Advertisement

இருவரும் மேலும் பேசுவதற்குள் “சித்தி! எனக்கு பலூன் எடுத்து தாங்க” என இவான் கூப்பிட அவனோடு ருஹானா எழுந்து போனாள். ‘குடி! உடனே குடி! குடிச்சிட்டு வெளிய போ!’ என கரீமா முணுமுணுக்க, ருஹானா ஜூஸை குடிக்கலானாள்.

விருந்தாளிகளில் ஒரு பெண் ருஹானாவிடம் வந்து “இதே டிரஸ் நான் பாரீஸில் வாங்கினேன். இந்த பார்ட்டிக்கு ஓவரா தெரியும்ன்னு தான் போட்டுட்டு வரல” என்று சொல்லி சிரிக்க, வேறு வழியில்லாமல் ருஹானாவும் புன்னகைத்தாள்.

அந்த விருந்தாளியிடம் கஷ்டப்பட்டு தப்பித்த ருஹானாவை ஆர்யன் பிடித்துக்கொண்டான். “உன்னை இங்க அரட்டை அடிக்க கூப்பிடல. இவானை சந்தோசமா வச்சிக்க வேண்டியது உன் பொறுப்பு” என ஆர்யன் கோபமாக சொல்ல, அதே கோபத்தோடு “என்னால இவானுக்கு போரடிக்குதுன்னு நீங்க நினைக்கிறீங்களா?“ என கேட்டாள்.

ஆர்யன் மனசாட்சியே இல்லை என்றது. ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்க்க “இது அவன் பிறந்தநாள் பார்ட்டி. ஆனா ஒரு சின்ன பசங்க கூட அவனை சுத்தி இல்ல. அப்புறம் அவன் சந்தோசமா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கறீங்க?”

அவள் கேட்ட உண்மை அவனை சுட்டாலும் “அவனுக்கு சின்ன பசங்க தேவையில்ல. அம்மா மாதிரி பார்த்துக்க தான் ஆள் வேணும்” என்றான்.

“என்னோட முழு முயற்சியை தான் நான் கொடுக்கறேன். ஆனா சித்தப்பாவா அவனுக்கு என்ன தேவைன்னு நீங்க தான் யோசிக்கணும்” என்று அவன் பக்கமே குற்றத்தை திருப்பியவள் “எந்த குழந்தைக்கு தான் இந்த மாதிரி பார்ட்டி பிடிக்கும்?” என்று கோபமாக படபடத்துவிட்டு அவன் பதிலை நின்று கேட்காமல், இவான் அருகே சென்று சோபாவில் அமர்ந்துக்கொண்டு பழச்சாறை குடித்து முடித்தாள்.

அவளை கோபமாக பார்த்தாலும் அவள் சொன்னதை மனதில் உள் வாங்கியவன், தனியாக பலூனை பிடித்துக் கொண்டிருந்த இவானை பார்த்தான்.

கரீமா விருந்தாளிகளுடன் பேசியபடி ருஹானா சாப்பிட்ட மாத்திரையின் விளைவுகளுக்காக காத்திருந்தவள், தங்கையை காண அவள் அறைக்கு செல்ல படியேறினாள்.

மாத்திரை போட்டு சற்று நிதானமாக அமர்ந்திருந்த தங்கையிடம் சென்றவள் “அந்த ஒன்னுமில்லாதவளை ஒதுக்க பிளான் போட்டுட்டேன். என்னோட ரத்தஅழுத்த மாத்திரை நாலு அவளுக்கு கொடுத்துட்டேன். ஒருமுறை நான் தெரியாம ரெண்டு போட்டதுக்கே என் கால் தரைல நிக்கல. இப்போ அவளுக்கும் ஒன்னும் முடியாது. அவளை ரூம்க்கு அனுப்பிருவேன். நீ மேக்கப் சரிசெய்துட்டு கீழே வா. நீ வந்தபின்ன தான் கேக் வெட்டணும். மீதி பார்ட்டியை நீ தான் நடத்த போறே!” என்று சல்மாவை சரிக்கட்டினாள்.

