Advertisement

————

வெட்டு வாங்கிய இடதுபுறத்தை கீழே அழுத்தாமல் வலதுபுறம் திரும்பி உறங்கிகொண்டிருந்த ஆர்யன் வலியால் புருவம் சுருக்கினான். வலியால் தூக்கம் கலைந்து எழுந்தவன் இடதுபக்கம் திரும்ப அவன் பார்த்த காட்சியில் திகைத்துப் போனான்.

அங்கே சோபாவின் கைப்பிடியில் தலை வைத்து ருஹானா உட்கார்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை தலை முதல் கால் வரை பார்க்க பார்க்க வேதனையால் ஏற்பட்ட முகச்சுளிப்பு வியப்பாக மாறியது. நேற்று லேசாக பரவிய இதம் இன்று மனம் முழுதும் ஆட்கொண்டது.

‘இவ இங்க என்ன செய்றா?’ என சலிப்பாக திரும்பி நேரே அவளை பார்த்து உட்கார்ந்தான். கால்கள் கீழே தொங்க மடியில் ஒரு சிறு தலையணையை பிடித்தபடி ஒயிலாய் உறங்கியவள் மேல் வைத்த கண்ணை ஆர்யனால் எடுக்க முடியவில்லை.

பார்க்கும்வரை ஆசை தீர பார்த்துவிட்டு ஆசை தீராதோ என ஐயப்பட்டவன் இமைகளை தட்டி தன் கண்களை மிரட்டி அவளிடமிருந்து திருப்பினான். மேசையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் அந்த டம்ளரை சத்தம் வரும்படி மேசையில் வைத்தான். முகத்தில் கோபமும் வந்து அமர்ந்துக்கொண்டது.

காலைத்துயில் கலைந்தவன் கண்டது

சாய்ந்துறங்கும் அழகு பதுமையை..!

ஆச்சரியமும் நிம்மதியும் அதையும் தாண்டி 

தேவதையின் அழகு தவிக்க வைக்க….

பலகால ஆறாத இரணம்

பெண் அருமையை அருகாமையில்

கோபம் கொள்ள செய்கிறதோ..

ஆர்யன் உண்டாக்கிய ஒலியில் திடுக்கிட்டு எழுந்த ருஹானா ‘எங்கே இருக்கிறோம்’ என ஒரு கணம் யோசித்து தெளிந்தவள் கட்டிலில் அமர்ந்த்திருந்த ஆர்யன் நோக்கி வேகமாக வந்தாள். “எப்படி இருக்கீங்க? ரொம்ப வலிக்குதா? இன்னும் ரத்தம் வருதா?” என கடகடவென கேட்டாள்.

“நீ ஏன் இங்க இருக்கே?” என அவன் முறைப்பாக கேட்க, ஆர்யனின் வெளியறை தாண்டி இதுவரை படுக்கையறைக்கு வராதவள் இப்போது சங்கடத்துடன் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் குரல் தழைத்து “ஜூரம் ஏதும் இருக்கா?” என கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளை உற்று நோக்க, அவளோ “காயத்தை நான் பார்க்குறேன். இன்ஃபெக்ஷனாச்சினா கஷ்டம். புதுக்கட்டு…” என சொல்லிக்கொண்டே தன் கையை நீட்டி அவன் காயத்தை தொடப் போனவளின் மணிக்கட்டை ஆர்யன் பிடித்துக்கொண்டான். அவள் தவிப்புடன் அவனை பார்க்க அவனும் பிடித்த கையை விடாமல் அவளை பார்த்தபடி இருந்தான்.

திறந்திருந்த கதவு தட்டப்பட்டும் ஓசையில் அவள் கையை ஆர்யன் விட, அப்போது உள்ளே வந்த ரஷீத் இந்த காட்சியை பார்த்துவிட்டு தர்மசங்கடமாக நெளிந்தான். “மன்னிச்சிடுங்க கதவை திறந்திருக்கவும் நான் அப்படியே வந்துட்டேன். நான் அப்புறம் வரேன்” என்று திரும்ப போனான்.

“வா ரஷீத்! இவான் சித்தி கிளம்புறாங்க” என ஆர்யன் ருஹானாவின் நீர்நிரம்பிய கண்களை கவனித்துக்கொண்டே ரஷீத்தை அழைக்க, ருஹானா ஒன்றும் சொல்லாமல் வெளியே செல்ல, அவளை பார்த்தபடி ரஷீத் குனிந்து பின்னந்தலையை தடவி கொண்டே உள்ளே வந்தான். நேற்றிரவு நடந்த சம்பவத்தைப் பற்றி பேசிய இருவரும் யாசின்ஸ் அடுத்த என்ன செய்வார்கள், அதை எப்படி கண்காணிப்பது என்பது பற்றியும் விவாதித்தார்கள்.

