கண்களை உருட்டி யோசித்தவள் “சித்தப்பாக்கு சோர்வா இருந்திருக்கலாம். நிறைய வேலை பார்க்கறார் தானே!” என அவனை சமாதானப்படுத்தி “செல்லம்! என்ன வரையற?” என அவன் கவனத்தை மாற்றினாள். இவானுடன் சேர்ந்து படங்களுக்கு வர்ணம் பூசினாலும், அவள் நினைப்பு ஆர்யன் உடல்நிலையை எண்ணி கவலை பூசிக்கொண்டது.

இவானை வரைய சொல்லிவிட்டு அவள் அறைக்கு போக இருந்தவள் திரும்பி ஆர்யன் அறை நாடி போனாள். அவன் தூங்கியிருப்பானோ என ஐயம் கொண்டவள் மெதுவாக கதவை தட்டினாள். கணினி முன் அமர்ந்து வெறித்துக்கொண்டிருந்த ஆர்யனுக்கு அந்த சிறு ஒலியும் நன்றாக கேட்டது. பதில் தராமல் கதவை நோக்கினான்.

ருஹானா இப்போது சத்தமாக தட்டினாள். பின் காதை கதவில் வைத்து உள்ளே ஏதும் சத்தம் கேட்கிறதா என கவனித்தாள். கோபத்தில் நெஞ்சு தடதடத்தாலும் ஆர்யன் ஒன்றும் சொன்னானில்லை. “உள்ளே இருக்கீங்களா?” என கிசுகிசுப்பாக கேட்டாள். அவள் குரல் கேட்டு அவனுக்கு கோபம் வடிந்தாலும் மறுமொழி தரவில்லை.

ருஹானா கைப்பிடியை திருப்பினாள். கதவு திறக்கவில்லை. உள்ளே வரும்போதே ஆர்யன் கதவை தாளிட்டு இருந்தான். இப்போது தன் செயலுக்கு தானே நொந்துக்கொண்டான். ஆனால் எழுந்து சென்று திறக்கவும் கௌரவம் அனுமதிக்கவில்லை.

சுற்றுமுற்றும் பார்த்த ருஹானா “நீங்க நல்லா இருக்கீங்களா?” என தாழ்ந்த குரலில் வினவினாள். ஆர்யனுக்கு லேசாக ஒட்டியிருந்த கோபமும் காற்றில் பறந்தது. என்றாலும் மிஷாலுடன் அவள் சிரித்தபடி பேசியது கண்களில் தோன்றி கால்களை கட்டிப் போட்டது.

ஜாஃபரும் சாராவும் பேசிக்கொண்டே அங்கே வரும் சத்தம் கேட்ட ருஹானா அந்த இடத்திலிருந்து ஓடி போனாள்.

——–

சல்மா கண்ணாடி முன் அமர்ந்து தலை சீவிக்கொண்டிருக்க, உள்ளே வந்த கரீமா “சல்மா! டின்னர் டைம்ல நீ நல்லா இவானை கவனிச்சிக்கிட்டே. ஆனா அதோட திருப்தி அடையக்கூடாது. இப்போ போய் ஆர்யன்ட்ட நான் சொல்லித் தர்றது போல பேசு” என அனுப்பி வைத்தாள்.

சற்று இடைவெளிக்கு பின் ஆர்யன் கதவு மீண்டும் தட்டப்படவும், இத்தனை நேரம் கதவையே பார்த்திருந்த ஆர்யன் ஒருபக்கம் கோபமாகவும், மறுபக்கம் ருஹானாவை பார்த்துவிட ஆவலாகவும் வேகமாக வந்து கதவை திறந்தான். “என்ன வேணும்?” என அவன் கத்த அந்தப் பக்கம் நின்ற சல்மா திடுக்கிட்டாள்.

