Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                              அத்தியாயம் – 23

ருஹானா மயக்கத்திலிருந்து விழிக்கும்போதும் இவான் நினைவாகவே இருக்க, ஆர்யனும் கனவு தந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு அவளை அணுகினான். இரண்டாவது முறையும் இவான் என அழைத்தவள் “எனக்கு என்னாச்சு? எங்க இருக்கேன்?” என கேட்டாள். “நீ மயங்கிட்டே, நாம ஆஸ்பிட்டல்ல இருக்கோம்” என்று ஆர்யன் பதில் தந்தான்.

“இவான்! இவான்!” என சொல்லி ருஹானா எழுந்துக் கொள்ள முயற்சிக்க, அவள் கையை பற்றி “எழாதே” என தடுத்தான். அவன் பிடித்த இடத்தை ருஹானா பார்க்கவும் சங்கடமடைந்த ஆர்யன் அவள் கையை விட்டான்.

“நீ இப்போ இருக்குற நிலமைல இவான்ட்ட போக முடியாது”

“நான் நல்லா தான் இருக்கேன்”

“இப்போ முடியாதுன்னு சொன்னேன்”

கையில் குத்தியிருந்த ட்ரிப்ஸ் ஊசியை பிய்த்துப் போட்டவளை ஆர்யன் திகைத்து பார்த்திருக்க “என்னால இங்க இருக்க முடியாது. இவான் என்னை தேடுவான். ப்ளீஸ்!“ என்றாள்.

ஆர்யன் அசந்து பார்க்க, “இவானின் பெரிய பயமே அவன் அம்மாவை போல என்னையும் இழந்திடுவானோன்னு தான். அவன் என்னை பார்க்கணும்“ என்று ருஹானா கெஞ்ச அவன் யோசித்தான். “தயவுசெய்து நாம வீட்டுக்கு போகலாம். எனக்கு ஒன்னுமில்ல” என்று அவள் வற்புறுத்த, அவளை அழைத்துக்கொண்டு மாளிகை வந்தான்.

ருஹானா உடை மாற்றி இவானை பார்க்க சென்றபோது, விழித்திருந்த இவான் சாராவிடம் “சித்தி எப்போ வருவாங்க? அம்மா போல வராம போய்டுவாங்களா?” என்று கேட்டான். “உன் சித்தி திடமானவங்க, கண்டிப்பா வந்துருவாங்க” என சாரா சொல்லும்போது, உள்ளே நுழைந்த ருஹானாவை பார்த்து இவான் “சித்தி!” என ஆனந்த குரல் எழுப்பினான்.

“என்னுயிரே!” என்றபடி அருகே வந்த ருஹானா அவன் நெற்றியில் முத்தமிட்டு “ஏன் தூங்காம இருக்கே, அன்பே?” என கேட்டாள்.

“உங்களுக்காக காத்திருந்தேன், சித்தி”

“என் செல்லம்! நான் வந்திட்டேன் பாரு” என அவன் முடியை கோதினாள்.

அவர்களின் அன்பை பார்த்து கண்கலங்கிய சாராவுக்கு ருஹானா நன்றி சொல்லவும் அவர் வெளியே சென்றார்.

“சித்தி! நீங்க கீழ விழுந்தது பார்த்து நான் பயந்திட்டேன். அம்மா மாதிரி நீங்களும் திரும்ப வரமாட்டீங்களோன்னு ரொம்ப பயமா போச்சி”

அவனை வாரி அணைத்துக்கொண்ட ருஹானா “இங்க பார், அன்பே! இப்போ நான் உனக்கு சொல்றதை எப்பவும் நினைவு வச்சிக்கோ. நீ இது போல என்னைக்கும் பயப்படக் கூடாது. ஏன்னா சித்தி ஒரு நாளும் உன்னை விட்டு பிரிய மாட்டேன், சரியா?” என அழுத்தமாக சொல்ல இவான் தலையாட்டினான்.

“இப்போ தூங்கு, தேனே!”

“நீங்களும் என்கூட தூங்கறீங்களா?”

“நிச்சயமா, செல்லம்” என சொல்லி அவனுடன் படுத்துக்கொண்டாள்.

