Advertisement

அழகுக்கலை நிபுணர்களை வீட்டுக்கே வர வைத்து சல்மாக்கு அலங்காரம் செய்ய வைத்த கரீமா, ருஹானா பார்ட்டிக்கு வர முடியாதபடி தான் செய்த சதியை தங்கையிடம் பகிர்ந்துக் கொண்டாள். “ஒரு சாதாரண பொண்ணுக்கு நீ இவ்வளவு வேலை செய்யணுமா, அக்கா? என் அழகிலேயே நான் ஆர்யனை மயக்கிடுவேன், பார்” என்று தற்பெருமை அடித்துக்கொண்டாள்.

“சரி, சீக்கிரம் ரெடியாகி நான் சொல்லும்போது கீழே வா. உன் வருகை அப்படி அசரடிக்கணும்” என சொல்லி கரீமா தானும் தயாராக சென்றாள். அவளும் புத்தாடை அணிந்து கீழே வந்தவள், அம்ஜத் கழுத்து பட்டையை சரியாக கட்டினாள்.

ஆர்யனும் கோட் சூட்டில் பிரமாதமாய் நிற்க, முகம் தான் உர்ரென்று இருந்தது. நஸ்ரியா இவானை அதே நிற கோட் சூட் அணிவித்து கூட்டிவர “சித்தி எங்க? இன்னும் அவங்க வரலயா?” என்று இவான் கேட்க “வந்துட்டே இருப்பாங்க, லிட்டில் சார்” என நஸ்ரியா கூறினாள்.

இவானை பார்த்து அம்ஜத் பாசத்துடன் புன்னகைக்க, கரீமா “எத்தனை அழகா இருக்கான், பாருங்க அம்ஜத் டியர்” என்று அவன் கைப்பிடித்து அழைத்து வந்தாள். “மாஷா அல்லாஹ்! அப்படியே ஆர்யனை போல இருக்கான்” என அம்ஜத் தம்பி மகனை அருகில் அமர வைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

ஆர்யன் வாசலை பார்த்துக்கொண்டே கடிகாரத்தை பார்க்க, “சித்தி எப்போ வருவாங்க?” என இவான் கேட்டான்.

“இவான் டியர்! உன் சித்தி வேலை பார்க்கறாங்கல? வேலை முடிச்சிட்டு வருவாங்க” கரீமா ஆர்யனை பார்த்துக்கொண்டே சொன்னாள்.

“அவங்க வேலை எப்போ முடியும்?”

“அது சொல்ல முடியாதே! அது அவங்களுக்கு முக்கியமானது இல்லையா!”        

இதையெல்லாம் கேட்டுக்கொண்டே திரும்பிய ஆர்யன் “இங்க வா அக்னி சிறகே!” என அழைத்தான். இவான் அவனருகே வர “உன் டிரஸ் சரி செய்றேன்” என சொல்லி ஒழுங்காக அமைத்தான்.

“நான் போய் கிச்சன்ல என்ன வேலை நடக்குதுன்னு பார்க்கறேன். விருந்தாளிகள்லாம் இப்போ வர ஆரம்பிச்சிடுவாங்க” என்று சொல்லி கரீமா எழுந்து சென்றாள்.

ஆர்யனும், இவானும் சேர்ந்து வாசலை பார்க்க, ஆர்யன் தன் கடிகாரம் சரியாகத்தான் ஓடுகிறதா என அதை உற்று பார்த்தான்.

———-

ருஹானா கொத்தமல்லி தழைகளை வெட்டிக்கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்த மிஷால் “ருஹானா! என்ன வேலை இது? இதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு” என்று அவசரப்படுத்தினான். “இதோ முடிச்சிட்டேன், மிஷால்” என ருஹானா சொல்லும்போது சதாம் பரிசு பொருளுடன் உள்ளே வந்தான்.