“நான் உங்களை தொந்திரவு செய்யலயே?” என சல்மா கேட்க ஆர்யன் ஏமாற்றமாக விழித்தபடி ஒதுங்கி நின்றான். அந்த இடைவெளியில் உள்ளே வந்த சல்மா “நான் பார்ட்டி ஏற்பாடு பாதி தான் சொன்னேன். அதுக்குள்ள நீங்க போயிட்டீங்க. பார்ட்டி தீம் பத்தி உங்க அபிப்ராயம் கேட்க வந்தேன்” என பேசியபடியே படியிறங்கி முன்னேறினாள்

அவளை முறைத்துக்கொண்டே நின்ற ஆர்யன் “எனக்கு வேலை இருக்கு நீ இதெல்லாம் இவான் சித்தி கிட்ட கேட்டுக்கோ” என்றான் “நான் அவட்ட கேட்டேனே! ஆனா அவ எந்த ஆர்வமும் காட்டல” என சல்மா அணைந்திருந்த தணலை விசிறி விட்டாள். கடுப்பான அவன் முகத்தை பார்த்து திருப்தியானவள் “சரி, நானே பார்த்துக்கிறேன்” என்று சிரிப்புடன் சென்று விட்டாள்.

‘என் சொந்த வேலையை பார்க்கப் போறேன்’ என சொல்லி சென்றவளையும், இவான் பார்ட்டி ஏற்பாட்டில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாதவளையும் எண்ணி வெகுண்ட ஆர்யன் விறுவிறுவென வெளியே வந்தான். ருஹானா அறை நோக்கி நடந்தவனை அவள் குரலே நிறுத்தியது.

“குட்டி செல்லம்! நல்லா இருக்கா? மெதுவா சாப்பிடு!” என இவானிடம் பேசும் குரல் கேட்கவும் இவான் அறைக்கதவை லேசாக திறந்த ஆர்யன் சுவர் ஓரமாய் நின்று உள்ளே எட்டி பார்த்தான்.

“மிஷால் அண்ணா உனக்காக செஞ்சி கொடுத்தார். நானும் உதவி செஞ்சேன்”

“நல்லா இருக்கு சித்தி! நீங்க இது கொண்டு வரத்தான் போனீங்களா?”

சிறிது யோசித்த ருஹானா “ஆமா, இல்லை… ரெண்டும் தான். அங்க வேலை செய்ய தான் போனேன்”

“நீங்க ஏன் வேலை செய்யணும், சித்தி?”

சிரித்த ருஹானா “ஏன்னா என்னோட அன்பான ஒருத்தருக்கு பிறந்தநாள் வருதாம். அவருக்கு நான் பரிசு வாங்கணுமாம். அதுக்கு எனக்கு பணம் தேவையாம். அதான் நான் அங்க போனேன். வேலை செய்தேன். சம்பளம் வாங்கினேன்” என்றாள்.

உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன் நெஞ்சமெல்லாம் செடியில்லாமலே பூ பூத்தது. காலையிலிருந்து தலையில் ஏற்றி வைத்திருந்த பாறை உருண்டோடியது.

“எனக்கு போதும் சித்தி” என இவான் சாப்பிட்டு முடிக்கவும் அவன் வாயை துடைத்தவள் “இந்த பாத்திரத்தை வச்சிட்டு வரேன்” என்று எழுந்து வெளியே வந்தாள். எதிரே ஆர்யனை சடாரென பார்க்கவும் பயந்து போனவள் ஆவென கையிலிருந்த பாத்திரத்தை தவற விட்டாள். அது அவன் கால் மேல் பட்டு கீழே விழவும் தோள்களை சுருக்கி கண்களை மூடிக்கொண்டாள்.

ஆர்யன் அவளை பார்க்க, சுதாரித்தவள் குனிந்து பாத்திரத்தை எடுக்க முயன்றாள். “விடு! அது சுத்தம் செய்ய இங்க ஆள் இருக்காங்க” என ஆர்யன் சொல்ல, “இது என் தவறு தான். நானே எடுக்கறேன்” என அவள் இன்னும் குனிய “இதெல்லாம் தேவையில்ல. நீ இவானை மட்டும் கவனி” என்று கடுமையாக சொன்னான்.

ருஹானா நிமிர்ந்து அவனை பார்க்க “பகலெல்லாம் அவன் உன்கூட ஒளிஞ்சி விளையாட காத்துக்கிட்டு இருந்தான். நாள் பூரா அமைதியில்லாம இருந்தான்” என சொன்னவன் ‘இவானுக்கும் மேல் நான் அமைதியற்று சுத்திட்டு இருந்தேன்’ என்பதை மட்டும் சொல்லாமல் திரும்பி நடந்தான்.