“இந்த மாத்திரையாவது வேலை செய்யுமா?” என சல்மா சந்தேகமாக கேட்க, “என்னை நம்பு. அவ உடம்பு சரியில்லாம படுத்துடுவா. ஆர்யன் அதுக்கும் சேர்த்து அவளை திட்டுவான். அப்போ நீ வந்து இவானை கவனிச்சிக்கோ. ஆர்யன் உன்னை கவனிப்பான், உன் அழகையும் தான்” என கரீமா சொல்ல, சல்மா சிரிப்புடன் தலை ஆட்டினாள்.

———

இவானுடன் பேசிக்கொண்டே எழுந்த ருஹானாக்கு தலை சுற்றியது. கண் இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே மேசையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள். அவளை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் அவள் மாற்றங்களை கவனித்து பதட்டமானான். கரீமா சந்தோசமடைந்தாள். நஸ்ரியா ‘கேக் கொண்டு வரவா?’ என கேட்டபோதும் இன்னும் சில நிமிடங்கள் தாமதிக்க சொன்னாள்.

பின் சிறிது நேரம் விட்டு ருஹானாவிடம் வந்த கரீமா “கேக் வெட்ட தயாரா?” என கேட்டாள். ருஹானாவை தொல்லை செய்யாமல் அம்ஜத்துடன் விளையாடிக் கொண்டிருந்த இவானை ருஹானா கேட்க அவனும் தலையசைத்தான். “ஏன் ருஹானா நீ ஒரு மாதிரி இருக்கே? சோர்வா இருந்தா உன் ரூம்ல போய் ஓய்வெடேன்” என அக்கறை போல கரீமா சொல்லிப் பார்த்தாள்.

“இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்!” என ருஹானா சொல்ல, உதட்டை பிதுக்கிக் கொண்டு கரீமா சமையலறைக்கு சென்றாள். ருஹானா நெற்றியை தேய்த்துக் கொண்டவள் கண்களை மூடிக்கொண்டாள். எதிரே நின்று பேசுபவரின் மேல் கவனம் வைக்காத ஆர்யன், ருஹானாவை உன்னிப்பாக கவனித்தான். அவன் பதட்டம் அதிகரித்தது.

அதற்குள் ஜாஃபர் கப்பல் வடிவ அழகிய கேக்கை கொண்டு வர எல்லாரும் அங்கே குழுமினர். சிரமப்பட்டு எழுந்த ருஹானா இவானுடன் கேக் வைக்கப்பட்ட மேசைக்கு பின்புறம் வந்தாள். “இவான்! கேக் அழகா இருக்குல?” என ருஹானா கேட்க தலையாட்டிய இவான் முகத்தில் சிரிப்பு. அதை பார்த்து அருகே வந்த ஆர்யன் முகத்தில் மலர்ச்சி.

மூவரும் மேசைக்கு பின்புறம் கேக் அருகே நிற்க, முன்புறம் நின்ற அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாட, தடுமாறி மேசையின் முனையை பிடிக்கும் ருஹானாவை கரீமா அசட்டையாக பார்த்தாள். ஆர்யனும் ‘என்ன தான் ஆச்சு, இவளுக்கு?’ என பார்த்தவன், இப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இவானிடம் திரும்பினான்.

“அக்னி சிறகே! மெழுகுவர்த்தியை ஊது!” என ஆர்யன் சொல்ல, இவான் சித்தியை திரும்பி பார்த்தான். தலையசைத்த அவள் “பெரிய மூச்சு எடுத்து ஊது, கண்ணே!” என்றாள். முன்னால் நின்ற கரீமா “உன் ஆசையை நினைச்சிக்கோ, இவான்!” என்று சொல்ல “என் சித்தி எப்பவும் என்கூடவே இருக்கணும்” என்று சொல்லி மெழுகுவர்த்தியை ஊதினான். இவான் சொன்னதை கேட்ட ஆர்யன் ருஹானாவை பார்த்தான்.

கரீமா முகம் அஷ்டகோணலாக மாற, மற்ற அனைவரும் கைகளை தட்டினர். ஆர்யன் அருகே நிற்க, ருஹானா இவான் கையை பிடித்துக்கொள்ள அவன் கேக் வெட்டினான். க்ளிக் க்ளிக் என புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. “ஆர்யன் சார்! உங்க அண்ணன் மகனோட சேர்ந்து நில்லுங்க!” என நிழற்படநிபுணர் சொல்ல “வா சிங்க பையா!” என ஆர்யன் கை நீட்டி அழைக்க, அருகே வந்து ஆர்யன் கையை பிடித்துக்கொண்ட இவான் “சித்தி! நீங்களும் வாங்க” என்று சொல்லி ஆர்யனைப் போலவே கையை நீட்டினான்.