அவள் தோள் மேல் சாய்ந்து கொண்ட இவான் அவள் கூந்தலை எடுத்து முகர்ந்தான். “அம்மாவோட அதே வாசனை உங்க மேலயும் வருது, சித்தி”

“சித்தியும் பாதி அம்மா தான், என் உயிரே!” என ருஹானா சொல்ல சிரித்துக்கொண்டே இவான் தூங்க, தமக்கையின் புகைப்படம் பார்த்தே தங்கை விழித்திருந்தாள்.

விழித்திருந்த ஆர்யனும் தோட்டத்தில் வில்பயிற்சியில் ஈடுபட, அவன் விட்ட அம்பு நட்டநடு இலக்கில் குத்திக் கொண்டு நின்றது. அடுத்த அம்பு எடுத்து குறிபார்க்க, ருஹானா ரோஜா நிற உடையில் மாடிவளைவில் நிற்க, ஆர்யனின் அம்பு முதல் வட்டம் தாண்டி அடுத்த வட்டத்தில் போய் ஆடி நின்றது. ஆர்யனும் ஆடிப்போனான், தன் குறி தவறியது கண்டு.

மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டவன் அடுத்த அம்பை எடுத்து வில்லில் செருக, ருஹானா கைப்பிடியை தடவிக்கொண்டே படிகளில் இறங்க, இந்த அம்பு மூன்றாவது வட்டத்தில் நின்று சிரித்தது. இலக்கு பலகையை வெறித்தவன், இன்னும் தன்னை சோதித்து பார்க்க அடுத்த அம்பை வேகமாக விட, தூங்கும் அழகியின் வதனம் கண்டு கனிந்தவனின் கவனம் கலைய, அம்பு எக்குத்தப்பாக எங்கோ பலகையில் செருகியது.

‘எப்படி இது சாத்தியமாகும்?’ என திகைத்தவன், எப்படியும் அடுத்த அம்பு சரியாக எய்த வேண்டும் என தீர்மானித்து, அடுத்த அம்பை தொட்டவனுக்கு ருஹானாவை முத்தமிட முயன்ற கனவு நினைவில் வர, தொட்ட அம்பையும் எடுக்காமல், வில்லையும் கைவிட்டான். வில் புல்தரையில் விழுந்து ஆடி நிற்க, அவன் மனதின் ஆட்டம் நிற்கவேயில்லை.

வேகமாக உள்ளே வந்தவன் இவானை பார்க்க செல்ல, அவனோடு ருஹானாவும் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அசையாது நின்றான். உள்ளே போகாமல் திரும்பிவிட நினைத்தவன், இவான் திரும்பி படுக்கவும் அவன் போர்வை விலக அதை சரிசெய்ய உள்ளே போனான்.

அவள் முகம் பார்க்காமல் போர்வையை தொட்டவனின் கையை வந்து தொட்டது, இவானை நோக்கி திரும்பிய ருஹானாவின் கரம். பார்வை அவள் முகம் நோக்க, அவள் தூங்கும் அழகை கண்டு அப்படியே சில விநாடிகள் நின்றவன், கையை இழுத்துக்கொண்டு போர்வையை சரிசெய்து வெளியே சென்றான்.

——–

காலை உணவு மேசையில் ஆர்யன் டேப்லெட்டுடன் இணையதளத்தில்  ஒரு கண்ணும், ருஹானா மீது ஒரு கண்ணுமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவானுக்கு ஊட்டி முடித்த ருஹானா, அவன் பருக பழச்சாறு கொடுத்தாள். அவள் தட்டில் உணவு சிறிதும் தொடப்படாமல் இருப்பதை பார்த்த அம்ஜத் “ருஹானா! நீ ஒன்னுமே சாப்பிடலயே! சாப்பிடு” என்றான். ஆர்யன் ருஹானாவையும் அவள் தட்டையும் பார்த்தான்.