——–

நல்வாய்ப்பு கிடைத்தும் தப்பி ஓடாமல் இங்கேயே தங்கிவிட்ட ருஹானாவைப் பற்றி இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக்கொண்டிருந்த கரீமா, தன் மேல் கரிசனம் கொண்டு விசாரித்த அம்ஜத் மேல் எரிந்து விழுந்து விட்டு தங்கையை நாடி சென்றாள். சல்மாவும் கண்ணீர் வடிய விழித்துக்கொண்டு தான் இருந்தாள்.

“நீ அவனை நினைச்சி இப்படி அழ வேண்டிய அவசியமே இல்ல, சல்மா. உன்னை விட பணக்காரி கிடைச்சா அவனே உன்னை விட்டு போயிருப்பான். இப்போ நீ கவனம் செலுத்த வேண்டியது ஆர்யன் மேல தான். ஆனா அவனை லவ் பண்ண வைக்க முடியாது. அந்த குள்ள நரி ருஹானாவும் திரும்ப வந்துட்டா. ஆனா நான் சொல்றபடி கேளு, நீ இந்த சாம்ராஜ்யத்தோட ராணியாகலாம்” என அதையும் இதையும் பேசி தங்கையின் மனதை மாற்ற முயன்றாள்.

சல்மா ‘நீ பேசிற வரை பேசு, எனக்கென்ன?’ என விட்டத்தை பார்த்து கண்ணீர் விட கரீமா அவளை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தாள். உணவு மேசையில் ருஹானா இவானுக்கு எளிதாக சாப்பிட ஏற்ற வகையில் முள்கரண்டியால் வெட்டிக் கொடுக்க, ஆர்யனும், அம்ஜத்தும் இவான் ஒழுங்காக உண்பதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இவான் நல்லா சாப்பிடுறான். ஆனா அவன் சித்தப்பா ஏன் சாப்பிடல?” என கரீமா கேட்க “இதோ சாப்பிடறேன்” என்ற ஆர்யன் எட்டி இருந்த சீஸை எடுக்க இடதுகை நீட்டினான். அது எடுக்க அவனுக்கு சிரமம் என உணர்ந்த ருஹானா சட்டென எழுந்து அந்த சீஸை எடுத்து “இவான் செல்லம்! கிராமத்து சீஸ் உனக்கு பிடிக்கும் பாரேன்” என சொல்லி இவானுக்கு இரண்டு துண்டு எடுத்து வைத்தவள் அந்த ட்ரேவை ஆர்யன் அருகே வைத்தாள்.

ஓரக்கண்ணால் ருஹானா செய்வதை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் அவள் வைத்த சீஸை எடுத்துக்கொண்டான். இதை கவனித்துக் கொண்டிருந்த கரீமாவுக்கு வயிறு காந்தியது. “ஆர்யன்! நானும், சல்மாவும் இவான் பிறந்த நாளுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்றோம், நீ அனுமதி கொடுத்தா” என கரீமா ஆர்யனின் கவனத்தை ஈர்த்தாள்.

“உன் பிறந்த நாளா, கண்ணே?” என ருஹானா மகிழ்ச்சி பொங்க கேட்க இவான் தலையாட்டினான். “என்ன அக்னி சிறகே! உன் பிறந்த நாளை கொண்டாடுவோமா?” என ஆர்யன் கேட்க இவான் சரி என்றான். “இவான் சம்மதித்ததால நாம பார்ட்டி வைக்கிறோம். ஆனா ரொம்ப பெருசா வேணாம். அண்ணனுக்கு சரி வராது” என சொல்லி ஆர்யன் ஒத்துக்கொண்டான்.

“ஆமா! அம்ஜத்க்கு பிடிச்சவங்களை மட்டும் கூப்பிடுவோம். சல்மா நிறைய சர்ப்ரைஸ் பிளான் வச்சிருக்கா” என கரீமா சொல்ல சல்மா தலையாட்டினாள். “சித்தி! நீங்க?” என இவான் கேட்க ஆர்யனும் ருஹானாவின் பதிலை எதிர்பார்க்க இடைபுகுந்த கரீமா “உன் சித்தியும் வருவாங்க” என்றாள். “பெரிய கேக் வெட்டலாம்” என அம்ஜத்தும் சிரிப்புடன் கலந்துக்கொண்டான்.

——

ஆர்யன் கணனியில் கவனமாய் வேலை பார்க்க கதவு தட்டிவிட்டு ருஹானா உள்ளே வந்தாள். “இப்போ என்ன?” என கடுப்புடன் ஆர்யன் வினவ கையில் தண்ணீர் ட்ரேவுடன் ருஹானா மெதுவாக வந்து பக்கம் நின்று சொன்னாள்.

“ஆன்டிபயாட்டிக் மாத்திரை சாப்பிடுற நேரம் இது”

சலிப்புடன் ‘உப்’ என்று வாயால் மூச்சு விட்டான். “இது தேவையில்ல”

“நீங்க ஆஸ்பிடல் போகலனா இது கண்டிப்பா சாப்பிடனும்”

அவன் அவளையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி எரிச்சலாக பார்த்தான்.

