Advertisement

“சரி தான் கரீமா மேம்! அது ஒரு விபத்து. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? ருஹானா மேம்! என் கவலையெல்லாம் நீங்க பிறந்தநாள் பார்ட்டிக்கு அதை போட வச்சிருந்தீங்களே!” என சாரா கரீமாவிடம் தலையாட்டி ருஹானாவின் நிலைக்கு வருந்தினார்.

“அது பரவாயில்ல. நான் பார்த்துக்கறேன். என்னால உங்க துணி போய்டுச்சே!” என ருஹானா மனதார வருத்தப்பட்டாள்.

ஆர்யன் அவளையே வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு உடுத்த உடை இல்லாது போயினும் அடுத்தவர் இழப்பை நினைத்து உண்மையாக கவலைப்படும் பெண்ணின் குணம் அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

அப்போது ரஷீத் போனில் அழைக்க “இனிய உணவு!” என்று சொல்லி ஆர்யன் எழுந்து மேலே சென்றான்.

உடன்பிறப்புகள் ரகசியமாக சிரிக்க, கரீமா “ருஹானா! கவலைப்படாதே. நான் உனக்கு வேற வாங்கி தரேன்” என சொல்ல, ருஹானா “அதுக்கு அவசியம் இல்ல, கரீமா மேம். நன்றி. நான் என் உடையே போடுறேன்” என கூறினாள்.

பேசிக்கொண்டே தன் அறைக்கு வந்த ஆர்யன் “தாய்லாந்த்ல இருந்து வந்த எலக்ட்ரானிக் சரக்கெல்லாம் கோடௌன் மாத்தியாச்சா, ரஷீத்? சரி, எல்லாம் பாதுகாப்பா இருக்கான்னு சரிபார்த்துக்கோ. வேற எதும் பிரச்சனைனா என்னை கூப்பிடு” என்று சொன்னவன் ரஷீத் சரியென சொல்லி போனை வைக்க போகவும் “ரஷீத்!” என அழைத்தான். மூச்சை இழுத்து மெதுவாக விட்டவன் “இன்னொரு வேலை நீ செய்யணும், எனக்காக” என்றான்.

———–

இவான் ருஹானாக்கு மறைத்து வரைந்துக் கொண்டிருக்க “இன்னுமா முடியல என் அன்பே! எனக்கு ஆவலை அடக்க முடியல. காட்டு இவான் செல்லம்” என ருஹானா கெஞ்சினாள். சுழலும் நாற்காலியை திருப்பி சித்தியை பார்த்து இல்லை என தலையாட்டிவிட்டு இவான் வரைய ஆரம்பித்தான்.

“எதாவது டிப் கொடேன். மிருகம் தானே வரையற?”

நாற்காலியில் சுழண்டு சிரிப்புடன் “இல்ல சித்தி!” என்று திரும்பிக் கொண்டான்.

“அப்போ கப்பல்?”

திரும்ப சுத்தினான். சிரித்தான். “இல்லயே!” என்றான்.

“என் ஆர்வம் அதிகமாகுதே! செல்லம்! சீக்கிரம் முடியேன்”

சித்தியின் பொறுமையை மேலும் சோதிக்காமல் இவான் தான் வரைந்து முடித்த படத்தை காட்டினான்.

“ஹே! அற்புதமா வரைஞ்சிருக்கே தேனே! வெல்டன்”

வீடு, பறவை, மேகம், மரம், பலூன், சைக்கிள் என அந்த படம் மிக அழகாக இருந்தது.

“ஆஹா! இந்த பலூன் உன் பர்த்டே பார்ட்டிக்கு தானே?”

அவன் வழக்கமான மூன்று வேகமான தலையசைப்பு.

“ஓ! சைக்கிள் கூட இருக்கே! ரொம்ப அழகா இருக்கு”

“சித்தி உங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?”

“தெரியுமே, அன்பே! சின்ன வயசுல நானும் உங்க அம்மாவும் சைக்கிள்லயே தான் எங்கனாலும் போவோம்”

கேட்ட இவான் சோகமானான். “எனக்கு ஓட்ட தெரியாது, சித்தி”

“நான் உனக்கு சொல்லி தரேன், குட்டி செல்லம். ஈஸியா கத்துக்கலாம். ஜாலியா இருக்கும்” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவருகே எப்போதும் நிற்பவன் வந்துவிட்டான்.

