Advertisement

அலுவலக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த ஆர்யன் அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதால் வேறு பேனாவை எட்டி எடுக்கும்போது அங்கே இருந்த மருந்து புட்டியை பார்த்தான். ருஹானா அவனுக்கு கொடுத்த மாத்திரைகள் இருந்த புட்டி அது. அதை கையில் எடுத்தவனுக்கு அவள் அவனுக்கு சிகிச்சை செய்தது நினைவில் வந்தது.

உடனே இப்போது ‘உன் எல்லையை அறிந்து நடந்து கொள்’ என அவன் திட்டியதும், அவள் கலங்கியதும் ஞாபகம் வந்தது. பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுந்தவன் நியாயமே இல்லாத தன் செய்கையை நினைத்து வருத்தப்படும் நேரம் அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. புட்டியை தன் பின்னால் மறைத்துக்கொண்டு நிற்க, ருஹானா உள்ளே வந்தாள். அவள் கையில் ரோஜா நிற உடையுடன் திறந்த பெட்டி இருந்தது.

கல்லென இருந்த முகத்துடன் அவன் அருகே வந்து “இந்த உடையை திருப்பிக் கொடுக்க வந்தேன்” அவன் முகம் சுருக்கி பார்க்க, அதை மேசையில் வைத்தாள். சற்று நிதானித்தவள் “பார்ட்டில எனக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்றாள்.

ஆர்யன் அவளை கூர்ந்து கவனிக்க “உங்க பணத்தால எதுவும் செய்யமுடியும்ன்னு நீங்க நினைக்கிறீங்க. எல்லாரையும் அடக்கி ஆளலாம்ன்னு நினைக்கிறீங்க” இல்லை என்பது போல் தலையசைத்தவள் “ஆனா உங்களுக்கு இது தெரியணும். எல்லா காயத்தையும் பணத்தால ஆற்ற முடியாது” உணர்ச்சியற்ற முகம் மாறி கண்கள் கலங்குவது போல் இருக்க திரும்பி நடந்துவிட்டாள்.

அவள் செல்வதையே பார்த்து நின்றிருந்த ஆர்யன், அவள் சென்ற பின்னும் சிந்தித்துக்கொண்டே நின்றான். அவன் ஒரு வார்த்தை பேச முடியாமல் நின்றதும், அவள் புண்பட்ட மனதை மறைத்து அவனை விமர்சித்து சென்றதும் அவனை பலவாறாக யோசிக்க வைத்தது.

———

காரை செலுத்திக்கொண்டிருந்த ஆர்யன் சிக்னலில் காரை நிறுத்த, சோர்வுடன் ருஹானா முன்னால் நடந்து செல்வதை பார்த்தான். “உடம்பு சரியில்லாத போதும் நீ அந்த சூப்மேன் இடத்துக்கு போறேல! உன் ஆரோக்கியம் பத்தி நான் இனி கவலைப்பட மாட்டேன்” என்றவன் பச்சை விளக்கு எரிந்ததும் காரை கிளப்பி அவளை தாண்டிக்கொண்டு சென்றான்.

பின்புறம் பார்க்கும் கண்ணாடியில், ருஹானா நடக்க முடியாமல் மரத்தை பிடித்துக்கொண்டு நிற்பதை பார்த்தான். அவன் கார் தானாக பின்னால் சென்றது. சர்ரென்று தன் அருகே வந்த காரை பார்த்த ருஹானா, அவனை ஏறிட்டு பார்க்க “காரில் ஏறு!” என்றான். தலையை திருப்பிக்கொண்டவள் நடக்க ஆரம்பித்தாள்.

அவள் நடை வேகத்திற்கு காரை உருட்டிக்கொண்டே வந்தவன் “நான் சொல்றதை கேளு” என்றான். அவள் அப்போதும் நிற்கவில்லை. “இவானுக்காக தான் சொல்றேன்” என்று இவான் மந்திரத்தை போட்டான், அவனுக்கும் சேர்த்து. ‘இவானுக்காக தான் இவளை கூட்டிட்டு போறேன்’ என்று.