ஆர்யன் சரேலென திரும்பி ருஹானாவை பார்க்க, ‘இவ எப்படி இன்னும் நேரா நிற்கிறா?’ என சல்மா கடுப்புடன் பார்க்க, ருஹானா தயக்கத்துடன் இவானை நெருங்கி அவன் கையை பற்றிக்கொண்டான். இருவரையும் இவானுடன் ஒட்டி நிற்க சொல்லி சரசரவென்று படங்கள் எடுக்கப்பட்டன. மறுபடியும் அலங்கரித்துக்கொண்டு வந்த சல்மா, இவர்கள் சேர்ந்து படம் எடுப்பதை மேலிருந்து பார்த்து மீண்டும் நொந்து போனாள்.

அடுத்தடுத்து புகைப்படங்கள் எடுக்கப்பட, பளிச் ஒளி கண்ணை தாக்க, ருஹானாவுக்கு முன்னே இருப்பது எதுவும் தெரியாமல் மறைந்தது. கண் மூடி தலை சுற்றி கீழே சரிந்தாள். தன் கைப்பிடியிலிருந்து சித்தி நழுவுவது கண்டு திரும்பிய இவான், ருஹானா தரையில் கிடக்கவும் “சித்தி!” என கத்தினான். ‘அச்சோ!’, ‘என்னாச்சு?’ என பல குரல்கள் ஒலித்தன.

ஆர்யனுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. கைப்பிடித்திருந்த இவானை சாராவிடம் கொடுத்தவன் நொடியில் ருஹானா அருகே ஓடினான். அவள் தலையை தூக்கி அவன் பிடிக்கவும் கரீமா சொன்னாள். “அவளோட ரத்த அழுத்தம் குறைந்திருக்கலாம். ஜாஃபர் அவ ரூம்ல விடட்டும்”

ஆர்யன் காதில் அது விழவே இல்லை. கழுத்தின் அடியே கை கொடுத்து தூக்கியவன் வாசலை நோக்கி விரைந்தான். ஜாஃபரும், ரஷீத்தும் கூடவே ஓடிவர, ஜாஃபர் கதவை திறக்க முன்னே போனான்.

மேலிருந்து இறங்கிகொண்டிருந்த சல்மா, இருகைகளிலும் ருஹானாவை தூக்கியபடி நின்ற ஆர்யனை பார்த்தாள். சில மணி நேரங்களுக்கு முன் ருஹானாவை தாங்கி மயங்கி நின்ற ஆர்யன், இப்போது மயங்கி கிடந்த ருஹானாவை ஏந்தி பதட்டத்துடன் நிற்பதை பார்த்து மனம் உடைந்து போனாள்.

கதவு திறக்கப்பட காத்திருந்த ஆர்யனிடம் சல்மா கேட்டாள். “ஆஸ்பிட்டல் அவசியமா, ஆர்யன்? கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாலே சரியாகிடுமே!”

அதற்கு பதில் சொல்லாத ஆர்யன், “சித்திக்கு என்னாச்சு?” என இவான் கேட்டதற்கு மட்டும் “டாக்டர் உன் சித்தியை சரியாக்கிடுவார்” என்று தைரியம் சொல்லி வெளியே சென்றான்.

தான் விதைத்த வினையை தானே அறுக்கும்படி ஆனது கண்டு கரீமா திகைத்து நின்றாள். சாரா இவானுக்கு ஆறுதல் மொழி சொல்லி தேற்ற, அம்ஜத் குழப்பத்துடன் புலம்பினான், “அவ கீழ விழுந்துட்டா. நம்ம அமைதி போய்டுச்சி.. அமைதி கெட்டுப்போச்சி” என தலையில் கை வைத்துக்கொண்டான்.

