Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 22

ஆர்யன் கைகளில் பூமாலையாய் கிடந்த ருஹானா கண்களை சுழற்றி அக்கம்பக்கம் பார்க்க, அவள் கண்களோடு தன் கண்களையும் ஒட்டியிருந்த ஆர்யனும் பிரித்தெடுத்தான். சாய்ந்திருந்த அவள் எழ, அவளை விடுவித்து அவனும் நிமிர்ந்தான்.

கசப்பை விழுங்கிய சல்மா “ருஹானா! உனக்கு ஒன்னும் ஆகலயே?” என்று கேட்டாள். ருஹானா “ம்.. ஒன்னும் இல்ல. என் கவுனை மிதிச்சிட்டேன். தடுமாறிட்டேன்” என்று சொல்ல “நல்லவேளை, எதும் ஆகல” என்று சொல்லி சல்மா இருவரையும் சுற்றிக்கொண்டு சென்றுவிட்டாள்.

நீண்ட மூச்சை விட்டு நிதானித்துக் கொண்ட ஆர்யன் “இவான் உன்னை தேடிட்டே இருந்தான்” என்றான், தன் மனதை மறைத்து.

“வந்து.. நான் வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வேகமா தான் வந்தேன். நடுவுல டாக்ஸி ரிப்பேராகிடுச்சி” அவன் ‘சீக்கிரம் வந்திடு!’ என தன்னை நம்பி அனுப்பியதை காப்பாற்ற முடியாத குற்ற உணர்வில் விளக்கம் அளித்தாள். ‘இவளை தேடிட்டு இருந்ததுக்கு காரை அனுப்பி கூப்பிட்டிருக்கலாம்’ என ஆர்யனும் தன்னை நொந்தபடி உள்ளே சென்றான்.

ருஹானா தயங்கியபடி அங்கேயே நிற்க “சித்தி!” என இவானின் சந்தோஷ குரல் கேட்டது. “இவான்” என அவளும் அவனை பார்க்க இவானின் அழகை பார்த்து ஆனந்தமடைந்தாள்.

“நீ இளவரசன் போல இருக்கே, அன்பே!”

“நீங்களும் இளவரசி மாதிரி தான் இருக்கீங்க, சித்தி” என பிரமிப்புடன் சொல்ல, ருஹானா புன்னகைத்தவள் அவன் கை பற்றி முத்தமிட்டாள். இவான் சித்தியின் கழுத்தை கட்டிக்கொண்டான்.

நஸ்ரியாவும், ஜாஃபரும் உணவும், பானமும் பரிமாறிக்கொண்டு இருக்க, விருந்தாளிகள் சாப்பிட்டபடியே கதை பேசிக்கொண்டு இருந்தனர்.

சல்மா உள்ளம் தகித்துக் கொண்டு உணவு மேசையின் அருகே நிற்க அவளை பார்த்த கரீமா “மிக அழகா இருக்கே, டியர். ஆர்யன் பார்த்து அசர போறான், பாரேன்! வா, ஆர்யன் கிட்டே போகலாம்” என களிப்புடன் அழைக்க, தங்கையின் மௌனத்தில் குழப்பமானாள். தங்கை பார்க்கும் திசையை நோக்கிய கரீமா திகைத்து போனாள்.

ருஹானா விழாவிற்கு வந்தது ஒரு அதிர்ச்சி!

அவளது புதிய கண்கவர் ஆடை பெரும் அதிர்ச்சி!

அவளது  மயக்கும் பேரழகு பேரதிர்ச்சி!

ருஹானாவை மேலும்கீழும் நோக்கிய கரீமா திகைப்பில் இருந்து விடுபடும்முன் சல்மா கேட்டாள். “எல்லாம் திட்டம் போட்டேன்ன்னு சொன்னீயே, அக்கா! என்ன ஆச்சு?” தங்கைக்கு பதில் சொல்லக்கூட நா எழவில்லை, கரீமாவுக்கு.