அவள் நிற்கவும் “கார்ல ஏறு. நீ எங்க போகணுமோ அங்க விடறேன்” என்று கடுமையான முகத்துடனே கூப்பிட்டான். யோசித்தவள் ஒரு பெருமூச்சை விட்டு காரில் ஏறினாள்.

———

“ஆர்யன் இப்படி யாருக்கும் பரிசு கொடுக்கும் ஆளே கிடையாது. எப்படி இப்படி மாறிப் போனான்?” என கரீமா புலம்பிக் கொண்டிருந்தாள். “அக்கா! உன் திட்டம்லாம் வீணா தான் போகுது. என்னை ஆர்யன் கூட பார்ட்டி பண்ண சொன்னே. ஆனா நேத்து ராத்திரி ஆர்யன் அவ கூட தான் ஆஸ்பிடல்ல இருந்தான். நடுராத்திரில ரெண்டுபேரும் வீட்டுக்கு வந்துருக்காங்க”

“நல்லவேளை, ரத்த பரிசோதனை செய்யாம அவ இவானை பார்க்கணும்னு சீக்கிரம் வந்துட்டா. இல்லனா என் மாத்திரை ரத்தத்துல கலந்தது தெரிஞ்சிருக்கும்”

“அதான் அக்கா, உன் ட்ரிக் எதும் சரியில்ல. இனி என்னை என்போக்குல விடு. நான் பார்த்துக்கறேன்”

“அந்த சாதாரண பொண்ணை என்னால அனுப்ப முடியாதா?”

“உன்னால முடியலயே! இந்த மாளிகையோட லேடி நீ. உனக்கே அவ தண்ணி காட்றா. அவளை பாராட்டத்தான் செய்யணும்”

“வாயை மூடு, சல்மா. எனக்கு இங்க எல்லா அதிகாரமும் இருக்கு. நான் நினைச்சதை நடத்திக் காட்டுவேன். மிஷால் இருக்கான். இவளை காதலிக்கிறான். அவனை வச்சி இவளை இங்க இருந்து விரட்டுவேன்”

“என்ன அக்கா நீ! இவ்வளவு பெரிய பணக்காரனை விட்டுட்டு அந்த ஹோட்டல்காரன் கூட இவ போவாளா?”

“ஆர்யன் கோபத்தை தூண்டுவேன். தஸ்லீமை அவனுக்கு நினைவுபடுத்தினாலே போதும். அவன் மூர்க்கத்தனத்தை பார்த்து இவ பயந்து ஓடிடுவா”

காலையில் ருஹானாவை கத்தியவன் அவளை காரில் ஏற்றிக்கொண்டு இப்போது சையத் உணவகத்தில் இருக்கிறான் என்று இவர்களுக்கு தெரிந்தால்?

“எனக்கு நேரமாகுது. என்னை ஹோட்டல்ல விடுறேன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க” என தன் முன்னால் அமர்ந்திருந்த ஆர்யனிடம் ருஹானா கோபப்பட, “நீ சாப்பிட்ட பிறகு போகலாம்” என அவள் கோப முகத்தை ரசித்தவாறே அதிமென்மையாக ஆர்யன் கூறினான்.

எதிரே இருந்த அவனை பார்க்காமல் சுற்றியிருந்த மரங்களை பார்த்தபடி இருந்தவள் மேல் ஆர்யன் பார்வையை பதித்திருக்க, சையத் உணவுத்தட்டு கொண்டுவந்து சிரிப்புடன் ருஹானா முன் வைத்தார்.

“எனக்கு பசியே இல்ல. உங்களை தொந்தரவு செய்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க”

“உனக்கு பசியே இல்லனாலும் என்னோட மட்டன் கோஃப்தா உன்னை சாப்பிட இழுக்குமே!”