——–

மருத்துவர் சிகிச்சையை முடித்தபின் ‘பயம் ஒன்றும் இல்லை’ என்று சொல்லி செல்ல, ருஹானாவுக்கு ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருக்க, அவள் மயக்கம் இன்னும் தெளியவில்லை. “ட்ரிப்ஸ் முடிந்ததும் சொல்லுங்க! டாக்டர் வந்து பார்ப்பாங்க!” என்று செவிலிப் பெண்ணும் அகல, ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்த்தபடியே நின்றான்.

அவளது கள்ளங்கபடமற்ற நிலா முகம் அவன் இதயத்துக்கு குளிர்ச்சியை தந்தது. அவள் முகம் காண காண அவனுள் ஏற்படும் அமைதியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘எனக்கு உள்ளே ஏன் மாற்றம் ஏற்படுகிறது?’ என அவளிடம் இருந்து பார்வையை விலக்க முயன்றான். முடியவில்லை.

பக்கத்தில் இருந்த நாற்காலியில் வேறு பக்கம் பார்த்து அமர்ந்து கொண்டான். சில விநாடிகளில் எப்போது அவளை பார்க்க ஆரம்பித்தான் என அவனுக்கே தெரியவில்லை.

தூங்கும் அழகியின் கதை வாசித்துக்காட்டி சாரா இவானை தூங்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தார்.

“அந்த ஊசி இளவரசி கையை குத்திடுச்சி”

“இளவரசி மெதுவா தரையில விழுந்தா”

“அந்த இடமே அமைதியாகிடுச்சி”

“எல்லா சிரிப்பு சத்தமும் உடனே நின்னுடுச்சி”

“அரண்மனையே தூங்க ஆரம்பிச்சிடுச்சி”

“நூறு வருஷம் ஓடி போச்சி”

“அந்த பக்கமா போன ஒரு இளவரசன் தூங்கும் அழகி பத்தி கேள்விப்பட்டான்”

“அந்த அரண்மனைக்கு போனான். எல்லாம் அசைவில்லாம இருக்குறத பார்த்தான்”

“தூங்கும் இளவரசியை பார்த்தான். அவள் கிட்டே போனான்”

ஆர்யன் கண்களை மூடிக்கொண்டு நினைத்துப் பார்த்தான். தான் அவளை சந்தித்த முதல் நாள்,  ஓரிரவு பூராவும் அவளை தான் கவனித்தது, கருப்பு உடையில் கண்ணை கவர்ந்தது, ரோஜா வண்ணத்தில் நெஞ்சில் நிறைந்தது, இப்போது அழகோவியமாய் மயங்கிக்கிடப்பது அனைத்தும் அவன் மனக்கண்ணில் வலம் வந்தன.

“தூங்கும் அழகியின் கையை பிடிச்சிக்கிட்டு இளவரசன் அவள் முகத்தையே ஆச்சரியமாக பார்த்திட்டிருந்தான். அப்புறம் ‘தூங்கும் அழகே!’ன்னு கூப்பிட்டான்”

ருஹானாவை முத்தமிடுவது போல எண்ணம் தோன்ற ஆர்யன் தூக்கிவாரிப்போட்டு எழுந்து அமர்ந்தான். அவன் சிந்தனை காண்பித்த காட்சி அவனை நிலைகுலைய வைக்க எழுந்து வெளியே செல்ல முயன்றான்.

“இளவரசனோட அன்பான குரல்ல இளவரசி கண் திறந்தா..” சாரா கதை சொல்லி முடிக்க இவான் தூங்கிவிட்டான்.

“இவான்” என ருஹானா அழைக்கும் சத்தம் கேட்டு ஆர்யன் திரும்பினான். மெதுவாக கண் விழித்த ருஹானா குழப்பமாக ஆர்யனை பார்க்க, ஆர்யன் ருஹானாவை ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டே நின்றான்.

கைகளில் ஏந்தியதையே தாங்க முடியாமல் 

சதி செய்யும் மதிகாரி தடுத்திட முனைய…..

அவளில் பெருமயக்கம் கொண்டிருப்பவன்

அவள் மயங்கிட காண சகிப்பானா?

அவனுக்கானவள் அவளென

அவன் இதயம் உணர

அறிவு அறிய மறுக்க

இன்று கரங்கள் ஏந்தி செல்ல…..

மயக்கத்தில் இருப்பவள்

உறங்கும் அழகியாய் தெரிவது

காதல் மயக்கமின்றி வேறேது?

(தொடரும்)

Advertisement