இவானுடன் ருஹானா விழா நடக்கும் வரவேற்பு அறைக்கு வர, விருந்தினர் அனைவரும் அவளை கண்கொட்டாமல் பார்த்தனர். அதில் ஒரு அழகிய வாலிபனும் அடக்கம். ஆர்யனும் அவளையே நோக்க, சல்மா கொதித்து போய் அவளது அறைக்கு போய்விட்டாள்.

எல்லாரும் தன்னையே பார்ப்பதை கண்ட ருஹானா சங்கடமடைந்து இவானுடன் பேச ஆரம்பித்தாள்.

“நான் வர்றவரை என்ன செஞ்சிட்டு இருந்தே, என் செல்லம்?”

“நீங்க வருவீங்களான்னு பார்த்துட்டே இருந்தேன், சித்தி”

நெகிழ்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள் கேட்டாள், “சாப்பிட்டியா நீ?”

“இல்ல, சித்தி! நீங்க வரமாட்டீங்கன்னு பயந்து போயிட்டேன்”

“அது எப்படி நடக்கும்? உன் பார்ட்டிக்கு நான் எப்படி வராம போவேன், என்னுயிரே?” அவன் தலைமுடியை ஒதுக்கி விட்டபடி ருஹானா தலைநிமிர்ந்து மற்றவர்களை பார்க்க, அவள் பார்வை வட்டத்தில் ஆர்யனும் விழுந்தான். அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் பார்க்கவும் பார்வையை திருப்பினான்.

அவன் திருப்பிய பார்வை அவனுக்கு வேறு ஒருவனின் பார்வையை காட்டிக்கொடுத்தது. அந்த இளைஞனும் ருஹானாவை ரசித்துப் பார்க்க, அதிர்ந்து போன ஆர்யன் தலையை திருப்பி ருஹானாவை பார்த்தான். அவள் இவானுடன் பேசிக்கொண்டிருக்க, திரும்ப அந்த வாலிபனை பார்க்க அவனோ பார்வையை நகர்த்தவில்லை.

——-

சற்றுமுன் தான் அலங்கரித்துக்கொண்ட கண்ணாடி முன் நின்ற சல்மா பெருங்குரலெடுத்து அழுதாள். இந்த கண்ணாடி எதிரே நாம் போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணானதே என எண்ணி கண்ணீர் விட்டாள். அருகே இருந்த அலங்கார பொருட்களை பார்த்ததும் அவள் ஆத்திரம் அதிகமாகியது. எல்லாவற்றையும் கொட்டி தள்ளி உடைத்தாள்.

கரீமா வெளியில் இருந்து கதவை தட்டினாள். சல்மா திறக்காமல் கத்தினாள். “அந்த சாதாரண பெண் என்னை விட உயர்வா போயிட்டாளா? நான் தோத்துட்டேன். எப்பவும் நான் வாழ்க்கைல தோத்துட்டே இருக்கணுமா? இதுக்கெல்லாம் நீ தான் காரணம். என் காதலனை பிரிச்சி அனுப்பிவிட்டது நீ தான். அவனால தான் நான் இப்படி நிக்கிறேன்”

அவள் பேசுவது வேறு யாருக்கும் கேட்டுவிடக் கூடாதே என பயந்த கரீமா “சல்மா டியர்! உன் கட்டுப்பாட்டை இழக்காதே! மாத்திரையை எடுத்து போடு. அமைதியாகு” என்று வெளியே நின்று பேசினாள்.

“நான் உன்னை நம்ப மாட்டேன். அந்த பொண்ணு வர மாட்டான்னு நீ சொன்னே தானே! வந்துட்டாளே! இனி நான் யாரையும் நம்ப மாட்டேன்” என்று சொன்னபடி ஓய்ந்து அமர்ந்தாள். கேட்டுக்கொண்டிருந்த கரீமா சல்மாவின் மாத்திரையை கதவின் இடைவெளியில் உள்ளே தள்ளினாள்.