அதற்குள் உள்ளே மூக்கை நீட்டிய கரீமா “அம்ஜத் சொல்றது சரி தான். நீ சரியா சாப்பிடறது இல்ல. நேத்தும் எங்களை பயமுறுத்திட்டே. இப்பவும் சோர்வா இருக்கே” என பாசவலை விரித்தாள். “இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்” என்று ருஹானா சொல்ல, அதை மறுத்த கரீமா “நீயே உன்னை சோர்வா ஆக்கிக்கிறே! உன் வேலை அப்புறம் இவானை பார்த்துக்கறதுன்னு எவ்வளவு செய்றே?” என சொல்ல ஆர்யன் ஓரக்கண்ணால் ருஹானாவை பார்த்தான்.

“எனக்கு ஒரு தொந்திரவும் இல்ல. டாக்டரே சொன்னாங்களே, பயப்பட எதுமில்லன்னு..” என ருஹானா சங்கடத்துடன் சொல்ல, இடையில் வந்த இவான் “சித்தி! புது பெயின்ட்ல கலர் போடலாமா?” என கேட்டு அவளை காப்பாற்றினான். சரியென அவனுடன் எழுந்துக்கொள்ள போனவளை தடுத்த அம்ஜத் “நீ சாப்பிடு, ருஹானா! உன் உடம்பை தேத்தணும். நான் இவான் கூட வரைய போறேன்” என இவானிடம் வந்தான். “இவான் கேப்டன்! வாங்க போகலாம்” என அவனுடன் கைகளை உயர்த்தி தட்டிய அம்ஜத் அவனை முத்தமிட்டு அழைத்துச்சென்றான்.

“சித்தி! நீங்க சாப்பிட்டு முடிச்சதும் வருவீங்க தானே!” என்று இவான் கேட்க “கண்டிப்பா, அன்பே!” என ருஹானா சொல்ல, அம்ஜத் கையை விடுத்து ஓடி வந்த இவான் சிரிப்புடன் ருஹானாவின் முத்தத்திற்காக அவளிடம் கன்னம் திருப்பிக் காட்டினான். அவர்கள் இருவரையும் பார்த்திருந்த ஆர்யன் அவள் இவான் கன்னத்தில் முத்தமிடவும், தலையை திருப்பி டேப்லெட்டில் கண் வைத்தான்.

இருவரின் பாசத்தை சகோதரிகள் வெறுப்பாக பார்க்க இவான் அம்ஜத்துடன் ஓட, ருஹானாவின் போன் அடித்தது. அழைப்பது மிஷால் எனவும் ருஹானா தயக்கத்துடன் ஆர்யனை பார்த்து அதை எடுக்காமல் இருக்க கரீமா விடவில்லை. “போன் எடுத்து பேசு, ருஹானா. முக்கியமான தகவலா இருக்க போகுது”

“சொல்லு மிஷால்!” என்ற ஒரு வார்த்தையில் விறைத்த ஆர்யன் டேப்லெட்டை பார்க்கும் பாவானையை விட்டுவிட்டு அவளையே முறைத்து பார்த்திருந்தான். அவளும் அவனை ஒருமுறை பார்த்து போனை எடுக்க, கரீமாவும், சல்மாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“ருஹானா! நேத்து நான் வந்துட்டு போனபின்ன எதும் பிரச்சனை இல்லயே?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல”

“இன்னைக்கு நீ கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா? பெரிய ஆர்டர் ஒன்னு வந்துருக்கு”

“சரி, மிஷால்! நான் வரேன்”

போனை வைத்தவள் மெதுவாக ஆர்யனை ஏறிட்டு பார்த்தாள். “நான் வேலைக்கு போகணும்” அவனை பார்த்து அனுமதி கேட்பதுபோல் சொன்னாள். ‘நீ அனுமதிக்காவிட்டாலும் நான் போவேன்’ என்பதும் அவள் முகத்தில் தெரிந்தது. சகோதரிகள் மகிழ்ந்து போக அவளையே கோபத்துடன் பார்த்திருந்த ஆர்யன் எழுந்தான்.

பயத்துடன் ருஹானா அவனை ஏறிட “இவானோட முக்கியமான நாள்ல நீ வெளியே போனே! உன் வேலையை  முடிச்சிட்டு லேட்டா வந்தே! உன் சோர்வால மயங்கி விழுந்து எல்லாத்தையும் கெடுத்தே! இதே மாதிரி நிலமைல இவான் உன்னை பார்த்தா…“ என ஆர்யன் இரைந்தான்.