இவானை தூக்கி மடியில் வைத்தவள் “இப்போ குளிக்கும் நேரம்” என்று கண்களை உருட்டி சொன்னாள்.

சித்தியை போலவே செய்ய பார்த்த இவான் கருவிழிகள் இரண்டையும் மூக்கின் அருகே ஒன்றுசேர்க்க முயன்றான். ருஹானாவும் அதே போல செய்ய இருவரும் சத்தமிட்டு சிரித்தனர். வெளியே நின்ற ஆர்யனுக்கும் அந்த சத்தம் இதமாய் இருந்தது.

“சாரா ஆன்ட்டி உனக்கு சாப்பாடு கொடுப்பாங்க. ஒழுங்கா சாப்பிடணும்” என ருஹானா சொல்லவும் இவான் தலையாட்டிவிட்டு “சீக்கிரம் வந்துடுவீங்க தானே, சித்தி?” என முகம் சுருக்க, வெளியே நின்றவன் வேகமாக போய்விட்டான்.

“கண்டிப்பா என்னுயிரே!” என்றவள் இவானை இறுக கட்டிக்கொண்டாள். “எங்கே அதே போல செய் பார்க்கலாம்” என்று கண்களை இணைத்துக் காட்ட இவானும் செய்ய சிரித்து விளையாடினார்கள்.

———

‘தன் சதித்திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறுமா?’ என யோசித்துக்கொண்டே கண்ணாடி முன் கரீமா நிற்க, அம்ஜத் உள்ளே வந்தான். அவன் கையில் அழகிய ரோஜா மலர் இருந்தது. அதை கரீமாவிடம் நீட்டியபடியே “கரீமா! இந்த ரோஜா உனக்காக கொண்டு வந்தேன்” என ஆசையுடன் சொன்னான்.

“நான் வேற யோசனைல இருக்கேன், அம்ஜத். நீங்க போங்க” என கரீமா எரிச்சலுடன் சொல்லியும் அம்ஜத் நீட்டிய கையை இறக்கவில்லை. அவள் தேவைக்கு சொல்லும் ‘அம்ஜத் டியர்!’ எல்லாம் எங்கே போயிற்றோ?

“இதோட வாசனை பாரேன்” என அம்ஜத் முகத்தருகே கொண்டு வர ஆத்திரமாய் அந்த ரோஜாவை பிடிங்கியவள் கையை அதன் முள் பதம் பார்த்தது. மேலும் ஆங்காரமானவள் அந்த மென்மையான மலரை பிய்த்து எறிந்தாள்.

“போங்க இங்கிருந்து!” என பல்லை கடித்துக்கொண்டு கத்தினாள். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல அம்ஜத் அவளிடம் சிக்கிக்கொண்டானோ? முகம் வாடிப்போன அம்ஜத் தலை குனிந்துகொண்டே மெதுவாக வெளியே சென்றான்.

கதவு தட்டப்படவும் “ஒரு நிமிஷம்!” என்று சொன்ன கரீமா கால்களாலேயே ரோஜா இதழ்களை கட்டிலுக்கு அடியில் தள்ளினாள். “வரலாம்” என அவள் குரல் கொடுக்க தயக்கமாக ருஹானா உள்ளே வந்தாள். அவளை புன்னகை தடவி வரவேற்ற கரீமா என்ன தகவலென விசாரித்தாள்.

“கரீமா மேம்! நான் தினமும் ஒரு ரெண்டு, மூணு மணி நேரம் வேலைக்கு போகலாம்ன்னு யோசிக்கிறேன்”

“ஆஹா! இது நல்ல செய்தியாச்சே! எங்க போக போறே?”

“என் தோழன் மிஷால் உணவகத்துக்கு தான். உங்களுக்கு அவனை தெரியுமே!”

