்க இருக்கல. இவானுக்காக மட்டும் தான் நான் இங்க இருக்கேன்” என்று சொல்ல ஆர்யன் அவளை கண்கொட்டாமல் பார்த்தான்.
தலையாட்டியவள் அவன் யோசனையான முகத்தை பார்த்துக்கொண்டே “இவான் மேல நான் வச்சிருக்க அன்புக்கு இன்னொரு முறை விலை பேசாதீங்க. அது பணம் சம்மந்தப்பட்டது இல்ல. இதான் நான் சொல்ல வந்தது. இப்போ நீங்க எனக்கு வழி விட்டீங்கனா…..” என்று இழுக்க ஆர்யன் தலை குனிந்து ஒதுங்கி நின்றான்.
அவள் செல்லும்போது எப்போதும் பார்ப்பவன், இன்று அவள் கதவடைத்து சென்றபின் அவள் சென்ற வழியையே பார்த்து நின்றான். அவள் வார்தைகள் அவனை தாக்க ஆழ்ந்த சுவாசம் எடுத்தான்.