Advertisement

—————————–

இவானை அவன் படுக்கையில் விட்டு ஆர்யன் நிமிர ‘சித்தப்பா!’ என கூப்பிட்டான் இவான்…

“சொல்லு, சிங்க பையா”

“என் அம்மாவோட வாசனை சித்தி கிட்டயும்”…

கண்கள் சுருங்கி போனது ஆர்யனுக்கு….

———————

ஐசியு..

ஏகப்பட்ட குழாய்கள் மாட்டப்பட்ட இவான் தாத்தா திணறியபடி மூச்சு விட்டு கொண்டிருக்க…

கண்ணாடி கதவுக்கு பின்னே அழுது கொண்டிருந்த ருஹானாவிடம் டாக்டர் சொன்னார்…

“லாஸ்ட் டைமே நான் சொன்னேன் சீரியஸ்னு… இப்போ ரொம்ப கஷ்டம்…  நாங்க எல்லா முயற்சியும் எடுத்துட்டோம்…  பட் நீ எதுக்கும் தயாரா இரு”

தந்தையை பார்த்த வண்ணம் கண்ணீர் கரை புரண்டு ஓட செய்வதறியாது நின்றாள், ருஹானா….

      ——————

அர்ஸ்லான் மாளிகையில் வேலைக்காரர்கள் அத்தனை பேரும் அணிவகுத்து தலை குனிந்து நின்று கொண்டு இருந்தனர்…

முன்னால் நின்று ஆர்யன் துப்பாக்கி கணைகளாய் வசை பாடி கொண்டிருந்தான்…

“இத்தனை பேர் வீணா இருந்தும், ஒரு குழந்தை மேல கண் வைக்கல”

“ஒரு பெண்… ஒரு சின்ன பெண் தனியா வந்து குழந்தையை தூக்கிட்டு போயிருக்கா…“

“அப்புறம் நானி! நீ ஈசியா இவானை உன் கைல இருந்து தூக்கி கொடுத்துட்டே…  இப்பவே உன்னை வேலையை விட்டு தூக்கியாச்சி.. வெளியே போ“

அந்த நானி வருத்தத்துடன் வெளியேறினாள்…

“இனிமேல் இவான் தோட்டம் போக கூட என் அனுமதி வேணும்… புரியுதா..?“

“இனி யாரும் அரை விநாடி கூட கண்ணை தட்டி முழிக்க கூடாது”

“யாராவது மீறினீங்க…. நான் உங்களை கொன்றுவேன்.. அப்போ வந்து கெஞ்சிட்டு நிக்காதீங்க”

என பொரிந்து கொண்டே செல்ல… அவன் பின்புறம் நின்ற கரீமா தேவையில்லாமல் முன்னால் வந்து விழுந்தாள்…

“ஆர்யன்!! சூழ்நிலையோட தாக்கத்தை எல்லோரும் இந்நேரம்  புரிஞ்சிருப்பாங்க…  இனி பார்த்து நடப்பாங்க” என கரீமா சொன்ன நொடி…

அவள் புறம் நெருப்பு திரும்பியது..

“அண்ணி, நீங்க எங்களுக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கீங்க.. ஆனால் இவான் விஷயத்தில நான் எதையும் பொறுத்துக்க மாட்டேன்.. பி கேர்புல்“ என கசப்புடன் பேசி அகன்றான்…

கரீமா முழித்துக் கொண்டு நின்றாள்…

————

மருத்துவமனை நாற்காலியில் சோகமே உருவாக அமர்ந்திருந்த ருஹானா தனது கழுத்திலிருந்த சங்கிலியின் லாக்கெட்டை எடுத்து முத்தமிட்டாள்…

பக்கத்து வீட்டில் வசித்த அழகிய இளைஞன் மிஷால் இரண்டு காபி கப்புகளுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான்..