“ஆமா ஆமா! நல்ல பையன். தாராளமா போயிட்டு வா. வேலை பார்க்குறது மிக முக்கியம்”

மேலும் தயங்கிய ருஹானா “அந்த ரெண்டு மணி நேரம் நீங்க இவானை பார்த்துக்க முடியுமா? அவனை தனியா விட எனக்கு கவலையா இருக்கு” என மெதுவாக கேட்டாள்.

“நீ சொல்லணுமா, என்ன? நான் இருக்கேன், சல்மா இருக்கா, இன்னும் எத்தனை பேர் இருக்கோம். நான் கவனிச்சிக்கறேன். நீ கவலைப்படாம போயிட்டு நிதானமா வா”

முகம் தெளிந்த ருஹானா நன்றி சொல்லி வெளியேற கரீமா திருட்டு புன்னகை புரிந்தாள்.

———–

வரவேற்பு அறையில் சல்மா எல்லாரையும் வேலை வாங்கிக்கொண்டிருக்க, நஸ்ரியா, ஜாஃபர், சாரா என அனைவரும் இவான் பிறந்தநாள் விழாவிற்கு உற்சாகமாகவே தங்கள் பங்களிப்பை தந்தனர். தங்கையின் விழா ஏற்பாடுகளை சத்தமாக பாராட்டிகொண்டே வந்த கரீமா சல்மாவை தனியாக அழைத்தாள்.

“உனக்கு ஒரு சந்தோசமான செய்தி. அந்த சித்தி ஹோட்டல்ல வேலை செய்ய போறா. அங்க நான் நாளைக்கு பெரிய ஆர்டர் கொடுக்கப் போறேன். அவளால பார்ட்டிக்கு வர முடியாது”

“அக்கா! இதெல்லாம் தேவை இல்லாதது. அவ வந்தாலும் நான் தான் எல்லாரையும் கவர போறேன். முக்கியமா ஆர்யனை. உன் தங்கை மேல நம்பிக்கை வை அக்கா!”

“வெரிகுட். ஆனாலும் நான் ரிஸ்க் எடுக்க விரும்பல”

“சரிக்கா, உன் ஆசை நீ செய். என் வேலைய நான் பார்க்கறேன்”

——-

சல்மா மேலும் சில ஆட்களை வைத்து வரவேற்பறையை அலங்கரிக்க சோபாவில் அமர்ந்து இவான் வரைந்து கொண்டிருந்தான். பக்கத்தில் கரீமா போனில் பேசிக்கொண்டிருந்தாள். கேக் வெட்டும் மேசையை சரிபார்த்த சல்மா இவானிடம் கேட்டாள். “இது உனக்கு பிடிச்சிருக்கா?”

அவளை பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்ட இவான் கரீமாவிடம் கேட்டான்.

“சித்தி எப்போ வருவாங்க?”

“அவங்களுக்கு வேலை இருக்குமே! நீ கவலைப்படாதே. நான் இருக்கேன், சல்மா அக்கா இருக்காங்க. இதோ! உன் சித்தப்பா கூட வந்துட்டாரே!”

ஆர்யன் சுற்றிலும் பார்த்துவிட்டு இவானின் கூம்பிய முகத்தை பார்த்து இறுகிப்போய் நின்றான்.

அவன் அருகே வந்த கரீமா “அவளும் சின்ன பொண்ணு தானே! அவ ஆசையை நாமும் புரிஞ்சிக்கணும். காலைல என்கிட்டே வந்து சில மணி நேரம் வேலைக்கு போறதை பத்தி சொன்னா. அவ இல்லாத நேரம் இவானை பார்த்துக்க சொல்லி கேட்டா. இவ்வளவு நேரம் எடுத்துப்பான்னு நான் நினைக்கல” என்று நைச்சியமாக பேச சல்மா சிரிப்புடன் ஆர்யன் முகத்தை கவனித்தாள்.

அவன் முகம் கடுகடுவென இருந்தது. இன்னும் கடுகை வெடிக்க வைக்க மேலும் கரீமா பேசினாள். “அவ வேலை முடிஞ்சிருக்கலாம். ஒருவேளை நண்பர்களோட நேரம் செலவழிக்கலாம். இந்த மாளிகை அவளுக்கு போரடிச்சிருக்கும். நாம கூட” ஓரக்கண்ணால் ஆர்யனை பார்த்தாள்.

