Advertisement

——–

காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய ஆர்யன்  செல்ல முடியாமல் தன் அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்து வேகமாய் மூச்சிரைத்தான். முதுகு புண்ணும், உள் காயமும் முள்ளாய் குத்த நெற்றி முழுதும் முத்துமுத்தாய் வேர்த்தது. நெற்றியை துடைத்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் சற்று சிரமப்பட்டு எழுந்து நின்றுக்கொண்டு யாரென கேட்டான்.

ருஹானா மருந்துகளுடன் வரவும் கடுமையான முகத்துடன் நின்றான். அவனை பார்க்காத ருஹானா “நேத்து நைட்டே நான் கட்டு மாத்தி இருக்கணும். காயம் எப்படி இருக்கோ?” என்றபடி அருகில் வந்தாள். “நீ ஒன்னும் செய்ய தேவையில்ல. நானே பார்த்துக்கிட்டேன்” சூடான சொற்கள் வந்தது.

“நீங்களேவா?” என அவள் அதிசயமாக கேட்க அவளை முறைத்து பார்த்தான். அவன் முகத்தை உற்று பார்த்தவள் “ஏன் உங்க முகம் இப்படி வெளுத்துருக்கு? உங்களுக்கு ஜுரம் இருக்கா?” என அவள் பதற அவன் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

“மருந்து வச்சி கட்டு மாத்தல, அதான் ஜுரம் அதிகமாயிடுச்சி. இப்போ மாத்திடலாம். நான் கொஞ்ச நேரத்துல வெளிய கிளம்பணும்” அவள் சொல்லவும் திரும்பி அவளை உக்கிரமாக பார்த்தான். “அப்புறம் நீங்க தேடினாலும் நான் இருக்க மாட்டேன்” அவள் இயல்பாக பேசிக்கொண்டே போனாள். ‘நாளை வரை என்னால காத்திருக்க முடியல. இது செய்றதுல எனக்கும் நன்மை தான்’ ருஹானா போனில் சொன்னது அவனுக்கு இப்போதும் கேட்டது.

அவன் உள்ளக்குமுறலை அடக்கியபடி பேசாமல் இருக்க, உண்மை காரணத்தை அறியாத ருஹானா “உங்களுக்கு அதிக வேதனையா இருக்கு தானே? வாயை திறந்து சொல்ல மாட்றீங்க. வலி தாங்கமுடியாம பல்லைக் கடிக்கிறீங்க. தயவுசெய்து என்னை கட்டு மாத்த விடுங்க” என கெஞ்சியபடி கையை அவன் தோளுக்கு கொண்டுப் போனாள்.

பட்டென்று அவள் கையை பிடித்து தடுத்தவன் அவள் பாவமாக பார்க்கவும் கையை விட்டுட்டு திரும்பிக்கொண்டான். “இவானுக்கு பசிக்கும். அவனை சாப்பிட வை” என்றான்.

“மருந்தை இங்கயே வச்சிட்டு போறேன். நீங்களே போட்டுக்கங்க.. அதான் நீங்களே பார்த்துக்கறேன்னு சொன்னீங்க தானே!” என ஏளனமாக சொல்ல அவளை முறைத்தவன் அவளுக்கு முன்னே வெளியே சென்றுவிட்டான். “இப்படி செய்தா காயம் எப்படி குணமாகும்?” என ருஹானா கவலைப்பட்டாள்.