“ருஹானா! நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு நான் இங்க பார்த்துக்குறேன்.. நீ டயர்டா இருக்க… அங்கிள் எனக்கு நெறைய செஞ்சிருக்கார்.. இப்பவாது அவருக்கு திருப்பி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. செய்ய வேண்டியது என்னோட கடமை“ என்று சொல்லிபடியே ஒரு கப்பை அவளிடம் நீட்டினான்..

அவள் வேண்டாம் என மறுக்கும்போதே கப் சாய்ந்து காபி கீழே மேல சிந்தியது..

“யா அல்லாஹ்!” என்று பதறியவன் “நான் போய் துடைக்க நாப்கின் எடுத்துட்டு வரேன்“ என்று அவன் செல்ல… அவளோ திரும்ப லாக்கெட்டை முத்தமிட்டவள் விழிகளை மூடிக் கொண்டாள்..

படுக்கையில் இருக்கும் அப்பாவும் அவர் வார்த்தைகளும் மனதில் வலம் வந்தன.. ‘எப்படியும் இவானை மீட்டே தீருவேன்‘ என்று உறுதி எடுத்துக் கொண்டாள்..

  ————–

அர்ஸ்லான் மாளிகை தோட்டம்..

புல்ஸ்ஐ (அம்பு எய்யும் பலகை) வைத்து அம்பு விட தயாராக நின்றிருந்தான், ஆர்யன்..

வியாபார நடப்புகளை அவனது பெர்சனல் செகரட்டரி ரஷீத் சொல்லி கொண்டிருந்தான்..

“பிளாக்பிரேவ் கப்பல் சிங்கப்பூர் போய் சேர்ந்துடுச்சி.. அதுல இருந்த எலக்ட்ரானிக் பொருள்லாம் நல்ல கன்டிஷன்ல  இருக்குனு தகவல் வந்துடுச்சி.. ஹார்பர்ல நிக்கிற கப்பல் ரிப்பேர் சரி செய்தாச்சி.. அது அடுத்த வாரம் மால்டாக்கு கிளம்பிடும்.. டைம் இருந்தா நான் நைட் ஹார்பர் போறேன்.. கஸ்டம் ஆபிசர்ஸ்ட்ட இருந்து எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்..”

ரஷீத் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டே ஆர்யன் வில்லில் அம்பை வைத்து குறி பார்த்து கொண்டு இருக்க… வாசலில் கேட் அருகே சத்தம் எழுந்தது

“மேம்.. நீங்க உள்ள போக முடியாது”

“என்னை தொடாதே”

இங்க சீன் போடாதீங்க.. உள்ள விட மாட்டேன்”

“என் மேல இருந்து கையை எடு.. என்னை உள்ளே போக விடு.. நான் அவர்கிட்ட பேசனும்” என்றபடியே ருஹானா கேட்டை தாண்டி தோட்டத்தின் அருகே வந்தாள்.. அவள் பின்னாடியே அவள் கையை இழுத்தபடி, பாடிகார்ட் வர… ருஹானாவை பார்த்ததும் ஆர்யன் முகத்தில் கடுமை ஏறியது.. இருந்தும் அவன் அடியாளிடம் கண்ணால் செய்கை செய்தான், அவளை விடும்படி…

ரஷீத் அங்கிருந்து அகல, ருஹானா ஆர்யன் அருகே நெருங்கினாள்… அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அம்பை செலுத்த அது பாய்ந்து புல்ஸ்ஐ மூன்றாவது சிறிய வட்டத்தில் செருகியது..

கலங்கிய கண்களுடன் இன்னும் பக்கம் வந்த ருஹானா பேச துவங்கினாள்.

“இவான்… இவான் என் அக்கா பையன்..

நீங்க கதவு உடைச்சி என் வீட்டுக்குள்ள வந்தீங்க..

எனக்கு அந்த அளவு வலிமை கிடையாது..

ஆனா நான் இவானை விட மாட்டேன்..

நீங்க அவனுக்கு சித்தப்பா னா நான் அவனுக்கு சித்தி..