“அக்கா! உங்க பேருக்கு வந்தது”

“ஆஹா! வந்துடுச்சா? அதை அங்கே வை, சதாம். நான் கை கழுவிட்டு எடுத்துக்கறேன்”    

சரி போதும்! கை கழுவிட்டு வெளியே வா, ருஹானா! சதாம்! நீ போய் டாக்ஸி கூட்டிட்டு வா” மிஷால் உத்தரவிட்டான். 

——–

ஜொலிக்கும் நட்சத்திரமாய் மின்னிய தங்கையை கண்டு கரீமாவுக்கு குதூகலம் தாள முடியவில்லை. 

“பிரமாதமா இருக்கே, சல்மா! ஆர்யன் அப்படியே மயங்க போறான்”

சல்மா பெருமையுடன் முடியை பின்னே தள்ளினாள்.

“உன் அழகு வீணா போக கூடாது. சிறந்தது மேல தான் உன் லட்சியம் இருக்கணும். ஏன்னா உன் அழகு அப்படிப்பட்டது. ஆனா?”

“ஆனா என்ன அக்கா? எதும் சரியில்லயா?

“உன் அழகை தூக்கி காட்ட இதோ பார்” என்று வைர டாலர் பதிக்கப்பட்ட சங்கிலியை காட்டினாள்.

“வாவ்!” என பிரமித்த சல்மா “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி அக்கா” என திரும்பி நிற்க, கரீமா அதை சல்மாவின் கழுத்தில் மாட்டினாள்.

“இதை விட அதிகமா உனக்கு கிடைக்கும். மத்தவங்க நினைச்சிக் கூட பார்க்க முடியாத ஆடை, அணிகலன் உன் வசமாகும். எல்லார் கண்ணும் உன்மேல தான் இருக்கும். என்ன செய்யணும்னு உனக்கு தெரியும் தானே?” என்று கரீமா கேட்க சல்மா தலை ஆட்டினாள்.  

“நான் சொல்லும்போது வந்தா போதும். எல்லா விருந்தாளிகளும் வந்த பின்னே கடைசியா நீ வரணும். அப்போ தான் உன் அழகை எல்லாரும் பார்த்து அசந்துடுவாங்க. இன்னைக்கு நீ தான் இங்க நட்சத்திரம்” என்று நினைவுப்படுத்தி வெளியே போனாள்.

———

ருஹானா தயாரித்த உணவுகளை மிஷால் பார்சல் செய்துக்கொண்டு வந்து மேசையில் வைக்கும் சமயம், இவானின் பரிசுப் பொருள் அங்கேயே இருப்பதை பார்த்தான். “சதாம்!” என சத்தமாக அழைத்தவன் “ருஹானா விட்டுட்டு போய்ட்டா பார்! கூப்பிடு அவளை!” என்றான்.

“அக்கா அப்பவே டாக்ஸில கிளம்பிட்டாங்களே! இந்நேரம் பாதி தூரம் போயிருப்பாங்க” என்றான். 

“இப்போ என்ன செய்றது?” என மிஷால் வருத்தத்துடன் பரிசை பார்த்தான்.

———- 

டாக்ஸி நடுவே பழுதாகி நிற்க, டிரைவர் அதை சரிபார்க்க முயல, ருஹானா தவித்தபடி நின்றிருந்தாள். “மேடம்! நீங்க சீக்கிரம் போகணும்னு தான் நான் இந்த குறுக்கு வழில வந்தேன். இப்படி வண்டி ரிப்பேராகிடுச்சி. இங்க டாக்ஸி ஒன்னும் கிடைக்காது. நீங்க மெயின் ரோடுக்கு நடந்து போய்டுங்க” என டிரைவர் சொல்ல, அவருக்கு பணம் கொடுத்துவிட்டு ருஹானா ஓட்டமும் நடையுமாக கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே வேகமாக சென்றாள்.