“என்னை கட்டும் மாத்த விடல. இந்த மாத்திரையாவது போடுங்க” என வற்புறுத்திக்கொண்டு இருக்கும்போதே மாத்திரை உருண்டு கீழே விழுந்தது. தண்ணீரை மேசையில் வைத்துவிட்டு ருஹானா அதை எடுக்க குனிய பார்க்க “அதை தொடாதே!” ஆணையாக வந்தது. திரும்பவும் அதை எடுக்க அவள் முற்பட வேகமாக எழுந்த ஆர்யன் “எனக்கு அது வேணாம்” என சொல்லியபடி அவளை நெருங்கினான்.

“நான் எதையும் ரெண்டு முறை சொல்ல மாட்டேன். போ வெளியே” என்றான், கலங்கிய அவள் கண்களை பார்த்தவண்ணம். அப்போதும் அவள் நகராமல் நிற்க “வெளியே போ!” என சற்று சத்தமாக சொன்னான். செல்லும் அவளையே பார்த்திருந்தவன், அவள் கதவடைத்து போனதும் குனிந்து அந்த மாத்திரையை எடுத்து ஊதி வாயில் போட்டுக்கொண்டான்.

கோபமாக அவள் அறைக்கு போன ருஹானா “என் தப்பு தான். நான் எதுக்கு கொண்டு போனேன்” என தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். இவான் உள்ளே வந்து அவள் மனநிலையை மாற்றினான், “சித்தி! இந்த புக் படிச்சி காட்றீங்களா?” என கேட்டு. “கண்டிப்பா, தேனே!” என அவனை அழைத்துக்கொண்டு வரவேற்பு அறையில் அமர்ந்து தூங்கும் அழகி மற்றும் அவளை தேடும் இளவரசன் கதை வாசித்தாள்.

இவானின் பிறந்தநாள் உடையை எடுத்துக்கொண்டு கரீமா அங்கே வர இருவரும் இவானின் சாம்பல் நிற கோட்டை பார்த்து மகிழ்ந்தனர். “ஆஹ்! இது அழகா இருக்கே! உனக்கு பிடிச்சிருக்கா” என ருஹானா கேட்க அவன் வழக்கம் போல மூன்று முறை வேகமாக தலையாட்டினான். சாரா இவானுக்கு சாப்பிட பலகாரம் கொண்டு வந்து வைத்தவரும் அங்கேயே நின்று அவன் உடையை பார்த்தார்.

“இவான் பார்ட்டில இளவரசன் மாதிரி இருப்பான்” என கரீமா சொல்ல “அப்போ நீங்க இளவரசி போல வாங்க, சித்தி” என ஆசையுடன் ருஹானாவை பார்த்து இவான் சொன்னான். சாரா ஆர்வமாக பார்க்க, கரீமா கிண்டலாக பார்த்தாள். “செல்லம்! அது உன் பிறந்தநாள். நீ தான் இளவரசனா நிக்கணும். நாங்க உன்னை பார்த்து சந்தோசப்படுவோம்” என்றாள் ருஹானா.

“சித்தி! நீங்க இளவரசி டிரஸ் போட்டுட்டு வரணும்” என இவான் வற்புறுத்த.. சங்கடமடைந்த ருஹானா “என்கிட்டே அந்த டிரஸ் இல்ல, செல்லம். ஆனா என் டிரஸ்ல சிறந்ததை நான் போடுவேன்” என்றாள். “ஆனா உங்க டிரஸ்ல நெறைய ஃபிரில்ஸ் வச்சி தேவதை போல நீங்க இருக்கணும்” என மீண்டும் சொல்ல கரீமாவின் பார்வையில் அனல் வீசியது.

“இவான்! உன் சித்தியின் உடையும், பரிசும் சிறப்பா இருக்கும். எந்த பரிசு உனக்கு ரொம்ப பிடிக்கும்னு பார்க்கலாம். என் பரிசா, சல்மா பரிசா இல்ல உன் சித்தி பரிசான்னு. நீயும் ஆர்வமா இருக்கே தானே” என கரீமா ருஹானாவை பார்த்துக்கொண்டே இவானிடம் கேட்டாள். அவனும் தலையசைத்தான்.

‘ஆடைக்கும், பரிசுக்கும் பணத்துக்கு என்ன செய்ய?’ என பரிதவித்த ருஹானா அதை உள்ளேயே மறைத்துக்கொண்டு வெளியே புன்னகைக்க இவான் அவன் கோட்டை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். தன் அறைக்கு வந்த ருஹானா தனது பர்ஸ் எடுத்து திறந்து பார்த்தாள். அதில் சொற்ப பணமே இருக்க, கவலையில் ஆழ்ந்தாள். துணி அலமாரியும் திறந்து பார்த்து இன்னும் சோகமானாள்.

சல்மா அறைக்கு வந்த கரீமா அவளுக்கு புது துணியும், நெக்லஸூம் காட்டி “இது இவான் பர்த்டே இல்ல. உன் நாள். உன் அழகை காட்டி ஆர்யன் மனசுல நீ இடம் பிடிக்கப்போற நாள். உனக்கு அதிர்ஷ்டம் தேடிவரப் போற நாள்” என அவளை மூளை சலவை செய்தாள்.

Advertisement