“சல்மா! இந்த மாத்திரை போடு. என்னை நம்பு. நான் அவளை ஒழிச்சி கட்டுறேன்” என்று சொல்லி ஒரு முடிவெடுத்து கீழே இறங்கினாள்.

——

இவானுக்கு குடிக்க பழச்சாறு கையில் கொடுத்து, அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ருஹானாவை பார்த்தபடியே ஆர்யன் அருகில் நிற்க, இவான் சித்தியிடம் கேட்டான்.

“சித்தி! நீங்க எனக்கு தூங்கும் அழகி கதை சொன்னீங்க தானே!”

“ஆமா, செல்லம்!”

“நீங்க அவங்கள போலவே இருக்கீங்க.. இல்லல்ல.. அவங்கள விட அழகா இருக்கீங்க, சித்தி”

ஆர்யன் மனமும் அதை ஆமோதித்தது. வெட்கமடைந்த ருஹானா இவான் கன்னம் தடவினாள். “உன் ஆரஞ்சு ஜூஸ் காலியாகிடுச்சே! உனக்கு இன்னும் வேணுமா?” என கேட்டாள். அவன் தலையாட்ட அவனையும் கூட்டிக்கொண்டு உணவு மேசைக்கு நடந்தாள்.

“அந்த பொண்ணு இவான் சித்தியாம். இங்க தான் தங்கியிருக்காளாம்”

“ரொம்ப அழகா இருக்கா, இல்லயா?”

“ஆமா! மிக அழகு”

விருந்தாளிகள் ருஹானாவை பார்த்து பேச, ஆர்யனும் உணவு மேசை அருகே வந்தான்.

“ஆர்யனுக்கு சரியான இணை”

“ஆமா! பார்க்க நல்லா இருக்கு, அவங்க ஜோடி”

கரீமா அங்கே வந்தவள் அவர்களை சாப்பிட சொல்லி உபசரிக்க “கரீமா! நாங்க இவான் சித்திய பத்தி பேசிட்டு இருந்தோம். அவ இவானை நல்லா கவனிச்சிக்கிறால?”

“ஆமா! அவ அப்படிதான். எப்பவும் இவானை தனியா விடமாட்டா” உள்ளக்குமுறலை மறைத்துக்கொண்டு கரீமா பேசினாள்.

“தஸ்லீம் போலவே அவ தங்கையும் அழகா இருக்கா”

“ஆர்யனுக்கு பொருத்தமா இருக்கா”

“அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா?”

கரீமாக்கு உள்ளே எரிமலையே வெடித்தது.  “அப்படிலாம் எதும் இல்ல” என்று சிரமப்பட்டு கோபத்தை அடக்கி சொன்னவள் “நான் கிச்சன் போய் பார்த்துட்டு வரேன்” என்று விலகி நடந்தாள். எதிரே உணவு எடுத்துக்கொண்டிருந்த ருஹானாவை எரிப்பதுபோல பார்த்தவள் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

ருஹானா பக்கத்தில் நின்று தன்னை கவனித்துக்கொண்டிருந்த ஆர்யனை தற்செயலாக நிமிர்ந்து பார்க்க, நிழற்பட நிபுணர் அந்த அழகிய தருணத்தை தன் கருவியில் பதிந்தார். இவானுக்கு பழச்சாறு எடுத்தவள் அவனை அழைத்துச்சென்று அம்ஜத் பக்கத்தில் சோபாவில் அமர வைத்தாள். அவனுக்கு உணவு எடுக்க தட்டுடன் திரும்ப வர, அவள் வருவதையும், போவதையும் அந்த வாலிபனும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

ருஹானாவை பார்க்கும் நேரம் போக, அவ்வப்போது அந்த அழகன் மேலும் கண் வைத்திருந்த ஆர்யனின் ஒரு புருவம் ஏறியது. ருஹானா தனியாக போவதை பார்த்து அவனும் பின்னாடியே செல்வதை பார்த்த ஆர்யன் முகம் இறுகியது.