அவனுக்கு நானும் தேவை… உங்களுக்கு அது புரியலயா?”

அழுது கொண்டே அவள் பேச பேச… அம்புகள் போய் கொண்டே தான் இருந்தன.. அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.. அவள் பேச்சை கவனித்தது போலவும் தெரியவில்லை…

“உங்க கிட்ட தான் பேசுறேன்.. கொஞ்சமாவது இரக்கம் இருந்தா ப்ளீஸ் நான் சொல்றது கேளுங்க..”

அப்போதும் அவனிடம் எந்த அசைவும் இல்லை… அம்பு விட்டுக் கொண்டே இருந்தான்..

ருஹானா ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. வேகமாக போய் அம்பு பாயும் பலகை முன்னே போய் நின்றாள்… ஆர்யனும் வில்லை நிமிர்த்தி குறி வைத்தான். சுற்றி நின்றவர்கள் திகைத்து பார்த்திருந்தனர்.

“நான் சொல்றதை நீங்க காது கொடுத்து கேட்டு தான் ஆகனும்” என்று உறுதியுடன் சொன்னாள்.

ஆர்யன் வில்லை சற்றே தழைக்க… அவன் கண்களை பார்த்து பேசினாள்.. “இந்த உலகத்துல என் அப்பா, இவான் தவிர எனக்கு யாரும் இல்ல.. அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கார்.. இவான் உங்க கைல இருக்கான்… ஆனா ரொம்ப நாளைக்கு இல்ல.. இவான் என்னோட உரிமை.. சீக்கிரமே நான் இவானை வாங்கிடுவேன்…”

ஆர்யனுக்கு கோபம் கொப்பளிக்கிறது.. கண்கள் விரிந்தது..

அம்பை அவளை நோக்கி விடுகிறான்.. அது பாய்ந்து பலகையின் வெளி வட்டத்தில் நிற்கிறது.. அதை பார்த்துக் கொண்டே ருஹானா மயங்கி கீழே விழுகிறாள்….

———–

ஆர்யன் பார்த்துக் கொண்டு இருக்க… செக்யூரிட்டி ஒரு பாட்டில் தண்ணீரை அவள் முகத்தில் வேகமாக கொட்டினான்… ருஹானா இருமிக்கொண்டே எழுந்து அமர்கிறாள்…

ஆர்யன் முட்டி போட்டு அவள் அருகே உட்கார்ந்தவன், கோபத்தில் மூச்சிரைக்க, “நீ இன்னும் உயிரோடு இருக்க.. அதுக்கு காரணம் உன் உயிர் இப்போ நான் உனக்கு போட்ட பிச்சை…  நீ எப்பவாது இவான் பக்கத்துல வந்தா…” என்று மிரட்டியவன், அவள் கையை பற்றி மேலே எழுப்பி “என் கையாலேயே உன் இதயத்தை பிச்சி அந்த உரிமையை எடுத்துருவேன்” என சொல்லிவிட்டு அவளை ஒரு நிமிடம் நின்று விழித்தவன், வீட்டிற்குள் விருவிருவென நடந்து விட்டான்.. உதடு துடிக்க கால்கள் தள்ளாட ருஹானா நடந்து வெளியே சென்றாள்..

                     ——————

வழக்கம் போலவே இவான் சூப் கிண்ணம் எடுத்துக்கொண்டு “அம்மா” என கூப்பிட்டவாறே அம்மாவின் ரூம்க்கு வந்தவன், படுக்கை காலியாக இருக்கவும் அங்க இருந்த மேசையின் பக்கவாட்டில் தரையில் சோகமாக அமர்ந்து சூப்பை குடிக்க ஆரம்பித்தான்..

அப்போது அங்கே அவன் பெரியம்மா கரீமா, தலைமை பணிப்பெண் சாராவுடன் வரவும் மேசைக்கு பின்னே மறைந்து கொண்டான்..

