Advertisement

——-

சமையலறைக்கு வந்த ருஹானா சாராவிடம் “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. எனக்கு நானே பானம் தயார் செஞ்சிக்கிறேன். அது குடித்தா உடம்பில் ரத்தம் ஊறும்” என்று சொல்லி அவளே செய்து எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.

ஆர்யனின் மேசை அருகே வந்து நின்ற ருஹானா அவன் உள்ளறையிலிருந்து வெளிவருவதற்காக தயக்கத்துடன் காத்திருந்தாள். கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்த ஆர்யன் ருஹானாவை பார்த்து முகம் சுருக்கி “என்ன இது?” என்று வினவினான்.

“மன்னிச்சிடுங்க. உங்க அனுமதி இல்லாம வந்துட்டேன். ஆனா நீங்க இதை குடிக்கணும். இது உங்கள வலிமையாக்கும். நீங்க திடமா நிப்பீங்க”

“நீ என்ன குருடா? என் கால்ல நான் திடமாத்தானே நிக்கிறேன்”

“நீங்க டாக்டர் கிட்ட மருந்து வாங்கல. இதையாவது தயவுசெய்து குடிங்க” என நீட்டினாள். அதன் வாசனையில் முகம் சுளித்த ஆர்யன் “அதை தள்ளி எடுத்துட்டு போ” என முகம் திருப்பிக்கொண்டான்.

“எனக்கும் இதோட வாசனை பிடிக்கல, என் அப்பா இது எனக்கு செஞ்சி தரும்போது.. நான் குடிக்க முடியலன்னு சொல்வேன்” அவள் குரல் தழுதழுத்தது.

ஆர்யன் அவள் புறம் திரும்பி அவள் பேசுவதை கவனிக்கலானான்.

“அப்பா சொல்வார், ‘முள்ளுக்கு பயந்தா ரோஜாவோட அழகை ரசிக்க முடியாது. அப்படித்தான் நல்லதுல ஒரு குறை இருக்கும். நீ இதை குடி’ன்னு என்னை குடிக்க வைப்பார். எனக்கு உடம்பு முடியாத போதெல்லாம் அப்பா இதை தருவார். நானும் குடிச்சிடுவேன். உடனே குணமாகிடும்.”

“உன் அப்பாவோட மருந்தா இது?” பேச்சில், பார்வையில் கடுமை குறைந்திருந்தது.

“என் அம்மாட்ட இருந்து அப்பா கத்துக்கிட்டார்” இதைக் கேட்டவுடனே இறங்கிய கடுமை ஏறியது.

“நான் பிறக்கும்போதே அம்மா இறந்திட்டாங்க. அதுக்கு முன்னே அப்பா கத்துகிட்டார்” மறுபடியும் அவள் புறம் பார்வை வந்தது.

“இந்த மருந்தால சரியானேனோ இல்ல என் அப்பாவோட உழைப்பால குணமானேனோ? தெரியல. நீங்களும் இதை குடிங்க. உடம்பு சரியாகிடும். ஆறும்முன்ன குடிச்சிடுங்க” என்று சொல்லி அதை மேசையில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள். வழக்கம்போல போகும் அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் அந்த கப் இருந்த சாசரை சுற்றிவிட்டுக்கொண்டே ஏதோ யோசித்தான்.

அறைக்கு வந்த ருஹானா அவன் குடிப்பானோ இல்லையோ என யோசனையில் இருக்க மிஷால் போனில் அழைத்தான். நலம் விசாரித்தப்பின் ‘பேர்ன் சூப்’ கேட்டு ஆர்டர் வந்திருப்பதாக சொல்லி அதன் செய்முறையை கேட்டான்.

“மிஷால்! நீ உன் குக் கிட்ட போன் கொடு. நான் அவர்ட்ட சொல்றேன்”

“அவர் உடம்பு சரியில்லனு ஊருக்கு போய்ட்டார். நானும் சதாமும் தான் இருக்கோம்”

“அடடா! இப்போ என்ன செய்றது?”

“ருஹானா! நான் உன்கிட்டே செய்முறை கேட்கத்தான் போன் செய்தேன். ஆனா இப்போ தோணுது, என் குக் வர வரை நீ எனக்கு உதவி செய்ய முடியுமா? உனக்கு நான் சம்பளம் கொடுத்துடுறேன்”

“மிஷால்! நான் இங்க இவானை பார்க்கணுமே?”

“உன் வசதியான நேரம் வந்து செஞ்சி கொடு ருஹானா. நம்ம ஹோட்டல் தானே?”

“சரி மிஷால்! நான் யோசித்து சொல்றேன்” தன் பணத்தேவையும் அவள் கருத்திலாடியது.

இருவரும் அல்லாஹ் நாமம் சொல்லி விடைபெற, இவான் வந்து “சித்தி! நான் இன்னைக்கும் செஃப் இவான் ஆகட்டுமா?” என கேட்டான். “ஓ! பாஸ்தா செய்யலாம், அன்பே!” என்று அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே இவர்களை பார்த்து உற்சாகமான சாராவும், நஸ்ரியாவும் இவான் பாஸ்தா செய்யப் போவதை கேட்டு ஆனந்தப்பட, சாரா “நஸ்ரியா! நீயும் இவானும் எல்லாம் எடுத்து வைங்க. நாங்க இதோ வந்துடுறோம்” என ருஹானாவை அழைத்து சென்றார்.