————

அர்ஸ்லான் மாளிகையில் சொற்பமே ஆனாலும் விருந்தினர் வந்துக்கொண்டே இருந்தனர். ஆர்யன் கடிகாரத்தை பார்க்க, பக்கத்தில் நின்ற ரஷீத் ஆர்யனை பார்த்தான்.

“இவான் இப்பவே இவ்வளவு அழகு. இளைஞனான பின்னாடி பெண்கள் எல்லாம் இவனை சுற்றி வர போறாங்க” என வந்திருந்த பெண் ஒருவர் சொல்ல, அங்கே நின்ற மற்றவர்கள் சிரித்தனர். கரீமா “ஆமா, இவான் அர்ஸ்லான் அசத்த போறார்” என சொல்லி வந்தவர்களை உபசரித்தாள்.

“மேம்! கேக் கொண்டு வரவா?” என நஸ்ரியா கரீமாவை கேட்டாள்.

“ஆனா என் சித்தி இன்னும் வரலயே?” இவான் தவிப்புடன் கேட்க ஆர்யன் இங்கே திரும்பி பார்த்தான்.

“ஆனா இவான் டியர், நாம விருந்தாளிகளை காக்க வைக்க கூடாதே!” 

“இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம்” இவான் கெஞ்ச…

“கொஞ்ச நேரம் பார்க்கலாம்” என ஆர்யன் கரீமாவிடம் சொன்னான்.

“சரி ஆர்யன், நீ சொன்னபடி செய்யலாம்” என்று சொன்ன கரீமா, நஸ்ரியாவிடம் சல்மாவை அழைத்து வர சொன்னாள்.

“இவான்! என்ன சாப்பிடுறே?” என கரீமா கேட்க “இல்ல! அப்புறம் சாப்பிடுறேன்” என்று இவான் சொல்ல, ஆர்யனின் பொறுமை எல்லை மீறியது.

“நீங்க அழைத்த எல்லாரும் வந்துட்டாங்க, சார்” என ஜாஃபர் வந்து சொல்ல, அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யன் வேகமாக கதவருகே வந்தான்.

அங்கே இரண்டு மெய்காப்பாளர்கள் நிற்க “இவான் சித்தி வேலை செய்ற இடத்துக்கு போய் அவள இங்க கூட்டிட்டு வாங்க. ஜாஃபர் முகவரி அனுப்புவார். அவ வர மாட்டேன்னு சொன்னா அவ பேச்சை கேட்காதீங்க. தேவைப்பட்டா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வாங்க” என உத்தரவிட்டான். அவர்கள் தலை தாழ்த்தி சென்றனர்.

சில விநாடிகள் யோசித்தபடி நின்றவன், கதவை படாரென சாத்தி திரும்பி உள்ளே வந்தான். தற்செயலாக தலையை உயர்த்தியவன் அப்படியே உறைந்து நின்றான்.

இடதுபுற படிக்கட்டில் அழகு சிலையாக கருப்பு நிற உடையில் சல்மா சிரித்தபடி இறங்கி வந்துக்கொண்டு இருந்தாள். ஆர்யன் அசந்து போய் நிற்பதை பார்த்தவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பெருமையுடன் மெல்ல இறங்கியவள், தான் கீழே வந்த பின்னும் ஆர்யன் தலை நிமிர்ந்தே இருக்க, அவன் பார்வையும் மேலேயே இருக்க முகம் சுருங்கினாள்.

மாடிப்படி வளைவில் ருஹானா ரோஜா நிற உடையில் நிற்க, ஆர்யன் தலை நிமிர்ந்து, வாய் லேசாக திறந்து, கண்கள் மேலே பார்க்க, நின்ற இடம் விட்டு நகராமல் ஆணியடித்தது போல் அசையாது சிலையாய் நின்றான்.

ருஹானாவும் ஆர்யனையே பார்க்க, இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த சல்மா ருஹானாவின் அழகை பார்த்து பொறாமை கொண்டாள்.