“சாரா! இறந்து போனவங்க பொருட்கள் எடுத்து சுத்தம் செஞ்சி அடுக்கிடுங்க” என கரீமா கட்டளையிட..

சாரா அழுது கொண்டே “சின்ன சார் கேட்டா என்ன சொல்றது?” என கேட்டார்..

“ஆர்யன் அது பார்த்துக்குவான்.. இன்னைக்கோ, நாளைக்கோ இவான்ட்ட அவனே சொல்லிடுவான்”

“சின்ன சார் அப்பப்ப இந்த ரூம் வர்றது, கண்ணீர் விடுறது மனசுக்கு வேதனையா இருக்கு”

“எனக்கும் காலியான இந்த ரூம் பார்க்க கஷ்டமா தான் இருக்கு.. என்ன செய்ய.. சரி, இறந்தவ துணியெல்லாம் துவச்சி அயர்ன் செஞ்சி தேவைப்படுறவங்களுக்கு கொடுத்துடுங்க”

“சரி, நான் போய் நஸ்ரியாவை உதவிக்கு கூப்பிட்டு வந்து வேலைய ஆரம்பிக்கிறேன்”

இதையெல்லாம் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்த இவான் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது..

ரூமிலிருந்து வெளியே போக திரும்பிய சாராவை அழைத்த கரீமா, “எல்லா வேலைக்காரங்க கிட்டயும் சொல்லிடுங்க , இவான்க்கு முன்னே அவன் அம்மா இறந்தது பற்றி பேச கூடாதுன்னு…”

சரி என சாரா செல்ல.. கரீமா மேசை மேல் இருந்த போட்டோவை – இவானுடன் அவன் அம்மாவும் இருந்த அழகான படத்தை – அலட்சியமாக தள்ளி விட்டு புன்னகையுடன் வெளியேறினாள்…

இவான் தாரைதாரையாக கண்ணீர் வடிக்க அப்படியே அமர்ந்திருந்தான்..

                    ——————-

கரீமாவும், சாராவும் முன்னே நிற்க… ஆர்யன் ஆத்திரமாக “நான் தான் இவான்ட்ட பேசுறேன்னு சொல்லி இருந்தேனே.. உங்களுக்கு அது புரியலயா?” என திட்ட… கரீமா ”ஆர்யன் அவன் ரூம்ல இருந்தது நாங்க கவனிக்கல.. தெரிஞ்சிருந்தா நாங்க பேசி இருக்க மாட்டோமே..“ என்று சமாதானப்படுத்த..

“இதுக்கு எந்த விளக்கமும் தேவையில்ல, அண்ணி” என ஒத்துக்கொள்ளாமல் கோபப்பட… அங்கே வந்த அண்ணன் அம்ஜத் “பாவம் இவான்.. மணிக்கணக்கா அழுறான்…  நான் சொல்றதும் கேக்க மாட்றான்… ஒடஞ்சி போய்ட்டான்” என புலம்பினான்..

ஆர்யனுக்கு கோபம் தலைக்கேறி.. ரூம் உள்ளே செல்ல அங்கே இவான் அவன் அம்மாவின் ரூமில் கட்டிலில் படுத்துக் கொண்டு, அம்மாவும் அவனும் இருக்கும் போட்டோவை கட்டி பிடித்துக் கொண்டு “அம்மா அம்மா” என அழுது கொண்டு இருந்தான்..

அங்கே அது வரை துணைக்கு இருந்த நஸ்ரியா, ஆர்யனை பார்த்ததும் வெளியேறினாள்…

இவான் அருகே வந்த ஆர்யன் “எழுந்துரு இவான்” என சொல்ல…. இவான் அவனை திரும்பி கூட பார்க்காமல் பெட்சீட் எடுத்து தலை வரை மூடி கொண்டான். செய்வதறியாது திகைத்து போன ஆர்யன் பெட்சீட்டை நீக்க நீண்ட கையை மடக்கி கொண்டு வெளியே சென்றுவிட்டான்..

              ———-

Advertisement