ருஹானா அருகே சென்ற அவன் அவளை பார்த்து “ஹாய்!” என்று புன்னகை செய்தான். ருஹானா அவனை வினாடிக்கும் குறைவாக பார்த்தவள் புன்சிரிப்பு எதுமின்றி பதிலுக்கு “ஹாய்” சொல்லி தலையை திருப்பிக்கொண்டாள்.

“என் பேர் ஜலால். நீங்க இவான் சித்தி தானே? உங்கள பத்தி பேசிட்டு இருந்தாங்க, நான் கேட்டேன்”

ருஹானா பதில் சொல்லாமல் உணவு வகைகளை எடுத்துக்கொண்டு இருக்க, சற்று தள்ளி நின்று ஆர்யனும் கடுப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, ஜலால் தொடர்ந்து பேசினான்.

“முன்னாடி நான் இங்க வந்துருக்கேன். ஆனா உங்கள பார்த்தது இல்லயே!” ஆர்வமாக ஜலால் பேச, ருஹானா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“உங்கள பார்த்திருந்தா, கண்டிப்பா நினைவில் இருந்திருப்பீங்க!”

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யன் அவர்கள் பக்கம் வந்தான். ஜலால் மீது ஒரு தீப்பார்வை வீசியவன் “உன்னை இவான் தேடுறான், பார்” என ருஹானாவிடம் சொன்னான். திரும்பிய ருஹானா இவான் இருந்த இடத்தைப் பார்க்க, அவன் அம்ஜத்துடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

குழப்பமாக ஆர்யனை பார்த்தவள், ஏதோ புரிந்துக்கொண்டு, சரியென தலையசைத்து இவான் அருகே சென்றுவிட்டாள். ஜலால் ஆர்யனுடன் பேச வர, ஆர்யன் அதை கவனிக்காதது போல் விலகிவிட்டான். திரும்ப தன் இடம் வந்து வசதியாக நின்றுக்கொண்டு ருஹானாவை பார்க்க ஆரம்பித்தான்.

ருஹானா இவானுக்கு ஊட்ட, “பெரியப்பா! நீங்களும் சாப்பிடுங்க” என்று இவான் அம்ஜத்தை தூண்டினான். “இதோ! நானும் சாப்பிடுறேன். அப்புறம் இந்த பரிசுலாம் பிரிச்சி பார்க்கலாம்” என்று அம்ஜத் சொல்ல, அப்போது தான் ருஹானாவுக்கு இவானுக்கு வாங்கிய பரிசு நினைவு வந்தது. பரிசுப்பொருட்கள் இருந்த பக்கம் பார்த்தவள் திரும்பும் போது ஆர்யனின் பார்வையை சந்தித்தாள். உடனே அவனும் வேறு பக்கம் தன் பார்வையை மாற்றிக்கொண்டான்.

மிஷால் உணவகத்திலேயே இவானின் பரிசை வைத்துவிட்ட தன் கவனமின்மையை நினைத்து ருஹானா முகம் வாட, அவளை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனுக்கும் அவள் வாட்டம் பாதித்தது. அவன் ஜலாலை பார்க்க, அவன் அப்போதும் ருஹானாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆர்யனின் கைமுஷ்டி இறுகியது.

சமையலறையில் நஸ்ரியா ‘கேக் எப்போது வெளியே கொண்டு போகவேண்டும்?’ என விழா ஏற்பாடு செய்த சல்மாவை கேட்க செல்ல, அவளை தடுத்த கரீமா தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி, அவளுக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பினாள்.

கரீமா யோசனையுடன் நிற்பதை பார்த்து அருகில் வந்த சாரா “கரீமா மேம்! உங்களுக்கு உடம்பு சரியில்லயா?” என கவலைப்பட “இந்த பார்ட்டி டென்ஷன்ல என் ரத்த அழுத்தம் அதிகமாயிடுச்சி” என கரீமா சொன்னாள்.