பார்த்த விழி பார்த்தபடி இமை தட்டாமல் ஆர்யன் பார்க்க, ரோஜா தோட்டமே நகர்வது போல ருஹானா மெல்ல படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தாள். 

அன்று கப்பல் விழாவிற்கு இவானுடன் கருப்பு நிற உடையில் வலப்புற படிக்கட்டில் இறங்கியவள், இன்று இவான் பிறந்த நாள் விழாவிற்கு ரோஜா நிற உடையில் இடப்புற படிக்கட்டில் இறங்குகிறாள். அன்று அவள் அழகில் மயங்கிய ஆர்யன் இன்று சர்வமும் மறந்து போனான். 

தாங்கள் இருவர் மட்டுமே இந்த உலகில் இருப்பது போல் சுற்றுப்புறம் கவனிக்க மறுத்தான். அருகில் நின்ற சல்மா அவன் கண்ணுக்கு புலப்படவே இல்லை.

வானத்தில் இருந்து நிலா அவன் மாளிகைக்கு இறங்கி வர, இறங்கி வரும் ஒவ்வொரு அடியும் நிலவின் வெளிச்சம் அவனின் கடின சுவரை உடைக்க, அவளின் அசைவுக்கேற்ப அவனின் கண்ணின் மணிகளும் அசைந்தது. தலையும் தாழ்ந்தது.

அவள் கைகள் கைப்பிடியை தடவிக்கொண்டே வர, அவள் பார்வை அவன் இதயத்தை வருடியது.

கடைசிப்படியில் நின்ற சல்மா தானாகவே ஒதுங்கி ருஹானாக்கு வழிவிட்டாள். எந்த அணிகலன்களும், அலங்காரமும் இன்றி ருஹானா குளுமையாய் ஒளிர, பக்கத்தில் பார்த்த சல்மா கொதித்து போனாள்.

ஆர்யனின் நேருக்கு நேர் ருஹானா வந்தபின்னும் அவன் பார்வையை விலக்காமல் மலர்ந்த முகத்துடன் அவளை பார்க்க, ருஹானாவின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. கண்களை தாழ்த்திக் கொண்டவள் அடுத்த அடியை எடுத்து வைத்தாள்.

பொறாமையில் பொசுங்கிய சல்மா, கீழே அழகாக விரிந்திருந்த ருஹானாவின் ஆடையின் மேல் கால் வைத்து அழுத்திக்கொண்டாள். ருஹானா நிலை தடுமாற, ஆர்யனின் கண்கள் விரிய, இதயம் படபடக்க, கைகள் நொடியில் செயலாற்ற, ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவன் அவளை பூங்கொத்தாய் தாங்கிக்கொண்டான்.

தன் செயல் தனக்கே தீங்காய் அமைந்தது கண்டு சல்மா அதிர்ந்து போனாள்.

தூரத்தில் இருந்தே காந்தமாய் ஈர்த்தவள், மிக அருகே பஞ்சு போன்ற மென்மையால் அவனை கட்டிப் போட்டாள். அவன் கண்கள் அவள் கண்களை ஊடுருவிக்கொண்டே இருக்க, அவளும் திகைத்துப் போய் அவனையே உற்று நோக்கிக்கொண்டே இருந்தாள்.    

இரவுக்கு அழகூட்டும்

நிலவின் உதயம்…

தவிப்புகளை போக்கி

அவ்விரவை மகிழ்வூட்ட

தேவதையின் பிரசன்னம்

இளஞ்சிவப்பில்……

உடை மிதிப்பட்டு தடுமாறுவது

அவள் மட்டுமா….?

தலைகுப்புற விழுந்தது 

அவனல்லவா….?

தாங்கி பிடிக்கும் அவனின் 

விழிகளை நங்கூரமாய் பிடிக்கும்

அவள் விழிகள்…!

(தொடரும்)

Advertisement