“உங்ககிட்டே என்னால மறுக்க முடியல. நீங்க என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க”  நன்றியுடன் அவள் சொன்னாள்

“உன் உயிர் அல்லாஹ் உனக்கு கொடுத்த கொடை. அதை காப்பாத்தற பொறுப்பை ஆர்யன் எனக்கு கொடுத்தான்” சையத் சொல்ல ருஹானா ஆர்யனை பார்த்தாள்.

“அவனோட மதிப்புமிக்க கொடையை நான் பாதுகாத்தேன்” என ஆர்யனை பார்த்து சொன்ன சையத் “இப்போ உன்னை நீயே பார்த்துக்கோ. இதை சாப்பிட்டு உன்னை வலிமையாக்கு. சரியா?” என்று சொல்ல ருஹானா தலையாட்டினாள்.

சையத் புன்னகையுடன் செல்ல, ருஹானா அந்த கோஃப்தாவை முள்கரண்டியால் பிடித்துக்கொண்டு கத்தியால் வெட்ட முயன்றாள். இருமுறை முயன்றும் அவளால் முடியவில்லை.

அவள் முகத்தையே பார்த்திருந்த ஆர்யன் அதில் ஏற்பட்ட மாறுதலில் அவள் சிரமத்தை உணர்ந்தான். அவன் வெட்டி தருவதற்காக கை நீட்ட ருஹானா சரேலென தன் இரு கைகளையும் பின்னால் இழுத்துக்கொண்டாள்.

அவன் முறைக்க அதற்கெல்லாம் பயந்தவளா அவள்? திரும்ப அவளே வெட்ட முயற்சிக்க அது சிறிது கூட அசையவில்லை. கத்தியையும், கரண்டியையும் தட்டில் வைத்தவள் ஆகாயத்தை பார்த்தாள்.

‘வந்தியா வழிக்கு?’ என்று அவளை பார்த்தவன் கோஃப்தாவை சிறிய துண்டுகளாக, இவானுக்கு ருஹானா செய்வது போல வெட்டி வைத்தான். ஒரு துண்டை முள்கரண்டியில் குத்தி அப்படியே தட்டில் வைத்து நிமிர்ந்து அவளை பார்த்தான், ‘இப்போ சாப்பிடு’ என்று சொல்வது போல்.

அவள் அந்த துண்டு கோஃப்தாவை எடுத்து வாயில் வைக்கவும் தான் அவன் மனம் நிம்மதி அடைந்தது. காரத்தில் அவள் முகம் சுருங்க அவளுக்கும் முன்பாக அவன் கை தண்ணீரை தொட்டது. அவளும் எடுக்க வர தண்ணீர் கப்பை பிடித்திருந்த அவன் கையை தான் அவள் பிடிக்க நேர்ந்தது. உடனே அவள் கையை விலக்கிக்கொள்ள கப்பை எடுத்து அவள் பக்கம் வைத்தான்.

அவனுக்கு பணிசெய்ய அத்தனை பேர் இருக்க, அவன் அவளுக்கு பார்த்து பார்த்து பணிவிடை செய்துக்கொண்டிருந்தான். அவள் தண்ணீர் குடித்ததும் ‘இதை சாப்பிடு’ என அவன் கண்ணால் காட்ட, அவன் சொல்பேச்சை கேட்காத ருஹானா அவன் கண்பேச்சை மதித்து சாப்பிட்டாள்.

‘எல்லாத்தையும் சாப்பிட்டு முடி’ என அவன் மீண்டும் கண்ணால் கூற, அவனை பார்த்துக்கொண்டே ஒன்றும் மீதம் வைக்காமல் அவள் சாப்பிட்டு முடித்தாள்.

சையத் அடுப்பில் தணலை விசிறி விட்டுக்கொண்டே இவர்களை அவ்வப்போது பார்த்து புன்னகை செய்தார். ருஹானா ஆர்யனை பார்க்காமல் அந்த பக்கம் இந்த பக்கம் பார்க்க, அவன் டீ குடித்தபடி அவள் அசைவுகளையே பார்த்திருந்தான்.