சாரா அதற்கான மாத்திரையும் தண்ணீரும் எடுத்துக்கொடுத்து செல்ல, மாத்திரையை பார்த்ததும் சல்மா மனதில் அடுத்த சதி உருவாகியது. முகம் மலர்ந்தவள் நான்கு மாத்திரையை கையில் எடுத்து கொண்டு விழா நடக்கும் இடம் நோக்கி நடக்க, வாசல் அழைப்பு மணி ஒலித்தது. .

கதவை திறந்த கரீமா வாசலில் மிஷாலை பார்க்கவும் மேலும் சந்தோசமானாள். “இவான் பரிசை ருஹானா அங்கேயே மறந்து விட்டுட்டு வந்துட்டா. அதான் எடுத்துட்டு வந்தேன்” என மிஷால் சொல்ல “சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கே!” என்று சொன்ன கரீமா கதவை விரிய திறந்தாள்.

அங்கே ஆர்யனும், இவானும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, கரீமா மிஷாலை உள்ளே அழைத்தாள். மிஷால் “வேண்டாம், உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என ,மறுத்துக்கொண்டிருக்கும்போது ஆர்யன் அவனை பார்த்துவிட்டான். மிஷாலை பார்த்து அவன் இருபுருவங்களும் சுருங்க, மிஷாலும் அவனை பார்த்து முறைத்தான். கரீமா மிகவும் மகிழ்ந்து போனாள்.

இவானின் தோளில் தட்டிவிட்டு வாசலுக்கு வந்த ஆர்யன் மிஷால் எதிரே நின்றான். “ருஹானா மறந்து வச்ச பரிசை எடுத்துட்டு வந்தேன்” என நிமிர்வாக மிஷால் சொல்ல, ஆர்யனின் கோபம் மட்டுப்பட்டது. அதற்குள் தூரத்தில் நின்ற ருஹானாவை மிஷால் பார்த்துவிட்டான்.

அவளை பார்த்து அசந்துபோன மிஷாலை ருஹானாவும் பார்த்துவிட, வாசலில் ஆர்யனும் நிற்பதைக் கண்டு ‘இவர்கள் சண்டை போடுவார்களே!’ என பயந்து போய் வேகமாக வந்தாள். அவள் இருவரையும் பார்க்க, மிஷால் அவளை பார்த்து புன்னகைக்க, அந்த புன்னகை ருஹானாவிடம் இல்லாததை கண்ட ஆர்யனின் கோபம் மறைந்தது.

ருஹானா மிஷாலுக்கு பின் நின்றிருந்த காவலனை பார்த்து பயந்து ஆர்யனை பார்க்க, அவள் அச்சத்தை அவள் பார்வையிலேயே அறிந்துக்கொண்ட ஆர்யன் காவலனை பார்த்து கண்ணசைத்தான். காவலனும் அங்கிருந்து அகல, ருஹானாவை ரசித்துக்கொண்டிருந்த மிஷாலை ஒரு முறை முறைத்துவிட்டு ஆர்யன் உள்ளே சென்றான்.

தான் ஆசைப்பட்ட ஒன்றும் நடக்காதது கண்டு ஏமாற்றம் அடைந்த கரீமா “ருஹானா! உங்களை தனியா விட்டுட்டு போறேன்” என்று கள்ள சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு உள்ளே போனாள்.

“இப்போ தான் நியாபகம் வந்தது, மிஷால்! இதை அங்கேயே வச்சிட்டு வந்துட்டேன்னு. நீயே கொண்டு வந்துட்டே. நன்றி மிஷால்! உனக்கு தான் சிரமம்” என்று ருஹானா சொல்ல “ஆமா, இன்னைக்கு தானே கொடுக்கணும். நாளைக்கு கொடுத்தா நல்லா இருக்காதே! அதான் எடுத்துட்டு வந்தேன். என் சார்பாகவும் இவானுக்கு ஒரு பரிசு” என இரண்டு பரிசுகளையும் மிஷால் கொடுத்தான்.