சமீபமாக ஆர்யன் கட்டளைக்கு கீழ்படியாமல் நடந்து கொள்ளும் ருஹானா, இப்போதும் அவன் சென்றதும் கீழே விழுந்த பாத்திரத்தின் மேல் கையை வைத்தாள். “தொடதேன்னு சொன்னேன்ல. இனிமேல் என் பேச்சை கேட்க கத்துக்கோ” என ஆர்யன் அருகே வந்து சீறவும் அவள் கண்களில் நீர் வர பார்த்தது. அவள் கண்களை பார்த்துக்கொண்டே வேகமாக சென்றுவிட்டான்.

காலையில் காபி கொண்டு வந்த ஜாஃபரிடம் ஆர்யன் “இவான் எழுந்துட்டானா?” என கேட்டான். அவன் இல்லையென சொல்லி சென்றதும் நேற்று சித்திக்கும் இவானுக்கும் நடந்த உரையாடலை மனதில் ஓடவிட்டுக்கொண்டே காப்பியை குடிக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

“வரலாம்” என அவன் சொன்னதும் ருஹானா உள்ளே வர ஆர்யன் தலை தூக்காமல் அவள் கால் வரை பார்த்துவிட்டு முன்னே இருந்த அலுவலக கோப்பில் பார்வையை பதித்தான். ருஹானா தயங்கியபடியே அருகில் வந்து எதுவும் பேசாமல் நின்றாள்.

“எஸ்!” என நிமிராமல் அவன் வினவ “எப்படி இருக்கீங்க? நேத்து இரவு வலி இருந்ததா?” என அவள் கேட்க “ஒன்னும் இல்ல. ஆன்டிபயாட்டிக் வேலை செய்யுது” பதில் வந்தாலும் பார்வை வரவில்லை.

அவள் இதற்கு மேல் என்ன கேட்பது என புரியாமல் தயங்கி நின்றாள். அவனும் குனிந்தே இருந்தான். சில நிமிட மௌனத்திற்கு பின் நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் ஒரு பக்கம் சாய்ந்து தலை உயர்த்தி அவளை பார்த்து “வேறென்ன?” என மிடுக்காக கேட்டான்.

கண்களை தட்டி விழித்தவள் திரும்பி நடந்து வெளியே போய்விட்டாள். அத்தனை நேரம் வைத்திருந்த பாவனையை விட்டவன் நாற்காலியிலிருந்து எழுந்து உள்பக்கமாக திரும்பி மாடித் தோட்டத்தை பார்த்தபடி நின்றான். மனம் ஏன் ஏமாற்றமாய் உணர்கிறது என அவனுக்கு புரியவில்லை. என்ன எதிர்பார்த்தான் என்றும் தெரியவில்லை.

“ஏற்கனவே உங்களுக்கு சொன்னேன்” என பின்னால் கேட்ட குரலில் தூக்கிவாரிப்போட சடக்கென்று திரும்பினான். கையில் மருந்து ட்ரேயுடன் நின்றிருந்த ருஹானா “யாருக்கும் கடனாளியா இருக்க எனக்கு பிடிக்காது. உங்களுக்கு கட்டு மாத்த வேண்டியது அவசியம்” என அதை தூக்கிக் காட்டினாள்.

அவன் அவளையே அசையாது பார்க்கவும், தலையை சாய்த்து “தயவுசெய்து!” என்று பாவமாக கேட்டாள். அதற்கு மேல் மறுக்க முடியாமல் பாதி சட்டையை கழற்றி விட்டுக்கொண்டே போய் சோபாவில் அமர்ந்தான். அவளும் அவனுக்கு உதவி செய்தபடி பழைய கட்டை அகற்றினாள்.

உள்ளே இருந்த கருப்பு நிற பனியன் சொன்னது, ‘உன்னை எதிர்பார்த்து தான் என்னை மாட்டினான். நீயும் சரியா வந்துட்டே’… அவளுக்கு அது கேட்க வாய்ப்பில்லை, அல்லவா! கடமையும் கருத்துமாக அவள் வேலையை பார்த்தாள்.

மருந்தை பஞ்சில் ஊற்றி காயத்தை துடைக்கும் முன் சொன்னாள். “இது எரியும். பொறுத்துக்கங்க!” அவனுக்கு இதெல்லாம் ஒரு வலியா, என்ன? ஆனால் அவளுக்கு வலித்தது போல… முகத்தை சுளித்துக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுத்தாள்.