ருஹானாவை அழைத்துப் போன சாரா அவளுக்கு மிக அழகிய ஒரு கருப்பு கவுனை பரிசளித்தார். ருஹானா ஆச்சரியமாக பார்க்க “நானே தச்ச டிரஸ் இது. இங்க குக் வேலைக்கு வரலனா நான் பேஷன் ஷோக்கு ஜட்ஜா போயிருப்பேன்” என்று சாரா சொல்ல ருஹானா சிரித்தாள்.

“நீங்க இதை நஸ்ரியாக்கு கொடுங்க சாரா அக்கா” என ருஹானா அதை வாங்கிக்கொள்ள மறுக்க “அவ ஜீன்ஸ் தவிர இதெல்லாம் போட மாட்டா. உன்னை பார்த்ததுமே இந்த டிரஸ் உனக்கு தான் கொடுக்கணும்னு நான் முடிவு செஞ்சி வச்சிருந்தேன். இன்னைக்கு இவான் இளவரசி ஆடை பத்தி பேசவும் எனக்கு நினைவு வந்துடுச்சி. இப்போ நீ இதை போய் போட்டுட்டு வா“ என அனுப்பி வைத்தார்.

——-

போன் பேசிக்கொண்டே அலுவலகம் கிளம்பிய ஆர்யன் இடது கையை சிரமத்துடன் கோட்டில் நுழைத்தான். வெளியே செல்லவிருந்தவன் ருஹானா வைத்துவிட்டு போன பானத்தை பார்த்தான். அவள் அப்பாவை பற்றி பேசியதை நினைத்து பார்த்தவன் அந்த கப்பை எடுத்து முகம் சுளித்தபடியே ஆறிப்போன பானத்தை ஒரு சொட்டுவிடாமல் குடித்துவிட்டு வெளியேறினான்.

———

முட்டி வரை இருந்த அந்த கருப்பு நிற கவுனை அணிந்து வெளியே வந்த ருஹானாவை பார்த்து சாரா அசந்து போனார். “மாஷா அல்லாஹ்! இது உனக்குன்னே தைச்சா மாதிரி எத்தனை அழகா இருக்கு!” என அவர் மகிழ ருஹானா அவருக்கு நன்றி சொல்லி தானும் கண்ணாடியில் பார்த்து ரசித்தாள். இருவரும் கதவருகே கரீமா பொறாமையில் பொசுங்கியதை கவனிக்கவில்லை.

——–

கிச்சனில் எல்லாரும் மும்முரமாக பாஸ்தா செய்துக்கொண்டிருப்பதை பார்த்த கரீமா, ருஹானாவின் அறைக்கு வந்து அந்த கவுனை எடுத்தவள் “ஒண்ட வந்த உனக்கு இந்த அழகு டிரெஸ் தேவையா?” என கேட்டபடி பல்லைக் கடித்துக்கொண்டு பலமாக அதை கிழித்தாள்.

“என்ன வேணும், கரீமா மேம்?” என பின்னால் கேட்ட ருஹானாவின் குரலில் திடுக்கிட்ட கரீமா நிமிடத்தில் சுதாரித்துக்கொண்டாள். “உன்னை தேடித் தான் வந்தேன், ருஹானா. இவான் பார்ட்டிக்கு உனக்கு ஏதும் டிரஸ் தேவையான்னு கேட்கலாம்னு வந்தேன். இந்த டிரஸ் பார்த்துட்டு அப்படியே நின்னுட்டேன். அருமையா இருக்கே! எங்க வாங்கினே?”

“சாரா அக்கா தந்தாங்க. அவங்களே தைச்சது” என ருஹானா சொல்ல “அப்படியா? அழகா இருக்கு. ஆனா இதுல பழைய வாசனை வருது. நான் இதை மத்த துணிகளோட டிரை கிளீன்க்கு அனுப்புறேன்” என்று சொல்லி ருஹானா மறுக்க மறுக்க கரீமா வற்புறுத்தி அதை கையோடு எடுத்து சென்றாள்.

———

சையத் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆர்யன் சையத் சூடாக கொண்டு வந்த உணவை மறுத்தான். “வேணாம் சையத் பாபா! ரெண்டாவது எனக்கு அதிகம். நீங்க வேற யாருக்காவது கொடுங்க”

“இந்த இடத்தோட ரூல்ஸ் பத்தி தெரியாத மாதிரி பேசாதே ஆர்யன்! நான் உனக்கு ஆசையா கொண்டு வந்தா அதை நீ மறுக்குறது தப்பு” என்று சொல்லியபடி அவன் தட்டில் வைத்துவிட்டு அவன் எதிரே அமர்ந்தார்.