இவானுக்கு சாப்பிடக் கொடுத்து அவனுடன் சேர்ந்து வரைந்துக்கொண்டே சொன்னாள். “செல்லம்! நீ நஸ்ரியா அக்கா கூட விளையாடிட்டே இரு. நான் ஒரு ரெண்டு மணி நேரம் வெளிய போயிட்டு வரேன்” இவான் முகம் சிணுங்கியவன் “சித்தி! சீக்கிரம் வந்துடனும்” என்றான். “கண்டிப்பா அன்பே! நீ ஒளிஞ்சி விளையாட நல்ல இடம் தேடி வை. நான் வந்ததும் விளையாடலாம்”

——–

ஆர்யன் அறையில் ரஷீத் வியாபார விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்க ஆர்யன் அதை கவனிக்கவேயில்லை. ரஷீத் “என்ன செய்யலாம், ஆர்யன்?” என சத்தமாக கேட்க “இன்னைக்கு நீயே பார்த்துக்கோ, ரஷீத். என்னை தனியா விடு” என ஆர்யன் சொல்லவும் ரஷீத் அவனை குழப்பமாக பார்த்துக்கொண்டே போய்விட்டான். ஆர்யன் ஓரமாக இருந்த மருந்து ட்ரேவை பார்த்தவன் மிஷாலுக்கு ருஹானா நன்றி சொன்னதை நினைத்துக்கொண்டிருந்தான்.

பின் வெளியே வர, ருஹானாவும் தோளில் கைப்பையுடன் கிளம்பி வெளியே வருவதை பார்த்து ஒரு கணம் நின்றவன் அவளும் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்கவும் விறைப்பாக நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் வந்த ருஹானா அவன் காயம் இரத்தம் கசிவதை கண்டு திகைத்து “நில்லுங்க, உங்க புண்ல இருந்து ரத்தம் வருது” என படபடப்புடன் சொல்ல ஆர்யன் அதை கண்டுக்கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தான்.

“இவான் அதை பார்க்கணும்னு நீங்க விரும்புறீங்களா?” என அவள் சரியான தடுப்பணை போடவும் நின்ற இடத்திலேயே நின்றான். “நான் மருந்து போடுறேன். இல்லனா ரொம்ப மோசமாகிடும்” என அவள் சொல்லவும் யோசித்தவன் திரும்பி அறைக்கு நடந்தான். உள்ளே வந்து அவன் சட்டையை கழட்ட முனைய அவள் மருந்து எடுத்து வந்தாள்.

சட்டையை கழட்ட அவன் சிரமப்பட மருந்தை மேசையில் வைத்தவள் அவன் பின்னால் இருந்து சட்டையின் கையை கழட்ட உதவினாள். அவள் ஸ்பரிசம் பட்டதும் அவனை அறியாமல் திரும்பி அவளை பார்த்தவன் இடதுகை மட்டும் கழட்டி வலதுபுறம் சட்டையை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.

ருஹானாவும் அவன் பின்னால் அமர்ந்து காயம் கண்டு முகம் சுளித்தவள் “அப்பவே என்னை மருந்து போட விட்டுருந்தீங்கன்னா இப்படி அதிகமாயிருக்காது” என சொன்னாள். இத்தனை நேரம் அவள் தன் மேல் கொண்ட கரிசனம் கண்டு இளகி இருந்தவன் அவளை மருந்து போடவிடாமல் தான் மறுத்த காரணம் அப்போது நினைவுக்கு வர மீண்டும் முருங்கைமர வேதாளமாய் கோபம் கொண்டான்.

ருஹானா காயத்தை மெதுவாக சுத்தம் செய்யும் வேளையில் ஆர்யனுக்கு சையத் பாபா ‘எட்டாத தூர காயத்தை குணமாக்க உதவி நாடுவது பலவீனமல்ல’ என்று சொன்னது நினைவு வர வேகமாக திரும்பினான். அதில் பயந்துப்போன ருஹானா ட்ரேவை தவற விட்டாள். அவள் குனிந்து அதை எடுக்க அவனும் குனிய மிக அருகே அவளை பார்த்து சித்தம் தடுமாறினான்.

அவள் விரிந்த கூந்தலும், அழகிய பச்சைநிறக் கண்களும், அதை காத்து நின்ற நீண்ட இமைகளும், பளபளத்த கன்னங்களும் அவனை கொள்ளை கொண்டன. இமை தட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அருகே கிடந்த பஞ்சை அவள் எடுக்க இன்னும் அருகில் வர அவனும் அதை எடுக்க இருவர் விரல்களும் முட்டிக்கொண்டன. “நான் எடுக்குறேன்” என ஆர்யன் சொல்ல ருஹானா நிமிர்ந்து கொண்டாள்.