மாடிப்படி வளைவில் நின்றிருந்த அம்ஜத் “இவான்! நீ உன் ரூம்க்கு போ. நான் இப்போ வரேன்” என அவனை அனுப்பி வைத்தான்.

“இவானை இப்படி நீ பயமுறுத்த நான் இனிமேல் விடமாட்டேன். உன்னோட எல்லையை தெரிஞ்சி நடந்துக்கோ” என ஆர்யன் புருவம் உயர்த்தி மிக கடுமையாக பேச, ருஹானாவின் கண்கள் கலங்கின. எதிரே இருக்கும் இருவர் முன்னிலையில் திட்டு வாங்குவதை அவமானமாக உணர்ந்தாள்.

நீர் ததும்பிய பெரிய கண்களுடன் அவனை ஏறிட்டவள், எழுந்து வேகமாக போய்விட்டாள். அவளை பேசியதின் தாக்கம் அவனுள்ளும் இறங்க, பெரிய மூச்சுகளை விட்டுக்கொண்டு ஆர்யன் அங்கேயே நின்றான்.

தாங்க முடியாத சந்தோசத்தை சிரமப்பட்டு மறைத்துக்கொண்ட கரீமா கவலையுடன் “அவ சாப்பாட்டை தொட்டுக்கூட பார்க்கலயே! அப்படி என்னதான் அவ வேலை அங்க இழுக்குதோ? நான் போய் அவளை பார்க்கறேன்” என்று ருஹானா பின்னாடியே போனாள். சல்மா ஆனந்தமாக தேநீர் அருந்த, ருஹானாவின் உணவுத் தட்டையே ஆர்யன் பார்த்துக்கொண்டிருந்தான்.

ருஹானா மெல்ல மாடிப்படி ஏற, அங்கே நின்றிருந்த அம்ஜத் “ருஹானா! ஆர்யன் தானாக விரும்பி அப்படி பேசல. அவன் எதுக்கு உன்னை போகவேண்டாம்ன்னு சொல்றான், தெரியுமா? நீ சோர்வாகி உனக்கு உடம்பு சரியில்லாம ஆகக்கூடாதுன்னு தான்” என்று தம்பிக்கு பரிந்து பேச, ருஹானா கண்ணீருடன் தலையாட்டினாள்.

“அவனோட சர்ப்ரைஸ் கெட்டு போச்சி. அதனால தான் அவனுக்கு கோவம். இவான் பிறந்தநாள் சர்ப்ரைஸ். ஆர்யனுக்கு உன்மேல கோவம்லாம் இல்ல” என அவன் சொல்வதை கீழே நின்று கரீமாவும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“உன்னை திட்டினதுக்காக அவனும் வருத்தப்படுவான். அது எனக்கு தெரியும். ஏன்னா அவன் ஆர்யன். அவனால மன்னிப்பு கேட்க முடியாது. ஸாரி சொல்ல முடியாது. நன்றி சொல்ல முடியாது. முடியாது. அவனால முடியாது” என்று அம்ஜத் சொல்லிக்கொண்டே போக ருஹானா அவனை வியப்பாக பார்த்தாள்.

“உனக்கு தெரியுமா, உனக்கு ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தானே, அதான் அவனோட ஸாரி!”

“எந்த ட்ரெஸ்?” என திகைப்பாக கேட்க கீழேயிருந்த கரீமாவுக்கு அதை விட பெருந்திகைப்பு.

“ஆமா, அது தான் அவன் ஸாரி சொல்ற முறை. இவான் பிறந்தநாள் பார்ட்டில நீ போடறதுக்கு தான் அவன் வாங்கி கொடுத்தது. அது உனக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது”

“அவரா வாங்கினார்?” நம்பமுடியாமல் ருஹானா திரும்ப கேட்டாள்.

“ஆமா” அம்ஜத் சொல்ல ருஹானாவும் கரீமாவும் அதிர்ந்து நின்றனர்.

————–

Advertisement