ருஹானா கடிகாரத்தை பார்த்தபடி “எனக்கு லேட்டாகுது. இப்பவாது போகலாமா?” என கேட்டாள்.

“நீ டீ குடி, கிளம்பலாம்” சூப்மேன் இடம் போக எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு இழுத்து அடிக்கிறானோ?

“எனக்கு வேணாம். நன்றி” என்று சொல்லி தலையை திருப்பிக்கொண்டாள்

“நாம இப்போ ஆஸ்பிட்டல் போறோம்! உனக்கு ரத்த பரிசோதனை செய்யணும்”  காரோட்டும்போது சிக்னலில் ‘இவள் உடல்நிலை பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்று சொன்னது இவன்தானே?

வேகமாக கைப்பையை எடுத்த ருஹானா “அதெல்லாம் தேவையில்ல. நான் நல்லா இருக்கேன். நான் வேலைக்கு போகணும்” என்றபடி பணத்தை மேசை மேல் வைத்தாள். அவள் கை மீது கை வைத்து தடுத்தவனை சட்டை செய்யாமல் கைப்பையை மூடுவதில் அவள் கவனமாய் இருக்க, அவள் போன் ஒலித்தது.

அவள் சாப்பிட்ட உணவுக்கு பணம் வைத்தபோதே புகைய ஆரம்பித்திருந்த ஆர்யன் “சொல்லு, மிஷால்!” என ருஹானா சொன்னதை கேட்டதும் அனல் வீச, இதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்தது. “நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று சொல்லி போனை அடைத்து கைப்பையில் போட்டவள், எழுந்து தோளில் பையை மாட்டினாள்.

“இந்த நிலைல நீ எங்கயும் போக முடியாது” என்றபடி ஆர்யனும் எழுந்தான்.

“நான் நல்லாத்தானே இருக்கேன்?”

“நீ இவான் கூட இருக்கத்தானே ஆசைப்பட்டே? இப்போ ஏன் வேலைக்கு போக குதிக்கிறே?”

ருஹானா சையத்தை பார்க்க அவர் குனிந்து கறியை கொத்திக்கொண்டு இருந்தார். பின் ஆர்யனை நேருக்கு நேராக பார்த்து “வாழ்கையில எல்லாருக்கும் ஒரு கஷ்டம் இருக்கும். அதை போக்க சிறந்த வழி வேலை செய்றது தான். நான் அதுக்கு தான் முயற்சி செய்றேன். இது உங்களுக்கு புரியும்ன்னு நான் நினைக்கல” என ஏளனமாக சொன்னாள்.

அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டுருந்தவன் அவளது கடைசி வார்த்தையில் கோபத்தின் உச்சிக்கே சென்றான். ‘எனக்கு தெரியாதுன்னு நீ எப்படி சொல்லலாம்?’ என அவன் பதில் சொல்ல வருவதற்குள் ருஹானா சத்தமாக சையத்திடம் பேச தொடங்கினாள்.

“மிக்க நன்றி. மட்டன் கோஃப்தா அருமையா இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்து உங்க கூட பேச எனக்கு ஆசையாத்தான் இருக்கு. ஆனா நான் வேலைக்கு போகணும்” என்று அவர் மனம் குளிரும்படி சொல்ல “நன்றி மகளே! உனக்கு இனிய நாளாக்கட்டும்” என அவரும் புன்னகைத்தார்.

திரும்பி ஆர்யனை ஒரு மிடுக்கான பார்வை பார்த்தவள் கம்பீரமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் வைத்த பணத்தையும், குடிக்காமல் வைத்த தேநீரையும் கடுப்பாக பார்த்த ஆர்யன் போனை எடுத்து குறுஞ்செய்தி அனுப்பினான், அவனுடைய தனிப்பட்ட கூகுள் ரஷீத்துக்கு.

‘இவான் சித்தி ஏன் வேலைக்கு போக பிடிவாதம் பிடிக்கிறாங்றதை கண்டுபிடி, ரஷீத்!’

———

Advertisement