பஞ்சை எடுத்து மேசையில் வைத்தவன் தன்னை நிதானத்துக்கு கொண்டுவந்தான். “சீக்கிரம் முடி. நான் போகணும்” என சொல்ல அவளும் மருந்திட்டு ஒட்டி மருந்துபட்டையை நீவிவிட்டாள். அதற்கு மேல் தாளாமல் “முடிஞ்சிதுனா கிளம்பு” என்று அவன் சொல்ல அவளும் “முடிஞ்சது” என்று சொல்லி எழுந்தாள்.

அவனும் எழுந்து சட்டையை மாட்ட “மாத்திரை சாப்பிட மறக்காதீங்க. நேத்து நைட் சாப்பிடல. ரெண்டு மாத்திரை போடுங்க” என அவள் சொல்ல தனக்கு கட்டளையிடும் அவளை ஆர்யன் உற்று பார்க்க அவன் பார்வையை சந்திக்காமல் ருஹானா நழுவிவிட்டாள்.

சட்டையை போட்டவன் பட்டனை போடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு அவள் படியேறி கதவு சாத்தி செல்லும்வரை அவளையே பார்த்திருந்தான். ஒருபக்கம் குளுமையும் மறுபக்கம் வெப்பமும் அவனை பாடாய்படுத்த சிறிது நேரம் அதை அனுபவித்தவன் ‘என்ன செய்றேன் நான்?’ என தலையை உலுக்கிக்கொண்டான்.

ஆர்யன் வெளியே வர எதிரே வந்த கரீமா “ஆபீஸ் கிளம்பிட்டியா, ஆர்யன்? நான் ருஹானாட்ட பர்த்டே கேக் பத்தி பேச வந்தேன். ஆனா அவ அவசரமா வெளிய போறா. முக்கியமான விஷயம் இல்லனா இப்படி இவானை விட்டுட்டு போக மாட்டா” என்று ஏற்றிவிட இருவரும் கீழே வாசல் பக்கம் கேட்ட சத்தத்தில் அங்கே பார்த்தனர்.

ருஹானா கதவு திறந்து வெளியே செல்ல “இவானுக்கு தேவையானது செஞ்ச பின்னாடி அவ எங்கனாலும் போகட்டும்” என்று ஆர்யன் கரீமாவின் காதில் நெருப்பை அள்ளிக் கொட்ட “நீ சொல்றது சரி தான். அவளுக்கும் சொந்த வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கும் தானே? நான் போய் விருந்தாளிகள் லிஸ்ட் ரெடி செய்றேன்” என கரீமா சொல்லி சென்றாள்.

ஆர்யனும் திரும்பி இவான் அறைக்கு செல்ல அங்கே அவனை காணாமல் தேடினான். கட்டில் அடியில் இருந்து மெதுவாக எழுந்த இவானை பார்த்ததும் ஆர்யன் முகம் பெரிதாக மலர்ந்தது.

“சிங்க பையா! அங்க என்ன செய்றே?”

“சித்தி கண்டுபிடிக்க முடியாத இடத்தை தேடிட்டு இருக்கேன், சித்தப்பா!”

“சித்தியா?” ஆர்யன் முகம் கூம்பியது.

“சீக்கிரம் வேலை முடிச்சிட்டு வந்துடுவாங்க”

“அவ வேலை முடிச்சிட்டு?” யோசனைக்கு போனது, மனம்.

“இந்த இடத்தை சித்தி கண்டுபிடிச்சிடுவாங்களா?” கவலையாக கேட்டான்.

“இங்க ஒளிஞ்சிக்கோ” என்று மேசைக்கு அடியில் பார்த்தாலே தெரியும் இடத்தை காட்டினான், பாசமிகு சித்தப்பா.