அவன் வலியால் முகம் சுளித்து இடது தோளைப் பிடிப்பதை பார்த்து “இங்க உள்ள ரூல்ஸ் மறந்த மாதிரி உன் சொந்த ரூல்ஸையும் நீ மறந்தது போல தெரியுதே!” என அவர் குறுஞ்சிரிப்புடன் சொல்ல ஆர்யன் அவரை யோசனையாக பார்த்தான்.

“உன் காயத்தை ஆற்றும் பொறுப்பை மத்தவங்களுக்கு தந்துட்டே போல!”

ஆர்யன் உன்னிப்பாக கவனிக்க “மக்கள் தங்கள் இரணத்துக்கு அவங்களே சிகிச்சை செய்யலாம். ஆனா சில காயங்கள் அவங்களால எட்ட முடியாம போய்டும். அப்போ மத்தவங்க உதவியை ஏத்துக்கறது பலவீனம் இல்ல. பலம் தான்” சையத் பொடி வைத்து பேச ஆர்யன் ஆழ்ந்த யோசனைக்கு போனான்.

“வலிமையான எதிரிய தோற்கடிக்கறது விட தன்னை தானே வெற்றிக் கொள்றது தான் அதிக சிரமம். ஒரு போராளி பகைவனை ஜெயிக்கும்முன்னே தன்னை சரிபடுத்திக்கணும். உன் மன ரணம் ஆற ஒரே வழி உன் மனசை திறக்கறது தான்” அவனுக்கு புரியும்படி தெளிவாக சொன்னார்.

சடக்கென நிமிர்ந்த ஆர்யன் “என் உடம்பும் மனசும் நல்லா தான் இருக்கு. யார் உதவியும் எனக்கு தேவையில்ல” என்றான்.

தலை சாய்த்த சையத் “வேற ஒன்னும் உனக்கு சொல்றதுக்கு இல்ல. அல்லாஹ் உன்னை வழிநடத்தட்டும். நீ சாப்பிடு, ஆறுது பார்” என்றார். அவனும் சிந்தித்தப்படி சாப்பிட ஆரம்பித்தான்.

——–

இரவு கட்டு மாற்ற தேவையான மருந்துகளை கொண்டு வந்த ருஹானா அதை ஆர்யன் அறையில் வைத்தாள். அவள் குடிக்க கொடுத்த மருந்து கப் காலியாக இருந்ததைப் பார்த்து முகம் மலர்ந்தாள். சிரித்த முகத்துடனே இவானை தூங்க வைக்க சென்றாள்.

இவானை மடியில் போட்டு தட்டி தூங்க வைத்தவள் மெதுவாக அவனை தலையணைக்கு மாற்றும்போது அவள் போன் ஒலித்தது. மிஷாலின் அழைப்பை ஏற்றவள் மெல்லிய குரலில் ஹலோ சொல்லவும் “சாரி ருஹானா! இரவு நேரம் உன்னை தொந்திரவு செய்றேன். நீ நாளைக்கு வரீயா?” என மிஷால் கேட்க “ஆமா மிஷால்” என பதில் கேட்டு ஆனந்தப்பட்டான்.

“பேர்ன் சூப்க்கு தேவையான பொருட்கள் லிஸ்ட் நீ அனுப்பிட்டினா நான் எல்லாம் எடுத்து வச்சிருவேன். அது பெரிய ஆர்டர். லேசா பயமா இருக்கு” என அவன் சொல்ல “நீ கவலைப்படாதே, மிஷால். நல்லபடியா தயார் செய்திடலாம். கண்டிப்பா இப்பவே லிஸ்ட் அனுப்புறேன்” என்று அவள் தொடர்ந்து பேசும்வேளையில் அவள் பின்னால் கதவு திறந்தது.

வெளியே போய்விட்டு வந்ததும் வழக்கமாக இவானை எட்டி பார்க்கும் ஆர்யன் இப்போதும் அறையின் கதவை தள்ள, இவானின் கட்டிலில் அமர்ந்திருந்த ருஹானாவை பார்த்ததும் அவன் முகம் மென்மையானது.

“நாளை வரை என்னால காத்திருக்க முடியல. இது செய்றதுல எனக்கும் நன்மை தான். நாளைக்கு நல்லா வந்தா போதும். வேற எதும் எனக்கு தேவையில்ல” என அவள் பேசுவதைக் கேட்டவன் முகம் அவன் இயல்பான கடுகடுப்பிற்கு மாறியது. கதவை மூடி செல்ல போனவனின் கால்களை கட்டிப் போட்டது அவள் அடுத்து உதிர்த்த பெயர்.

“நன்றி மிஷால்! என்னோட மோசமான நாள்ல கூட என்னை சந்தோசமா உணர வச்சதுக்கு” என ருஹானா ஆர்யன் நெஞ்சில் இடியை இறக்க அவன் கை முஷ்டியை அழுத்தமாக பிடித்தான். அவள் போனை வைக்கவும் கதவு மூடி சென்றுவிட்டான். தன் பணக்கஷ்டம் ஓரளவு தீரப்போவதை எண்ணி ருஹானா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

Advertisement