“மிகவும் நன்றி, மிஷால். ஏன் உனக்கு வீண் செலவு? உன்னை உள்ளே கூப்பிட..“ என்றவளின் பேச்சை தடுத்த மிஷால் “இல்ல, வேணாம், உனக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பல. என் வாழ்த்துக்களை இவானிடம் சொல்லிடு. நான் வரேன். நாளைக்கு பார்க்கலாம்” என அவளை பார்த்தப்படி மிஷால் விடைப்பெற்றான்.

உள்ளே வந்த ருஹானா இவான் அம்ஜத்துடன் விளையாடிக்கொண்டிருப்பதை யோசனையுடன் பார்த்தவள், ஆர்யனை கேள்வியாய் நோக்கினாள். ரஷீத்துடன் பேசிக்கொண்டே திரும்பிய ஆர்யன், ருஹானா தன்னை பார்ப்பது கண்டு வியப்படைந்தான்.

அப்போது அருகே வந்த ஜலால் “ஆர்யன் சார்! இது சரியான இடம் இல்லன்னு தெரியும். இருந்தாலும் நீங்க அனுமதி கொடுத்தீங்கன்னா நம்ம வியாபார ஒப்பந்தம் பத்தி இப்பவே பேசிடலாம்” என்று ஆர்யனிடம் சொல்லியவனின் பார்வை அவனையறியாமல் ருஹானா மீது சென்று மீண்டது.

அதை கவனித்துவிட்ட ஆர்யன் “நமக்கிடையே எந்த ஒப்பந்தமும் கிடையாது” என்று கடுமையாக சொல்ல, ஜலால் விழித்தான். அவனோடு சேர்ந்து ரஷீத்தும் முழித்தான். “ஆனா ரஷீத் சார் சொன்னாரே….“ என ஜலால் மேலே பேசும்முன் இடைமறித்து பேசிய ஆர்யன் “இதை பத்தி எந்த பேச்சுவார்த்தையும் தேவையில்ல” என்று முடித்தான். “சரி, நான் இன்னொரு வசதியான நேரத்தில் வரேன்” என்று சொல்லி ஜலால் சென்று விட்டான்.

ரஷீத் “ஆர்யன்! நாம இது பத்தி முடிவு எடுத்தோமே! நமக்கு நல்ல டீல் இது” என பதறியவன் “ஏன் மறுத்துட்டீங்க?” என கேட்க ஆர்யன் ருஹானாவை பார்த்துக்கொண்டே “அது அப்படித்தான். விடு” என்று சொல்ல ரஷீத் ஏதும் சொல்ல முடியாமல் தலையாட்டினான்.

“சித்தி! நாம மேலே ரூம்க்கு போகலாமா?” என இவான் கேட்க, “விருந்தாளிகள் இருக்காங்க. இன்னும் கேக் வெட்டலயே, செல்லம்! இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம், சரியா?” என ருஹானா இவானை சமாதானப்படுத்தினாள்.

ஆரஞ்சு சாற்றில் மாத்திரைகளை போட்டுக் கொண்டு வந்த கரீமா “எல்லாரும் உன்னை பார்க்கத்தான் வந்துருக்காங்க, இவான் டியர்” என்றவள் ருஹானாவிடம் “அவன் சோர்வாகிட்டான், நீயும் தான் களைப்பா தெரியுறே! இந்தா! இந்த ஜூஸை குடி!” என்று கொடுத்தாள்.

“ருஹானா! உன் டிரெஸை கெடுத்த அந்த டிரை கிளீனரை இனி நான் திட்ட மாட்டேன். அதை விட அருமையான ஆடை உனக்கு கிடைச்சிடுச்சே! ஆமா, இது எங்க வாங்கினே?” என கரீமா கேட்க, குழப்பான ருஹானா “இந்த ட்ரெஸ் என் ரூம்ல இருந்தது. நீங்க தான் வச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன்” என்று சொல்ல கரீமா யோசனைக்கு போனாள்.

Advertisement