“சித்தி என்னை கண்டுபிடிக்கவே முடியாது” என்று குதித்துக்கொண்டு இவான் அங்கே போய் அமர, ஆர்யன் சாராவை அழைத்து இவானை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவனும் காரில் ஏறி கிளம்பினான்.

சாலையில் நடந்து செல்லும் ருஹானாவை கண்டவன் காரை அவள் அருகே நிறுத்த சொன்னான். அவளும் இவன் காரை அடையாளம் கண்டு நிற்க உள்ளிருந்தவாறே கேட்டான்.

“எங்க போறே?”

“என் சொந்த வேலைய பார்க்க!”

“நில்லு. நான் கார் வர சொல்றேன். நேரம் வீணாக்காதே”

“தேவையில்ல. பக்கத்தில தான் போறேன்”

“டிரைவரை கூப்பிடுறேன். வேகமா காரெடுத்து வருவான்” என போனை கையிலெடுத்தான்.

“எனக்கே போக தெரியும். எனக்கு நடக்கணும். வெளிக்காத்து கொஞ்சம் வேணும்”

“இவான் உனக்காக காத்துட்டு இருக்கான்”

“எனக்கு தெரியும். சீக்கிரம் போய்டுவேன்” என்று சொல்லி மிடுக்காக நடக்க ஆரம்பித்தாள்.

டிரைவரை கார் எடுக்க சொன்னவன் சிறிது தூரம் சென்றதும் நிறுத்த சொன்னான். கீழே இறங்கி டிரைவர் சீட்டுக்கு வந்தவன் டிரைவரை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு தானே காரை எடுத்து வந்தவழிக்கு திருப்பினான். “சொந்த வேலையாவா போறே? நானும் பார்க்குறேன்” என சொன்னவன் காரை வேகமாக செலுத்தினான்.

தன் கைக்கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே ருஹானா பேருந்துக்காக காத்திருக்க, ஆர்யன் சிறிது தூரத்தில் காரை நிறுத்தி அவளையே பார்த்துக்கொண்டு இருக்க தன் கோபம் மெல்ல மெல்ல கரைவதை அவன் உணரவில்லை. ஆனால் கண்களும் முகமும் பளிச்சிட்டன.

ருஹானா பேருந்தில் ஏறவும் தன் கோபத்தை இழுத்து பிடித்தவன் அவளை பின்தொடர்ந்து காரை செலுத்தினான். பேருந்திலிருந்து இறங்கி அவள் நடக்கவும் காரை உருட்டிக்கொண்டே அவள் பின்னால் சென்றான்.

மிஷால் ஹோட்டல் வாசலில் நின்று ருஹானாவை வரவேற்க ஆர்யன் காரை தூரத்தில் நிறுத்தி இவர்களை நோட்டமிட்டான். “நல்வரவு ருஹானா! நல்லவேளை நீ என்னை காப்பாத்த வந்துட்டே” என சிரிப்புடன் வரவேற்க, ருஹானாவும் புன்னகையுடன் “நன்றி மிஷால்! என்னால நேரம் கிடைக்கும்போது தான் வர முடியும்” என்றாள்.

“பரவால்ல ருஹானா” என்று சொன்ன மிஷால் அவளுக்கு ஒரு துணிப்பெட்டியை கொடுத்தான். ருஹானாவும் அதை சிரிப்புடன் வாங்கிக்கொள்ள தூரத்தில் ஒருவனுக்கு கடுப்பு ஏறியது.

“இதைத்தான் உன் சொந்த வேலைன்னு சொன்னீயா?” பக்கத்தில் இல்லாத ருஹானாவிடம் கேட்ட ஆர்யன் வைத்த கண்ணை எடுக்காமல் ஸ்டீரிங்வீலை அழுத்தி பிடித்துக்கொண்டே கண்களில் அனல் கக்க பார்த்திருந்தான்.

(தொடரும்)

Advertisement