சிறகை கொண்டாடி ஓர் விழா…

சிறகு கொண்டாடும் ஓர் உறவின்றியா?

தாமதமாகும் ஒவ்வொரு நொடியும்

தேடுதலும் தவிப்பும் கொதிப்பும்…

மிஷால் தந்த துணிப்பெட்டியை ருஹானா வாங்கிய காட்சியும் இருவரின் சிரித்த முகமும் ஆர்யனை வதைத்தது. அனல் மூச்சு விட வைத்தது. வேகமாக வெளியேற வைத்தது.

“சித்தி கதை இந்த முறை முடிவுக்கு வந்துடும். நாளைய இரவு விழாக்கு முன்னாடி, இன்னைக்கு இரவு தான் சிறப்பானது” என கரீமா சொல்ல சகோதரிகள் வெற்றி புன்னகை செய்தனர்.

——–

ருஹானா செய்து வைத்திருந்த உணவுகளை வாசனை பார்த்த மிஷால் “ரொம்ப நல்லா இருக்கே!” என மகிழ்ந்தான். ருஹானா சிரிக்க, மிஷால் அவளுக்கு பணக்கவரை கொடுத்தான். “வாங்கிக்கோ ருஹானா! நேற்றும், இன்றும் நீ செய்த வேலைக்கு”

“இப்போ என்ன அவசரம், மிஷால்? நாளைக்கு தான் எனக்கு தேவைப்படும். மிக்க நன்றி”

“நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். நீ இல்லனா இந்த ஆர்டர் கையை விட்டு போயிருக்கும்”

ருஹானா தலையாட்ட “எனக்கு வெளிய வேலை இருக்கு. நீ உதவிக்கு சதாமை கூப்பிட்டுக்கோ” என்று அவன் வெளியேற, கருப்பு டொயோட்டோ செக்வயா வந்து ஓரம் நின்றது.

கையில் பீங்கான் தட்டுக்களை எடுத்துக்கொண்டு கிச்சனில் இருந்து வெளியே வந்த ருஹானா எதிரே வந்து கொண்டிருந்த ஆர்யனை பார்த்து திகைத்தாள். தட்டுக்களை மேசையில் மேல் வைத்தவள் அவன் அருகே நெருங்கவும் “நீங்க இங்க என்ன செய்றீங்க?” என குழப்பமாக கேட்டாள்.

“தயாராகு. நாம போறோம்” நிதானமாக வார்த்தைகள் வந்தது. அதில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

அவள் யோசித்துக்கொண்டே நிற்க “சொல்றேன்ல. நாம கிளம்பறோம்” இந்த முறை சற்று சத்தமாக அதே சமயம் அழுத்தமாக.

அங்கங்கே சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களை பார்த்த ருஹானா “மெதுவா பேசுங்க. நான் இங்க வேலை பார்க்கறது உங்களுக்கு தெரியல?” என சொன்னாள்.

அவளை நெருங்கி அவள் கையை பிடித்து மடக்கிய ஆர்யன் “இனி இல்ல” என்று அவள் கண்ணோடு கண் கொண்டு முறைத்தான்.

இடது கையை பிடித்திருந்த அவன் கையை தன் வலக்கை கொண்டு முயன்று தள்ளியவள் “என்ன அர்த்தம் இதுக்கு?” என அவளும் தைரியமாக அவன் கண்களை சந்தித்தாள்.

“உன் ஒரே வேலை இவான் தான். அவனை தவிர உனக்கு வேற வேலை கிடையாது”

“நான் இங்க அவனுக்காக தான் வேலை பார்க்கறேன். எங்க எதிர்காலத்துக்காக… நானும் சொல்றேன்… உங்க கூட இப்போ வர மாட்டேன்”

“நான் உன்கிட்டே கேட்கல. இப்போ என்கூட வரணும்ன்னு சொல்றேன்.. உடனே.. மறுவார்த்தை பேசாம வா” அவன் கோபம் எல்லை தாண்டி போனது.

அவளும் சற்றும் அடிபணியவில்லை, அவன் சொல்லுக்கு.

இருவரும் அனல் கக்க முறைத்துக்கொண்டு நின்றனர்.

(தொடரும்)

Advertisement