காயத்தை ஆராய்ந்தவள் “சீக்கிரம் குணமாகுது. ரெண்டு மூணு நாளுக்கு அப்புறம் கட்டு தேவையில்ல” என சொல்ல அவனுக்கு இப்போது தான் எரிந்தது.

“உங்களுக்கும் என் தொல்லை இருக்காது” என அவள் தொடர்ந்து சொல்ல ஆர்யன் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. “இவான் எழுந்துட்டானா?” என்று ருஹானாவிடம் கேட்டான். இப்போது தானே ஜாஃபரிடம் இதே கேள்வியை கேட்டான். ருஹானாவிடம் பேச்சை வளர்க்க விரும்புகிறானோ?

“இல்ல.. இன்னும் தூங்குறான்”

“எழுந்ததும் இங்க வர சொல்லு”

“சரி” என்று சொன்னபடி கட்டை ஒட்டி தடவி விட்டாள். அவள் தொடுகை அவனை சிலிர்க்க செய்ய அசையாது நேர்பார்வை பார்த்தான்.

“இதையும் ஒட்டிடுறேன்” என அவள் இன்னொரு டேப்பை எடுக்க, சற்று யோசித்தவன் “இதுவே போதும்” என சட்டென்று எழுந்து விட்டான். எதும் புரியாமல் பார்த்த ருஹானா “உங்க விருப்பம்” என செல்ல சட்டையை மாட்டிக்கொண்டே  அவளை பார்த்தான், எப்போதும் போல.

———-

உணவு மேசையில் இவான் பழசாறு குடித்து விட்டு தனக்கு மஞ்சள்நிற மீசை வந்திருப்பதை ருஹானாவிடம் சிரிப்புடன் காட்டினான். அவளும் புன்சிரிப்புடன் அதை துடைத்து விட்டாள்.

“இவான் உனக்காக நான் பெரிய பார்ட்டி செய்யலாம்ன்னு நினைச்சேன். இப்போ சின்னதாகிடுச்சி. பரவாயில்ல.. அதையும் சிறப்பா செஞ்சிடுவோம். சொல்லு, உனக்கு என்ன’ பரிசு வேணும்?” என்று சல்மா கொஞ்சினாள். இவான் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

சல்மா முகம் கடுகடுக்க, ருஹானா “செல்லம்! நீ ஆசைப்பட்டது சொல்லு” என்று இவானை தூண்ட அவன் வேண்டாமென தலையாட்டினான். சல்மா முழிக்க கரீமா உதவிக்கு வந்தாள். “எல்லாம் சர்ப்பரைஸா தருவோம். நான், சல்மா அக்கா, உன் சித்தி உனக்கு பரிசுகள் தருவோம்” என்று சொல்ல இவான் சரியென தலையசைத்தான்.

கரீமா “ருஹானா உன் டிரஸ் சுத்தம் செய்ய அனுப்பினோம்ல. அந்த உருப்படாதவன் உன் டிரெஸ்ஸை கருக்கிட்டான். அவனை நல்லா திட்டிவிட்டுட்டேன். ஆனா ஆடை வீணாத்தான் போச்சி” என தன் பித்தலாட்டத்தை எடுத்துவிட, அதை கேட்ட ருஹானா அதிர்ந்து போனாள். “அச்சோ! ஆனா அது சாரா மேம் பாதுகாத்து வச்சிருந்த முக்கியமான உடையாச்சே!” என கலங்கிய குரலில் சொன்னாள்.

அப்போது அங்கே தேநீர் பரிமாற வந்த சாராவின் முகமும் சிவந்திருந்தது. அதை பார்த்து நொந்துபோன ருஹானா “என்னை மன்னிச்சிடுங்க, சாரா மேம்! இப்படி ஆகும்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல” என மன்னிப்பு வேண்டினாள்.

கரீமா இடைபுகுந்து “ருஹானா! சாராவும் நம்ம குடும்பத்தில ஒருத்தர் தான். நான் ஏற்கனவே அவங்க கிட்ட சொல்லிட்டேன். அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க” என சப்பைக்கட்டு கட்டினாள்.